க்யோட்டோவில் ஒரு நாள்!(ஜூ.ஹ.கி.எ.சு-2)

Posted on ஜனவரி 27, 2010

2


பொதுவா சுற்றுலா போறோமுன்னு சொன்னா ஒரு வித உற்சாகம், குதூகலம் இப்படியான உணர்வுகள்தான் மனசுல தோனும். ஆனா உண்மையச் சொல்லனும்னா எனக்கு, “யப்பா….ஆளை விடுங்கப்பா சாமி ஒரு நாலு  நாளைக்கு”, அப்படீன்னுதாங்க இருந்தது!

ஏன்னு கேக்குறீங்களா…..அத தெரிஞ்சிக்கனும்னா நீங்களும் ஜப்பானுக்கு வந்து ஒரு முனைவர் பட்ட ஆராய்ச்சி பண்ணீங்கன்னா நல்லாவே புரியும்! தப்பா நெனச்சுக்காதீங்க…..நம்ம நெலமை அப்படி. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா இந்த ஊர்ல முக்கால்வாசிப் பேரு “சதா சர்வ காலமும் ஒன்னு எதையோ தேடி ஓடிக்கிட்டு இருக்குற மாதிரியோ” இல்லைன்னா  எதையோ தொலைச்சிட்டு “எங்கே செல்லும் இந்த பாதை”ங்கிற மாதிரியோதான் இருப்பாங்க!

இந்த மாதிரி ஆட்களுக்கு மத்தியில இருந்தா நம்ம நெலமை எப்படியிருக்கும்னு சொல்லுங்க? அதனாலதாங்க, நம்ம பசங்க இருக்குற இடத்துக்கு போறதுன்னாலோ இல்லைன்னா அவங்களோட ஊர் சுத்தறதுக்கு ஒரு வாய்ப்பு கெடைச்சாலோ ஆளை விடுங்கப்பா சாமீன்னு கெளம்பிடுவோம்! சரி அத விடுங்க, நம்ம பேச வந்த மேட்டரைப் பார்ப்போம்!

ஜூ ஹச்சி கிப்பு பயணம்!

சுற்றுலா போறதுக்கு ரொம்ப முன்னாடியே சுற்றுலான்னு ஒன்னு போனா அத ஜூ ஹச்சி கிப்பு டிக்கெட்லதான் போறதுன்னு நானும் என் கூட்டாளியும் முடிவு பண்ணியிருந்தோம் (அது எவ்வளவு கொடுமையாயிருந்தாலும்?!). ஆக, நான் ஹிரோஷிமாவிலிருந்து கூட்டாளியோட ஊரான ஒகாயாமாவுக்கு என்னோட முதல் டிக்கெட்டை (5 டிக்கெட்ல ஒன்னு!) பயன்படுத்தி போனேன்.

அப்புறம் அவனும் நானுமா சேர்ந்து எங்களோட முதல் சுற்றுலாத்தனமான “க்யோட்டோ”வை நோக்கி பயணப்பட்டோம் (நான் என்னோட 2 வது டிக்கெட்ல). ஆரம்பிக்கும்போது, அதிகாலை 6 மணிங்கிறதால ஒன்னும் பெருசா பிரச்சினை தெரியல (ஏன்னா சீட்டு கெடைச்சிட்டுது!). க்யோட்டோவுக்கு 10 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

க்யோட்டோவில் ஒரு நாள்!

ரயில் நிலையத்துக்கு போறதுக்குள்ளேயே செம பசி! ஆனா, எங்கே போறோம், எப்படிப் போறோமுங்கிறத (அதாங்க,  இந்த மேப், பேருந்து தடம் இதெல்லாம்)  தகவல் நிலையத்துல தெரிஞ்சிக்காம சாப்பிடறதில்லைன்னு முடிவு பண்ணிக்கிட்டோம்! ஒரு வழியா கும்பல்ல கோவிந்தா போட்டு?! தகவல் தாள்களை வாங்கிக்கிட்டு சாப்பாட்டைத் தேடிப் போனா….போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம்!

ஆமாங்க, அவ்வளவு பிரபலமான (ஏன் சொல்றேன்னா ஜப்பான்ல சுற்றுலாவுக்குன்னு பார்த்தா டோக்கியோவை விட க்யோட்டோதான் பயங்கர பிரபலம்?!) க்யோட்டோவுல (ரயில் நிலையம், சுற்றியுள்ள இடங்கள்ல) ஒரு இந்திய உணவகத்தையும் காணோம்! (ஒரு வேளை நாங்க சரியாத் தேடலையோ?!). சரின்னு, ஒரு வழியா மனசத் தேத்திக்கிட்டு கெடைச்ச ஒரு 7/11-ல (கன்வீனியன்ஸ் ஸ்டோர்) ரெண்டு சாண்ட்விச் வாங்கி தலைவிதியேன்னு உள்ளத் தள்ளிக்கிட்டு முதல்ல எங்கே போலாமுன்னு யோசிச்சோம்.

யோசிச்சோம்னு சொன்ன உடனே ஆஹா….பசங்க பெருசா ஒரு லிஸ்ட் போட்டு மொத்தக் க்யோட்டோவையும் மேலேர்ந்து கீழ வரைக்கும் “ஃபுல்லா” பார்த்திருப்பாய்ங்க போலிருக்குன்னு நீங்க தப்பு கணக்கு போட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங்கோவ்! ஆமாங்க, நீங்க நெனக்கிற மாதிரி க்யோட்டோவச் முழுசா சுத்திப் பார்க்கனும்னா குறைந்தது ஒரு வாரமாவது அங்கேயே டேரா போட்டாதான் முடியுமாம். (அப்படீன்னுதான் எங்க வாத்தியாரு சொன்னாருங்கோவ்!)

ஆனா, எங்களுக்கு இருந்தது ஒரே ஒரு நாள்தாங்க! (கஷ்டகாலம்?). அதனால, நாங்க ஒரு முடிவு பண்ணியிருந்தோம். அதாவது, க்யோட்டோவிலேயே மிகவும் பிரபலமான ரெண்டு அல்லது மூனு இடத்தை மட்டுமாவது எப்படியாவது ஒரு நாளைக்குள்ள சுத்திப் பார்த்துடனும்னு! ஆனா, கடைசியில நாங்க பார்த்தது ரெண்டு இடம்தான். ஆனா, ஒரு 500 யென் குடுத்து ஒரு பஸ் பாஸ் வாங்கிட்டா  அத வச்சி,  நீங்க ஒரு நாள்ல எத்தனை இடம் வேணும்னாலும் சுத்திப் பார்த்துக்கலாமுங்க! இது நல்லாயிருக்குல்ல?

கின்காக்கு-ஜி (தங்கக் கோவில்!)

"கின்காக்கு-ஜி" (படம்:அருண்)

க்யோட்டோவிலேயே ரொம்ப பிரபலமான (பொதுவா எல்லாரும் சொல்ற) சுற்றுலாத் தளம் “கின்காக்கு-ஜி” என்றழைக்கப்படும் க்யோட்டோவின் தங்கக் கோவில்! அங்க போனப்போ நாங்க க்ளிக்கிய படம்தான் பக்கவாட்டுல நீங்க பார்க்குறது!

கின்காக்கு-ஜியைப் பற்றிய ஒரு சின்ன ஸ்தல புராணம் இங்கே

இந்தக் கோவில் ரொம்ப சாதாரணமா ஆனா ரொம்ப அழகா இருக்கு பார்க்குறதுக்கு (அதாங்க, சிம்ப்லி சூப்பர்ப்னு சொல்லுவாங்களே அது மாதிரி!).  ஒரு பெரிய(?) தோட்டத்துக்குள்ள இருக்கு இந்த தங்கக் கோவில். இதப் பார்க்க வெளி நாட்டவர்கள் ஏகப்பட்ட பேரு வர்றாங்க.

அப்புறம் அந்தக் கோவில வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்கிறாய்ங்க. (நம்மாளுகூட எடுத்தாப்ல!). ஆனா என்ன ஓன்னு, அங்க போட்டோ எடுக்க அந்தக் கோவில உட்டா வேற ஒன்னுமேயில்லைங்கிறதுதான் உண்மை!

என்னோட தனிப்பட்ட கருத்து என்னன்னா…..க்யோட்டோவுல பார்க்குறதுக்கு, சொல்லிக்கிற மாதிரி இருக்குற ஒரே இடம் இதுதாங்க! (ஒரு நாள்ல!). அதுக்காக ஒரு நாள்ல மீதி இருக்குற 3-4 மணி நேரத்தை சும்ம விட்ற முடியுமா?

கிங்காக்கு-ஜி (வெள்ளிக் கோவில்!)

"கிங்காக்கு-ஜி" (Ginkakku-ji) (படம்: அருண்)

ஏங்க ஒரு மாதிரி நக்கலாப் பார்க்குறீங்க? கோவில் பேரைப் படிச்சிட்டுதான? அது ஒன்னுமில்லீங்க ஜப்பானிஸ்ல “கின்” அப்படீன்னா தங்கம்னு அர்த்தம். அதேமாதிரி “கிங்” (Gin) அப்படீன்னா வெள்ளின்னு அர்த்தம். அதனாலதான் இப்படியொரு பேரு!

பக்கவாட்டுல இருக்குற போட்டாவப் பார்த்துட்டு ஆமா…..எங்கே வெள்ளியக் காணோம்னு நீங்க கேக்கக் கூடாது! ஏன்னா….முதல்ல நானும் அப்படித்தான் கேட்டேன் ! அப்புறம்தான் சொன்னாங்க வெறும் பேரு மட்டுந்தான் அப்படி. வெள்ளியெல்லாம் இல்லன்னு! (அட கொக்காமக்கா…!)

நாங்க போனப்போ கட்டிட சீரமைப்பு நடந்துகிட்டு இருந்ததால கோவிலதான் சரியாப் பார்க்க முடியலீங்க. ஆனா, இந்தக் கோவில் தவிர சில சுவாரசியமான விஷயங்கள்லாம் பார்க்க முடிஞ்சது.

அது என்னன்னா, ஜப்பானிய பாரம்பறிய மணல் சிற்பம் மாதிரி(?) வித்தியாசமான சில மணல் குவியல்களைப் பார்த்தோம். அது என்ன, அதுக்கான அர்த்தம் என்னன்னு கேட்டா ஒருத்தனுக்கும் சரியா சொல்லத் தெரியல! அதனால….. நாங்களும் அப்படியே சும்மா பார்த்துட்டு வந்துட்டோமுங்க…..ஹி ஹி!

அப்புறம் அங்க இருந்த சின்ன குளம், மரம், செடி எல்லாத்தையும் பார்த்துட்டு அங்கிருந்து நடையைக் கட்டிட்டோம்.(ஒன்னும் சொல்றதுக்கில்ல?!)

மணற் குவியல்-1

மணற் குவியல்-2

அதுக்கப்புறமா கொஞ்சூண்டு நேரம் இருந்தது. ஆனா….எங்களுக்குத்தான் மத்த பிரபலமான(?) இடங்களப் பார்க்குறதுக்கு போதிய அளவு தைரியம்(?!) இல்லாததுனால நாங்க தங்க வேண்டிய “தொயோக்கோ இன்”னத் தேடி பொடி நடையாக் கெளம்பிட்டோம்!

இதுதாங்க க்யோட்டோவுல நாங்க பார்த்தது! என்ன இதுக்குப் பேரு சுற்றுலாவான்னு கேக்குறீங்களா? நீங்க அப்படி கேட்டாலுஞ்சரி கேக்கலைன்னாலும் சரி க்யோட்டோவுல எங்களால பார்க்க முடிஞ்சது இவ்ளோதான்! ஆனா அதுக்காக நீங்க மனசொடிஞ்சி போயிடாதீங்க!

ஏன்னா…. நீங்க ஜப்பான் வரும்போது க்யோட்டோவுல ஒரு நாலு நாள் தங்கி இன்னும் இருக்கிற நிறைய கோவில்கள், பாரம்பரிய கட்டிடங்கள்னு நெறைய பாருங்க! சரி, அப்போ நான் கெளம்புறேன். அடுத்த நாள் எங்கே போனோம், எப்படிப் போனோம், என்னெல்லாம் பார்த்தோமுன்னு அடுத்த பதிவுலப் பார்ப்போம்!

Advertisements