“டாக்டர்” கூகுளும் “சைபர்காண்ட்ரியாவும்”?!

Posted on மார்ச் 23, 2010

4


பதிவுத் தலைப்பைப் படிச்சவுடனே உங்களுக்கு மனசுல ரெண்டு கேள்விகள் எழுந்திருக்கும். அதாவது,  “டாக்டர் கூகுள்”னு ஒருத்தர் இருக்கிறாரா (இருந்திருப்பாரோ?), சைபர்காண்ட்ரியாவுக்கும் டாக்டர் கூகுளுக்கும் என்ன தொடர்பு ? இப்படி விசித்திரமான ரெண்டு கேள்விகள்தான் அது. என்ன சரிதானே?

“இதைவிட விசித்திரமான பல பதிவுத்தலைப்புகளை மேலிருப்பான் வலைப்பக்கத்தில் சந்தித்திருக்கிறோம், அதனால் இது ஒன்றும் பெரிதல்ல எங்களுக்கு”ன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டு “பதிவப் பத்தி மேல சொல்லுப்பா”ன்னு கேக்குற நண்பர்கள்ல ஒருத்தர்தான் நீங்கன்னா நான் உடனே பதிவுச் செய்திக்கு போயிடறேன்…..

டாக்டர் கூகுள்!

"டாக்டர் கூகுள்"

எப்பவும்போல வேலைக்குப் போயிருக்கீங்க நீங்க, திடீர்னு உங்க கையில ஒரு வித்தியாசமான ஒரு ஒவ்வாமைக் கொப்புளத்தை பார்க்குறீங்க. உடனே, “என்னது இது புதுசா, ஏன் இப்படி திடீர்னு வந்திருக்கு, ஏதாவது பெரிய பிரச்சினையா இருக்குமோ”ன்னு மனசு பதபதைக்கும். சரி விடு சரியாயிடும்னு நீங்க நெனச்சாலும், உங்க உள் மனசு “ஐய்யய்யோ, இது எதோ பெரிய பிரச்சினை மாதிரி தெரியுது, உடனே டாக்டரை போய்ப் பாரு”ன்னு சொல்லும்.

உடனே டாக்டரைப் போய் பார்க்க முடியாதுங்கிறதுனால, நீங்களும் “சரி நம்ம கூகுள்ல நம்ம பிரச்சினைகளை எழுதி தேடிப் பார்ப்போம்னு சிம்ப்டம்ஸ எழுதி தேடு”ன்னு தட்டின உடனே, நம்ம கூகுள் டாக்டர் தேடல் முடிவுகள அடுக்கித் தள்ளிடுவாரு. ஒன்னு, ரெண்டு, மூனு…..ன்னு, குத்துமதிப்பா சில தளங்களைத் தட்டிப் படிச்சுப் பார்க்குறதுக்குள்ள குப்புன்னு வேர்த்துடும் உங்களுக்கு!

ஏன்னா, நீங்க பார்த்த தளங்கள்ல எல்லாம் அந்த கொப்புளத்துக்கு காரணம் தோல் புற்று நோயாகக்கூட இருக்கும்னுதான் எழுதி இருப்பாய்ங்க. ஆனா, நீங்க அதுக்குள்ள நமக்கு இருக்குறது “அதேதான்”ன்னு முடிவே பண்ணியிருப்பீங்க மனசுக்குள்ள?! அதுக்கு அடிப்படைக் காரணம் என்னன்னா, இப்போ உங்களுக்கு நோய்கள்லேயே கொடுமையான “மன உளைச்சல்” வந்திருக்கும்ங்கிறதுதான்!

இது ஒருத்தரைப் பத்தின செய்தியில்லீங்க.இன்னைக்கு, இணைய உலகத்துல சஞ்சரிக்கிர கோடிக்கணக்கான பேரோட நெலமை இதுதான். இதுவாவது பரவாயில்லீங்க, இன்னும் கொடுமையான ஒரு விஷயம் இருக்கு கூகுள் டாக்டரைப் பத்தி…..!

மாரடைப்பும் டாக்டர் கூகுளும்!

கையில ஏற்பட்ட சாதாரண கொப்புளத்துக்கே இந்த நெலமைன்னா, நெஞ்சு வலி வர்ற சில பேரோட நெலமை ரொம்ப மோசம். அதாவது, திடீர்னு லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு, இது எதனால வந்திருக்கும்னு கூகுள்ல தேடினா, வர்ற 99% தொடர்புகளும் “நெஞ்சு வலிக்குக் காரணம் மாரடைப்புதான்”ன்னு அடிச்சு சொல்ற மாதிரியிருந்தா என்ன ஆகும். உண்மையாவே தேடுறவங்களுக்கு நெஞ்சு வலி/மாரடைப்பே வந்திடும், இல்லீங்களா?

ஆனா,  நிதர்சன உண்மை என்னன்னா சாதாரண செரிமானக் கோளாறால ஏற்படுற வலிகூட நமக்கு நெஞ்சு வலி மாதிரிதான் தெரியும்ங்கிறதுதான்?! “இதுக்கு என்னதான் தீர்வு”ன்னு நீங்களும் நானும் யோசிச்சா ஒன்னும் ஆகப்போறதில்லைங்கிற உண்மை தெரிஞ்ச மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்த முற்பட்டிருக்கு!

சைபர்காண்ட்ரியாவும் (Cyberchondria) அதற்க்கான மைக்ரோசாப்டின் தீர்வும்!

அதென்ன சைபர்காண்ட்ரியா அப்படீன்றீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, மேல நான் விவரிச்ச கூகுள்/இணையத்துல நம்ம உபாதைகளை எழுதி தேடும்போது கிடைக்கிற முடிவுகள்னால, நம் ஓவ்வொருவருக்கும் ஏற்படும் மன உளைச்சலைத்தான் ஆங்கிலத்துல சைபர்காண்ட்ரியான்னு சொல்றாங்க! அதாவது, சைபர்=இணையம் (Cyber=Internet), காண்ட்ரியா=தன் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய அதீத ஆர்வமுடைமை (hypochondria) இது ரெண்டும் சேர்ந்துதான் சைபர்காண்ட்ரியா உருவானது!  இது குறித்த விரிவான விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்

சைபர்காண்ட்ரியா பத்தின இந்தக் காணொளியையும் பாருங்க…..

இந்த சைபர்பர்காண்ட்ரியாவை முடிவுக்கு கொண்டுவரவேண்டி, மைக்ரோசப்ட் நிறுவனம், உடல் உபாதைகள் குறித்த தேடல்களுக்கு, மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகளை மட்டுமே  தரும் ஒரு “பிரத்தியேக தேடல் எந்திரத்தை” உருவாக்குவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அந்த ஆய்வில் அவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புவோமாக!

அத்தகைய ஒரு தேடல் எந்திரம் இணையத்துக்கு வரும் பட்சத்தில், சைபர்காண்ட்ரியாவிலிருந்து மட்டுமல்லாமல், அதனால ஏற்படும் மாரடைப்புகளிலிருந்தும்  நமக்கு விடுதலை கிடைக்கும் என்பதில் ஐயமேதுமில்லைன்னு நான் நெனக்கிறேன்.

ஆமா, இந்த சைபர்காண்ட்ரியாவைப் பத்தியும் அதுக்குக் காரணமான (?) டாக்டட் கூகுள் பத்தியும் நீங்க என்ன நெனக்கிறீங்க…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements