உங்க “பாக்டீரியா கையெழுத்து” தெரியுமா உங்களுக்கு?!

Posted on மார்ச் 27, 2010

0


என்ன நண்பர்களே, நல்லாயிருக்கீங்களா? சில நாட்களா மேலிருப்பான் வலைப்பக்கம் வந்து பார்த்துட்டு, “என்னது இது, 200வது பதிவ போட்டுட்டு மேலிருப்பான் எஸ்கேப் ஆயிட்டானோ”ன்னு நெனச்சிருப்பீங்க!

அதெப்படிங்க, “அரைகுறை தமிழாயிருந்தாலும் பரவாயில்ல, அறிவியல் தமிழாச்சே”ன்னு நீங்களும், எதாவது ஒரு பதிவு எழுதியிருப்பான்னு “நம்ம்ம்ப்பீ”  வலைப்பக்கம் வரும்போது, பதிவு எழுதாம இருக்க முடியும்?! வேலைப்பளு காரணமா சில நாட்கள் பதிவு ஒன்னும் எழுத முடியல.

சரி அத விடுங்க, உங்க எல்லாருக்குமே தெரியும் (மேலிருப்பான் பக்கத்துல இந்த பதிவையும் படிச்சிருப்பீங்க) ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் நுண்ணுயிர் காப்பகம் மாதிரின்னு. அது தொடர்பான இன்னொரு செய்தியும் வந்திருக்கு சமீபத்திய ஒரு ஆய்வு முடிவை ஆதாரமாகக் கொண்டு!

“உன் நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” அப்படீன்னு ஒரு பழமொழி/வாக்கியம் இருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா, இப்போ அதையே கொஞ்சம் மாத்திச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு, அமெரிக்காவின் கொலரேடோ பல்கலைக்கழக ஆய்வாளர் நோவா ஃபியரேரா சொல்றாரு!

விரல்களில் நுண்ணுயிரிகள்(பாக்டீரியாக்கள்)!

அது என்னன்னா, “உன் விரல்களில் இருக்கும் நுண்ணுயிர்களை பார்த்தாலே போதுமே உன்னை அடையாளம் கண்டுகொள்ளலாம்” அப்படீங்கிற ஒரு புதுமொழி/வாக்கியம்தாங்க! இதுக்கு அடிப்படை என்னன்னா,  ஒருவர் தன்  கணினியில் (பயன்படுத்துபோது) தானறியாமலே விட்டுச்செல்லும் பாக்டீரியாக்களை வைத்தே, அவர் யார், என்ன என்ற விவரங்களை அக்கு  வேறு ஆணி வேறாக சொல்லிவிட முடியும்னு கண்டுபிடிச்சிருக்காரு நோவா! யப்பா….?!

நம்ம தோல் வந்து, சின்னதும் பெரியதுமா பல வகையான பாக்டீரியாக்கள் குடும்ப நடத்தி, (புள்ள குட்டி) பதினாரும் பெத்து, பெருவாழ்வு வாழறதுக்கே உருவாக்கின மாதிரி ஒரு அமைப்பைக் கொண்டதாம். அதே சமயத்துல, நம்  தோலில் வாழும் பாக்டீரியா குடும்பத்துக்கும், மற்றொருவரின் பாக்டீரியாக் குடும்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு!

அதனால, நாம் ஒவ்வொருவரும், ஒரு தண்ணீர் குவலையை எடுத்தாலும் சரி,  நம்ம கணினியில ஒரு மின்னஞ்சல் எழுதினாலும் சரி, நாம நம்ம கைரேகை மட்டும் விடுறதில்லை, கூடவே ஒரு பாக்டீரியாக் குடும்பத்தையும் சேர்த்து விட்டுட்டு போறோமாம். அடக் கடவுளே…!

நம் “பாக்டீரியா கையெழுத்து” சொல்லும் கதை!

நம்ம ஓவ்வொருவருக்கும் ஒரு பாக்டீரியாக் கையெழுத்து இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காரு நோவா! அதாவது, 9 பேரோட கணினி எலியின்மேல் (mouse) படிந்திருந்த பாக்டீரியாக்களை எடுத்து, அந்தந்தக் கணினிக்குச் சொந்தமானவர்களின் பாக்டீரியாக்களையும் எடுத்து,  இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள, உலகின் ஒட்டுமொத்த பாக்டீரியாக்களின்  கிடங்கிலுள்ள பாக்டீரியாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில்,  கணினி எலியின்மேல் உள்ள பாக்டீரியாக்கள், கணினியின் சொந்தக்காரரின் பாக்டீரியாக்களுடனே பெரிதும் ஒத்துப்போயிருக்கின்றன!

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, இனிமே நீங்க ஓவ்வொருத்தரும் எதைத் தொட்டாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே தொடுங்க. ஏன்னா…..அதான் இப்போ உங்களுக்கே நல்லாத் தெரிஞ்சிருக்குமே…?!

அதாங்க, நீங்க எதைத் தொட்டாலும், அந்தந்த பொருள்மேல உங்களையறியாமலே உங்க “பாக்டீரியாக் கையெழுத்தைப்”  போட்டுடுறீங்க. ஆக, உங்களைக் காட்டிக்கொடுக்கிற ஒரு உறுதியான தடயத்தை நீங்களே விட்டுட்டு போறீங்க! என்னத்த சொல்றது, எல்லாம் (ஆய்வு) விதி?!

இந்தச் செய்தியை விரிவாகப் படிக்க இங்கு செல்லுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements