99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?!

Posted on மார்ச் 6, 2010

15


 

“மனிதர்களின் பரம எதிரி பாக்டீரியா” அப்படீன்னு சொன்னா, உங்கள்ல முக்கால்வாசிப்பேருக்கு ஒன்னும் பிரச்சினை இருக்காது. அதனால, “ம்ம்ம்….அதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமே, அதுக்கு என்ன இப்போ”ன்னு  கேப்பீங்க! ஆனா, நான், “மனிதர்களின் உற்ற நண்பன் பாக்டீரியா”  அப்படீன்னு சொன்னா…..

“ஏய் என்னப்பா, கிண்டலா? என்ன (புதுசா) கதைய உடுற” அப்படீன்னு உங்கள்ல சில/பல பேரு கோவப்படுவீங்க இல்லீங்களா? ஆனா, இதை நீங்க ஒத்துக்கிட்டாலும்/கோவப்பட்டாலும் உண்மை அதுதான்! அது எப்படி? அதைப்பத்தித்தான்  இந்த பதிவுல விளக்கமா நாம பார்க்கப்போறோம்…..

மனிதனும் பாக்டீரியாவும்….!

"பாக்டீரியா"

“பாக்டீரியாதான் இந்த உலகத்தை ஆள்கிறது, நம் உடலையும் சேர்த்து. மனிதர்களாகிய நாம், உண்மையில் வெறும் மனிதர்கள் அல்ல,  நடமாடும் பாக்டீரியாக்களின் தொகுப்பு. அதுமட்டுமல்லாமல், நாம் தாங்கிச் செல்லும் பாக்டீரியாக்கள்தான் நம் உடல் நலத்திற்க்கும், மேம்பாட்டிற்க்கும் காரணம் இப்படியெல்லாம் நான் சொன்னா, “யோவ், எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி? கேக்குறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஹெலிக்காப்டர் ஓட்டுது சொல்லுவீங்க போலிருக்கே” அப்படீன்னு சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதிக்கில்ல!

ஆனா மக்களே, இத சத்தியமா நான் சொல்லல?! ஜெரோன் ரேயஸ் (Jeroen Raes) அப்படீங்கிற ஒரு ஜெர்மனி நாட்டு ஆய்வாளர், பிரபல அறிவியல் வார இதழ் (நேச்சர்) Nature– ல் வெளியான தன் சமீபத்திய ஆய்வறிக்கையை ஆதாரமா வச்சிக்கிட்டு சொல்றாருங்கோவ்! என்னங்க, ஒன்னும் புரியலையா? சரி வாங்க என்னன்னு விளக்கமாப் பார்ப்போம்…..

மனிதக் குடல் ஒரு பாக்டீரியா காப்பகம்!

நம்மளோட குடல் உண்மையில ஒரு பாக்டீரியாக் காப்பகம்தான்னு உங்கள்ல சில/பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். அதாவது, நம்ம குடல்ல பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்குங்கிறதும், ஆனா அதனால நமக்கு நன்மைதானே தவிர கெடுதல் ஏதும் இல்லைங்கிறதும் முன்னாடியே தெரிஞ்ச செய்திதான்னாலும், மனிதக் குடலின் உள்ளிருக்கும் பாக்டீரியாக்கள் பத்தின முழுவிவரம் இதுவரை (எந்த) விஞ்ஞானிக்கும் கூட சரியாத் தெரியாது!

குடல் பாக்டீரியாவப் பத்தின இந்த காணொளியப் பாருங்களேன்……

ஆனா, சமீபத்திய ஒரு மரபனு ஆய்வுல, மனிதர்களோட உடல்ல இருக்குற வேற்று உயிரின மரபனுக்கள் எத்தனைன்னு கண்டுபிடிக்க முயற்ச்சி பண்ணாங்க. அந்த ஆய்வு முடிவுலதான், நம்ம உணவுக்குழாயில கிட்டத்தட்ட 170 விதமான பாக்டீரியா இனங்கள் வாழுதுங்கிற (இதுவரிக்கும் தெரியாத) ஒரு பெரிய அறிவியல் உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க!

என்ன….”ஐய்யய்யோ அப்படியான்றீங்களா” இல்ல, “சரி பாவம் பாக்டீரியாக்கள், இருந்துட்டுப் போகட்டும் விடு. அதுங்க மட்டும் வேற எங்கே போகும்” அப்படீன்னு தியாக மனப்பான்மையோட சொல்றீங்களா? நீங்க எப்படிச் சொன்னாலும் சரி, 170 பாக்டீரியா இனங்கள் நம்ம குடலுக்குள்ள, புள்ளையும் குட்டியுமா குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்குங்கிறத யாராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாதுன்னு சொல்லுது இந்த ஆய்வறிக்கை!

நம் உடலின் 99% மரபனுக்கள் பாக்டீரியாவினுடையது?!

“உங்கள ஒன்னும் பண்ணலீங்க, நான் உங்க குடல்ல அப்படியே ஒரு ஓரமா இருந்துட்டு போறேனே”ன்னு பாக்டீரியா சொல்லிக்கிட்டு, நம்மக் (குடல்ல) நல்லது செஞ்சுக்கிட்டு  இருந்துட்டாப் பரவாயில்ல. சரி சரி பரவாயில்லை இருந்துட்டுப் போன்னு நாமளும் தாராள மனசோட சொல்லிடலாம். ஆனா, முதலுக்கே (உயிருக்கே) மோசம் வர மாதிரி ஏதாவது செஞ்சிடுச்சின்னா என்ன பண்றது  அப்படீன்னு யோசிக்கிறீங்களா?

கவலைப்படாதீங்க, இந்த பாக்டீரியாக்கள் எல்லாம் ரொம்ப நல்ல புள்ளைங்கங்க! ஆனா என்ன ஒன்னு,  சமீபத்திய ஆய்வு முடிவுப்படி,  நம்ம உடலுக்குள்ள இருக்குற மரபனுக்கள் எல்லாமே நம்மளோடதுதான்னு இதுவரை நாம நெனைச்சுக்கிட்டு இருந்தது தப்புன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! அப்படியா…..அப்புறம்? அப்புறமென்ன,  நம்ம உடல்ல இருக்குற கிட்டதட்ட 99% மரபனுக்கள் எல்லாம் நம்ம குடலுக்குள்ள (வாடகை கூட குடுக்காம ஓசியில) தங்கியிருக்கிற பாக்டீரியாவோடதாமே?!

“அடப்பாவிகளா…..இது என்ன பகல் கொள்ளை மாதிரியில்ல  இருக்கு”ன்னு நம்ம தாய்க்குலங்கள் மாதிரி புலம்பிட்டு என்ன பண்றது? அதுதானாமே உண்மை! சரி அத விடுங்க. ஆமா….இந்த ஆய்வினால நமக்கு எதாவது நன்மை இருக்குதா? ம்ம்ம்…..அப்படிக்கேளுங்க ஒரு நாலு கேள்வி நறுக்குன்னு!

பலன் இருக்குதாமுங்க. அதாவது, இந்த ஆய்வறிக்கைய வச்சிக்கிட்டு அதிலிருக்குற தகவல்களைப் பயன்படுத்தி, நம்மள ஆட்டிப்படைக்கிற பல நோய்களை குணப்படுத்த ஏதாவது வழியிருக்கான்னு பார்க்கலாமாம். உதாரணத்துக்கு, நீரிழிவு நோய், உடல் பருமன் இப்படி இன்னும் பல நோய்களுக்கான தீர்வுகள் இருக்கான்னு பார்க்கலாமாம்!

அப்பாடா, ஒரு வழியா இந்த ஆராய்ச்சியில நமக்கு இருக்குற பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கான்னு பார்க்க வாய்ப்பு இருக்குன்றது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாதான் இருக்கு. இல்லீங்களா?

 

 

Advertisements