ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்?!

Posted on மே 9, 2010

1


நம்ம தமிழ் சினிமாவுல, எங்கிட்ட மோதாதே, மோதி விளையாடு இப்படியெல்லாம் படம் எடுத்திருக்காய்ங்கன்னு உங்களுக்கு தெரியும். ஆனா, இதெல்லாம் யாருக்காக? எதிரிகள பறந்து பறந்து அடிக்கிற, ஒரே ஆளா 50 பேர சும்மா புரட்டி எடுக்குற(?) தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக. நேருக்கு நேரா நின்னு, எதிரிகளோட மோதி ஜெயிக்கிறாகளாமாம்?!

இப்படியே பார்த்துப் பார்த்துப் போன உங்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு படையான, வெள்ளை ரத்த அனுக்களின் அசுர தாக்குதலிலிருந்து தப்பிக்க, HIV எய்ட்ஸ் கிருமி வில்லனின் படைகள் பயன்படுத்துற, ராஜ தந்திரமான ஒரு போர் யுக்திய அறிமுகப்படுத்தலாம்னு, நெனச்சேன்.

இன்றைய பதிவுல, நோய் எதிர்ப்பு படைக்கும்,  உடலைத் தாக்கும் கிருமிகளுக்கும் (HIV வைரஸ்) நடக்கிற ஒரு சுவாரசியமான யுத்தத்தைப் பத்தித்தான் இனிமே நாம பார்க்கப்போறோம். என்ன, நீங்க ரெடியா?

HIV என்னும் ஒரு புரியாத புதிர்?!

அனுவைப் பிளந்து, மரபனுக்களையெல்லாம் சும்மா பிரிச்சி மேயுற விஞ்ஞானிகளையே முழி பிதுங்க வைக்கிற எத்தனையோ வைரஸ் கிருமிகள்ல, எய்ட்ஸ் வைரஸ் HIVக்குத்தான் எப்பவுமே முதலிடம். கடந்த 1981-ல மருத்துவ உலகத்துக்கு அறிமுகமாகி, கிட்டத்த்தட்ட 30 வருடங்களா மனுசனுக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்குற HIV வைரஸ் ஒரு எமகாதகன்னுதான் சொல்லனும்?!

ஏன்னா, மருந்துகளாலயும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையின் மூலமாகவும், எத்தனை விதமான போர் வியூகங்கள வகுத்துத் தாக்கினாலும், கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு, புதுசா புதுசா வித்த்கைகளப் பயன்படுத்தி, எல்லாத் தாக்குதல்களையும் முறியடிச்சி, “HIV ஆ கொக்கா”ங்கிற மாதிரி   தப்பிச்சிக்கிட்டே இருக்கு இந்த எமகாதக HIV!

HIV, ஒரு எத்தனுக்கு எத்தன்!

எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ், மனித உடலுக்குள் ஊடுருவி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அனுக்களான Immune cells/வெள்ளை ரத்த  அனுக்களைத் தாக்கி, அவற்றினுள் சென்று விடுகின்றன. உள்ளே சென்ற பின் தன் ஹைஜாக் வேலையைத் தொடங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும்! கிட்டத்தட்ட எல்லா வைரஸ்களும் மருந்துகளுக்கும், ரத்த அனுக்களின் அசுரத்தாக்குதலுக்கும் இரையானாலும்,   ரத்த அனுக்களில் உள்ளே சென்றுவிட்ட வைரஸ்கள் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி படை மற்றும் (Antiviral) மருந்துகளின் கண்ணில் படாமல்  தந்திரமாக தப்பித்து விடுகின்றன.

இப்படித் தப்பிக்கும் வைரஸ்கள்தான், எய்ட்ஸ் நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் போனதற்க்கு அடிப்படைக் காரணம். தப்பிக்கும் வைரஸ்களைத் தாக்கி அழிக்க மனிதன் புதுப்பது வழிகளைக் கண்டுபிடித்துத் தாக்கினாலும், அதி நவீன (?) யுக்திகளப் பயன்படுத்தி திரும்பவும் தப்பித்து விடுகின்றன. எப்படித் தப்பிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான், HIVயின் போர்வியூகத்தை உலகுக்கு வெளிச்சம் காட்டி, எய்ட்ஸை முற்றிலும் ஒழித்து விடலாம் எனும் நம்பிக்கையை அவ்வப்போது ஊட்டி வருபவை!

அந்த வரிசையில், CNRS, Institut Curie and Institut Pasteur என்னும் கல்வி நிறுவனத்தின் ஒரு ஆய்வில், ரத்த அனுக்களிடமிருந்து தப்பிக்க HIV வைரஸ் பயன்படுத்தும் தந்திர யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! அது என்னன்னு பார்க்கிறதுக்கு முன்னாடி, உடலின் நோய் எதிர்ப்புசக்தி படைவீர ரத்த அனுக்களின் ஒரு சிறு அறிமுகம்….

உடலின் நோய் எதிர்ப்புசக்தி படைவீரர்கள்!

உடலைத் தாக்கும் ஒவ்வொரு நுண்கிருமியையும் அழிக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மையம் பல்வேறு வெள்ளை ரத்த அனுக்களை பயன்படுத்துகின்றன. ஆனால், இந்த ரத்த அனுக்களைத் தாக்கி அழிக்கும் குணமுடைய வைரஸ்களுள் HIV-யும் ஒன்று! HIV தாக்கும் ரத்த அனுக்களில் , உள்புகும் கிருமிகளை (விழுங்கி) அழிக்கும் தன்மையுள்ளவை, முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ் (Macrophages) என்றழைக்கப்படும் ஒரு வகை வெள்ளை ரத்த அனுக்கள். இரண்டாம் நிலை படைவீரர்கள் CD4 T lymphocytes என்றழைக்கப்படும் டி அனுக்கள் (T cells)!

HIV வைரஸ்கள் உடலினுள் சென்றவுடன், முதல் வேலையாக  முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ்களைத் தாக்கி, அவற்றினுள் ஒளிந்துகொண்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின், பெரும்படையாய் சென்று இரண்டாம் நிலை படைவீரர்களான டி அனுக்களைத் தாக்கி அழித்துவிடுகின்றன! அப்புறமென்ன, தொலைந்தான் எதிரின்னு வைரஸ்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்!

அந்தக் கொடுமக்கூத்த நீங்களே பாருங்க இந்தக் காணொளியில…..

HIV-யின் அமிலத்தன்மை (pH) மாற்று போர்வியூகம்?!

HIV வைரஸ்களின் இப்படிப்பட்ட இருவேறு தாக்குதல்களுக்கு அடிப்படையான போர்வியூகம் என்ன அப்படீங்கிறத கண்டுபிடிக்க Philippe Benaroch என்னும் பாரீஸ் நாட்டு விஞ்ஞானி, சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்காரு. அந்த ஆய்வின் முடிவுல, HIV வைரஸ்களின் ஒரு சுவாரசியமான, எதிர்பாராத போர்வியூக யுக்தியை கண்டுபிடிச்சிருக்காரு!

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின், முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ்களினுள்ளே,  பொதுவாக அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த அமிலத்தன்மையில் HIV வைரஸ்களால் உயிர்வாழ முடியாது! ஆனால், மேக்ரோஃபேஜஸ்களைத் தாக்கி உள்ளே செல்லும் வைரஸ்கள், இயற்க்கையான அமிலத்தன்மையை குறைத்து தங்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவான ஒரு அமிலத்தன்மையை உருவாக்கிவிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அமிலத்தன்மை குறைந்தவுடன், மேக்ரோஃபேஜஸினுள்ளே இருக்கும் கிருமி அழிக்கும் பல என்சைம்கள் செயலிழந்துவிடுகின்றனவாம்! அப்புறமென்ன,  HIV வைரஸ்கள் எல்லாம் அல்லலும் போச்சு தொல்லையும் போச்சுன்னு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா இனப்பெருக்கம் செஞ்சு , உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையை எல்லாம், மிகச் சுலபமா/மொத்தமா கபளீகரம்  செஞ்சு, கடைசியில மனுசன பல விதமான நோய்க்கிருமிகளுக்கும்/நோய்களுக்கும் இரையாக்கிவிடுகின்றன! அது சரி, இதானா மேட்டரு?!

என்னங்க, இப்போ புரியுதுங்களா HIV வைரஸோட ராஜ தந்திரமும், போர்வியூகமும்?

“என்னத்தப் புரிஞ்சி என்ன செய்ய. அதான் இன்னும் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபுடிக்கலையே” அப்படீன்றீங்களா? கவலப்படாதீங்க, இந்த போர்வியூகத்த தடை செய்ய மருந்துகள கண்டுபிடிக்க, ஆய்வுகள ஆரம்பிச்சிட்டாங்க விஞ்ஞானிங்க! கூடிய சீக்கிரமே கண்டுபிடிச்சிருவாங்கன்னு நம்பிக்கையோட இருப்போம்!

ஆனா, அதுக்கு முன்னாடி, இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவுல, இப்போதைக்கு நடைமுறையில இருக்குற ஒரு எய்ட்ஸ் மருந்து/சிகிச்சை முறையைப் பத்தி விரிவாப் பார்ப்போம். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க…..

தொடர்புடைய பதிவு:

டாஸ்மாக்குக்கு, தண்ணியடிக்க போன “வைரஸ்” தீவிரவாதி!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements