காமாகூராவும் டோக்கியோ டவரும்!(ஜூ.ஹ.கி.எ.சு-3)

Posted on பிப்ரவரி 2, 2010

4


க்யோடோவிலிருந்து காலங்காத்தால கெளம்பி டோக்கியோ போலாமுன்னு, எடுத்துட்டு வந்த கால அட்டவனையைப் பார்த்தா டோக்கியோவுக்கு நேரா போற மாதிரி ஒரு ரயில் (லிமிட்டட் எக்ஸ்பிரஸ்!) இருந்தது. ஆஹா ரொம்ப வசதியாப் போச்சுன்னுட்டு கெளம்பி ரயில் நிலையம் போனா, எங்களுக்கு ஒரு ஆப்பு ரெடியா வச்சிருந்தாங்க!

அது என்னன்னு கேக்குறீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, ஜூ ஹச்சி கிப்புவுல லிமிட்டட் எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்படுத்த முடியாதுங்கிறதுதான். சரி, வேற ரயில்கள் இருக்குமான்னு பார்த்தா, நேரா (எங்கேயும் நிக்காம) போற ரயில் ஒன்னுகூட இல்ல! அப்புறம் என்ன, பொடி நடையா போறதவிட கொடுமையான வேகத்துல போற ரயில்கள்லதான் போயாகனும்னு கட்டாயம். சரின்னு, ஒரு  வழியா மனசத் தேத்திக்கிட்டு கெளம்பினோம்!

க்யோடோவிலிருந்து டோக்கியோ போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ஏன்னா, அத்தனை ரயில் ஏறி ஏறி இறங்கி , சரியா சாப்பிட முடியாம, உக்கார முடியாம நொந்து நூடுல்ஸாயி ஒரு வழியா டோக்கியோவிலிருக்கிற நண்பர் வீட்டுக்கு இரவு 8 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அடுத்து எங்கே போலாமுன்னு யோசிச்சி “காமாகூரா”ன்னு ஒரு புத்தக் கோவிலுக்கு போறதா முடிவு பண்ணினோம்.

ஈனோ தென்!

காமாகூராவுக்கு போறதுக்கு ஒரு சிறப்பு ரயில் சேவை உண்டு. அதுல என்ன சிறப்புன்னா, அந்த ரயில் ஜப்பானில் ஓடும் ரயில்களிலேயே மிகவும் பழமைவாய்ந்த ரயிலாம்! (அப்படீன்னு சொல்றாங்களே தவிர பார்த்தா அப்படித் தெரியல!) நீங்களே பார்த்துட்டு முடிவு பண்ணிக்குங்க….

"ஈனோ தென்" ரயில் வண்டி!

காமாகூரா(Kamakura)!

"அமிதா புத்தா"-காமாகூரா!

“அமிதா புத்தா” அப்படீங்கிற ஒரு உலகப் புகழ்பெற்ற, மிக உயரமான வெண்கல புத்த சிலை இருக்கிற கோவில்தான் காமாகூரா! மிகவும் பழமைவாய்ந்த சிலைகள் பல இப்போ இருந்தாலும், அதுல முக்கால்வாசி மீண்டும் உருவாக்கப்பட்டவைதானாம். 1923 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பயங்கர பூகம்பத்துல பல சிலைகள், கோவில்கள் எல்லாம் அழிந்து போயிற்றாம். விரிவான ஸ்தல புராணத்துக்கு இங்கு செல்லுங்கள்

இங்கு ஆச்சரியப்படும்படி உள்ள ஒரு விஷயம், இங்குள்ள புத்த சிலையின் வடிவமைப்பு. மிகவும் உயரமான இந்த சிலை மிகவும் வித்தியாசமான வடிமைப்பைக் கொண்டது. இந்த சிலையினுள் சென்று பார்க்க முடியும்படியும், அச்சில் வார்த்தது போன்ற கட்டிட வடிமைப்பும் கொண்டுள்ளது இந்த புத்தர் சிலை!

சிலை வடிவமைப்பின் விளக்கம்!

காமாகூரா ஒரு அழகான சுற்றுலாத் தளம்தான் என்றாலும், அதன் அழகுக்கு அழகு சேர்ப்பது ஜப்பானில் ஏப்ரல் மாதத்தில் பூத்துக் குலுங்கும் “சகுரா” மலர்கள்தானாம். ஆக, காமாகூராவிற்க்கு சுற்றுலா செல்ல சரியான சமயம் என்றால் அது ஏப்ரல் மாதம்தான் என்றாள் நம்முடன் வந்த தோழி ஒருத்தி!

மேலே இருக்குற அமிதா புத்தர் சகுரா பூக்களுக்கு மத்தியில இருந்தா எந்த அளவுக்கு அழகா இருப்பாருன்னு நீங்களே பாருங்க கீழே!

சகுராவுடன் அமிதா புத்தர் சிலை!

அமிதா புத்தர் தாமரையுடன்!

டோக்கியோ டவர்!

டோக்கியோ டவர்!

காமாகூராவை நல்லா சுத்திப் பார்த்துட்டு அப்புறமா டோக்கியோ டவருக்கு போனோம். சும்மா சொல்லக்கூடாதுங்க, 2010 ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி, அழகான லைட்டிங்குகளோட பள பளன்னு, சும்மா சூப்பரா இருந்தது டோக்கியோ டவர்! சுமார் 1091 அடி/332.5 மீட்டர் உயரத்துல பார்க்குறதுக்கு பாரீஸில் இருக்குற ஈஃபில் டவர் மாதிரியே இருந்தது! அப்புறம்தான் தெரிஞ்சது ஈஃபில் டவரோட பாதிப்புல உருவாக்கப் பட்டதுதானாம் இந்த டோக்கியோ டவரும். டோக்கியோ டவர் பற்றிய விரிவான விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்

வெறும் டவர் மட்டும்தான் போலிருக்கு, பார்த்துட்டு கெளம்ப வேண்டியதுதான் அப்படீன்னுப் பார்த்தா, டவருக்குக் கீழே சுத்திப் பார்க்குறதுக்கு மியூசியம், கடைகள், உணவகங்கள்னு ஏகப்பட்ட இடங்கள் இருக்குன்னு சொன்னாங்க!

சரின்னு, டவரோட உச்சிக்கு போயி அப்சர்வேட்டரியில டோக்கியோவப் பார்த்தா….யப்பா! “சொர்க்கமே என்றாலும் அது டோக்கியோ டவர்மேல இருக்கிறது போல வருமா”ன்னு இளையராஜா பாட்டு பாடலாம்போல இருந்தது! ஆமாங்க, ஒரு அட்டகாசமான உணர்வு அது! நீங்களே பாருங்க இந்த படத்துல….

டோக்கியோ டவரிலிருந்து டோக்கியோ!

அப்புறம் அங்கேயே, மேலேயிருந்து கீழே வரைக்கும் பார்க்க, நடக்கும் பாதையில் கண்ணாடியால் மூடப்பட்ட (அமைக்கப்பட்ட) ஒரு கட்டமான ஓட்டை ஒன்று இருந்தது! அதுல என்ன பெரிய விசேஷம்னு கேக்குறீங்களா? அத தெரிஞ்சிக்கனும்னா நீங்க அந்த கண்ணாடி ஓட்டைக்கு மேல கொஞ்ச நேரம் நின்னு பார்த்தாதான் புரியும்.  அப்படி நின்னா எவ்வளவு பயமா இருக்கும்னு உங்களுக்கு நான் சொன்னா புரியாதுங்கோவ்! அதனால நீங்க டோக்கியோ டவர் கண்டிப்பா பார்க்கனும், அப்படியே அந்த கண்ணாடி ஓட்டைக்கு மேலே நின்னும் பார்க்கனுமுங்க!?

டோக்கியோ டவர் வேக்ஸ் மியூசியம்!

டோக்கியோ டவரோட உச்சியில நின்னு டோக்கியோவை எல்லாம் பார்த்துட்டு(?) அப்புறம் கீழே வந்து, மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் வேக்ஸ் மியூசியத்தைச் சுத்திப் பார்த்தோம். அங்கே உலகப் புகழ்பெற்ற மனிதர்களான நடிகர்கள், நடிகைகள், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ர அரசியல் தலைவர்கள்னு எல்லாருடைய முழு உருவ பொம்மையும் அப்படியே தத்ரூபமா மெழுகுல உருவாக்கப்பட்டிருந்தது!

அதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா, அந்த மெழுகு பொம்மைகள்ல உலகப் புகழ்பெற்ற நம்மவர் ஒருத்தரும் இருந்தாரு! அவரு யாராயிருக்கும்னு உங்களுக்கு (டோக்கியோ டவர் பார்க்காத) யாருக்காவது தெரியுமா? எதாவது யூகமாவது இருக்கா? அப்படி இருந்தா கீழே இருக்குற (டோக்கியோ டவர் வேக்ஸ் மியூசியம்) வீடியோவை கவனமா பாருங்க. அப்புறம் உங்க யூகம் சரியா தவறான்னு தெரிஞ்சிக்குங்க!

அதுக்கப்புறம், ஒரு வழியா வீட்டுக்கு கெளம்பினோம். அன்னிக்கு இரவு எனக்கு ஒரு “ஆச்சரியம்” காத்திருந்திச்சி நண்பன் வீட்டுல! அது என்னன்னு தெரிஞ்சிக்கவும்(?!) அடுத்த நாள் எங்கே போனோம், என்னென்ன பார்த்தோமுன்னு தெரிஞ்சிக்கவும் அடுத்த பதிவுக்காக கொஞ்சம் காத்திருங்க!

Advertisements
குறிச்சொற்கள்: , , , , ,