அகிஹாபாராவும் ஐந்து நண்பர்களும்! (ஜூ.ஹ.கி.எ.சு-4)

Posted on பிப்ரவரி 9, 2010

2


தலைப்பைப் பார்த்துட்டு “என்னது இது? நாம மேலிருப்பான் வலைப்பக்கத்துக்குதான் வந்திருக்கோமா இல்ல….எதாவது சிறுகதை வலைப்பக்கத்துக்கு வந்துட்டோமா” அப்படீன்னெல்லாம் குழப்பமடைகிற நண்பர்களே….அமைதி அமைதி!  நீங்கள் எல்லோரும்(?) அடியேனின் (மேலிருப்பான்) வலைப்பக்கதுக்குத்தான் வந்திருக்கீங்க!

அது சரி, அப்படீன்னா பயணக்கட்டுரை சிறுகதையாயிடுச்சான்னு கேக்கக்கூடாது. தலைப்பை ஏன் அப்படி வச்சிருக்கேன்னா பதிவுதான் சொல்லிக்கிற மாதிரி இல்லையே குறைந்தபட்சம் தலைப்பாவது ஒரு “கெத்தா” இருக்கட்டுமேன்னும்(?), சொல்லப்போற விஷயமும் தலைப்புக்கு ஏத்த மாதிரி இருக்குங்கிறதாலயும் இப்படியொரு தலைப்பு இன்றைய பதிவுக்கு!

சரி, இனி நாம பதிவுச்செய்தியப் பார்ப்போம். அதுக்கு முன்னாடி ஒரு வாரமா பதிவு எதுவும் எழுதாததுக்கு உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன் (உனக்கு இதே பொழப்பாப் போச்சு!). முந்தைய பதிவு முடிவுல டோக்கியோ டவரச் சுத்தி பார்த்துட்டு வீட்டுக்கு போனப்ப எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்திச்சின்னு சொன்னேன் இல்லியா? அது என்னன்னா….

நாங்க டோக்கியோ டவரச் சுத்திப் பார்த்தது இந்த வருட தொடக்கமான 1.1.2010 அன்னிக்கு. அதனால எங்களுக்கு ஆங்கில புது வருடத்தக் கொண்டாடலாமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. அதனால நண்பர்கள் (ஐந்து பேர்) எல்லாரும் ஒன்னாதான் கடைக்குப் போய் சில இன்ஸ்டன்ட் உணவுகள், பழங்கள், ஒரு கேக் எல்லாம் வாங்கினோம் (கேக்குலதான் இருக்கு அந்த ஆச்சரியம்!).

வாங்கிட்டு வீட்டுக்குப் போய், சரி பசிக்குது வாங்கப்பா சாப்பிடலாமுன்னு உக்காந்தா, கண்ணுக்கு முன்னாடி ஒரு எதிர்பாராத அதிர்ச்சி! எனக்கு மட்டுமில்ல, என் நண்பன் பிஜுவுக்கும்தான்! கண்டிப்பா அத நாங்க ரெண்டு பேரும் சுத்தமா எதிர்பார்க்கவேயில்ல! அது என்னன்னு நீங்களே பாருங்க…..

அப்போ ஜனவரி ஒன்னாந்தேதி உங்க பிறந்த நாளான்னு நீங்க கேக்கலாம். அதுதான் இல்ல! அதனாலதான் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. அந்த இன்ப அதிர்ச்சிக்கு காரணமான நண்பர்களுக்கு எங்களுடைய நன்றிகள். பிறந்த நாளை பிறந்த நாளன்னிக்குத்தான் கொண்டாடனும்னு எந்தக் கட்டாயமும் இல்லன்னு காமிச்சாங்க அவங்க எங்களுக்கு!

ஆக, எனக்கு உண்மையாகவே ரொம்ப அதிர்ச்சி, சந்தோஷம் எல்லாம்! ஏன்னா, என்னோட பிறந்த நாளை நான் இதுவரைக்கும் கேக் முகத்துல பூசி, விளையாடியெல்லாம் கொண்டாடினதே இல்ல. அதுல ஏனோ எனக்கு விருப்பமோ, ஆர்வமோ இருந்ததில்ல! அதனால, இந்த பிறந்த நாளும் புதுவருடமும் எனக்கு வாழ்க்கையில மறக்கமுடியாத நிகழ்வுகள். சரி, என் சுயசரிதையை இத்தோட முடிச்சிக்கிறேன். இப்பொ நாம பயணக் கட்டுரைக்கு வருவோம்…..

பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாத்தையும் முடிச்சிகிட்டு தூங்கறதுக்கு 2 மணியாயிடுச்சி. அப்புறம் அடுத்த நாள் காலையில எந்திருச்சி எங்கே போலாமுன்னு யோசிச்சா, (ஜப்பானுக்கு வந்ததுலேயிருந்து யாரைப் பார்த்தாலும் அகிஹாபாரா போயிருக்கீங்களான்னு கேட்டுக்கிட்டேயிருப்பாங்க, அதனால) அகிஹாபாராவப் போய் பார்த்துடலாமுன்னு தோனுச்சி. சரின்னு, நாங்க அஞ்சு பேரும் அகிஹாபாராவுக்கு கெளம்பிட்டோம்!

அமர்க்களமான அகிஹாபாரா!

நீங்க இதுக்கு முன்னாடி அகிஹாபாராவைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்களான்னு தெரியல. ஆனா, ஜப்பான்ல இந்த இடம் ரொம்ப ப்ரசித்தம். மின்சாதனப் பொருட்கள், ரோபாட்டுகள், கைப்பேசிகள், கேமராக்கள், ஐ-பாடுகள் இப்படி எல்லா விதமான பொருள்களும் கொஞ்சம் மலிவாகவும்(?), ஆங்கில மொழி வசதியுடனும் கிடைக்குமிடம்தான் இந்த அகிஹாபாரா.

எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும் இந்தக் கடையில், சுவாரசியமான இன்னொரு காட்சியும் காண முடியும். அது வேற ஒன்னுமில்லீங்க, ஒரே இடத்தில்  பல பேர் கூட்டமாக நின்று, ஏதோ சண்டை போடுவதுபோல் வீடியோ கேம்ஸ் விளையாடும் சற்று வேடிக்கையான காட்சிதான் அது. முதல்ல எனக்கு ஒன்னுமே புரியல. ஆமா ஏன் இவிய்ங்க, இப்படி ஒரே இடத்துல நின்னுகிட்டு என்னத்தையோ அழுத்திக்கிட்டு இருக்காய்ங்க அப்படீன்னுதான் யோசிச்சேன். அப்புறமாதான் தெரிஞ்சது அவிய்ங்க, வீடியோ கேம்ஸ் விளையாடுறாங்கன்னு.ம்ம்ம்….கலி முத்திப் போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

இப்படியொரு காட்சியப் பார்த்துட்டு உள்ளே போனா, ஒரே மக்கள் கூட்டம். சரி, நாமளும் போய் பார்த்து எதையாவது வாங்குவோமுன்னு கேமரா, ஐ-பாடு, கைகடிகாரம்னு எல்லாத்தையும் முதல்ல ஜன்னல் ஷாப்பிங் (அதாங்க விண்டோ ஷாப்பிங்கு!) பண்ணிட்டு, அப்புறம் பெரிய மனசு பண்ணி (?!) ஒரு 64-ஜி.பி ஐ-டச்சையும், ஒரு ஜி-ஷாக் கைக்கடிகாரத்தையும் வாங்கிக்கிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினேன் (கட்டினோம்!).

கின்சா, ரொப்பொங்கி வீதிகள்!

அகிஹாபாராவை சுத்திப் பார்த்துட்டு வேற எங்கேயாவது பிரபலமான இடத்துக்கு போகனும்னு யோசிச்சப்போ, “டிஸ்னி சீ” போலாமுன்னு பார்த்தா….எங்களுக்கு இருந்ததோ வெறும் 4 மணி நேரம்தான். ஆனா, டிஸ்னி போறதுக்கே 1 மணி நேரம் ஆகும். அப்புறம் டிஸ்னி சீயிலே குறைந்தது ஒரு 5 மணி நேரமாவது செலவிட இல்லையின்னா அங்கே போறதே வேஸ்டு!

ஏன்னா, உள்ளே போறதுக்கு நுழைவு கட்டணமே 6000 யென் (ரூ.3000). இவ்வளவு பணம் கொடுத்து உள்ளே போய் எதையுமே பார்க்காம வெளியே வர்றதுக்கு போகவே வேணாமே!

டோக்யோவிலே மிகவும் பிரபலமான சில இடங்கள்ல கின்சா, ரொப்பொங்கி வீதிகளும் முக்கியமானவை. இங்கே விசேஷம் என்னன்னா, ஜப்பானோட மிகவும் உயர்ந்த கட்டிடங்கள் சில இங்கேதான் இருக்கு. அதுமட்டுமில்லாம, மிகவும் பகட்டான, பணக்காரர்கள் ஷாப்பிங்கிற்காக வலம் வரும் வீதியும் இதுதான்னு சொன்னாங்க.

அதனால, சரி இருக்குற கொஞ்ச நேரத்துல அங்கே போய் ஒரு சுத்து சுத்திட்டு வரலாமேன்னு கெளம்பிட்டோம். சும்மா சொல்லக்கூடாது, எல்லாமே மிக உயரமான கட்டிடங்கள்தான். பார்க்கறதுக்கே மிக பிரமாண்டமாதான் இருந்தது! அப்படியே சுத்திப் பார்த்துட்டு, கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கிக்கிட்டு ஒரு பூங்காவிலே போய் உக்காந்து எல்லாத்தையும் காலி பண்ணிட்டு, அப்படியே கொஞ்சம் அரட்டை அடிச்சிட்டு வீட்டுக்கு கெளம்பிட்டோம்.

ஒரு வழியா எங்க சுற்றுலா க்யோடோவிலே தொடங்கி டோக்கியோவிலே முடிஞ்சது. அப்புறமென்ன, “பழைய குருடி கதவை திறடி”ன்னு திரும்பவும் ஹிரோஷிமாவுக்கு கெளம்பினோம் அடுத்த நாள். இன்னும் நாளு நாள் இருக்கக்கூடாதா சுத்திப் பார்க்குறதுக்கு அப்படீன்னு இருந்தது. ஆனா, நல்லா சுத்திப் பார்த்தோமே இல்லையோ ஒரு திருப்தியான சுற்றுலாவா இருந்தது எங்களுக்கு இந்த பயணம்.

உங்களுக்கு எல்லாம் இப்பவே கண்ணைக் கட்டி இருக்கும்னு நெனைக்கிறேன். அதுக்காக, உங்களை அப்படியே விட்டுட முடியுமா? ஐய்யய்ய…..நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. நாங்க கிளிக்கின சில போட்டோக்களையும், என்னோட பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்களையும் அப்படியே கொஞ்சம் பார்த்துட்டு போயிடுங்க! “விதி யாரை விட்டது” அப்படீன்னுதானே யோசிக்கிறீங்க? உண்மைதாங்க….என்ன பண்றது, எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அதாங்க, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு” எனக்கு கெடைச்ச சந்தோஷம் எல்லாத்தையும் மத்தவங்களோட பகிர்ந்துக்கலைன்னா எனக்குத் தூக்கம் வராது…..ஹி ஹி!

This slideshow requires JavaScript.

சரிஙக, இத்தோட என்னோட பயணக் கட்டுரையை முடிச்சுக்கிறேன். இதுவரைக்கும் இந்தக் கட்டுரையை ரொம்ம்ம்ம்ம்பப் பொருமையோட படிச்ச உங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். இனிமே, நம்ம பழைய ரூட்டுல அறிவியல் செய்திகளைப் பார்ப்போம், சரிங்களா?

நன்றி!

Advertisements