பிரபஞ்சத்துக்கு விளிம்பு இருக்கிறதா?

Posted on மார்ச் 22, 2010

16


வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தி சொல்லும்போது சில பேர், “ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினேன்” அப்படீன்னு சொல்லக் கேட்டிருப்போம். வாழ்க்கைக்கு ஓரம்/விளிம்பு அப்படின்னு எதுவும் இருக்கா? இந்தக் கேள்விக்கு பதில் “இறப்பு”ன்னு சில பேர் சொல்லலாம்.  ஆனா, இதேமாதிரி இன்னொரு கேள்வி இருக்கு தெரியுமா உங்களுக்கு?!

உங்களுக்கு சுலபமா புரியனுங்கிறதுக்காக நம்ம பாளையத்தம்மன் படத்துல வர்ற, விவேக்கோட நீதிமன்றக் காட்சியை எடுத்துக்குவோம். அந்தக் காட்சியில விவேக், பராசக்தி படத்துல சிவாஜி கணேசன் பேசின சீரியசான ஒரு வசனத்த அப்படியே உல்டா பண்ணி நகைச்சுவையா பேசுவாப்ல.

வசனத்தை முழுசா எழுதினா அதுவே ஒரு பதிவு நீளத்துக்கு வந்துடும்கிறதால, அந்த வசனத்துல வர்ற கடைசி வரியை மட்டும் நாம எடுத்துக்குவோம். “ஓடினேன் ஓடினேன், இன்டர்னெட்காரர்கள்…..பி.டபுள்யூ.டிகாரர்கள்…..இப்படி இன்னும் சில பேர்னு சொல்லி, இவர்கள் எல்லாரும் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து எழுந்து ஓடினேன் ஓடினேன்…..சென்னையின் எல்லைவரை ஓடினேன், அங்கே கடல் இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்”னு சொல்லி முகத்த ஒன்னுந்தெரியாத புள்ள மாதிரி வச்சுக்கிட்டு வசனத்தை முடிச்சிருவாப்ல நம்ம விவேக்கு!

அந்தவசனத்தோட கடைசி வரியிலதான் நான் மேலே சொன்ன இன்னொரு கேள்வி இருக்கு. அது என்னன்னு புரியுதா உங்களுக்கு? சரி நானே சொல்லிடுறேன்…..

பிரபஞ்சத்துக்கு விளிம்பு/எல்லையென்று எதுவும் இருக்கிறதா?

"விளிம்பில்லா (?) பிரபஞ்சம்"

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டா, பதில் என்னன்னு சொல்லுவீங்க……?

நீங்க என்ன சொல்லுவீங்கன்னு அப்புறமா எனக்கு மறுமொழியில சொல்லுங்க, ஆனா இந்தக் கேள்விக்கு அறிவியல் ரீதியிலான பதில் என்னன்னா, “இல்லை” அப்படீங்கிறதுதான்!

இப்படி ஒரு பதிலைக் கேட்டுட்டு, “ஓஹோ…..அப்படியா சரி”ன்னு சொல்லிட்டு விட்டுட்டீங்கன்னா பரவாயில்ல. ஆனா, பதிலைக் கேட்டுட்டு, “ஆமாம், இல்லங்கிறது சரி, அது எப்படின்னு விளக்கிச் சொன்னாதான ஒத்துக்க முடியும்னு கேட்டீங்கன்னா” என் நிலைமையும், உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டம்தான்!

ஏன்னா, இந்தப் பதிலுக்கான விளக்கம் சொல்லனும்னா, “மூக்கை தொடுன்னு சொன்னா, மூக்கை நேரா தொடாம, கால்ல ஆரம்பிச்சு தலைவரைக்கும் போயி, தலைய ஒரு சுத்து சுத்தி கடைசியா மூக்கைத் தொட்டா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்” பரவாயில்லீங்களா?!

ஆமான்னு, சொன்னா நான் என்ன பண்ண முடியும்?!. இந்த விளக்கத்தப் படிச்சுட்டு, உங்களுக்கு வரப்போற உலக மகா குழப்பத்துலேர்ந்து அந்த கடவுள்தான் உங்கள காப்பாத்தனும்! அதனால உங்க குலதெய்வத்துமேல பாரத்தைப் போட்டுட்டு மேல படிங்க, சரிங்களா?

பிரபஞ்ச விஞ்ஞானிகளின் ஒரு கூற்றுப்படி, பிரபஞ்சத்த பல கட்டங்கள் அடங்கிய ஒரு கால்பந்தா பாவிச்சீங்கன்னா, கால்பந்துல இருக்குற ஓவ்வொரு கட்டத்தையும் ஒரு மாயாஜால காகிதமா (?) நெனச்சுக்குங்க. இப்போ அந்த கால்பந்துல ஒரு கட்டத்துல ஆரம்பிச்சு எந்த பக்கம் பயணிச்சீங்கன்னாலும், தொடங்கின கட்டத்துக்கே திரும்ப வந்திடுவீங்க!

இன்னுமா படிச்சிக்கிட்டு இருக்கீங்க?! சரி, அப்ப இதையும் கேளுங்க……ஆனா, அதுக்கு முன்னாடி இந்த பிரபஞ்ச விளிம்புப் பத்தின ஒரு அழகான விளக்கக் காணொளியப் பாருங்க……

என்ன படம் பார்த்தாச்சா? சரி, இப்போ (உதாரணத்துக்கு) ஒரு பலூன் மேல எறும்புங்க ஊருதுன்னு வச்சிக்குங்க, அதுங்க எத்தன வருஷம் ஊர்ந்துக்கிட்டு இருந்தாலும் ஒரு எல்லை வரப்போறது இல்லை. அப்படித்தானே? அதிக பட்சம் அதுங்க தொடங்கின இடத்துக்குதான் திரும்ப வர முடியுமே தவிர ஒரு விளிம்புன்னு எதுவுமே கெடைக்கப்போறதில்ல அந்த எறும்புங்களுக்கு!?

இப்படி ஒரு விளக்கத்தப் படிச்சுக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு உங்க மூளைக்குள்ள ஒரு பல்பு எறிஞ்சு, நம்ம “ஐடியா அலமு” மாதிரி “ஆங்……கண்டுபுடிச்சிட்டேன்” அப்படீன்னு சத்தமா, “அந்த பலூனுக்கு வெளியே, இல்லாத ஒரு விளிம்பைத் தேடி பாவமா ஊர்ந்துக்கிட்டு இருக்குற எறும்புங்க மாதிரி இல்லாம, ஒரு வேளை நான் பலூனுக்கு உள்ளே இருந்து, வெளியே வர முயற்ச்சி செஞ்சா, பலூனோட தோலை நான் இடிக்கும்போது ஒரு விளிம்பு இருக்குமில்ல”ன்னு கேட்டுட்டு, இப்போ என்ன பண்ணுவீங்க….இப்போ என்ன பண்ணுவீங்கன்னு நீங்க துள்ளிக் குதிச்சாலும் உண்மை நெலவரம் அந்த எறும்பு  மாதிரிதான்!

அதாவது, பலூனுக்குள்ளே (பிரபஞ்சத்துக்குள்ளே) நீங்க இருந்தாலும் உங்களுக்கு விளிம்புன்னு ஒன்னு கெடைக்கப் போறதே இல்லங்கிறதுதான் நிதர்சன உண்மை!  எப்படின்னு கேட்டீங்கன்னா, அந்த பலூன் (பிரபஞ்சம்) மிக வேகமாக விரிவடைஞ்சுக்கிட்டே இருக்குங்கிறதால, உங்களால அந்த விளிம்பு (?) (மாதிரி நீங்க நெனைக்கிற எல்லை) பகுதிக்கு போகவே முடியாது. அப்படியே நீங்க மாய மந்திரம் ஏதாவது செஞ்சு போனீங்கன்னாக் கூட, நீங்க அடையுற அந்த எல்லை (?) வரைக்கும்தான் நாம பார்க்க முடியுற பிரபஞ்சம்/பிரபஞ்சங்கள் இருக்குன்னு உறுதியா சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்! அப்படீன்னா, அந்த யூகத்தினடிப்படையிலான, எல்லையையும் தாண்டி நம்ம பிரபஞ்சமோ/பிரபஞ்சங்களோ  இன்னும் விரியலாம்/நீண்டு இருக்கலாம் அப்படீன்னு அர்த்தமாம்????

என்னங்க, தலை சுத்துதா? எனக்குச் சுத்திடுச்சி……இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் வேணாம்னு. கேட்டீங்களா?!

இதுக்கப்புறமும் ஏதாவது கேக்கனும்னு நெனச்சீங்கன்னா, ஒரு மறுமொழிய எழுதிட்டு போங்க. அதுவரைக்கும் நான் சுய நினைவோட இருந்தா பதில் எழுதுறேன். வரட்டுங்களா 😉

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements