புல்லரிப்பது ஏன்?

Posted on பிப்ரவரி 25, 2010

4


கல்லூரியில படிக்கிறப்போ நம்ம பசங்க சொல்லுவாய்ங்க, “சைக்கிள் நின்னாலும் சக்கரம் சுத்துறதில்லையா”, அப்புறம் “எறக்கத்துல போற சைக்கிள்ல ப்ரேக் அட்ச்சா மாதிரி இன்னா மேட்டர் சொல்லிட்டப்பா”, இப்படி இன்னும் நெறைய விஷயங்கள் சொல்லும்போது அப்படியே ஒன்னு விடலாமான்னு சில சமயம் தோனினாலும், சில சமயம் அப்படியே புல்லரிக்குது நண்பா அப்படின்னு சொல்றதுண்டு!

நான் சில சமயம் நெனைப்பேன், அனேகமாக இதுக்குத்தான் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?! ஆமா, இப்போ நான் எதுக்கு இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்?! உண்மையில நான் சொல்ல வந்த விஷயமே வேற. அதான் உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்குமே?! அதாங்க, சில விஷயங்கள் கேட்கும்போதோ, பார்க்கும்போதே ஒரு இனம்புரியாத உணர்ச்சி ஏற்பட்டு மயிர்கால்கள் எல்லாம் அப்படியே எந்திரிச்சி நிக்குமே அதத்தானே நாம “புல்லரிக்குது”, அப்படீன்னு சொல்றோம். இல்லீங்களா?

ஆமா, ஏன் நமக்கு புல்லரிக்குது? அப்படீன்னா அறிவியல்பூர்வமா என்ன அர்த்தம்? புல்லரிக்கும்போது நம்ம உடல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழுது? இப்படி நெறைய கேள்விகள் இருக்கு . அந்தக் கேள்விகளுக்கான விடைகளைத்தான் நாம இந்தப் பதிவுல பார்க்கப்போறோம்….

கேள்வி: புல்லரிப்பது என்றால் என்ன?/ புல்லரிப்பது ஏன்?

பதில்: மயிர்க்கால்களை தாங்கிய தசை நாறுகள் இறுக்கமடையும்போது, மயிர்க்கால்கள் இழுக்கப்பட்டு, நேராக நிற்க்கின்றன. இதுவே புல்லரிப்பது என்பது!

விளக்கம்: தும்மல் போல, புல்லரிப்பது (ஆங்கிலத்தில் பைலோமோட்டார் ரிஃப்லெக்ஸ்/Pilomotor reflex)

"புல்லரிக்குது போங்க"

என்பதும் நம் உடலின் தன்னிச்சையான ஒரு செயல்பாடே.இப்படி நிகழ்வதற்கான காரணம், தட்ப வெட்ப/திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது நம் உடலை எச்சரிக்கை செய்வது/காப்பதற்காகவே என்கிறது ஆய்வு! உதாரணமாக, மிகுந்த குளிர் அல்லது பயம் போன்ற கனமான உணர்வுகள் ஏற்படும்போதும் புல்லரிப்பது இதனால்தான்!

அதுமட்டுமல்லாமல், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதற்காகவும் புல்லரிப்பது என்பது மற்றுமொரு காரணம். மனிதர்களில் ரோமங்கள் மிகவும் சிறியவை என்பதால், புல்லரிப்பதன் பயன்/ விளைவுகளை உணர்வது சற்று கடினம். ஆனால், புல்லரிப்பதன் காரணம்/விளைவினை மயிர்க்கால்கள்/ரோமங்களை நீளமாகக் கொண்ட சில விலங்குகளில் தெளிவாகக் காண முடியும்.

உதாரணமாக, ஒரு பூனை அல்லது எலியின் “நான் சண்டைக்குத்தயார்” என்னும் நிலையானது இந்த புல்லரிப்பதன் விளைவாகவே ஏற்படுகிறது. அதாவது, இவ்விறு விலங்குகளுக்கும் பயம்/கோபம் ஏற்படும்போது தன் ரோமக்கால்களை சிலிர்த்துக்கொள்வதன் மூலம் தன் உடலினை பெரிதாக்கி, எதிரியை அச்சுறுத்துகின்றன. இன்னுமொரு மிகத் தெளிவான உதாரணமாக, முள்ளம்பன்றியை எடுத்துக்கொள்ளலாம். கோபம் வரும்போதும், பயம் ஏற்படும்போதும் தன் முட்களை அது சிலிர்த்துக்கொள்வதை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்புண்டு!

முள்ளம்பன்றிக்கும், ஒரு சிறுத்தைக்கும் நடக்கும் இந்த சண்டையை பாருங்கள் புல்லரிப்பதன் காரணம்/பயன் புரியும்…..

ஆக, புல்லரிப்பது என்பது ஒன்றும் மிகச் சாதாரணமான நிகழ்வல்ல. பல காரணங்களையும், பயன்களையும் உள்ளடக்கிய ஒரு உடலியல் மாற்றம் என்பது எனக்குப் புரிகிறது இப்போது! உங்களுக்கு…?

Add to Google Buzz

Advertisements