“போர்வீரன் மரபனுவும்” மரபுவழி வன்முறையும்!!

Posted on ஏப்ரல் 17, 2010

6


சட்டவிரோதமான செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடுற பல பேர்ல சிலர, சில வித்தியாசமான(?) காரணங்களுக்காக நீதிமன்றம் தண்டிக்காம விடுவது சில நேரங்களில் நம்ம சமுதாயத்துல நடக்கும். உதாரணமா, புத்திசுவாதீனம் இல்லாத ஒருத்தர் ஒரு வன்முறையைச் செய்திருந்தாலும் அவரோட மன நிலைய காரணமா காட்டி, மருத்துவமனையில அனுமதிப்பாங்களே தவிர தண்டிக்க மாட்டாங்க.

ஆனா, வேடிக்கையான சில காரணங்களுக்காகவும், வன்முறையில் ஈடுபட்ட சிலர தண்டிக்காம விட்டுடுவாங்க. நிஜ உலகத்துல இது எந்த அளவுக்கு சாத்தியம், நடைமுறையில இருக்குன்னு எனக்கு சரியா தெரியல , ஆனா நம்ம (தமிழ்) சினிமா உலகத்துல இது ரொம்பவே பிரசித்தம்.

உதாரணத்துக்கு, நம்ம கேப்டன் பிரபாகரன் படத்தைச் சொல்லலாம். பல கொலைகள் செஞ்ச கதாநாயகன நீதிமன்றம் தண்டிக்காம, “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு(?)”ன்னு, தீர்ப்பு சொல்ற வேலைய மக்கள் கிட்ட விட்டுவிடுகிற மாதிரி  காமிச்சிருப்பாங்க. அந்த படத்து முடிவ பார்த்த நம்மில் சிலர், “ஐய்ய….இங்க பாருங்கப்பா காமெடிய, இந்தக் கூத்தெல்லாம் நம்ம தமிழ் படத்துலதான் நடக்கும்”னு சொல்லி கேளி செஞ்சிருப்போம்.

ஆனா, இதையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி, சில விசேஷமான அறிவியல்  காரணங்களுக்காக, வன்முறையில ஈடுபடுற சிலர  தண்டிக்கனுமா, தண்டிக்காம விட்டுடனுமான்னு ஒரு அறிவியல் பட்டிமன்றமே நடத்திக்கிட்டு இருக்காங்க மேலை நாட்டுல. இது தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை வாசிக்க இங்கே செல்லுங்கள்

அந்த விசேஷமான அறிவியல் காரணங்கள் என்ன, அந்தக் காரணங்களுக்கு அடிப்படையான அறிவியல் கோட்பாடு என்னன்னுதான் நாம இந்த பதிவுல பார்க்கப் போறோம்…..

மரபனுவியலும் மரபுவழி வன்முறையும்!

பொதுவாக XY என்று இரு க்ரோமோசோம்கள் மட்டுமே கொண்டவர்கள் ஆண்கள் அப்படீங்கிற இயல்பான ஒரு நிலை. ஆனா, சிலருக்கு மட்டும் இயல்பான  XY உடன் மற்றொரு Y க்ரோமோசோம் சேர்ந்து XYY என்று இருப்பதுண்டு. அத்தகைய க்ரோமோசோம்கள் கொண்டவர்களை, XYY சிண்ட்ரோம் உடையவர்கள் என்கிறது மரபனுவியல்!

1960,70-களில், XYY குறைபாடு இருப்பவர்கள், இயற்கையாகவே வன்முறையில் ஈடுபடும் பழக்கமுள்ளவர்கள் என்ற ஒரு கருத்து மரபனுவியலாளர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால், சில வருடங்களில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

ஆனால், திடீரென்று கடந்த 1993 ஆம் ஆண்டு, மிகப் பிரபலமான Science, என்னும் அறிவியல் வார இதழில், டட்ச் மக்களின் ஒரு வகையினரில், ஒரு வித மரபனு குறைபாட்டினால், ஆண்கள் வன்முறையில் ஈடுபடுவதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகி விஞ்ஞான உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போர்வீரன் மரபனு (Warrior gene)!

படம்: weblo.com

விஞ்ஞான உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த மரபனுவின் பெயர்தான் “போர்வீரன் மரபனு (Warrior gene)”. அதென்னா போர்வீரன் மரபனுன்னு ஒரு வினோதமான பேருன்னு நீங்க கேட்கலாம். “விஞ்ஞான உலகத்துல இப்படி பேரு வைக்கிறதெல்லாம் சகஜமப்பா”ன்னு சொல்லலாம்னாலும், தகுந்த காரணத்தோட இப்படி பேரு வச்சிருக்காங்க.

மூளையின் செயல்பாடுகளுக்கு ஒரு காரணமான, மோனோ அமைன் ஆக்சிடேஸ் A (MAOA) அப்படீங்கிற ஒரு என்சைம் உற்பத்திக்கு காரணமான மரபனுதான் இந்த போர்வீரன் மரபனு. இந்த மரபனு சேதமைடைஞ்சு (Mutation), அதன் விளைவாக அந்த என்சைம் உற்பத்தி குறைந்து, இந்த பாதிப்பு உள்ள ஆண்களுக்கு  மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு, வன்முறைச் செயல்கள்ல ஈடுபடத் தூண்டப்படுவார்களாம். இப்பப் புரியுதுங்களா இந்த மரபனுவோட பெயர்க்காரணம்?! இந்த மரபனு பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்க ஆசைப்படுறவங்க இங்கே போங்க

இந்த மரபனுவின் செயல்பாட்டு கோளாறுகளையும், மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் தொடர்புபடுத்தி பார்ப்பது எந்த அளவுக்கு சரியானது அல்லது தவறானது அப்படீங்கிற ஒரு விவாதம், பழக்கவழக்க மரபனுவியலாளர்கள் (Behavioural geneticists) மத்தியில் ஒரு பக்கம் காரசாரமான நடந்துக்கிட்டு இருந்தாலும், மேலை நாட்டு சட்டத்துறையில் இத்தகைய மரபனுவியல் கூற்றுகளை நம்பி (?) நீதி வழங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா இல்லையான்னு சட்டவியல் நிபுனர்கள் ஒரு பக்கம் குழம்பிப்போய் இருக்கிறார்கள் என்கிறது செய்தித்துறை!

இந்தக் கதையெல்லாத்தையும் விட இன்னும் சுவாரசியமான ஒரு விஷயமும் இருக்கு. அது என்னன்னா, ஆண்களின் வன்முறைக்கு மரபனுவியல் தொடர்பான காரணங்கள் இருக்குன்னா, பெண்களின் வன்முறைக்கும் இந்த மாதிரியான மரபனுவியல் காரணங்கள் இருக்குமான்னு ஒரு சந்தேகம் மரபனுவியல் விஞ்ஞானிகள் மத்தியில இருக்கு. அது பற்றிய ஒரு  திட்டவட்டமான ஆய்வறிக்கை வரும் பட்சத்தில் அதையும் மேலிருப்பானில் பதிவு செய்வேன்.

இப்போ நீங்க சொல்லுங்க, இந்த மாதிரியான மரபனுவியல் காரணங்கள அடிப்படையா வச்சி, ஒரு வன்முறைக் குற்றத்துக்கான தீர்ப்பு, நம்ம திரைப்படங்கள்லேயோ அல்லது வரும் காலங்களில் நம்ம நீதிமன்றங்களிலேயோ வழங்கப்பட்டால், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையான்னு?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements