பதின்ம வயது குறிப்புகள்-[தொடர்பதிவு]

Posted on மே 10, 2010

19


பதின்ம வயது குறிப்புகள எழுதப்போறோம்ன உடனே, மனசுக்குள்ள அப்படியே பட்டாம்பூச்சியெல்லாம் பறக்க ஆரம்பிச்சிட்டுது. பறக்காதா பின்ன, கோடி ரூபா கொடுத்தாலும் திரும்பக் கெடைக்காத “அழகிய கனாக்காலம்” இல்லீங்களா அந்த பருவ வாழ்க்கை?! சரி சரி, பட்டாம்பூச்சி பறந்த உடனே சொல்ல வேண்டியத மறந்துட்டேன் பாருங்க.

நம்மளையும் தொடர்பதிவு ஜோதிக்குள்ள ஐக்கியமாகச் சொல்லி அழைத்த நண்பர், பதிவர் ஹரீஷ் நாராயண்ணுக்கு நன்றிகள்! அது சரி, நாம என்ன சினிமா நடிகரா இல்ல அரசியல்வாதியா நம்ம பதின்ம வயதுக் குறிப்புகள மக்கள்  சுவாரசியமா படிக்குறதுக்கு?! ஆனா, ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பதின்வயதுக் கால நினைவுகள், ரொம்ப நெருக்கமானவைதான். அதனால, என்னோட இந்தப் பதிவை படிக்கப்போயி, உங்க பதின்ம வயது நினைவுப் புதையல்கள் வெளிச்சத்துக்கு வரக்கூட வாய்ப்பிருக்குங்க. இருந்தாலும், உங்க குலதெய்வத்து மேல பாரத்தைப் போட்டுட்டு (?) பதிவ மேல படிங்க!!

புனித பால் பள்ளியும் ஃபாதர் E.தாமஸ் அவர்களும்!

ஆறாம் வகுப்பு வரைக்கும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி ‘பாலவிஹார்’ பள்ளியில் படிச்சிக்கிட்டு இருந்த நம்மல, நெய்வேலி புனித பால் ஆண்கள் பள்ளியில இன்னும் நல்லா படிக்கட்டுமேன்னு சேர்த்துவிட்டாங்க!  அதுவரைக்கும், வகுப்புல முதல் ரேங்க் எடுத்துக்கிட்டு, சும்மா ராசா மாதிரி கெத்தா இருந்த ஹரிய (நாந்தேன்), அநியாயமா, 73 பேர் இருக்குற 7-ஆம் வகுப்பு அப்படீங்கிற பாழுங்கிணத்துல (அட, அப்போ அப்படித்தாங்க தோனுச்சி!) புடிச்சி தள்ளிட்டாங்க. ஆனா, விதி அங்கேதான் விளையாட ஆரம்பிச்சுது.

ஏன்னு கேளுங்க. பாலவிஹார்ல 22 பேர் இருக்குற வகுப்புல, சும்மா கில்லி மாதிரி எப்பவும் முதல் ரேங்க் வாங்கி, லீடர் அப்படீங்கிற பட்டத்தோட சுத்திக்கிட்டு இருந்த நான், புனித பால் பள்ளிக்குப் போய் முதல் மாத பரீட்சையில வேதியல், கணக்குல ரெண்டுத்துலயும் கோட்டை விட்டுட்டேன். ரேங்க் கார்டு எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தா மானமே போச்சு! எல்லாம் ஒரு மாதிரி சந்தேகமா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க?! அப்புறம் ஒரு வழியா அடுத்த மாத தேர்வுல எல்லாத்துலயும் பாஸ் பண்ணி, கஷ்டப்பட்டு 37-வது ரேங்க் வாங்கினேன். இப்படிதான் நம்ம பதின்ம வயது படிப்பு தொடங்குச்சி!

அந்தப் பள்ளிக்கூடத்துல, ரொம்ப புடிச்சது ரெண்டு விஷயங்கள். ஆங்கிலத்துலயே பேசனும்ங்கிற கட்டுப்பாடும், வெள்ளை அங்கிய மடிச்சி கட்டிக்கிட்டு, சும்மா சத்ரபதி சிவாஜி மாதிரி, என்ஃபீல்டு புல்லட்டுல ‘பட்ட பட்ட பட்ட’ன்னு பட்டயக் கெளப்புற ஃபாதர் E.தாமஸ் அவர்களும்தான்! சும்மா சொல்லக்கூடாதுங்க, இருந்தா அவரு மாதிரி இருக்கனும் வாழ்க்கையில. இதுவரைக்கும், என் வாழ்க்கையில அவர மாதிரி ஒரு உதாரண புருஷர பார்த்ததே இல்லீங்க. (அதாங்க இந்த ரோல் மாடல்னு எல்லாம் சொல்லுவாங்களே!)

ஃபாதர் தாமஸ் பார்ப்பதற்க்கு எப்படியோ அப்படியேதான் படிப்பு விஷயத்துலயும். அவர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்! ஒவ்வொரு முறையும் ரேங்க் கார்டு கொடுக்கும்போது, பட்டயக் கெளப்பிடுவாரு, பெரம்பால! கையெல்லாம் பழுத்துடும், அப்போ கேப்பாரு பாருங்க, நாக்கைப் புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி. அதக் கேக்குற கொடுமைக்கு, பேசாம ஒழுங்கா படிச்சி நல்ல மார்க் வாங்கிடலாமுன்னு தோனும். அதுக்காகத்தான் அப்படிக்கேப்பாரு?!

தமிழ் டாக்கிங்கும் வயசுக் கோளாரும்!

அந்தப் பள்ளியில இன்னொரு வேடிக்கையும் இருந்தது. அதான் தமிழ் டாக்கிங் லீடர்! அதாவது, பள்ளி நேரங்கள்ல தமிழ்ல பேசுற பசங்களையெல்லாம், வாத்தியாருகிட்ட போட்டுக்கொடுக்குற ஒரு பையன்! உண்மையச் சொல்லனும்னா, அதுக்கு முன்னாடி படிச்ச பள்ளியில ஆங்கிலம் பேசுறோம்ங்கிற பேர்ல, புத்தகத்துல இருக்குற வரிகள அப்படியே ஒப்பிச்சிட்டு போனதுதான் நாம படிச்ச ஆங்கிலம். பள்ளி அப்படி நாம என்ன பண்றது. அதனால, ஆங்கிலம் பேச கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இதுல புள்ள புடிக்கிறவங்க மாதிரி இந்த தமிழ் டாக்கிங் லீடர் பசங்க வேற! இப்படி தமிழ் டாக்கிங்குமா, படிப்புமா போய்க்கிட்டிருந்த வாழ்க்கையிலதான் பருவ வயது அப்படீங்கிற வசந்தம் வீச ஆரம்பிச்சுது!

பத்தாம் வகுப்பு முடிச்சி, முட்டி மோதி 79% மார்க் எல்லாம் வாங்கி, அதே பள்ளியில பதினொன்றாம் வகுப்பு படிக்க ஆரம்பிச்சப்போதான், முகத்துல கொஞ்சமா மீசை எல்லாம் எட்டிப்பார்த்துச்சி! மீசை வந்தாலே ஆசையும் கூட வரும்னுதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே?! ஆசை வந்து என்னங்க பண்றது, அந்த வயசு அலப்பரைய எல்லாம் குடுக்க, பள்ளிக்கூடத்துலதான் பொண்ணுங்க இல்லியே! அட ஆமாங்க, அது ஒரு ஆண்கள் மட்டும் படிக்கிற பள்ளி. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குக் கேக்குதுங்க. ‘ஐயோ பாவம் ஹரி’ன்னுதானே?!

என்னத்தச் சொல்ல, ‘உங்குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தஞ்சொல்ல’ அப்படீன்னு மனசத் தேத்திக்கிட்டு, நாம உண்டு நம்ம படிப்பு உண்டு போய்க்கிட்டிருந்தப்பதான், போக்கிரி அசின் மாதிரி…..ஒரு ஃபிகருன்னு சொல்லப்போறேன்னு நெனச்சீங்களா? அதுதான் இல்ல!  அசின் மாதிரிதான், ஆனா ஃபிகரு இல்ல! அவங்க எங்க பள்ளியோட ஒன்னாவது வகுப்பு டீச்சரு. அடப்பாவி, டீச்சரா அப்படீன்றீங்களா? ஏங்க, அழகா இருந்தா பார்க்குறது தப்பா, இப்படித்தாங்க தோனுச்சி அந்த வயசுல?! அப்பெல்லாம் தோனும், வாழ்க்கையில கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு?!

(இதையெல்லாம் நம்ம வீட்டுல படிக்க மாட்டாங்கன்ற தைரியத்துல/நம்பிக்கையில எழுதுறேன், அப்புறம் அந்த கடவுள் விட்ட வழி). ஆங், கடவுள்ன உடனேதான் நியாபகத்துக்கு வருது……

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், கடவுள் நம்பிக்கையும்!

சின்ன வயசுல, சாமி கும்பிட சாமி அறைக்குள்ளே போனதும், பூஜை பண்ற அப்பாவ பார்த்துட்டாலே போதும். கீ கொடுத்த பொம்மை மாதிரி, அப்படியே ரெண்டு கையும் ஒன்னா சேர்ந்து, கண்கள் மூடி,”சாமீ, எல்லாரும் நல்லாருக்கனும் நானும் நல்லாருக்கனும்”னு ஆரம்பிச்சி அந்தந்த சூழ் நிலைக்கு ஏத்த மாதிரி, இது வேணும் அது நடக்கனும்னு சாமிங்க கூட ஒரே பேரம்தான் போங்க! இதே கதைதான் 12-வது வகுப்பு பொதுத்தேர்வு வரைக்கும். ஆனா, பொதுத்தேர்வோட முதல் பரீட்சை எழுதுறதுக்கு முன்னாடி, விடுதியிலேர்ந்து வீட்டுக்கு (மேலிருப்புக்கு) போய், அம்மா அப்பாக்கிட்ட ஆசீர்வாதம் வாங்க போயிருந்தேன். திரும்பவும் விடுதிக்குக் கெளம்புறதுக்கு முன்னாடி அம்மா சொன்னாங்க, “தம்பி, நம்ம மாரியம்மன் கோவிலுக்குப் போய், பரீட்சையை நல்லா எழுதி, நெறைய மார்க் வாங்கனும்னு மாரியம்மன்கிட்ட வேண்டிக்கிட்டு வாடா”ன்னு!

சரின்னு, நானும் கோவிலுக்குப் போனேன். எப்பவும்போல சாமி கும்பிடலாமுன்னு கை ரெண்டையும் ஒன்னா வச்சி கும்பிடப்போனா, உள்ளே இருந்து ஒரு குரல் (அதாங்க, இந்த மனசாட்சின்னு சொல்லுவாங்களே), “ஏண்டா டேய், சாமியக் கும்பிடுன்னா, உடனே கை ரெண்டையும் சேர்த்து வச்சி, கண்ணையும் மூடிக்கிட்டு பெரிய முனிவர் ரேஞ்சுக்கு கெளம்பிடுறியே, சாமீன்னா என்ன? அத எப்பவாவது நீ பார்த்திருக்கியா? ஒரு சாமி மட்டும் போதாதா? கல்லைப் போயி சாமீன்னு சொல்ற? சாமிக்கிட்ட எதுக்கு கோரிக்கை வைக்கிற?”ன்னு, இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டு, முழி பிதுங்க வச்சிட்டுது! சத்தியமா அந்தக் கேள்வி ஒன்னுக்குக்கூட எனக்கு பதில் தெரியலை. அப்போதாங்க முடிவு செஞ்சேன், இனிமே சாமி கும்பிடனும்னா, இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சதுக்கப்புறம்தான்னு!

இதப் படிச்சவுடனே, உங்களுக்கெல்லாம் தோனுமே, “ஆஹா….இது அவன் இல்ல! எல்லாம் ஒரு டைப்பாத்தான் போய்க்கிட்டிருக்கு. ஆமா, எத்தன பேரு கெளம்பியிருக்கீங்க இப்படி?”. என்ன சரிதானே? அட ஏங்க நீங்க வேற! நீங்க நெனக்கிற(?) மாதிரி நாத்திகவாதியெல்லாம் இல்லீங்க. இருக்குற இருப்புக்கே (உயிர்களோட பரிணாமத்தைச் சொல்றேங்க) அர்த்தம் புரியாத ஒரு ஞானசூன்யம்ங்க நானு! இதுல எனக்கெல்லாம் ஆத்திகமா நாத்திகமான்ற பட்டிமன்றமெல்லாம் அவசியமா, நீங்களே சொல்லுங்க?! சரி அத விடுங்க, நாம சுவாரசியமான கல்லூரி வாழ்க்கைக்குள்ளே போவோம்…..

கல்லூரியும் கலகலப்பும்!

சைட் அடிக்கிறது, சினிமா பார்க்குறது, ஊர் சுத்துறது எப்படி எல்லாத்துக்கும் மத்தியில ஓரளவுக்கு படிச்சி, 83% மார்க் வாங்கி, நுழைவுத்தேர்வெல்லாம் எழுதிட்டு, டாக்டர் சீட்டுக்கு காத்துக்கிட்டிருந்தா, எல்லாமே ஊத்திக்கிச்சி! அடப்பாவமே, இப்படித்தாங்க வீட்ல வருத்தப்பட்டாங்க! ஆனா, பொறியியல் துறையில நல்ல கல்லூரிகள்ல சீட்டு கெடைச்சது, நமக்குத்தான் கணக்கு சுட்டுப்போட்டாலும் வராதே! அதனால, நான் போக மாட்டேன்னுட்டேன். ஆனா, படிச்சா அறிவியல்தான் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்! அப்புறமென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவருன்னு யாரும் சொல்றதுக்கு முன்னாடி, மைசூர் RIE (Regional Institute of Education, NCERT) கல்லூரியில, தமிழ்நாட்டுல இருந்து தேர்வு செய்யப்பட்ட 10 பேர்ல ஒரு ஆளா, சும்மா சிங்கம் மாதிரி வந்துட்டோம்ல?!

சீட்டு கெடைச்சு, கல்லூரிக்கு போகப்போறோம்ன உடனே, “கவலை மறந்தோம், பெண்ணைக் கண்டோம்…..கக் கக் கக் கல்லூரிச் சாலை, கல்லூரிச்சாலை….இ….இ….ஈ”ன்னு ஒரு பக்கம் மனசு பாட்டெல்லாம் பாடி பட்டயக் கெளப்ப ஆரம்பிச்சிட்டுதுன்னாலும், இன்னொரு பக்கம் “ஐய்யய்யோ, தமிழ்நாட்டுல ஒரு மொழி பேசுறவன், சீனியருங்கிற பேர்ல ராக்கிங் செஞ்சாலே தாங்க முடியாது. இதுல, ஆந்திரா, கேரளா, கர்னாடகா, யூனியன் பிரதேசம்னு தென்னிந்தியாக்காரன்  எல்லாம் மொத்தமா சேர்ந்து ராக்கிங்குற பேர்ல குடுக்கப்போற அலப்பறைய எப்படி சமாளிக்கப்போறாம்டா சாமீ”ன்னு ஒரே உதறல்தான் போங்க!

அதுக்காக, நாமெல்லாம் தன்மானச் சிங்கம் தமிழங்கிறத நிரூபிக்காம விட்ற முடியுமா? அதனால, ஒரு வழியா மனசத் தேத்திக்கிட்டு, “சிங்கமொன்று புறப்பட்டதே”ன்னு மைசூருக்குப் பொட்டியக் கட்டி கெளம்பியாச்சு! சேலம் வழியா, நம்ம சந்தனக்கடத்தல் வீரப்பன் ஏரியாவையெல்லாம் ஒருவித பயத்தோடயே தாண்டி, இயற்க்கைய ரசிச்சிக்கிட்டே மைசூருக்குப் போய்ச் சேர்ந்தேன்! சரி, ஒரு ஆட்டோ புடிச்சி கல்லூரிக்குப் போலாமுன்னு, ஆட்டோக்காரன்கிட்டப் போயி, போற எடத்தச் சொல்லலாமுன்னு பேச்செடுத்த உடனே, “எல்லி ஓகு பேக்கு”ன்னு கேக்குறான். அடப் பாவி, என்னடா இப்படி பேக்குன்னு கேவலமா திட்றானேன்னு நெனச்சுக்கிட்டு, ஒரு வழியா அவனுக்கு புரிய வச்சு கல்லூரிப்போய்ச் சேர்ந்தேன்!

ராக்கிங் ரவுசுக்கள்!

முதல் நாள் கல்லூரிக்குப் போயிட்டு, எல்லாருக்கும் ஒரு வணக்கத்தப் போட்டுட்டு, விடுதிக்கு திரும்பி வந்தா, ஆரம்பிச்சாய்ங்க அலப்பறைய. ஷூ, வாட்ச் போடக்கூடாது, ஸ்லிப்பர்தான் போடனும், மிலிட்ரி கட் பண்ணக்கூடாதுன்னேல்லாம் சில்றத்தனமா இருந்திச்சி ராக்கிங்! ஏய்….எதையாவது சுவாரசியமா செய்யுங்கப்பான்னு மனசுக்குள்ள சொன்னாலும், ஒரு வாரம் வரைக்கும் வெளியில, ரொம்ப நல்ல புள்ளயா இருந்தோம் (தமிழ் கூட்டனி ஆரம்பிச்சிட்டோம்ல!). எல்லா (4) மாநில பொண்ணுங்களும் கூப்பிட்டு, மிமிக்ரி பண்ணு, டான்ஸ் ஆடு, பாட்டுப் பாடுன்னாய்ங்க. இப்படி முதல் மாசம் முழுக்க ஒரே கூத்து, கும்மாளந்தான்! ஆனா, ஒரு வாரத்துக்கப்புறம், நாங்க எங்க ரவுச ஆரம்பிச்சிட்டோம்ல. செய்யக் கூடாதுன்னு சொன்னதையெல்லாம் செஞ்சு, பொண்ணுங்க மத்தியில திமிர் பிடிச்சவன்னு பேரு வாங்கி, சீனியர் பசங்க வயித்தெரிச்சலையெல்லாம் கொட்டிக்கிட்டு, அப்படி இப்படின்னு ஒரு வழியா ராக்கிங் முடிஞ்சது!

நாய்க்காதலும் சில நல்ல நட்புகளும்!

ராக்கிங் முடிஞ்சி ரெண்டு வாரம் ஆகல, நம்ம பசங்க ஆரம்பிச்சிட்டாய்ங்க அவிய்ங்க வேலைய! அதாங்க, ஒரு பொண்ணு ரெண்டு முறை  பார்த்து சிரிச்ச உடனே, ரெட் ரோஸ கொண்டுபோய் நீட்டி ‘ஐ லவ் யூ’ன்றது (?!), அதே பொண்ணுகூட ரெண்டு நாள் சிரிச்சு பேசிட்டா தெய்வீகக் காதல்ங்கிறது, லைப்ரரியில படிக்கும்போது ஒருத்தி கூட உக்காந்துட்டா போதும், உடனே ஹையோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சீங்கிறது! “டேய்….ஏண்டா ஏன், அரிப்பெடுத்தா சொரிஞ்சிக்கிங்கடா.  அத விட்டுட்டு, அதுக்கேல்லாம் காதல்னு பேரு வச்சி ஏண்டா இப்படி மனுசன கொல்றீங்க?”. இதையெல்லாம் விட கொடுமை என்னன்னா, காலேஜுக்குள்ள எங்கே பார்த்தாலும் சோடி சோடியா உக்காந்துக்கிட்டு, காதல் கோட்டையில சொல்ற மாதிரி நாய்க்காதல ஆரம்பிச்சிடுவாய்ங்க! அதுக்காக காதலிக்கிற எல்லாரும் அப்படின்னு சொல்ல வரல, ஊருக்காக காதலிக்கிற வெளங்காத கோஷ்டிங்க மட்டுந்தான் இப்படி!!

இது மாதிரி இம்சைங்களயெல்லாம் பார்த்துட்டு, காதல்னாலே ஒரு காத தூரம் தள்ளி நிக்க ஆரம்பிச்சாச்சு! இதுக்கிடையில, சில நல்ல நட்புகள வளர்த்துக்கிற வாய்ப்பு கிடைச்சுது. வயது வித்தியாசமில்லாம பழகின சீனியர், ஜூனியர் எல்லார்கூடயும் நல்ல நட்பு பாராட்டி, கல்லூரி வாழ்க்கைக்கும், கல்லூரி தாண்டிய வெளி உலக வாழ்க்கைக்குமான நல்ல பல கருத்துகள பகிர்ந்துக்கிட்டோம்!

எனக்குள் விழுந்த ஸ்டெம் செல் விதை (குருத்தனுக்கள்)!

மேல சொன்ன சேட்டைகளுக்கு மத்தியில, செமஸ்டருக்கு செமஸ்டரு படிக்கவும் செஞ்சோம்ல?! அப்படி படிக்கும்போதுதான், எல்லா பாடத்துக்கு மத்தியில ஒரு பாடம் மட்டும், இருட்டுல அழகாய் பறக்கிற மின்மினிப் பூச்சி மாதிரி கண்ணையும், கருத்தையும் கவர்ந்துச்சி! இந்த உலகத்துல பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மடிந்துபோகிற (மனிதனையும் சேர்த்த) சராசரியான உலக உயிரினங்கள் மத்தியில, பிரமிக்கத்தக்க சில குணாதீசியம்/திறன்களைக் கொண்ட சில உயிரினங்களும் இருக்குங்கிறதப் பத்தின பாடம்தான் அது!

ப்ளேனேரியா (Planaria) என்றழைக்கப்படும் புழு போன்ற ஒரு உயிரினம்

wikimedia:by Mike6271

இருக்கு. மத்த உயிரினத்துக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு இந்தப் ப்ளேனேரியாவுக்கு உண்டு. இப்பொ மனுசங்களயே எடுத்துக்குங்களேன், திடீர்னு ஒருத்தருக்கு கைவிரலோ அல்லது கையோ வெட்டப்பட்டு துண்டாயிட்டுதுன்னா, சில மணி நேரங்களுக்குள்ள அதே கைவிரல்/கைகளளை சம்பந்தப்பட்டவரின் உடலுடன் பொருத்தவில்லையென்றால் அவர், வாழ்க்கை முழுவதும் ஊனமாவே இருக்கனும். ஏன்னா, புதிய கைகள் திரும்ப வளராது! ஆனா, இந்த ப்ளேனேரியாவை எந்த கோணத்தில் வெட்டினாலும், சில மணி நேரங்களில், வெட்டப்பட்ட தலை/உடல் பாகங்கள் இப்படி உடலின் எந்தவொரு பாகமும் மீண்டும் வளர்ந்துவிடும். என்ன, ஆச்சரியமாவும், நம்ப முடியாததாவும் இருக்குங்களா?

உண்மைதாங்க, இது சாத்தியமே! எப்படின்னு கேட்டீங்கன்னா, குருத்தனுக்கள்/ஸ்டெம் செல்ஸ் என்னும், உடல் வளர்ச்சிக்கு அடிப்படையான, ஒரு வகை அனுக்கள் மூலமாக இழந்த எல்லா உடல் பாகத்தையும் திரும்பவும் வளர்த்துக்கொள்ள முடியும். படிச்ச பாடங்கள்ல, இந்த ஒரு பரிணாம வினோதம் மட்டும், பசுமரத்தாணி மாதிரி அப்படியே பதிஞ்சிப் போச்சி மனசுக்குள்ள! அது தொடர்பான ஒரு மார்பகப் புற்றுநோய் ஆய்வுலதான், சில வருடங்களா என் முனைவர் பட்டப்படிப்பை படிச்சிக்கிட்டு இருக்கேன். மேலிருப்பான் பக்கத்துல, ஸ்டெம் செல்ஸ் பத்தின ஒரு தொடர் எழுதப்போறேன். அதுல உங்களுக்கு, ஸ்டெம் செல்ஸ் பத்தி இன்னும் அழகா, விரிவா புரிய வைக்கிறேன்!

இப்படித்தாங்க நம்ம பதின்ம வயது, சில பல சேட்டைகள்ல தொடங்கி, ஸ்டெம் செல்ஸ் பத்தின பேரார்வத்துல சுபமா முடிஞ்சது! என்னங்க, “அடப்பாவி….., பதின்ம வயதுக் குறிப்புகள்னு தொடங்கி இப்படி பாதியிலேயே பதறி அடிச்சி ஓட வச்சிட்டியே” அப்படீன்றீங்களா? அட, அரசியல்ல இதல்லாம் சகஜமுங்க…..!!

இந்த தொடர்பதிவு ஜோதியில, என்னைத் தொடர்ந்து ஐக்கியமாக சில நண்பர்களை அழைக்கிறேன்…..

யூர்கன் க்ரூகியர்

அகம் புறம்

திசைக்காட்டி

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements