பால்; எலும்புகளின் ரகசிய ஸ்நேகிதியோ?!

Posted on மே 4, 2010

15


நாம எல்லாருமே தினமும் பால் குடிக்கிறோம். அது வெறும் பாலாகவோ, காப்பியாகவோ, டீயாகவோ அல்லது காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட் மாதிரியான சத்து பானங்களாகவோ இப்படி எதாவது ஒரு விதத்துலதான் இருக்கு இல்லீங்களா?

அதெல்லாம் சரி, ஆனா ஏன் பால் குடிக்கிறோம் அல்லது ஏன் குடிக்கனும்னு யாராவது கேட்டா நாம என்ன சொல்லுவோம்?

நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்கு அப்புறமா தெரியப்படுத்துங்க. ஆனா, இப்படி யாராவது என்னைக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்னு கேட்டீங்கன்னா, முதல்ல சத்துக்காகத்தான்னு குத்து மதிப்பா (?) சொல்லிட்டு, திரும்பவும் என்ன சத்துக்காகன்னு கேட்டா, வைட்டமின் A  அப்புறம் கால்சியம், பொட்டாசியம், இரும்பு இப்படி சில தாதுக்கள் (minerals) போன்றவற்றிற்க்காக அப்படின்னுதான் சொல்லுவேன்!

ஏன்னா, உயிர்வேதியல்ல எவ்வளவுதான் பால் பத்தி பிரிச்சி மேஞ்சி படிச்சிருந்தாலும், திடீர்னு யாராவது கேட்டா என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்! ஆனா, சமீபத்துல ஒரு நாள் பேசிக்கிட்டிருக்கும்போது, என்னோட சகோதரர்(அவரும் ஒரு ஆராய்ச்சியாளர்), “பால் எல்லாம் குடிக்கிறது சுத்த வேஸ்ட், ஏன்னா சொல்லிக்கிற மாதிரி அதுல ஒன்னும்  பெருசா சத்து/உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள்னு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாரு?!

அவர் இப்படிச் சொன்னவுடனே எனக்கு, என்னடா இது கொடுமையா இருக்கேன்னு ஆகிப்போச்சு! என்ன உங்களுக்கும்தானே? ஆமாங்க, ஏன்னா பொறந்ததுலேர்ந்து நம்மில் பலர், எதாவது ஒரு வகையில பால் குடிச்சிக்கிட்டுதான் வந்திருக்கோம் இல்லீங்களா? அப்படியிருக்கும்போது, பாலில் அத்தியாவசியமான சத்துக்கள் எதுவும் இல்லைன்னு ஒருத்தர் சொன்னா, அதை எப்படி ஏத்துக்க முடியும்?

இப்படி உடனே கேட்டேனே தவிர, அதுல இருக்குற உண்மையை தெரிஞ்சிக்க முயற்ச்சி பண்ணல. ஆனா, பாலில் உண்மையாவே உடலுக்கு அத்தியாவசியமானது எதாவது இருக்கா, இல்ல சும்மா பேருக்குத்தான் இதுவரைக்கும் அதைக் குடிச்சிக்கிட்டு வர்றோமான்னு ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருந்திச்சி!

சமீபத்துல, அந்தக் கேள்விக்கு பதில் சொல்ற விதமா ஒரு ஆய்வறிக்கை ஒன்னு வெளியாகியிருந்தது. அதப் பார்த்த உடனே, ஆகா….இதத்தானே இவ்வளவு நாளா எதிர்ப்பார்த்திருந்தேன்னு படிச்சேன். அதுல இருக்குற சில முக்கியமான விஷயங்கள உங்ககூட பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவ எழுதறேன். வாங்க, அப்படியே பாலுக்குள்ள ஒரு உயிர்வேதியல் பயணம் போயிட்டு வரலாம்…..

பாலின் சத்துக்கள், ஒரு பார்வை!

பாலில் உள்ள சத்துக்கள் குறித்த, அமெரிக்க உணவுத்தர நிர்ணய நிறுவனத்தின் அட்டவணை கீழே…..

படம்:dairycouncilofca.org

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தீங்கன்னா, வைட்டமின் A மற்றும் B12, சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்ஃபரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவைதான் அதிக அளவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. *பாலில் உள்ள வைட்டமின் D-யின் அளவு இங்கே குறிப்பிடப்படவில்லை. ஏன்னா, ஒவ்வொரு வகையான பாலிலும், வைட்டமின் D வெவ்வேறு அளவில் இருப்பதால் குறிப்பிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

சமீபத்திய ஒரு அமெரிக்க ஆய்வுப்படி, 2 வயது முதலான 16,000 அமெரிக்கர்களின் உணவில், அதிகப்படியான வைட்டமின் D யைக் கொடுப்பது பால் மட்டுமே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 2 வயது முதல் 18 வயதினருக்கு தேவையான வைட்டமின் D-யில் மூன்றில் இரண்டு பங்கு பாலிலிருந்தே பெறப்பட்டிருக்கிறது அப்படீன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க!

அதுமட்டுமில்லாம, பால் தவிர்த்த உணவுகளில் வைட்டமின் D-யினை, அதிக அளவு தரக்கூடியவை சில மட்டுமே அப்படீன்னு சொல்றாரு உணவுக்கட்டுப்பாடு, குழந்தைநல மருத்துவர் கெய்த் அயூப்!  மேலும் அவர், பாலில்லாத உணவுப்பழக்கத்தில், உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்களை பெருவது மிகவும் கடினம் என்றும், அவற்றில் மிக மிக முக்கியமானது வைட்டமின் D என்றும் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

வைட்டமின் D-யும் உடல் ஆரோக்கியமும்!

படம்:ksjtracker.mit.edu

உடலுக்குத் தேவையான பல்வேறு உயிர்வேதியல் மாற்றங்களுக்கும், செரிமானத்துக்கும் முக்கியமானவை வைட்டமின்கள்! அத்தகைய வைட்டமின்கள் ஓவ்வொன்றுக்கும், உடலில் பல பகுதிகளின் ஆரோக்கியத்தில் ஒரு முக்கியமான பங்கு உண்டு. எந்தவொரு வைட்டமின் இல்லையென்றாலும், உடலில் ஒரு வகை உபாதை (vitamin deficiency disorders) ஏற்படும்  என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்!

மனிதர்கள் உள்ளான முதுகெலும்புள்ள உயிரினங்களின் தோலில் உற்பத்தியாகும் ஒரே வைட்டமின், வைட்டமின் D என்பதாக அறிகிறேன். ஆனால், வைட்டமின் D-யானது தோலில் உற்பத்தியாவதற்க்கு, ultraviolet B என்னும் ஒரு குறிப்பிட்ட வகை அல்ட்ரா வயலெட் ஒளிக் கதிர்கள் தோலில் படவேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி தோலில் உற்பத்தியாகும் அளவு மிக குறைவு என்பதால், வைட்டமின் D நிறைந்த உணவுகளை ஒருவர் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்!

அப்படி எடுத்துக்கொள்ளவில்லையென்றால், முதலில் பாதிப்படைவது நம் எலும்புகளே! அதாவது, வைட்டமின் D குறைவினால் ஏற்படும் நோய்கள் இரண்டு. ரிக்கெட்ஸ் (Rickets) என்னும் ஒருவகை நோய், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, எலும்புகளின் வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கும். ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்னும் மற்றொரு நோய், பெரியவர்களின் எலும்புகளை மெலிதாக்கி வலுவிழக்கச் செய்யும் தன்மையுடையது.

ஆனால், வைட்டமின் D-யானது எலும்புகளின் வளர்ச்சிமட்டுமல்லாது, நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய்கள் மற்றும் சிலவகை புற்று நோய்கள் என பல நோய்களை தோற்றுவிப்பதிலும், உடலின் நோய்எதிர்ப்பு சக்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறது இதுவரையிலான வைட்டமின் D ஆய்வு! மேலும் விரிவானதொரு விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்

வைட்டமின் D குறித்த ஒரு கருத்துச்செறிவுள்ள காணொளியைக் கீழே பாருங்க….

அமெரிக்கர்களில் நடத்திய இந்த ஆய்வில், அமெரிக்கர்களில் பாதிபேர் வைட்டமின் D குறைபாடுள்ளவர்களே என்று கண்டறியப்பட்டுள்ளது! ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள வைட்டமின் D அளவு 400IU, அதாவது 4 குவளை பாலிலுள்ள வைட்டமின் D அளவு!

என்னங்க, இப்போ சொல்லுங்க. பால் குடிக்கிறதுல எதாவது பலன் இருக்கா, இல்ல ஒன்னுமே இல்லியா?! எனக்குத் தெரிஞ்ச/புரிஞ்சவரைக்கும் பால் எலும்புகளோட ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ரகசிய ஸ்நேகிதின்னுதான் தோனுது!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements