மனித உடலும் “மரபனு ஆர்கெஸ்ட்ராவும்”!

Posted on ஏப்ரல் 19, 2010

8


அறிவியல் துறையல்லாத வேறு துறையைச் சேர்ந்த நிறைய பேருக்கு , “மரபனுவியல், உயிர்தொழில்னுட்பவியல், மூலக்கூறு அறிவியல், க்ரோமோசோம், டி.என்.ஏ, ஜீன்”னு, பரிச்சயமில்லாத பல அறிவியல் கலைச்சொற்களைப் பார்க்கும்போதும், படிக்க நேரிடும்போதும் தோனலாம், “என்னடா இது, கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கேன்னு?!”.

ஆனா, மரபனுக்களின் செயல்பாடு குறித்த அறிவியல படிச்சுத் புரிஞ்சிக்கிறதப் பொறுத்தவரையிலாவது, அறிவியல் படிக்கிறதுல அப்படி ஒன்னும் பெரிய பிரச்சினையெல்லாம் இல்லீங்கன்னு தைரியமா சொல்லலாம்னு நெனக்கிறேன்! ஏன்னா, சமீபத்துல வெளியாகியிருக்கிற மரபனுவியல் குறித்த  செய்தி அப்படி?!

எம்.எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்!

உங்கள்ல பல பேருக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இவங்களோட இசை ரொம்ப பிடிக்கலாம். அதுக்குக் காரணம், இவங்க இசைல கச்சிதமா வெளிப்படுகிற உணர்வுகளோ, கதையோட்டத்துடன் ஒத்து செல்லக்கூடிய தன்மை இப்படி ஏதோ ஒன்னுதான் இல்லீங்களா?  இவங்க இசையைப் பத்தி சொல்லும்போது, இந்த இசை மேதைகளின் இசையின்  முதுகெலும்பாக இருக்கிற இசைக்குழுவினரையும் பத்தி கண்டிப்பா நாம் சொல்லியே ஆகனும்!

ஆக, மொத்த இசைக்குழுவினரோட இசையை, தன் தேவைக்கேற்ப அவ்வப்போது ஏற்றி, இறக்கி, சமயத்தில்  குழுவில்  (வயலின், புல்லாங்குழல், கிடார், கீபோர்டு வாசிப்போர் போன்ற) சிலரை முற்றிலுமாக நிறுத்தி, ஒரு முழுமையான ராகத்தில் ஒரு பாடல்  உருவாக, ஒவ்வொரு இசையமைப்பாளரும் உழைக்கிறார்கள்!

மரபனு ஆர்கெஸ்ட்ரா!

"மரபனு ஆர்கெஸ்ட்ரா?!"

கிட்டத்தட்ட இந்த இசையமைப்பு மாதிரிதாங்க, நம்ம மரபனுக்களோட செயல்பாடும்கூட?! எப்படின்னு கேக்குறீங்களா, அதாவது, நம்ம உடல்ல கிட்டத்தட்ட 300 ஆயிரம் கோடி (3 ட்ரில்லியன்) அனுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அனுவுக்குள்ளேயும் 46 க்ரோமோசொம்கள் அடங்கிய  ஒரு மரபனுக்கோப்பு (Genome) இருக்கிறது.  ஒவ்வொரு மரபனுக்கோப்புக்குள்ளும், செயல்படக்கூடிய நிலையில் உள்ள மரபனுக்களின் எண்ணிக்கை மொத்தம் 30,000 என்று நம்பப்படுகிறது!

நம் உடலில் உள்ள இந்த 30,000 மரபனுக்களும், ஒரே சமயத்தில் செயல்படுதில்லை! ஆனால், ஒரு தருணத்தில் ஒன்றொ/ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ மரபனுக்கள் மும்முரமாக செயல்படுகின்றன. மற்ற எல்லா மரபனுக்களும் செயலற்று போய்விடுகின்றன! எந்த மரபனு (க்கள்), எப்போது செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க, (ஒரு இசை நிகழ்ச்சி/ஆர்கெஸ்ட்ராவை ஒரு இசையமைப்பாளர் வழி நடத்திச்செல்வதுபோல) நம் உடலிலும், பல்வேறு பகுதிகளில், பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்! இவர்கள்தான், உடலின் ஒவ்வொரு பகுதியிலும், எந்த மரபனு, எங்கு-எப்படி செயல்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறார்கள்! இதன் விளைவாக நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் தத்தம் வேலைகளை செவ்வனே செய்து, ஒட்டுமொத்த மனித உடலுக்கு ஒரு அர்தத்தினை கொடுக்கிறது.

எப்படி நம் இசையமைப்பாளர்கள், தம் பணியை சரியாகச் செய்தால் அவர்களுக்கு மாநில-தேசிய விருதுகளும், மேலை நாட்டு கோல்டன் க்ளோப், ஆஸ்கர் போன்ற உலகின் மிக உயரிய விருதுகளும் கிடைக்குமோ, அப்படித்தான் நம் உடலின் இசையமைப்பாளர்களும், மரபனு ஆர்கெஸ்ட்ராவில் தம் பணியை சரியாகச் செய்தால், நோய்நொடியற்ற, நூறு வருட வாழ்க்கை நமக்கு பரிசாக  கிட்டும்!

ஒரு டி.என்.ஏ பகுதியிலிருக்கும் மரபனுக்களிலிருந்து புரதங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்னும் மரபனு செயல்பாட்டுக்கூறுகளை துல்லியமாக படம்பிடித்தது போன்ற இந்த அனிமேஷன் காணொளியைப் பாருங்களேன்…..

என்னங்க, இப்போ புரியுதுங்களா நம் மரபனுக்களின் செயல்பாடு?! சரி, உங்களோட (மனிதனுடைய) மரபனுக்களின் செயல்பாடு குறித்த ஒரு வரைபடத்தை சமீபத்திய ஒரு ஐரோப்பிய ஆய்வு உருவாக்கி இருக்கிறது. அதை மக்களின் பார்வைக்கும் வைத்திருக்கிறது. அதற்க்கு பெயர் “ArrayExpress Gene Expression Atlas”. அதைக் காண விருப்பமுள்ளவர்கள் இங்கு செல்லுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements