வயசுக்கு வந்தாச்சு;ஆனா மூளைக்கு என்னாச்சு?!

Posted on மார்ச் 31, 2010

6


“ஆத்தா நான் பாசாயிட்டேன்”னு ஊர் முழுக்க கேக்குற மாதிரி கத்தி சொல்லலாம். ஆனா, “ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்”னு யாரும் ஊருக்கெல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்றதில்ல! ஏன்னா, முதல்ல சொன்னது கொண்டாடப்பட வேண்டிய சந்தோஷம், ரெண்டாவது சொன்னது வெளியில் சொல்லமுடியாத, ஒரு இனம்புரியாத உணர்வு!

ஆனா, சங்கர் பட “பசங்க” மாதிரி “எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா”ன்னு ஊரெல்லாம் பாடிட்டு திரியலாம் தப்பில்ல. ஏன்னா, அது வாலிப வயசு, ஹார்மோன் பண்ற சேட்டை, மனசு சொன்ன பேச்சக் கேக்காத வயசு, புது ரத்தம் அப்படியே மடைதிறந்த வெள்ளம் மாதிரி பாயுற பருவம், சுதந்திரத்தை முழுசா அனுபவிக்க வேண்டிய காலம்னு இப்படி இன்னும்  நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் வயசுக்கு வர்றதப் பத்தியும், அந்த வயசோட குணாதீசியங்கள் பத்தியும்.

வயசு பசங்களோ பொண்ணுங்களோ, பொதுவா உலகம் (சமுதாயம்) அவங்களப் பத்தி நெனக்கிறது என்னன்னா, “கிடைக்கிற சுதந்திரத்தை தவறா பயன்படுத்தி, முட்டாள்தனமா பல வேலைகளை செஞ்சுட்டு, வாழ்க்கையில அடுத்து என்ன பண்றதுன்னு புரியாம நிற்க்கிற பசங்க அப்படீன்னுதான்?!

இந்தக் கருத்து, வயசுப்பசங்க (ஒரு சில பேருக்குத்தானே தவிர) எல்லாருக்கும் பொருந்தாது அப்படீன்னு சொல்லுது சமீபத்திய ஆய்வு ஒன்னு! வயசுக்கு வருகிற ஆணோ பெண்ணோ, எனக்குத் தெரிஞ்சவரைக்கும் புற உடல் மாற்றங்களைப் பத்திதான் நாம எல்லாருமே அதிகம் ஆர்வப்பட்டு/கேள்விப்பட்டிருக்கோமே தவிர, அக-உடல் அல்லது மிக முக்கியமா “மூளையில்” எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும் அப்படீன்னு நம்மில் பலருக்கு (ஏன் யாருக்குமே) இதுவரைக்கும் தெரியாதுங்கிறதுதான் உண்மை!

பருவமடைதல்/பூப்படைதலின்போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

பொதுவா இருக்கிற கருத்துப்படி, பருவமடையும் ஒவ்வொருவரும் முட்டாள்தனமான பல காரியங்களை செய்வது என்பது முற்றிலும் உண்மையல்ல! ஆனா, “மூளையின் கற்க்கும் திறன் குறைந்துபோகிறது”  என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை அப்படீன்னு சொல்றாரு ஆய்வாளர் ஹியூ ஷென்!

பருவமடைதலின் போது மூளையில் ஏற்படும், அனு அளவிலும், மூலக்கூறு அளவிலுமான மாற்றங்கள்தான் பருவயதினரின் முட்டாள்தனமான  காரியங்களுக்கு அடிப்படைக் காரணம்னு கண்டுபிடிச்சிருக்காரு திரு.ஷென்.

மூளையின் “ஹிப்போகேம்பசும்” கற்றலும்!

"ஹிப்போகேம்பஸ்" படம்:Wikipedia

கல்வி அல்லது கற்றல் அப்படீங்கிற விஷயம் மூளையோட “ஹிப்போகேம்பஸ்” என்னும் பகுதியில் நடக்கிறது. மூளையில் இந்தப் பகுதி நியாபகச் சக்திக்கு அடிப்படையானது என்பது குறிப்பிடத்தக்கது! கல்வி/கற்பது என்னும் செயலை அனு அளவில் நோக்கினால், நரம்புகளுக்கு இடையிலான தொடர்பு உறுதியாக்கப்படும் போதுதான் கற்றல் என்பது சாத்தியமாகிறது!

நரம்புகளின் தொடர்புகளை பாதிக்கும்/சேதப்படுத்தும் எந்தவொரு செயலும் ,  நியாபகங்கள் உருவாகாமல் தடுத்துவிடும்.  அத்தகையதொரு நிகழ்வுதான் பருவமடைதல் என்பது. அதாவது, பருவமடைதலின்போது கற்றலின் அடிப்படை காரணிகள் பாதிக்கப்படுகின்றன, விளைவாக கல்வி/கற்க்கும் திறன் குறைந்துபோகிறது என்கிறது எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வு!

“காபா”வும்  கல்வியும்!

நரம்புகளை பாதிக்கும் எந்தவொரு செயலும்னு சொல்லிட்டு அது என்னன்னு சொல்லலைன்னா நல்லாயிருக்காதில்லீங்களா?! எலிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, பருவமடைதலின்போது மூளையின் ஹிப்போகேம்பசில் “காபா ரிசெப்டர் (GABA receptor)” என்னும் ஒரு வகை புரதமானது அதிகப்படியாக உற்பத்தியாகிறதாம். இந்த காபா புரதம்தான், கல்விக்கு அடிப்படையான நரம்புகளின் தொடர்புகளை பாதிக்கின்றனவாம்.

“ஐய்யய்ய….அப்படியா? இதை தடுக்க வேற வழியே இல்லீயா? அப்படீன்னா, வயசுப்பசங்க (எலிங்க) முட்டாள்தனமான சில விஷயங்களச் செஞ்சுக்கிட்டேதான் இருப்பாய்ங்களா?” அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்குன்னு சொல்றாரு ஷென்!

அது என்னன்னா, காபா புரதத்தை அழிக்கும்/செயலிழக்கச் செய்யும் ஒரு ஹார்மோன் இருக்குதாம். அதாவது, இந்த (?) ஹார்மோன் இருந்தால்  காபா புரதத்தால் கல்வித் திறன் பாதிக்கப்படாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுமாம்?! “Stress steroid THP” என்பதுதான் அந்த ஹார்மோன்! அட…இது நல்லாருக்கே!

இதே மாதிரி வயசுப்பசங்கலும் புத்திசாலியா மாறுவதற்க்கு ஒரு ஹார்மோன் இருந்தால் எப்படியிருக்கும்னு கொஞ்சம் கற்பனை செஞ்சுப் பாருங்க!.

இந்த ஆய்வை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கு செல்லுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements