பெரிய “உடல்”, ஆனால் சிறிய “பாதங்கள்”; ஏன்?

Posted on மார்ச் 30, 2010

2


தலைப்பைப் படிச்ச உடனே பலருக்கு (ஏன் எல்லாருக்குமே), “மொட்டைத் தலையன் குட்டையில விழுந்தானாம்”, இப்படித்தான் இருக்கும். அதாவது, தலையும் புரியாம, வாலும் புரியாம ஒரு கதைன்னு அர்த்தம்.

ஆனா, நாம பார்க்கப்போற செய்தி அப்படியில்லீங்க. ஏன்னா, நாம மிருகங்களோட உடல் மற்றும் பாதங்கள், இவ்விரண்டுக்குமான ஒரு “வித்தியாசமான” தொடர்பு இவற்றைப் பற்றித்தான் இந்தப் பதிவுல பார்க்கப்போறோம்!

நம்ம வீட்டுல நாய், பூனை இப்படி சில மிருகங்கள வளர்க்கிறோம். அதுங்களோட பாதங்கள நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்க. உடலுக்கேற்றவாறு ஒரு சமமான/தகுந்த அளவில்தான் அவற்றின் பாத அளவுகளும் இருக்கும்.

ஆனா, இதே மிருகங்களோட பெரிய வடிவமான நரி, புலி சிங்க இவற்றையும்  நீங்க பார்த்திருப்பீங்க. அதுங்களோட உடல் மற்றும் பாதங்களையும் கவனிச்சிருப்பீங்க. சரி, நீங்க எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா “ஏன் பூனை மாதிரியே (ஆனா பெருசா) இருக்கிற, புலி/சிங்கத்துக்கு உடல் மிகப்பெரியதா இருக்கும்போது, பாதங்கள் மட்டும் உடலுக்கேற்றவாறு பெரிதாக இருப்பதில்லை” அப்படீன்னு?!

அதாவது, உடல் பெரிதான புலி/சிங்கம் போன்ற மிருகங்களுக்கு அவற்றின் உடலைத் தாங்கும் பாதங்கள் மட்டும் மிகவும் சிறியதாக இருக்கின்றன பூனை போன்ற சிறிய மிருகங்களின் உடல்-பாத அளவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இதப் படிக்கும்போது சிலருக்குத் தோணலாம், “ஆமா, இது நாட்டுக்கு ரொம்பத் தேவை இப்போ”ன்னு.

“நாட்டுக்குத் தேவையோ இல்லையோ, எல்லா விஷயங்களையும் ஏன் எதுக்கு பகுத்துப் பார்க்கிற மூளைக்கு தேவைப்படுது இது மாதிரியான இயற்கை விஷயங்கள் பத்தின மூலக் காரணம்”னு நான் கூட நெனக்கலைங்க, தாய்வானைச் சேர்ந்த காய் ஜுங்-சியும் இங்கிலாந்தைச் சேர்ந்த லூயி ராத்-ங்கிற இரு ஆய்வாளர்களும் நெனச்சிருக்காங்க. அதத் தெரிஞ்சிக்க அவங்க ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்காங்க. வாங்க, அதப் பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்குவோம்…..

படம்:wikipedia

பொதுவா விலங்குகள் ஓடும்போதோ, நடக்கும்போதோ இல்லைன்னா சும்மா நிற்கும்போதோ பார்க்கிற நாம என்ன நெனப்போமுன்னா, அந்தந்த விலங்குகளின் கனமான உடலை, உறுதியான எலும்புகள், தசைகள் மற்றும் கால்களான இவைதான் அவ்விலங்குகள் நன்கு ஓட/நடக்க/நிற்கக் காரணம்னு நெனப்போம், இல்லீங்களா?

ஆனா, அடிப்படை உண்மை என்னன்னா, நான்கு கால் விலங்குகளைப் பொறுத்தவரையில் அவ்விலங்குகளின் முழு உடலின் கனத்தையும் சுமப்பது அவற்றின் பாதங்களே அப்படீங்கிறாங்க ஜுங்-சியும் ராத்தும்! நான்கு கால் விலங்குகளான நாய், பூனை, நரி, ஓனாய், சிறுத்தை போன்ற பல விலங்குகளில் செய்த ஆய்வின் முடிவாகவே இந்தச் செய்தியை சொல்கிறார்கள் அவர்கள்!

அதெல்லாம் சரி, “ஏன் பெரிய உடலை சுமக்கவும் சிறிய பாதங்கள்னு, இன்னும் சொல்லவே இல்லையே”ன்னு கேக்குறீங்களா? அதாவது, சிறுத்தை போன்ற விலங்குகளின் பெரிய உடலை சுமக்கும் அவற்றின் சிறிய பாதங்கள் பூனையின் பாதங்களைப் போல மிருதுவானவை இல்லையாம். மாறாக, (சிறுத்தையின் பாதங்கள்) மிகவும் உறுதியான/கடினமானவையாம். அதனால்தான், சிறிதாக இருந்தபோதும் பெரிய உடலை சுமக்கும் வலுவைப் பெற்றிருக்கின்றன என்கிறது ஆய்வு! ஓஹோ…அதுதானா மேட்டரு?!

ஆக, உடல் பெரிதாக இருந்தால் பாதங்கள் உறுதியாக இருக்கும் (இருக்கனும்) என்பதுதான் இயற்கை விதி/ நியதி போலிருக்கு. ஆமா, உங்களுக்கு என்னத் தோனுது?

இந்த ஆய்வைப் பற்றி மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements