வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?

Posted on ஏப்ரல் 29, 2010

16


“தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

அப்படின்னு சொல்லியிருக்காரு இரண்டடியில் உலகளந்த புலவர் திருவள்ளுவர். தீப்புண்ணாவது உள்ளே ஆறி வடுவாகிப்போகும், ஆனால் சுடும் சொற்களால் ஏற்படும் புண் என்றுமே ஆறாது. அப்படீன்னா வலிச்சிகிட்டே இருக்கும் அப்படீங்கிறாரு!

இது தொடர்பான இன்னொரு பழமொழிய, “நெல்லை கொட்டினாக்கூட அள்ளிடலாம், ஆனா சொல்லைக்கொட்டினா அள்ளவே முடியாது” அப்படீன்னு பெரியவங்க சொல்லக் கேட்டதுண்டு!

இந்த ரெண்டு விஷயங்களுமே கடும்/தீய சொற்களால் ஏற்படும் வலி (பாதிப்பு) நீண்ட காலம் (நெருப்பு போல) கனிந்து கொண்டே இருக்கும், அதனால அத்தகைய ஒரு தவறை செய்யாமல் இருப்பது (தவிர்ப்பது) நல்லதுங்கிற கருத்தையே முன்வைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும், இல்லீங்களா?

ஆனா, மேலே சொன்ன குறளை நாம கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டிய நேரம் வந்திருக்குன்னு சொல்றாங்க நரம்பியல் விஞ்ஞானிகள்! உடனே “இந்த விஞ்ஞானிகள் என்ன, திருவள்ளுவர விட பெரிய புத்திசாலிகளா”ன்னு கேட்டு எம்மேல கோபப்படாதீங்க?!

திருக்குறளைக் கொஞ்சம் மாத்தி யோசி?!

ஏன்னா, நான் சொல்ல வந்தது, திருவள்ளுவர் சொன்னத மாத்தி யோசிக்கனும் அப்படீங்கிறதில்ல. திருவள்ளுவர் சொன்ன அதே குறளோடு அவர் சொல்லாத  ஒரு விஷயத்தையும் சேர்த்துக்கனும் அப்படீங்கிறதுதான். சரி உங்களுக்கு புரியற மாதிரி நேரடியாவே சொல்லிடுறேன்.

அதாவது, கடுஞ்சொற்கள் தீப்புண்ணைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்னு  திருவள்ளுவர் சொன்னாரு. ஆனா, வலியுடன் தொடர்புடைய சொற்க்கள்  மட்டுமேகூட, மூளையில் வலியை ஏற்படுத்தும் பகுதியை தூண்டி வலியை ஏற்படுத்திவிடுகின்றன அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்! அப்படியா….? நம்ப முடியலையே?!

ஆமாங்க, உதாரணமா ஒருவர், புண்கள்/காயங்கள், கொடுமைப்படுத்துதல், தண்டனை/தண்டித்தல் போன்ற வலியுடன் தொடர்புடைய எந்தவொரு சொல்லைக் கேட்டாலும், உடனே கேட்பவரின்  வலியுணரும் மூளைப்பகுதியானது தூண்டிவிடப்பட்டு, வலி உண்டாகி விடுகிறதாம்!

உளவியல் பாதி நரம்பியல் மீதி!

இந்தக் விஷயத்தை படித்தவுடனே, “இது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயமா இல்ல நரம்பியல் சம்பந்தப்பட்டதா” அப்படீங்கிற சந்தேகம் எனக்கு வந்தது  (என்ன, உங்களுக்கும்தானே?). ஆனா உண்மை என்னன்னா, “இது கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி, உளவியல் பாதி நரம்பியல் மீதி கலந்து செய்த கலவை அப்படீங்கிறதுதான்!

சரி இதுவரைக்கும் நாம என்னங்கிறதப் பார்த்தோம். இனி எப்படின்னு பார்ப்போம்…..

வார்தைகள்கூட வலிக்கிறது, ஏன்?

ஜெர்மனியின் ஜெனா பல்கலைக்கழகத்தை  (University of Jena) சேர்ந்த, உளவியல் ஆய்வாளர் ஃப்ரெட்ரிச் ஷில்லர் (Fredreich Schiller) நடத்திய ஆய்வில், 16 நபர்களை வலி தொடர்பான பல வார்த்தைகள் படிக்குமாறு பணித்தனர். வார்த்தைகளைக் படிக்கும்போது, தொடர்புடைய நிகழ்வுகளை கற்பனை செய்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!

இந்தச் சோதனையின்போது, சோதிக்கப்பட்டவரின் உடலில் மூளையின் செயலியக்கங்களை பதிவு செய்யும், fMRI ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இச்செயல் மேலும் சில முறையும் தொடரப்பட்டது.

வலியுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் படித்து, தொடர்புடைய நிகழ்வை கற்பனையும் செய்தபோது, Pain matrix என்றழைக்கப்படும் மூளையில் வலியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை சேமித்து வைக்கும் ஒரு பகுதியானது, தூண்டப்பட்டு செயல்படவும் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?! அட….ஆச்சரியமா இருக்கே?!

நம் மூளையின் வலியுணரும் மையம் குறித்த ஒரு காணொளி இங்கே உங்கள் பார்வைக்கு…..

இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்றாலும், Brain Imaging என்றழைக்கப்படும் இம்மாதிரியான மூளையைப் படம்பிடிக்கும் ஆய்வுகளில் இது இயல்பானதே என்கிறார் ஷில்லர்!

இந்த ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய, முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது நண்பர்களே. அது என்னன்னா, “வெறுப்புணர்ச்சியுடன் தொடர்புடைய, உதாரணமாக அறுவறுக்கத்தக்க, திகிலூட்டும், அதிர்ச்சியூட்டும் போன்ற வார்த்தைகளை மற்றும் பொதுவான சில வார்த்தைகளையும் படித்தபோது வலியுடன் தொடர்புடைய மூளைப்பகுதியானது தூண்டப்படவில்லை” என்பதுதான்! ஓஹோ….அப்படியா சங்கதி?!

ஏங்க, இப்பச் சொல்லுங்க. பதிவுத் தொடக்கத்துல நாம  பார்த்த திருக்குறளை இனிமே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்தானே?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements