“தண்ணியடிக்கும்” எலிகளும் “குடி”மகன்களும்!

Posted on மார்ச் 20, 2010

7


ஐயோ…..ஐயோ…..ஐயோ….இந்தக் காலக் கொடுமையை நான் எங்கே போய் சொல்றது? பொல்லாதவன் படத்துல வர்ற கருணாஸ் மாதிரி “மச்சான் நீ கேளேன்……மச்சான் நீயாவது கேளேன்”னு நம்ம பசங்க கிட்ட போய் சொன்னாக் கூட கேக்கமாட்டாய்ங்க போலிருக்கே! அப்படியே கேட்டாலும் சுட்டுப்போட்டாக் கூட நம்ப மாட்டாய்ங்களே….!

ஆனா, இந்த விஷயத்த இப்போ நான் யார்கிட்டேயாவது  சொல்லியே ஆகனுமே?!. இல்லன்னா என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே. நான் இப்போ என்ன பண்ணுவேன்….???

ஏய் ஏய்…..நிப்பாட்டு! இப்போ உன் பிரச்சினைதான் என்ன? அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா, (கேக்கலைன்னாலும் நான் சொல்லியே தீருவேன்?!) மனுசன் தண்ணியடிப்பான்னு நமக்குத் தெரியும், சில மாடுங்ககூட தண்ணியடிக்குதுன்னு (ஜப்பான்ல) சொன்னாய்ங்க, ஆனா எலிங்க கூட தண்ணியடிக்குதாமே?! உங்களுக்குத் தெரியுமா? குறைந்தபட்சம் இதுவரைக்கும் கேள்வியாவது பட்டிருப்பீங்களா?

சத்தியமா நான் இதுவரைக்கும் நெனச்சிகூட பார்த்ததில்லீங்க எலிங்கள்லாம் தண்ணியடிக்கும்னு! ஆனா, ஒரு சின்ன சந்தேகம்ங்க. மனுசன் தண்ணியடிச்சா அவன நாம “குடிமகன்”னு செல்லமா (?) கூப்பிடுறோம். இந்த எலிங்க தண்ணியடிச்சா அதுங்கள எப்படி கூப்பிடலாம்? “குடிஎலிகள்”னு கூப்பிடலாமா?!

அதெல்லாம் சரி, எலிங்க எதுக்கு தண்ணியடிக்கனும்? மனுசங்க மாதிரி சந்தோஷம்/துக்கத்துக்காகவா? இதுக்கு மேலயும் அறுவை போட்டா, உங்கள்ல பலபேரு திருநெல்வேலி வீச்சறுவாளோட வந்தாலும் வந்திடுவீங்க….அதனால, இதுக்கு மேலயும் உங்க பொறுமைய சோதிக்காம நான்  நேரா மேட்டருக்கு வந்துடறேன்.

தண்ணியடிக்கும் எலிகள்!

மக்களே…..முதல்ல நான் உங்களுக்கு ஒரு விஷயத்த தெளிவுபடுத்திடுறேன். எலிகள் தண்ணியெல்லாம் அடிக்காது. தண்ணி (குடிநீர்) மட்டுந்தான் குடிக்கும். இந்தப் பதிவுச் செய்தியில் வர்ற எலிகள் மட்டும் தண்ணியடிக்க வைக்கப்பட்டன?! அது எதுக்குன்னா, குடிப்பழக்கம் பற்றிய ஒரு ஆய்விற்க்காக! (ஐயோ….பாவம் எலிகள், அந்த வாயில்லா ஜீவனை ஆராய்ச்சிங்கிற பேர்ல என்னவெல்லாம் செய்ய வைக்கிறாங்க???)

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட குடிப்பழக்கம் குறித்த ஒரு ஆய்வில் எலிகளுக்கு 10% மது (Alcohol) அல்லது சுக்ரோஸ்/இனிப்பு தண்ணீர் (Sucrose) தொடர்ந்து பல வாரங்களுக்கு கொடுக்கப்பட்டு திடீரென்று நிறுத்தப்பட்டது! நிறுத்திய சில வாரங்களுக்குப் பின், மது அருந்திய எலிகளின் nucleus accumbens என்னும் மூளைப்பகுதியில் மட்டும் neuronal firing என்னும்  நரம்பியல் தகவல் பரிமாற்றம்/செயல்பாடு அதிகரித்துள்ளது என்றும், இனிப்பு நீர் அருந்திய எலிகளின் குறிப்பிட்ட அந்த மூளைப்பகுதியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது!

நியூக்லியஸ் அக்கியும்பன்ஸும் (nucleus accumbens) போதைப்பழக்கமும்!

நியூக்லியஸ் அக்கியும்பன்ஸ் (nucleus accumbens) என்னும் மூளைப்பகுதியானது, ஊக்கம் மற்றும் போதைப்பழக்கத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாம, எலிகள் மது அருந்தியதன் விளைவாக ஏற்பட்ட இந்த மூளைப்பகுதியின் அதிக நரம்புச் செயல்பாடானது, இதே செயல்பாட்டைக் கட்டுபடுத்தும்/தடுக்கும் குணமுடைய உடலின் “பொட்டாசியம் தகவல் போக்குவரத்து சாலை”களின் குறைந்த எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்!

உடலின் உப்புத் தகவல் போக்குவரத்து சாலைகள் (Ion channels)!

நம் உடலில் பல்வேறு உப்புத் தகவல் போக்குவரத்துச் சாலைகள் இயங்குகின்றன. அதுல மிக முக்கியமான ஒன்று, பொட்டாசியம் உப்புத் தகவல் போக்குவரத்துச் சாலை (Pottasium Ion Channel) என்பது! இதையே உங்களுக்கு புரியுற மாதிரி இன்னும் எளிமையா (?) சொல்லனும்னா, நாம (வாய்வார்த்தைகளால்) தகவல் பரிமாற்றம் செய்துகொள்கிற மாதிரி, நம் உடலில் உள்ள அனுக்களுக்கு மத்தியிலும் பல கோடி தகவல் பரிமாற்றங்கள் நிகழ்கிறது. நம் தகவல் பரிமாற்றத்துக்கு வார்த்தைகள் பயன்படுவதுபோல உடல் அனுக்களின் தகவல் பரிமாற்றத்துக்கு பல்வேறு வகையான உப்புகள் பயன்படுகின்றன.

(உதாரணத்துக்கு) கால்சியம், பொட்டாசியம், சோடியம்னு இப்படி பல உண்டு. இந்த வகையான உப்புத் தகவல் பரிமாற்றங்களில், ஒவ்வொரு அனுக்களின் மேற்பரப்பில் உள்ள துவாரங்கள் வழியாக, உப்புகள் “உள்ளேயும்-வெளியேயும்” சென்று தகவல்களை அனுக்களுக்கிடையில் பரிமாறுகின்றன/கடத்துகின்றன! பொட்டாசியம் தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்கு உதாரணமா, ஹார்மோன்கள் சுரப்பதைச் சொல்லலாம். உங்கள்ல் பல பேருக்கு தெரிஞ்ச இன்சுலின் ஹார்மோனையே எடுத்துக்கொண்டால், அது எப்போது சுரக்க வேண்டும், எந்த அளவில் சுரக்க வேண்டும் போன்றவற்றை தீர்மானிக்கும் தகவல்களை அனுக்களுக்கிடையில் கடத்துவதே இந்த பொட்டாசியம் உப்புத் தகவல் போக்குவரத்துதான். மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கு செல்லுங்கள்

நரம்புச் செயல்பாட்டுக்கும் பொட்டாசியம் உப்புச் சாலைக்குமான தொடர்பை விளக்கும் இந்த அழகான காணொளியைப் பாருங்க…..

குடிமகன்களும் போதைப்பழக்கமும்!

சரி, இப்போ நாம பதிவுச் செய்தியோட முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நான் மேலே சொன்னது மாதிரி, மது தொடர்ந்து அருந்துவதால், ஊக்கம்/போதைப்பழக்கத்துடன் தொடர்புடைய மூளைப்பகுதியின் நரம்புச் செயல்பாடு அதிகரிக்கும் அதே சமயத்தில், பொட்டாசியம் சாலைகளின் எண்ணிக்கையும் குறைந்து போகிறது. ஆக, ஊக்கத்தை தடைசெய்யும் செயல்பாடு குறைந்துபோகிறது.

இதை சரி செய்ய, ஆய்வாளர்கள் என்ன செஞ்சாங்கன்னா, இந்த பொட்டாசியம் தகவல் சாலைகளின் செயல்பாட்டை அதிகமாக்கும் சில மருந்துகளை எலிகளுக்கு கொடுத்தாங்க. உடனே, நியூக்லியஸ் அக்கியும்பன்ஸில் (nucleus accumbens) இருந்த அதிக நரம்புச் செயல்பாடு குறைந்து, எலிகளுக்கு மது அருந்தும்/போதைப் பழக்கமும் குறைந்துவிட்டதாம். இதேபோல மனிதர்களிலும் பொட்டாசியம் சாலைகளின் செயல்பாட்டை மருந்துகளின் மூலம் அதிகப்படுத்தினால், குடிப்பழக்கத்திலிருந்து “குடி” மகன்களை மீட்டுக் கொண்டு வரலாம்னு நம்புறாங்க ஆய்வாளர்கள்!

ஆமா, நீங்க என்ன நினைக்கிறீங்க “எலிகள் தண்ணியடிக்கும்” இந்த ஆய்வைப் பத்தி….???

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின் பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements