இ.வா.ந: சிங்க மீன், கடலுக்கு கதாநாயகனா, வில்லனா?!

Posted on மே 30, 2010

5


நம்ம ஊரு தொலைக்காட்சி கலாச்சாரத்துல பார்த்தீங்கன்னா, “இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” அப்படீன்னு போட்டு எதாவது ஒரு இத்துப்போன படத்தை போடுறது, அப்புறம் “இந்த வாரம் திகில் வாரம்” அப்படீன்னு போட்டு ஒரு வாரம் முழுக்க, வெறும் பேய் படங்களா போடுறது, இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்! (என்ன, இதுக்கு மேல ஒன்னுந்தெரியாதான்னு கேக்குறீங்களா? ஆமாங்க, 3 வருஷமா தொலைக்காட்சி பார்க்காததுனால அவ்ளோதான் தெரியும்! இன்னும் இருந்தா நீங்க சொல்லுங்களேன்)

அதேமாதிரி, பதிவுலக கலாச்சாரத்துல “நட்சத்திர பதிவர்/இந்த வார நட்சத்திரம்” அப்படீன்னு சொல்லி ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவரை அறிமுகப்படுத்தி அவங்க பதிவுகள பிரபலப்படுத்துவாங்க! ஏன் இதையெல்லாம் இப்ப நான் உங்ககிட்டச் சொல்றேன்னா, விஞ்ஞான/ஆய்வுலகத்துல தொடர்ந்து எதாவது கண்டுபிடிப்புகள் இருந்துகிட்டே இருக்கும். ரொம்ப பிரபலமானது, அகழ்வாராய்ச்சி/பண்டைய மிருகங்களின் பகுதிகளை கண்டுபிடிக்கிறது அப்படீங்கிறதுதான்.

ஆனா, இதே வரிசையில இன்னொரு சுவாரசியமான ஆராய்ச்சியும் உண்டு! அதுதான் ஆழ்கடல் ஆராய்ச்சி. அதாவது, நம்ம கண்கள்லேயே படாம, செவனேன்னு ஆழ்கடல்ல சந்தோஷமா ஆடிப்பாடி/ஓடித்திரியுற பலவகையான கடல்வாழ் உயிரினங்கள, மனுசனுக்கு அறிமுகப்படுத்துறதுக்காக, வாயில பிராண வாயு எந்திரத்தையும், கால்ல ஒரு வினோதமான வாலையும் கட்டிக்கிட்டு, கடல்ல நீந்திப்போய் வினோதமா இருக்குற மிருகங்கள பிடிச்சிக்கிட்டு வெளியில வந்து “கண்டுபுடிச்சிட்டேன்…..கண்டுபுடிச்சிட்டேன்” (அதாங்க இந்த யுரேகான்னெல்லாம் சொல்லுவாங்களே) அப்படீன்னு  சொல்ற குரூப் ஒன்னு இருக்கு ஆய்வுலகத்துல!

அந்தக் குரூப் கண்டுபிடிக்கிற வினோத மிருகங்கள எல்லாம் வாரத்துக்கு ஒன்னா உங்களுக்கு அறிமுகப்படுத்தலாமேன்னு,   “இந்த வாரம் நட்சத்திரம் (இ.வா.ந)“னு ஒரு தலைப்பைப் போட்டு நாங்களும் கெளம்பிட்டோமுல்ல……(என்ன, ஐய்ய….இதுக்கா இப்படியொரு மொக்கையான முன்னுரைன்னு கேக்குறீங்களா? சரி சரி உடுங்க, பதிவுலக அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க…!!)

சரி, இனி நாம இந்த வார நட்சத்திரத்தை மேலேர்ந்து கீழ வரைக்கும் ஒரு முழுப்பார்வை பார்த்துடுவோம் கெளம்புங்க…..

கடலின் ராசாதி ராசா யார்?!

காட்டுக்கு ராசா நம்ம சிங்கத்தாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்! அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ராசாவா ஒரு குப்பனையோ, சுப்பனையோ நாமதான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்குறோம். இல்லீங்களா? ஆக, காட்டுக்கும், நாட்டுக்கும் தலா ஒரு ராசா இருக்கும்போது கடலுக்கும் ஒரு ராசா இருக்கனுமில்லியா? இப்போ நீங்க சொல்லுங்க, உங்க கணிப்புப்படி கடலுக்கு ராசாவா யாரைத் தேர்ந்தெடுப்பீங்க?

‘திமிங்கல’த்தையா இல்ல சுறாவையா?!

என்னது சுறாவா, ஐய்யய்யோ…..வேணவே வேணாம்பா! சுறாங்கிற பேர்ல நாட்டுல சில பேர் பண்ற அலப்பறையே தாங்கள இதுல கடல்லயும் வேற சுறா ராசாவா? அப்படீன்னு பதறுறீங்களா?! சரி சரி விடுங்க, எனக்கு என்ன தோனுதுன்னா, அனேகமா உங்கள்ல பல பேரு, திமிங்கலத்தைத்தான் கடலுக்கு ராசாவா தேர்ந்தெடுப்பீங்கன்னு! ஏன்னா, கடல்ல இருக்குற உயிரினங்கள்லேயே மிகப்பெரியதும், வலிமையானதும் திமிங்களம்தான். அதனால, நீங்க எல்லாரும் ஒரு மனதா முடிவு பண்ணி திமிங்களத்துக்கே ராஜாங்கிற பட்டத்தை சூட்ட  நினைக்கலாம்! ஆனா, அதுல ஒரு சின்ன சிக்கல். அந்த சிக்கல் சண்முகசுந்தரம் யாருன்னு கேட்டீங்கன்னா, நம்ம சிங்க மீனார்தான்!

பேருலேயே சிங்கத்தை வச்சிருக்குற இவருகிட்ட கடலுக்கு ராசாவா/கதாநாயகனாகுறதுக்கு தகுதி இருக்கா, இல்லை வில்லனாக தகுதியிருக்கான்னு, அவரப் பத்தி நான் சொல்லப்போற விஷயங்களை வச்சி, நீங்களே ஒரு முடிவு சோல்லுங்க. என்ன ரெடியா……

சிங்க மீன் (Lion fish, Pterois volitans)!

wikimedia: sujitkumar

பசிஃபிக் சிங்க மீன் (Pacific lionfish) அப்படீன்னு அழைக்கப்படுற இந்த வகை மீன்கள், உடல் முழுவதும் ஒரு வித விஷமுட்களையும், எதிரி/உணவைத் தாக்கும்போது அம்முட்களை அகல விரித்துத் தாக்கும் தன்மையும்கொண்ட ஒரு வகை அசைவ  (மீன் வகை) உயிரினங்களாம்! பெரும்பாலும் பசிஃஃபிக் கடல்களில் வாழ்வதாலும், உடல் முட்களை விரிக்கும்போது சிங்கம் போன்ற தோற்றத்தினை ஒத்து இருப்பதாலும் இவற்றுக்கு பசிஃபிக் சிங்க மீன் என்று பெயர்!

பெரும்பாலும் பசிஃபிக் கடலில் இருந்தாலும், கடந்த 1990-கள்ல அமெரிக்காவின் ஃப்ளோரிடா முதல் ரோட் தீவுவரை (Florida to Rhode Island) உள்ள கடல்பகுதிகளில் காணப்பட்டனவாம். பசிஃபிக் கடல்லேர்ந்து அமெரிக்கா கடலுக்கு வந்து சும்மா இல்லாம, இந்த சிங்க மீனுங்க, சுத்தியிருக்குற மீனுங்களயெல்லாம் தின்னு காலி பண்ணி, ஏற்கனவே பல பிரச்சினைகள சமாளிக்க முடியாம திணறிகிட்டுஇருக்குற கரிபியன் பவழப் பாறைகளுக்கு, இன்னும் பல பிரச்சினைகள உண்டுபண்ணுச்சுங்களாம். இந்த மீனுங்கள எப்படியாவது ஒழிச்சுக்கட்டச் சொல்லி, (பிரச்சினைய சமாளிக்க) அமெரிக்க அறிவியல் அமைப்பு (National Science Foundation) ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு, 3 வருட ஆய்வுக்காக $700,000 உதவித்தொகை வழங்கியதாம்! அடேங்கப்பா….!!

கடலில் சிங்க மீனின் சில்மிஷங்கள்!

பார்க்குறதுக்கு தம்மாத்தூண்டு இருக்குற இந்த சிங்க மீனு அப்படியென்னா பெருசா பிரச்சினை பண்ணியிருக்கும்னுதானே  யோசிக்கிறீங்க? அங்கதாங்க நீங்க தப்பு பண்றீங்க. எப்படின்னு கேக்குறீங்களா? வாங்க பார்ப்போம்…..

எப்படி இந்த சிங்க மீனு மத்த மீனுங்களயெல்லாம் கொன்னு கபளீகரம் பண்ணி, கடலுக்குள்ள வெற்றிநடை போடுதுன்னு பார்த்த ஆய்வாளர் ஹிக்சன்னுக்கு (Hixon) அதிர்ச்சி மேல அதிர்ச்சி

  1. ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சோதனையில (controlled experiment), ஒரு சிங்க மீன், வெறும் 5 வாரங்கள்ல, சுத்தியுள்ள மத்த மீன்களில் 75% கொன்று சாப்பிடும் திறனுள்ளவை என்று கண்டுபிடிக்கப்பட்டது!
  2. அழகான சக மீன்களான கார்டினல், கிளி மற்றும் டேம்செல் மீன் ( cardinalfish, parrotfish, damselfish) இதுங்க எல்லாத்தையும், ஈவு எரக்கமே இல்லாம போட்டுத்தள்ளி சாப்பிட்டுச்சாம் சிங்க மீன்
  3. வெறும் 30 நிமிஷங்கள்ல, ஒரு சிங்க மீன் சுமார் 20 சின்ன மீன்களை காலி பண்ணிடுச்சாம்!
  4. காரணம் என்னன்னு பார்த்தா, சிங்க மீனை சக மீனுங்க, ஒரு மீனாவே நெனக்கலை போலிருக்காம்! அதனால, சிங்க மீன் கிட்ட வரைக்கும் நீந்திப்போய் கடைசியில அது வயித்துக்குள்ள அடைக்கலம் ஆயிடுச்சிங்களாம் மத்த மீனுங்க. அடப்பாவமே!!

அந்த சிங்க மீன் அட்டகாசத்த நீங்களே பாருங்க இந்த காணொளிகள்ல…..

இதுல கொடுமை என்னன்னா, சிங்க மீன் வயித்துக்குள்ள போற மீனுங்க எல்லாமே, கடல் களைகள (seaweed) சாப்பிட்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிற சைவ மீனுங்களாம்! இந்த மீனுங்க இல்லைன்னா, கடல் களைகள் எல்லாம் பெருத்து பவழப் பாறைகளை அழிச்சிடுமாம்! ஓஹோ….அப்படியா?

இப்ப நீங்க யோசிக்கலாம், “ஆமா….சிங்க மீனைவிட பெரிய மீன்களான சுறாவெல்லாம் இதுங்களா சாப்பிடாதா?” அப்படீன்னு. ஆமாம், சாப்பிடாது! ஏன்னா, ரெண்டு காரணங்கள்.

ஒன்னு, சிங்க மீனை சாப்பிடக்கூடிய பெரிய மீனையெல்லாம் நம்ம மீனவர்கள் பிடிச்சிடுவாங்க.

ரெண்டு, மீனவர்கள் பிடிச்சது போக, மிச்சமிருக்குற பெரிய மீன்கள் சிங்க மீனை சாப்பிடாது. ஏன்னா, சுறா மாதிரியான மீன்களுக்கு சிங்க மீனோட விஷமுட்கள் ஒரு பெரிய தடை!

அப்புறம் எப்படித்தான் இந்த சிங்க மீன் சில்மிஷத்தை தடுக்கிறது. ஒரே வழிதான் இருக்கு! அது சிங்க மீனை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீனா (Conservation dish) விளம்பரப்படுத்தி, அதை சாப்பிட்டா சுற்றுச்சூழலை பாதுக்காக்க உதவ முடியும்னு, இந்த மீன்களை உணவாய்ச் சாப்பிட மக்களை தூண்டுவது! அடக்கொடுமையே, என்ன இது அமெரிக்காவுக்கு வந்த சோதனை?!

சரி நீந்திப்போயாவது இதுங்களப் புடிக்கலாமுன்னா, ஒரு சிங்க மின் முல்லால ஒரு போடுபோட்டா போதுமாம், விஷத்தாக்குதலால, சுவாசம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் வந்துடுமாம்! யப்பா….!!

ஆக, சிங்க மீன் ஒழிப்பு, அமெரிக்காவுக்கு இன்னும் ஒரு சிம்ம சொப்பனமாவேதான் இருக்குதாம்! ஐய்யோ பாவம் அமெரிக்கா…?! நாம வேறென்ன சொல்ல முடியும், நீங்களே சொல்லுங்க?!

இப்போ சொல்லுங்க பார்ப்போம். சிங்க மீன் கடலுக்கு ஒரு ராசா/கதாநாயகனா, இல்ல படுமோசமான ஒரு வில்லனா?!

தொடர்புடைய பதிவுகள்:

தந்திரக்கார “வில்” மீனும் “தண்ணீர்”அம்பும்?!

சூர்யாவுக்கு போட்டியாக “சிக்ஸ் பேக்”குடன் வானவில் மீன்?!

மீன்கள் அழுமா?

மீன்களுக்கு காது கேட்குமா?

ஏப்ரல் ஒன்றும் “Poisson d’Avril/ஏப்ரல் மீனும்”?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements