“ஒருவனுக்கு ஒருத்தி”, சுண்டெலிகளுமா?!

Posted on ஏப்ரல் 1, 2010

11


“உனக்கென இருப்பேன்…..உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்…..உனக்குமுன் இறப்பேன்

கண்மணியே……கண்மணியே!”

இப்படி, “காதல்” படத்துல காதலி சந்தியாவுக்காக, காதலன் பரத் பாடினா அது ஒன்னும் பெரிய மேட்டரு இல்ல நமக்கு. ஏன்னா, நம்ம ஊரு காதல் படங்கள்ல வர்ற, எத்தனையோ காதல் பாடல்கள்ல பத்தோட பதினொன்னா, அதையும் நினைப்போம் அப்படீங்கிறதுனால?! ஆனா, இதே பாட்டை ஒரு மனுசன் பாடாம “ஒரு ஆண் சுண்டெலி (Prairie Vole), தன் காதலியான பெண் சுண்டெலிக்காக பாடுச்சி”ன்னு சொன்னா (ஒரு பேச்சுக்குத்தாங்க?!), முதல்ல அதை நீங்க நம்புவீங்களா இல்ல அதை ஒத்துக்கத்தான் செய்வீங்களா?!

ஒருவனுக்கு ஒருத்தி!

நீங்க நம்பி ஒத்துக்கிட்டாலும் சரி, நம்பாம ஒத்துக்கலைன்னாலும் சரி உலக “உண்மை” அதுதான்! அதாவது, மேற்சொன்ன வகை (“ஆண்) சுண்டெலிகள் தங்கள்  வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு (பெண்) சுண்டெலியுடன்தான் தன் தாம்பத்தியத்தை/இல்லரத்தை பகிர்ந்துகொள்ளுமாம்!”. அடக்கொக்காமக்கா….. மெய்யாலுமா? சொல்லவேல்ல….?!

"காதல்" சுண்டெலி (Prairie Vole)" படம்:wikipedia

அதனாலதான், இந்த வகை சுண்டெலிகளை ஆய்வாளர்கள், “காதல் மற்றும் அன்னியோன்னியத்தை” படிக்க (சோதனை செய்ய) பயன்படுத்திவருகிறார்களாம்! அட…..இது நல்லாருக்கே?! இந்த சுண்டெலிகளைப் பற்றிய விரிவான விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்

இந்த காதல் சுண்டெலிகளோட ஆழமான காதலைப் பத்தி  இன்னும் ஆழமா?! தெரிஞ்சிக்க இந்த காணொளித்தொடரையும் (1-8) பாருங்க நண்பர்களே…..

இதெல்லாம் பழைய செய்திதாங்க. இப்போ விஷேசமென்னன்னா, எமோரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்தின ஒரு ஆய்வில, இந்த வகை சுண்டெலி தம்பதிகள, ஒருத்தர்கிட்டே இருந்து இன்னொருத்தரை சில காலம் பிரிச்சு வச்சிருந்தா என்னவாகும்னு சோதிச்சுப் பார்த்ததில, தன் காதலியை பிரிந்த  ஆண் சுண்டெலிகள், “வாழ்வே மாயம்….இந்த வாழ்வே மாயம்னு” பாடாத குறையா கெடந்து தவியா தவிக்க ஆரம்பிச்சிட்டுதாம். அடி சக்கை, அப்படிப்போடு….?!

அதுமட்டுமில்லாம, (ஆண்) சுண்டெலிகளுக்கு தங்கள் காதலியான (பெண்) சுண்டெலிகளைப் பிரியறதுக்கு முன்னாடி இருந்த ஒரு சந்தோஷம், குதூகலம், விளையாட்டு ஆர்வம் எல்லாம் காதலிகளை/காதலன்களை பிரிஞ்ச பிறகு வெகுவா குறைஞ்சு போச்சாம்.  மேலும், அந்த எலிகளோட உடலில் சோக ஹார்மோன்கள் அதிகப்படியா சுரக்க ஆரம்பிச்சிட்டுதாம். மொத்தத்துல, வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாத மாதிரி ஆயிட்டுதான் அந்த எலிகள்!  அடப் பாவமே….இதுவல்லவோ காதல்?!

இது மனிதக்காதலல்ல….!

அதுமட்டுமில்லாம, மிக முக்கியமா “மனிதர் உணர்ந்துகொள்ள, இது மனிதக் காதல் அல்ல….அல்ல! அதையும் தாண்டி புனிதமானது…..புனிதமானது!” என்னங்க, எலிகள கிண்டல் பண்றேன்னு பார்க்குறீங்களா? இல்லவே இல்ல, உண்மையாவே, இருந்தா இந்த எலிகள் மாதிரி இருக்கனும்னு நெனச்சிதாங்க அப்படி எழுதினேன்!

இது எல்லாத்தையும் விட, இந்த ஆய்வில ரொம்ப ரொம்ப சுவாரசியமான ஒரு விஷயம் என்னன்னா, தத்தம் காதலி/காதலன்களை பிரிஞ்சி சோக  கீதம் பாடின எலிகளை, ஒரு புது சுண்டெலி (ஃபிகர்) கூட இணைச்சுப் பார்த்ததுல, அந்த எலிகளோட மூளையின் வேதியல் மாற்றங்கள் பெரிதும் மாறிப்போயினவாம்?!

கடைசியா, அந்த மீளாத் துயரத்திலேர்ந்து எல்லா எலிகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர, “கார்டிகோட்ராஃபின் வெளியிடும் ஹார்மோனை (corticotropin-releasing factor (CRF)) அப்படீங்கிற ஒரு சோகத்துக்கு காரணமான ஒரு வகை ஹார்மோனை செயலிழக்கச் செய்யும் ஒரு மருந்தைக் கொடுக்க வேண்டியதாயிற்றாம்!

நல்லக் காதலும் கள்ளக் காதலும்!

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, “கட்டின மனைவி இருக்க, கள்ளக் காதலியையும், அடுத்தவன் மனைவியையும் தேடும் (மனிதர்களுக்கு) நமக்கு , அந்த சுண்டெலிகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு தானே?!” அட, அது இல்லீங்க “சி.ஆர்.எஃப்” அப்படீங்கிற ஹார்மோன்தான், சோகத்துக்கு  காரணம்னு தெரியுதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க!

சரி, இதுவரைக்கும் சுண்டெலி மேட்டரு. இனிமேதாங்க நம்ம மேட்டரு. அதாவது, (நாம சுண்டெலிகளில் பார்த்த) இதே மாதிரியான ஒரு குணாதீசியம்தான்,  விதிவசத்தாலே/இயற்கை இறப்பினாலோ, விவாகரத்து போன்றவற்றினாலோ  தத்தம் துணையைப் பிரியும் மனிதர்களுக்கும் இருக்கலாம்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க!

ஆக மொத்தத்துல, வருங்காலத்துல தத்தம் துணையைப் பிரிந்து வாடும் மனிதர்களுக்கு “சி.ஆர்.எஃப்” எனும் ஹார்மோனை செயலிழக்கச் செய்யும் மருந்துகளை கொடுத்து அத்தகையவர்களின் சோகத்தை குறைத்து, அவர்களின் சீரான வாழ்வுக்கு வழிவகுக்க முடியும்னு நம்புறாங்க மேற்கண்ட இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள்?!

என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த சுண்டெலிகளின் “ஒருவனுக்கு ஒருத்தி” கொள்கையை நெனச்சா…..ஒன்னும் சொல்றதுக்கில்லீங்க. ஏன்னா, “கள்ளக் காதல், கொலை, குறுகிய காலத்தில் ஏற்படும் திருமண முறிவு”ன்னு சமுதாயம் ஏகத்துக்கும் கெட்டுக் குட்டிச்சுவரா போயிருக்கிற இந்தக் காலகட்டத்துல, இந்த சுண்டெலிகளைப் பார்த்தாவது மனுசன் திருந்த மாட்டானான்னு தோனுதுங்க!

ஆமா, இந்த சுண்டெலிகளோட “தெய்வீக காதல்” பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க….?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements