சீ….போங்க, எனக்கு கூச்சமா இருக்கு?!

Posted on ஏப்ரல் 27, 2010

11


தலைப்பைப் படிச்சிட்டு உங்கள்ல சில/பல பேரு, “அடப்பாவி நீயும் ஆரம்பிச்சிட்டியா? மேலிருப்பான் வலைக்கு வந்தா, ஏதோ நாலு புது அறிவியல் செய்தி படிச்சிட்டு போகலாமேன்னு பார்த்தா…..” அப்படீன்னு உணர்ச்சிவசப்பட்டு, பதிவுச் செய்தியை பத்தி  என்னென்னமோ கற்பனை பண்ணிடாதீங்க நண்பர்களே……

உங்க எல்லாருக்குமே தெரியும் “வெட்கம்” அப்படீங்கிறது ஒரு அழகான, கவிதை போன்றதொரு உணர்ச்சின்னு! அதனாலதான, நம்ம கவிஞர்கள் “நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்”னு எல்லாம் சினிமா பாட்டுல சும்மா பூந்து விளையாடுறாங்க?! ஆனா, அடிப்படையில கூச்ச சுபாவம் அப்படீங்கிற ஒரு சுபாவத்தோட ஒரு வகையான வெளிப்பாடுதான் வெட்கம்!

எனக்குள் இருக்குற பலவிதமான சந்தேகங்கள்ல, உடலில் நிகழும், கூச்ச சுபாவம் (வெட்கம்) தொடர்பான அறிவியல்/நரம்பியல் நிகழ்வுகள் என்னென்ன, அந்த உணர்வு எப்படி ஒரு கவிதை மாதிரியான வெட்கமாகவும்/இன்னபிற பல்வேறு கூச்ச சுபாவ உணர்ச்சிகளாகவும் வெளிப்படுது அப்படீங்கிற ஒரு சந்தேகமும் ரொம்ப நாளாவே இருந்தது. உங்கள்ல சிலருக்கும் இப்படி இருந்திருக்கலாம்?!

சமீபத்திய ஒரு நரம்பியல் ஆய்வு, கூச்ச சுபாவத்தின் அறிவியலை குறைந்தபட்சம் ஓரளவுக்காவது விளக்க முயற்ச்சி செஞ்சிருக்குன்னு சொல்லலாம். அதப்பத்தின சில கருத்துகள உங்ககூட பகிர்ந்துக்கத்தான் இன்றைய பதிவு. வாங்க அது என்னன்னு விலாவாரியா பார்ப்போம்…..

வெட்கமும் கூச்சசுபாவமும்!

அதிகமாக வெட்கப்படும் அல்லது கூச்ச சுபாவமுள்ள, அதிகம் பேசாத சுபாவமுள்ளவர்களின் (Shy/Introverts) மூளையும், வெளிப்படையாக, தம் உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தும் சுபாவமுள்ளவர்களின் (Bold/Extroverts) மூளையும் , வெளியுலகை/உலக நிகழ்வுகளை முற்றிலும் வெவ்வேறு விதமாக கணக்கிடுகின்றனவாம்/பார்க்கின்றனவாம்!

உலக மக்களில் சுமார் 20 விழுக்காட்டினர், பிறக்கும்போதே ஒரு வித பண்புநலனுடன் பிறக்கின்றார்களாம். அதற்க்குப் பெயர் “சென்சரி பெர்சப்ஷன் சென்சிடிவிடி (sensory perception sensitivity (SPS)) என்கிறார்கள் ஆங்கிலத்தில். அதாவது,  உலக நிகழ்வுகளை உணரும் ஒரு புலனறிவு அப்படீன்னு சொல்லலாம்! இந்தப் புலனறிவே, சிலரின் அழுத்தமான/கூச்ச சுபாவமுள்ள அல்லது எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு, அடிப்படைக் காரணம் என்கிறது நரம்பியல். இப்பண்பு நலனை சில குழந்தைகளில் காணலாம். அவர்கள்….

  1. மிகுந்த தயக்கமுள்ளவர்களாக
  2. தண்டித்தால் மட்டுமே நன்றாக செயல்படுபவர்களாக
  3. எளிதில் அழக்கூடியவர்களாக
  4. வினோதமான கேள்விகளை கேட்படவர்களாக
  5. ஆழ்ந்த சிந்தனையுள்ளவர்களாக

இப்படி பலவாறாக செயல்படக்கூடிய குணாதீசியங்களை கொண்டிருப்பார்கள் என்கிறது நரம்பியல் ஆய்வு! இம்மாதிரியானவர்கள், வெளிப்படையான/கலகலப்பானவர்களுடன் ஒப்பிடும்போது, எந்தவொரு விஷயத்தையும் உற்று நோக்கி, ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்துகொள்ளும் தன்மையுடையவர்களாம்!

உணர்ச்சிவசப்படும் தன்மையுடையவர்கள் (The sensitive type)!

உணர்ச்சிவசப்படும் குணமுடையவர்கள், ஒரு முடிவினை எடுக்க/கருத்தினை வெளிப்படுத்த நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுதல், மனசாட்சியுடன் நடத்தல், ஒரு சிறு உரையாடலில் எளிதில் அலுப்புதட்டுதல், சப்தங்கள்/இரைச்சல்களாலும், கூட்டங்களாலும் சங்கடப்படக்கூடியவர்களாகவும், எளிதில் பயப்படக்கூடிய குணமும், மொத்தத்தில் உணர்ச்சிவசப்படும் குணாதீசியம் அவர்களின் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கும் வண்ணமாக இருப்பர் என்கிறது ஆய்வு!

எந்தவொரு விஷயத்தையும் உற்று நோக்கி, ஆழ்ந்து சிந்திக்கும் குணமே, மேற்சொன்ன பல குணாதீசியங்களுக்கு அடிப்படைக் காரணமாம்!

இந்த ஆய்வில், உணர்ச்சிவசப்படும் குணமுடையவர்களுக்கும், கலகலப்பானவர்களுக்கும் சில படக் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. படக்காட்சிகளை காணும்போது ஏற்படும், மூளை செயல்பாட்டை படமெடுக்க/கண்கானிக்க, ஒவ்வொருவரின் உடலும் fMRI என்னும் ஒருவகையான ஸ்கேனிங் எந்திரத்துடன் இணைக்கப்பட்டது. சோதனையின் முடிவில், படக்காட்சியினை கண்ட உணர்ச்சிவசப்படும் தன்மையுடையவர்கள் அவ்வளவாக கருத்தாழமில்லாத சின்ன சின்ன காட்சிகளைக்கூட மிகவும் உன்னிப்பாகவும், நீண்ட நேரமும் கண்டார்களாம். உணர்ச்சிவசப்படாத தன்மையுள்ள பிறருடன் ஒப்பிடும்போது, அவர்களின் மூளை அதிக செயல்பாட்டையும், வெறும் காட்சியை மட்டும் காணாமல், மூளையானது ஆழ்ந்த சிந்தனைக்கும் உட்படுத்தப்பட்டதாம்.

உணர்ச்சிவசப்படும் தன்மையானது, மனிதன் தவிர்த்த பூச்சிகளில் தொடங்கி, மீன்கள், நாய், குரங்குகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு உயிரினங்களிலும் காணப்படுகிறதாம். அனேகமாக, இத்தகைய ஒரு பண்புநலன்/குணாதிசியம் பரிணாம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் நரம்பியல் நிபுனர்கள்!

மேலே நான் சொல்லியிருக்கிற விஷயங்கள் புரியலைன்னா, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களே, இந்த ஆய்வு குறித்த விளக்கும் காணொளியை கீழே பாருங்க……

அம்பியும் அந்நியனும்!

இதுவரையில், கலகலப்பாக இருப்பதும், உணர்ச்சிவசப்படுவதும் வெவ்வேறு மனிதர்களின் குணம் என்று எண்ணிவந்த ஆய்வாளர்கள், இப்போது இவ்விரண்டு குணங்களும் ஒரே மனிதனின்/உயிரினத்தின் குணங்களாக இருக்க வாய்ப்புண்டு என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். உணர்ச்சிவசப்படுதல் என்னும் குணம் சில நேரங்களில் மட்டுமே செயல்படுமாம். அப்படிச் செயல்படும்போது, எதையும் நீண்ட நேரம் உற்று நோக்கி, ஆழ்ந்து சிந்திக்குமாம். ஆனால், கலகலப்பான/தைரியமான (B0ld) குணமானது, எதையும் செய்ய உடனுக்குடன் துணிந்து செயல்படுமாம்!

துரிதமாக செயல்படவேண்டிய இடத்தின் கூச்ச சுபாவத்தன்மை வேலைக்காவதில்லை, ஆனால் அதே சமயம் இக்கட்டான/குழப்பமான, அபாயகரமான ஒரு சூழ்நிலையில் ஆழ்ந்து சிந்திக்கும் குணமுள்ள கூச்சசுபாவத்தன்மையே அவசியமாகிறது.

ஆக, நம்ம அந்நியன் விக்ரம் மாதிரி, அம்பியா இருக்க வேண்டிய இடத்துல அம்பியா, ரேம்போவாக இருக்க வேண்டிய இடத்துல ரேம்போவா , அந்நியனா  செயல்படவேண்டிய சமயத்துல அந்நியனா மாறி, இப்படி கூடு கூடு விட்டு பாயுற மாதிரி ஒவ்வொரு இடத்துக்கும் ஏத்தமாதிரி நம் குணாதீசியங்களை பயன்படுத்தி, புத்திசாதுர்யமாக காரியங்கள சாதிச்சிக்க ஒரே மனிதனுள் இருக்கும் வெவ்வேறு குணங்கள் உதவுகிறது அப்படீன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

ஆய்வும் கோணமும்!

இந்த ஆய்வுல புதுசா தெரிஞ்சிக்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா நான் நெனக்கிறது, அந்நியன் படத்தில் வருகிற மூன்று விதமான விக்ரமும் உடலால் ஒருவர்தான்னாலும், பண்புநலனால அவர் மூன்று வெவ்வேறு மனிதரா காட்டப்பட்டிருப்பார். அதற்க்குப் பெயர் “மல்டிபுல் பெர்சனாலிட்டி டிசார்டர் (MPD)”னு சொல்லியிருப்பாங்க! அதாவது ஒருவகையான நரம்பியல்/மூளை குறைபாடு அல்லது கோளாறுன்னு அர்த்தம்.

ஆனா, இந்த ஆய்வு மூலமா, “ஆரோக்கியமான/குறைபாடுகள் எதுவும் இல்லாத ஒரே மனிதன், பல்வேறு சூழ்நிலைகளில், தேவைக்கேற்றவாறு கூச்ச சுபாவம்/உணர்ச்சிவசப்படும் தன்மையுள்ளவனாகவும் (Sensitive), அதாவது அம்பியாகவும்,  கலகலப்பான (Non-sensitive), அதாவது ரெமோவாகவும் மாறி செயல்படலாம். அதுவும் இயற்கையான ஒரு நிகழ்வே, குறைபாடு என்பதல்ல” அப்படீன்னு விஞ்ஞானிகளே முதல் முறையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது!

இந்த ஆய்வு குறித்த கருத்துகள் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements