இ.ஒ.கே-4: பிறந்தவுடன் குழந்தைகள் ஏன் நடப்பதில்லை?

Posted on பிப்ரவரி 11, 2010

9


“யாழினிது குழலினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” அப்படீன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆக, நம்ம குழந்தைகளோட மழலைமொழியே யாழையும் குழலையும் மிஞ்சிய இன்பத்தைக்  நமக்குக் கொடுக்கும் அப்படீங்கிறத யாராலையும் மறுக்க முடியாது!

நம்ம மழலையோட மொழியே நம்மள இந்தளவுக்கு சந்தோஷப்படுத்துதுன்னா, ஒரு குழந்தையோட முதல் நடை அதை பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் அப்படீங்கிறது அதை அனுபவிச்ச (உங்கள்ல) பலருக்குத் தெரிஞ்சிருக்கும். அதெல்லாம் சரி, அதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னுதானே கேக்க வறீங்க? வாங்க என்னன்னு பார்ப்போம்….

கேள்வி: பிறந்தவுடன் (மனித) குழந்தைகள்  (மட்டும்) ஏன் நடப்பதில்லை?

பதில்: அதற்க்குக் காரணம் குழந்தைகளின் (மனிதர்களின்) மூளை அளவுதான் என்கிறது ஒரு ஆய்வு!

விளக்கம்: உங்களுக்கெல்லாம் இந்தச் சந்தேகம் இருக்குதான்னு தெரியல, ஆனா எனக்கு ரொம்ப நாளா இருந்தது. அதாங்க, மாடு கன்னு போட்டா, ஆடு குட்டி போட்டா, நாய் குட்டி போட்டா (இப்படி இன்னும் நிறைய விலங்குகள்) மட்டும் உடனேயோ அல்லது சில மணி நேரங்களிலேயோ அந்த குட்டிகள் நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால், ஒரு வகையில இதே குடும்பத்தைச் சேர்ந்த (பாலூட்டிகள்) மனிதர்களுக்கு குழந்தை பிறந்தால் மட்டும் நடக்க ஒரு வருடம் வரை ஆகிறதே ஏன்?

இதே சந்தேகம் விஞ்ஞானிகளுக்கும் வந்ததுனால, ஒரு ஆய்வு செஞ்சாங்க. அந்த ஆய்வு முடிவின்படி, குழந்தைகள் நடக்க ஒரு வருடம் ஆவதற்கான காரணம், அவர்களின் மூளை அளவே அப்படீன்னு தெரியவந்திருக்கு! அதாவது, உலக உயிரினங்களிலேயே மனிதர்களுக்கு (குழந்தைகள்) மட்டும்தான் மூளை அளவு மிகப்பெரியது (பிற விலங்குகளுடன் ஒப்பிடும்போது!). மூளை அளவு பெரியதாக இருப்பதால்தான் நடை பழக நீண்ட காலம் (1 வருடம்) பிடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது(?), உலக உயினினங்களிலேயே மனித மூளைதான் மிகவும் சிக்கலான அமைப்பையும், செயல்பாட்டையும் கொண்டது. ஆக, நடை பயில தேவையான அத்தனை மாற்றங்கள்/செயல்பாடுகளை ஒருமித்து செயல்படுத்த மனித மூளை நீண்ட காலம் எடுத்துக்கொள்கொள்கிறது அப்படீன்னு சொல்றாங்க!

அதுமட்டுமில்லாம,  மனிதனும் மற்ற உயிரினங்களும் நடை பயில எடுத்துக்கொள்ளும் நேர வேறுபாட்டுக்கு மற்றுமொரு காரணம்,  நடை பயில உயிரினங்கள், காலின் எந்த பாகத்தை  பயன்படுத்துகின்றன என்பதும்தானாம்! அதாவது, காலின் விரல்களால் நடக்கின்றனவா அல்லது குதி காலால் நடக்கின்றனவா என்பது. ஆக, குதி காலால் நடப்பதாலும்கூட மனித குழந்தைகள் நடை பயில நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன அப்படீங்கிறாங்க நம்ம விஞ்ஞானிகள்! பிறந்தவுடன் நடக்கும் பிற விலங்குகளான  குதிரைகள், பூனைகள் போன்றவை உடனே நடக்க அவற்றின் சிறிய மூளை அளவும், கால் விரல்களால் நடக்கும் தன்மையும்தான் காரணம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

இது தொடர்பான ஆய்வறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்

Advertisements