நாம் “இமைப்பது” ஏன்?

Posted on மார்ச் 11, 2010

14


“கண்மூடி கண் திறப்பதற்க்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது”, “கண் இமைக்கும் பொழுதில் அதைக் காணவில்லை”, இப்படி மிக குறுகிய கால இடைவெளியை குறிப்பிட “இமைக்கும் பொழுதை” உதாரணமாக பலர் பயன்படுத்தக் கண்டு/கேட்டிருப்போம். இல்லீங்களா?

ஆமாம், இமைக்கும் பொழுது அப்படீங்கிறது உண்மையில எவ்வளவு கால அளவு? உங்களுக்குத் தெரியுமா? தெரியும்னா மறுமொழியில எழுதி எனக்குத் தெரியப்படுத்துங்க! சரி,இப்போ நாம அடுத்த மேட்டரைப் பார்ப்போம். இன்றைய பதிவின் முக்கிய செய்தி என்னன்னு தலைப்பைப் படிச்ச உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கேள்விக்கான விடை தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க, தெரியலைன்னா வாங்க தெரிஞ்சிக்குவோம்…..

கண்கள் ஏன் இமைக்கின்றன?

கண்கள் இமைப்பதற்க்கான அடிப்படைக் காரணங்கள் இரண்டு….

1. கண்களில் விழும் தூசிகளை அகற்றுவதற்க்காக

2. கண்கள் வறண்டு போகாமல் இருக்க, ஒரு வகையான திரவக் கலவையால் விழிகளை ஈரப்படுத்துவதற்க்காக

படம்:GerbatschFP

ஒவ்வொரு முறையும் நாம் கண்களை இமைக்கும் பொழுது, நம் இமைகள் பல வகையான எண்ணைப் போன்ற ஒரு திரவக் கலவையையும், பிசுபிசுப்பான ஒரு வித திரவத்தையும் விழிகள் முழுவதும் பரவச் செய்கின்றனவாம். அவ்வாறு செய்வதால் விழிகள் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகின்றனவாம்! அதுமட்டுமல்லாமல், கண்களை கூரிய தூசுகள், பளிச்சென்ற வெளிச்சம்(ஒளி) போன்றவற்றிலிருந்து ஓவ்வொரு நொடியும் பாதுகாக்கின்றனவாம்! ஓ…..அப்படியா?!

ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் “ஒரு விஷயத்தை” கவனிச்சிருக்கீங்களா?  அதாவது நாம் ஒவ்வொரு இமைக்கும்போதும் கண்கள் “ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி நேரம்” இமைகளால் முழுவதும் மூடப்படுகின்றன. இல்லையா? ஆனால், அத்தருணங்களிலெல்லாம் நம் பார்வை மட்டும்  இருண்டு போவதில்லை?!

நான் சொல்றது புரியலைன்னா, ஒரு உதாரணம் சொல்றேன். நாம் (வேணும்னே) கண்ணை மூடிக்கிட்டு கண்ணாமூச்சி (மாதிரியான விளையாட்டுகள்) ஆடும்போது, நாமாக கண்களை திறக்கும்வரை நம் பார்வை இருண்டு விடும் அப்படித்தானே? ஆனால், கண்கள் இமைக்கும்போது மட்டும் ஏன் நம் பார்வை இருண்டு போவதில்லை? ஏன்னு காரணம் தெரியுமா உங்களுக்கு….?

இமைக்கும்போது கண் பார்வை இருண்டு போகாமல் இருப்பதற்க்கு காரணம் நம் மூளைதானாம்! அதாவது, மனித மூளைக்கு ஒரு பிரத்தியேக திறன் இருக்கிறதாம். அது என்னன்னா, நாம் இமைக்கும்போது ஏற்படும் இருட்டை (?!) நாம் உணராமல் இருக்க/அலட்சியப்படுத்த வேண்டி, சுற்றுச்சூழல் மாற்றங்களை “உணரும் மூளையின் சில பகுதிகளை” இமைக்கும் பொழுதில் மட்டும் செயலிழக்கச் செய்துவிடுகிறதாம். அடேங்கப்பா…..?!

ஆக, நாம் இமைக்கும்போது நம் கண்கள் தற்காலிகமாக மூடப்பட்டாலும், நம் பார்வை என்னவோ “தொடர்ச்சியான” ஒன்றாகத்தான் நமக்குத் தெரிகிறதே தவிர, பார்வையிலோ/பார்க்கும் காட்சியிலோ இடைவெளி தோன்றுவது கிடையாது. இது நன்கு புரிய வேண்டுமென்றால், ஒரு பொருளை பார்க்கும்போது நீங்கள் ஒரு முறை கண்களை நன்றாக மூடி பின் திறந்து பாருங்கள். பின் அதே பொருளைப் பார்க்கும்போது ஒரு முறை “இமைத்து” பாருங்கள். இவ்விரண்டுக்குமான வித்தியாசம் நன்றாகப் புரியும்!

உண்மையச் சொல்லனும்னா, இதுவரைக்கும் இமைக்கிறதப் நான் பெருசா அலட்டிக்கிட்டதே இல்லை. ஆனா, இந்தச் செய்தியைப் படிச்ச பிறகு, இமைப்பது அப்படீங்கிற ஒரு சின்ன(?) விஷயத்துக்குள்ள எவ்வளவு அறிவியல் உண்மைகள் மறைஞ்சிருக்குன்னு நினைக்கும்போது கண்டிப்பா வியப்படையாம இருக்க முடியலைங்க! உங்களுக்கு எப்படி?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements