எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

Posted on மே 21, 2010

4


நம்ம ஊருல எய்ட்ஸுன்னு சொன்னாலே, எல்லாரும் கேக்குற அடுத்த கேள்வி “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா” என்பதாகத்தானிருக்கும். இல்லீங்களா? இந்த விளம்பரம் மூலமா, மக்கள் எய்ட்ஸ் பத்தி  எதாவது தெரிஞ்சிக்கிட்டாங்களோ இல்லையோ, புள்ளி ராஜாவை பத்தி நல்லாவே தெரிஞ்சிக்கிட்டாங்க (?)

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?

நன்றி: தினமலர்

இதுல கொடுமை என்னன்னா, எய்ட்ஸ் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பரம், எய்ட்ஸ்  பத்தின உண்மைகள், விவரங்கள் இப்படி எதையுமே சொல்லாம, ஒரு கற்பனைக் கதாபாத்திரமான “புள்ளி ராஜா”வை அறிமுகப்படுத்தி அதையே பிரதானமாக்கி, மக்கள் மத்தியில எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்கு பதிலா,  யாரு அந்த புள்ளி ராஜான்னு தலையப் பிச்சிக்கிற அளவுக்கு குழப்பத்தையும், கேலிக்கூத்தையும்தான்  சமுதாயத்துல ஏற்படுத்துச்சிங்கிறது என்னோட புரிதல்?!

இந்தப் பதிவ தொடங்கும்போது, புள்ளி ராஜா பத்தி சொல்லியாகனுமேன்னு, இதுவரைக்கும் எனக்கும் ஒரு புரியாத புதிரா இருக்குற “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” அப்படீங்கிற கேள்வியப் பத்தி இணையத்துல தேடிப் பார்க்கலாமுன்னு, நம்ம கூகுளார்கிட்ட இந்த கேள்வியக் கொடுத்தா, கிட்டத்தட்ட 216 ஹிட்டுகள் தேடிக் கொடுத்தார் கூகுளார். இந்த முடிவுகள்ல ஒன்னுலகூட புள்ளி ராஜா பத்தின சரியான விளக்கம் கிடையாது. ஆனா,  சில பல முடிவுகள்ல ஆணுறை பயன்படுத்தாம உடலுறவு வச்சிக்கிட்டா, எய்ட்ஸ் வரும்ங்கிற செய்திய சொல்லத்தான் இந்த விளம்பரம்னு மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது?!

காரணம் என்னன்னு பார்த்தா, இது ஒரு குசும்பு (Teaser) வகை விளம்பரமாம். இது மாதிரியான விளம்பரங்கள் பெருசா ஒன்னும் சொல்லாம, எடுத்துக்கிட்ட ஒரு விஷயத்தை பெரும்பான்மையானவர்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்குற வேலையை சரியாக செய்யுமாம். என்னத்த சொல்ல?! சரி அத விடுங்க, நாம பதிவுச் செய்திக்குப் போவோம்…..

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும், மருத்துவ முயற்ச்சிகளும்!

புள்ளி ராஜாவாவும், தில்லுதுரயாவும் நம்ம சமுதாயத்துல வலம் வருகிற எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும், அந்த கொடிய நோயிலிருந்து விடுபட, எப்போதும் ஆராய்ச்சி செய்யுற இந்த மருத்துவ உலகம், எய்ட்ஸை முற்றிலுமாகக் குணப்படுத்த எதாவது ஒரு நல்ல மருந்தைக் கண்டுபிடிச்சி,  “எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு” அப்படீங்கிற ஒரு நல்ல சேதிய சீக்கிரம் சொல்லிடாதான்னு ஏங்கிக்கிட்டிருக்காங்க அப்படீங்கிறதுதான் நிதர்சனம்!

அந்த ஏக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி எப்போ வரும்னு தெரியாதுன்னாலும், எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் ஒரு புதிய சகிச்சையை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரத்தப் புற்றுநோய் மருத்துவர்களான, கெரோ ஹட்டர் (Gero Hutter) மற்றும் எக்கார்டு தியல் (Eckhard Thiel) ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளதாக செய்தி ஒன்று, சமீபத்தில் வெளியாகி மருத்துவ உலகத்தையே அல்லோல கல்லோலப் பட வைத்தது!

அந்தச் சிகிச்சையைப் பத்தின ஒரு அறிமுகம்தான் இன்றைய பதிவு. வாங்க என்னன்னு பார்ப்போம்…..

டிஸ்கி: இந்தச் சிகிச்சையை பத்தி பார்ப்பதற்க்கு முன்பு ஒரு செய்தி, இந்தச் சிகிச்சைக்காக ஆகும் செலவு மிகவும் அதிகம், செய்முறை சிக்கலானது, மிகவும் ஆபத்தானது, இதை பெரும்பாலானவர்களுக்கு செயல்படுத்த முடியாது இப்படி இந்தச் சிகிச்சை குறித்து பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்க!!

டெல்டா 32 மரபனுத்திரிபும் ரத்தக் குருத்தனுக்கள் சிகிச்சையும்!

கெரோ ஹட்டர், எக்கார்டு தியெல் (Drs. Gero Hutter and Eckhard Thiel) ஆகிய இருவரும், ஜெர்மனியின்  பெர்லின் நகரைச் சேர்ந்த சாரிட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ரத்தப் புற்றுநோய் மருத்துவ வல்லுனர்கள். இவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நோயாளி, லியூக்கீமியா (leukemia) என்னும் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயாலும் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட தன் வாழ்வின் இறுதி நிலை/நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். எதையாவது செய்து, அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இந்த இரு மருத்துவர்களும், ஒரு வினோதமான சிகிச்சை முறையை கையாள முடிவு செய்தனர்!

அந்த வினோதமான சிகிச்சை என்னன்னா, எய்ட்ஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி பெற்ற (Immune to HIV) ஒருவரின் ரத்தக் குருத்தனுக்களை (Bone marrow/stem cells) எடுத்து, இந்த எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்துவதுதான் (bone-marrow transplant)! இதுல என்ன வினோதம்னு கேக்குறீங்களா?

இதுவரைக்கும், உலகத்துல யாருமே எய்ட்ஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி பெறவில்லை அப்படீங்கிறதுதான் உண்மை. ஆனா, கடந்த 10 வருடத்துக்கு முன்பு, மேலே சொன்ன இரு மருத்துவர்களின் கே (Gay) நோயாளிகளில் சிலர், தவறான/பாதுகாப்பாற்ற முறையில் பல நூறு பேருடன் உடல் உறவு வைத்துக்கொண்ட பின்னும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படவில்லை எனும் ஆச்சரியமான உண்மை கண்டுபிடிக்கப்பட்டது?! அதுக்கு காரணம் என்னவாயிருக்கும்னு சோதிச்சிப் பார்த்ததுல, அந்த கே நோயாளிகளுக்கு, டெல்டா 32 (Delta 32) என்னும் ஒரு பிரத்தியேக மரபனுத்திரிபு (mutation) இருப்பது கண்டறியப்பட்டது!

இந்த வகை மரபனுத்திரிபு, எய்ட்ஸ் கிருமிகளான HIV, மனித அனுக்களைத் தாக்கி அவற்றினுள் செல்வதை முற்றிலும் தடுக்கவல்லது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது! இந்த Delta 32 மரபனுத்திரிபானது, ஒருவரின் பெற்றோரிடமிருந்து அவர்களுக்கு (சந்ததிக்கு) மரபு வழியாக அனுப்பப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது (must be inherited from both parents)! அதுமட்டுமல்லாமல், இம்மரபனுத்திரிபானது, ஐரோப்பிய மக்களில் 1% மட்டுமே காணப்படுகிறதாம் (குறிப்பாக வட ஐரோப்பிய மக்களில்)! கொடுமை என்னன்னா, ஆப்பிரிக்க, ஆசிய மக்களில் முற்றிலும் காணப்படுவதில்லை என்பதே. அடக்கடவுளே….!!

ஆக, ஐரோப்பிய மக்களில் ரத்தக் குருத்தனுக்களை தானம் செய்யும் ஒரு டோனரை (Donor) கண்டுபிடிப்ப்து ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. இறுதியாக, தானம் செய்பவரின் ரத்தக் குருத்தனுக்களை, அமெரிக்க நோயாளியின் உடலில் செலுத்தினார்கள். சிகிச்சை முடியும்வரை, நோயாளி எய்ட்ஸ் மருந்துகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! காரணம் என்னன்னா, எய்ட்ஸ் நோயாளிகள், எய்ட்ஸ் மருந்துகளை நிறுத்திய மறு நிமிடமே, கோடிக்கணக்கான எய்ட்ஸ் கிருமிகள் (HIV) அவர்களின் உடலில் பெருகிவிடும். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், சிகிச்சை முடிந்தபின் எய்ட்ஸ் கிருமிகளின் எண்ணிக்கை பெருகவேயில்லை என்பதுதான்!

ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியம் என்னன்னா, இச்சிகிச்சை முடிந்து இப்போது 2 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் அந்த அமெரிக்க நோயாளியின் ரத்தம் மற்றும் மூளையில் ஒரு HIV கிருமிகூட இல்லையென்பதுதான்?! நம்ப முடியாத ஆச்சரியம்தான் என்றாலும் உண்மை!!

ஆக, எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை கண்டுபிடித்தாகிவிட்டது! குறைந்தபட்சம் இந்த ஒரு நோயாளிக்காவது!! அவரின் எய்ட்ஸ் முற்றிலும் குணமாகிவிட்டது என்பதை மருத்துவ உலகமும் ஏற்றுக்கொண்டாகிவிட்டது! என்ன, அவ்ளோதான் சுபம் அப்படீன்னு முடிக்கப்போறேன்னு நெனக்கிறீங்களா? அதுதான் இல்ல?! இனிமேதான் நாம பிரச்சினைக்கே வரப்போறோம்….

எய்ட்ஸ் நோய்க்கான இப்புதிய சிகிச்சை முறையின் சிக்கல்கள்:

  1. ரத்தக் குருத்தனுக்கள் சிகிச்சை (bone marrow transplant) என்பது மிகவும் ஆபத்தான் ஒன்று! இம்முறையில், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அனுக்கள் (வெள்ளை ரத்த அனுக்கள்) முழுவதையும் வேதியல் மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு (chemotherapy and radiation) முறையில் அழித்துவிடுவார்கள்!
  2. இம்முறையில் 30% மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது. ஏனைய விழுக்காட்டு நோயாளிகள் இறக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்க!
  3. இந்தக் கொடுமையான சிகிச்சை விமர்சித்த (New York Times) ஒரு மருத்துவர், இச்சிகிச்சை முறையை பயன்படுத்துவதற்க்கு பதிலாக ஒருவர் தன் வாழ்க்கை முழுதும் வைரஸ் கொல்லிகளான antiretrovirals மருந்துகளையே எடுத்துக்கொண்டு இருந்துவிடலாம் என்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
  4. இச்சிகிச்சைக்குத் தேவையான ரத்த அனுக்களைத் தானம் செய்யும், தகுதியுள்ள/பொருத்தமான ஒரு டோனர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல! காரணங்கள் இரண்டு: ஒன்று, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி அனுக்களுடன் ஒத்துப்போகும் நோய் எதிர்ப்பு சக்தி அனுக்களைக் கொண்ட ஒருவர் தேவை. இரண்டு, அந்த ஒருவருக்கு டெல்டா 32 மரபனுத்திரிபு இருக்க வேண்டும்!!
  5. இந்தப் பிரச்சினை எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள ஆப்பிரிக்காவில் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், டெல்டா 32 மரபனுத்திரிபு உள்ள ஒருவருக்கு வேறு வைரஸ் நோய்கள் இருக்கலாம் (உதா: West Nile virus)

இதையெல்லாம் படிச்சிட்டு, “ஏய்…முடிவா நீ என்னதாம்பா சொல்ல வர்ற? இந்த சிகிச்சையெல்லாம் வெறும் கண்துடைப்பு, இதுல எதுவும் பெரிய நம்பிக்கை எல்லாம் இல்ல. எய்ட்ஸுக்கு, இனிமேஒரு நல்ல மருந்து கண்டுபிடிச்சாதான் உண்டு”ன்னு சொல்ல வர்றியா?” அப்படீன்னு உண்ர்ச்சி வசப்படுற நண்பர்களே அமைதி அமைதி…..

இப்புதிய சிகிச்சைமுறை முன்வைக்கும் சாதகங்கள்/வாய்ப்புகள்/முன்னேற்றத்துக்கான வழிகளாவன…..

  1. இச்சிகிச்சை முறையினால், எய்ட்ஸை குணப்படுத்த தாங்கள் செய்ய வேண்டிய ஆய்வுகள், மருத்துவ முயற்ச்சிகள் போன்றவை உலக எய்ட்ஸ் மருத்துவர்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது!
  2. இச்சிகிச்சை முறையை, மேலும் பாதுகாப்பாக, சுலபமாக, ஆபத்துகளை நீக்கி முயன்று பார்க்க, மருத்துவர்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை உருவாக்கியுள்ளது இச்சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது!!
  3. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு எய்ட்ஸ் நோயாளியின் ரத்த அனுக்களையே, உயிர்தொழில்னுட்ப நுணுக்கங்கள் மூலம்,  HIV கிருமிகளை எதிர்க்கும் வண்ணம் மாற்றியமைக்க, இச்சிகிச்சை முறை ஒரு பாதையை காட்டியுள்ளது.

ஆக, இந்த ஒரு புதிய, நவீன சிகிச்சை முறை, எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு தகுந்த சிகிச்சை முறையை, சில பல வருடங்களானாலும்,  உலக எய்ட்ஸ் மருத்துவர்கள் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் என்னும் ஒரு நம்பிக்கையை, உலக எய்ட்ஸ் நோயாளிகள் (?), மருத்துவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்பது திண்ணம்!!

மருத்துவ உலகில் அவ்வப்போது வெளிவரும் எய்ட்ஸ் நோய்க்கான தீர்வுகளாக கூறப்படும் சிகிச்சை முறையில் ஒன்றான ஹீமோ மாடுலேட்டர் பற்றிய செய்திக்காணொளி இங்கே உங்களுக்காக……

அதெல்லாம் சரிங்க, எனக்கு ஒரு சந்தேகம்: புள்ளி ராஜான்னா யாரு? புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? இந்த கேள்விகளுக்கு விடை தெரிஞ்சவங்க, கொஞ்சம் மறுமொழியில சொல்லிட்டுப்போங்களேன்…..ப்ளீஸ்!!

தொடர்புடைய சில இடுகைகள்:

ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்

செக்ஸ்: ஆண்களுக்கும் கர்பத்தடை “மாத்திரை” ?!

முத்தம் ஒன்று கொடுத்தால்…..வைரஸ்?!

செக்ஸ்: ஒரு “புள்ளி” விவரம்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements