ஓணான்கள் தண்டால் செய்வது ஏன்?

Posted on மார்ச் 1, 2010

6


நானும் ரொம்ப நாளாவே ஒரு விஷயத்தப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கேன், ஆனா பதில்தான் தெரியல. அது வேற ஒன்னுமில்லீங்க, நாம தண்டால் (உடற்பயிற்ச்சி) செய்யுறது எதுக்காகன்னா, நம்ம வாரனம் ஆயிரம் சூர்யா மாதிரி ஒரு அழகான, கட்டுமஸ்தான உடல் அமைப்பு, ஒரு கெத்து வரனும்கிறதுக்காக. ஆனா, இந்த ஓணான்கள் எல்லாம் தண்டால் செய்யுதுங்களே அது எதுக்காக?!

அனேகமா, என்னை மாதிரியே உங்கள்ல பல பேருக்கும் இதே கேள்வி வந்திருக்கும்னு நெனைக்கிறேன். உங்கள்ல யாருக்காவது அதுக்கான காரணம் என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா எனக்குக் கொஞ்சம் சொல்லுங்க. ஆனா, இதே கேள்விய எங்கம்மாகிட்ட  கேட்டப்போ, “ஓணான் தலையெடுத்தா ஒன்பது கலம் நெல்லு மைய்யும்”, அப்படீன்னு ஒரு பழமொழி இருக்குன்னு சொன்னாங்க!

இதுக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டா, ஓணான் செய்யுற தண்டாலுக்கு அது செலவிடற சக்திய நெல்லுக் குத்துறதுல  செலவிட்டோமுன்னா, சுமார் 54 கிலோ நெல்லு மைய்யுமாம். அடேங்கப்பா! இது  அந்த பழமொழியோட வெளக்கம்தாங்க! இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஓணான்கள் தண்டால் செய்வதற்கான  (அறிவியல்) காரணத்தை எனக்கு தெரஞ்சவரைக்கும் நான் சொல்லிடறேன்.

கேள்வி: ஓணான்கள் தண்டால் செய்வது ஏன்?

பதில்: ஓணான்களும் நம்மைப்போலவே உடல் உறுதி/திடத்துக்காகத்தான் தண்டால் செய்கின்றனவாம்?! பெரும்பாலான சமயங்கள்ல, “ஏய்….இது எங்க ஏரியா உள்ள வராதேன்னு” எதிரிக்கு எச்சரிக்கை விடுக்ககிறதுக்கும், “என்ன வர்றியா ஒரு கை பார்த்துடலாமுன்னு”, சில சமயங்கள்ல சண்டைக்காகவும்கூட ஓணான்கள் தண்டால் செய்வது உண்டாம். யப்பா….!!

விளக்கம்: மேலே சொன்ன காரணங்களுக்காக மட்டுமில்லாம, (சமீபத்திய ஒரு ஆய்வு முடிவுப்படி)  ஓணான்கள்  தினமும் காலை மற்றும் மாலை என இரு முறை தவறாமல் தண்டால் செய்கின்றனவாம். நமக்கு ஓணான்கள் பரவாயில்ல போலிருக்கு! பின்ன, ரொம்ப நல்ல புள்ளையா (?)  தினமும் தண்டால் செய்யுதுங்கல்ல?! நாம ஒரு முறைகூட செய்யுறதில்லையே….!!

நீங்களே பாருங்க அந்த கொடுமக்கூத்த…?!

அழகிய ஓணான் அனோல்!

"அழகான நீல நிற அனோல்"

அனோல் அப்படீங்கிற ஜமைக்காவின் ஓணான் வகையைச் சார்ந்த 4 வகையான ஓணான்கள், தினமும் காலையில் பொழுதை தொடங்குவதே கடுமையான (?!) தண்டால்களுடனும்,  அழகான வண்ண கழுத்துத் தோலை நீட்டுவதுடனும் மற்றும் வித்தியாசமான ஓணான்களின் மேனரிசமான தலையை ஆட்டுதலுடனும்தானாம்! இதுவே மாலையிலும் ஒரு முறை அரங்கேறுமாம்! அட….இங்கே பாருங்கப்பா! ம்ம்ம்ம், அது சரி?!

சில வகை ஓணான்களின் பொழுது இப்படிப் புலர, பறவைகளிலிருந்து ஊர்வன முதல் பாலூட்டிகள் வரை தத்தம் பொழுதுகளை பலவகை சப்தங்களுடன் தொடங்கவும், முடிக்கவம் செய்கின்றன என்கிறது ஆய்வு! எது எப்படியிருந்தாலும் ஓணான்களின் இந்த செயல் மிகவும் பாரம்பரியமான ஒன்று என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெர்ரி ஜே.ஆர்ழ்டு! இவரின் ஓணான்கள் பற்றிய ஆய்வு அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் இதழில் வெளிவந்துள்ளது! அதுமட்டுமில்லாம, விலங்குகளிலேயே ஓணான்கள் மட்டும்தான் சப்தமல்லாமல் ஒரு வகை சாகசச்செயலுடன் தன் பொழுதை தொடங்கி முடிக்கின்றன என்கிறார் ஆர்ழ்டு!

இது எங்க ஏரியா உள்ள வராதே!

இதுவரைக்கும் நான், நம்ம  வெங்கட்டோட “சென்னை-600028” படத்துல மட்டும்தான் “இது எங்க ஏரியா…..உள்ள வராத” அப்படீன்னு பாட்டு இருக்குன்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இப்பதான தெரியுது , ஒவ்வொரு ஓணானோட தினசரி வாழ்க்கையிலும் இந்த பாட்டு இருக்குங்கிறது!? என்னங்க, ஒன்னும் புரியலையா?

அதாவது, “பெண் ஓணான்கள் உணவுக்காகவும் சில உடமைகளுக்காகவும், தான் வாழும் ஒரு சிறு பகுதிய தன்னோட கட்டுப்பாட்டுகுள்ளே வச்சிருக்குமாம். ஆனா, ஆண் ஓணான்கள் பெரிய பகுதிகள தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிகிட்டு, அங்குள்ள பல பெண் ஓணான்களுடன் பழகுமாம்” அப்படீன்னு ஆர்ழ்டு தன் ஆய்வில கண்டுபிடிச்சிருக்காரு! அதானே பார்த்தேன், ஆண் ஓணானா கொக்கா?

இத விட சுவாரசியமான இன்னொரு விஷயம், (மனிதர்கள் போலவே) ஆண் ஓணான்கள் நெறைய தண்டால்கள் எடுத்ததுன்னா, அது நம்ம பயில்வான் ரங்கனாதன் மாதிரியாம் ஓணான்கள் சமுதாயத்துல! அது சரி…! அதனால, பயில்வான்(ஓணான்)கள் இருக்குற ஏரியாவுக்குள்ள வர்ற மத்த கைப்புள்ள  வடிவேலு (?) ஓணான்கள் பார்த்து சூதானமா நடந்துக்கலைன்னா, டப்பா டான்ஸ் ஆடிடுமாமுங்கோவ்! பார்த்தீங்களா இந்த ஓணான்கள? என்னென்னமோ நடக்குது நம்மள சுத்தி இந்த உலகத்துல. நமக்குதான் ஒன்னும் தெரியமாட்டேங்குது. ஹய்யோ….ஹய்யோ!!

ஓணான்கள் பத்தி நான் சொன்ன விஷயத்த எல்லாம், ஒரு அழகான அனோலஸ் ஓணானின் ஒரு பகுதி வாழ்க்கையாக படம்பிடித்த காட்டுகிற ஒரு அருமையான காணொளி கண்ணில்பட்டது. அது இரு பகுதிகளில் உங்களுக்காக இதோ….

வயதுக்கு வந்த அனோல் பகுதி-1

வயதுக்கு வந்த அனோல் பகுதி-2

என்ன, படம் பார்த்தாச்சா? அதுக்குள்ள எங்கே கெளம்பிட்டீங்க, இருங்க இன்னும் கதை பாக்கியிருக்கு. அது வேற ஒன்னுமில்ல, சில சமயங்கள்ல நீங்களோ நானோ, ஓணான்கள் தண்டால் செய்யும்போது பார்த்துட்டு, “ஆமா, இந்த ஓணான் ஏன் இப்படி தண்டால் எடுக்குது? ஒரு வேளை நம்மள பயமுறுத்துறதுக்காகவா இல்ல, நாமதான் அது தண்டால் செய்யும்போது எதேச்சையா குறுக்க வந்துட்டோமா?”, அப்படீன்னு குழம்பியிருப்போம். இல்லீங்களா?

ஆனா, அனேகமா உண்மை என்னன்னா, நாமதான் ஓணான்கள் தண்டால் செய்யும்போது குறுக்க வந்திருப்போம் . அப்படியில்லைன்னா, நமக்கு பின்னாடி எங்கேயோ இருக்குற (ஆனா நம்ம கண்ணுக்கு தெரியாத) ஓணானுக்கு குடுக்குற எச்சரிக்கையா கூட இருக்கலாமுன்னு சொல்றாரு ஆய்வாளர் டெர்ரி ஜே.ஆர்ழ்டு!

அது சரி, ஒரு ஓணான் தண்டால் செய்யுற ஒரு சின்ன விஷயத்துக்குள்ள (?!) என்னென்ன மேட்டரு இருக்குப் பாருங்க!

Advertisements