ஜூ ஹச்சி கிப்புவும் என் சுற்றுலாவும்-1

Posted on ஜனவரி 26, 2010

0


பேரன்பும் ஆதரவும் கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வலைவாசக நண்பர்களே நண்பிகளே, தம்பிகளே தங்கைகளே(?!), இதனால் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்……ஏய் ஏய் ஏய்…..நிப்பாட்டு! ஆமா எதுக்கு இந்த பில்டப்பு?

இல்ல…..ஒரு வாரமா வலைப்பக்கமே வராம, ஒரு பதிவும் எழுதாம ஆராய்ச்சியில மூழ்கிட்டோமே, இருந்தாலும் என்னையும் மதிச்சி, எதாவது ஒரு பதிவு எழுதியிருக்க மாட்டானான்னு நம்ம்ம்ம்பி வலைப்பக்கத்த வந்து பார்த்துட்டு போற வாசக நெஞ்சங்கள்கிட்ட ஒரு மன்னிப்பு கேட்கலாமேன்னு, அதையும் கொஞ்சம் அரசியல் பொதுக்கூட்ட ரேஞ்சுக்கு கேட்டுடலாமேன்னு……

இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல? சரி சரி அடங்கு! இப்போ எழுத வந்த மேட்டருக்கு வா (இப்படியெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்கல்ல?!). அதாவது, ஜூ ஹச்சி கிப்பு பத்தி இன்னும் கொஞ்சூண்டு விஷயம் பாக்கி இருக்குங்கிறதால அதையும், அப்புறம் என்னோட ஜப்பான் சுற்றுலா பத்தின சில சுவாரசிய துணுக்குகளையும் உங்களுக்கு சொல்லிடலாமேன்னுதாங்க இந்த பதிவு!

இரவு ரயில்களில் ஜூ ஹச்சி கிப்புவை பயன்படுத்த முடியுமா?

பொதுவா ஜப்பானிய இரவு ரயில்கள்ல பெரும்பாலானவை விரைவு ரயில்கள் ( express or limited express) அதனால, ஜூ ஹச்சி  கிப்புவ பயன்படுத்த முடியாது. ஆனாலும், ஜூ ஹச்சி கிப்பு பயன்படுத்தக் கூடிய சில வகை ரயில்களும் இருக்கு. அவற்றை “rapid trains (kaisoku)” அப்படின்னு சொல்லுவாங்க. இந்த வகை ரயில்கள் ஜப்பானில் மிகவும் பிரபலம். காரணம் என்னன்னா இந்த வகை விரைவு ரயில்களில் மட்டும்தான் “ரயில்வே பாஸ்” பயன்படுத்தி பணத்தை சேமிக்க  முடியும்!  சரி, இப்போ இந்த வகை ரயில்கள் சிலவும் அவற்றில் தடங்களையும் பார்ப்போம்…..

  • மூன்லைட் நகாரா (Moonlight Nagara): டோக்கியோ-நகோயா- ஒகாக்கி (Tokyo – Nagoya – Ogaki)
  • மூன்லைட் இச்சிகோ (Moonlight Echigo): ஷிஞ்சுக்கு-நிகாத்தா (Shinjuku – Niigata)
  • மூன்லைட் க்யூஷூ (Moonlight Kyushu): ஷின் ஒசாகா-ஹக்காத்தா (Shin-Osaka – Hakata)

JR அல்லாத பிற ரயில்களில் ஜூ ஹச்சி கிப்புவை பயன்படுத்த முடியுமா?

முடியாது!  ஜப்பான் ரயில்வேஸினால் இயக்கப்படாத (தனியார்) ரயில்களில் ஜூ ஹச்சி கிப்புவை பயன்படுத்த முடியாது.

சரி அடுத்து நாம, ஜப்பானில் சுற்றுலா செல்ல சில சுற்றுலா யோசனைகளையும், கால (இட) அட்டவனைகளையும் பார்க்கலாம்…..

சுற்றுலா யோசனைகள்!

நான் முன்னாடியே சொன்ன மாதிரி லோகல் ரயில்ல பயணம் செய்யுறது ஷின்கான்சென்ன (புல்லட் ட்ரெயின்) விட ரொம்ப ரொம்ப கஷ்டம். ஏன்னா, “மெதுவா மெதுவா…ஒரு காதல் பாட்டு” மாதிரிதான் ரயில் போகும்! உதாரணமா சொல்லனும்னா டோக்கியோவிலேயிருந்து க்யோடோவுக்கு போகனும்னா சுமார் 9 மணி நேரம் பிடிக்கும். அதுமட்டுமில்லாம 1-லிருந்து 4  இடத்துல இறங்கி ரயில் மாறியாகனும் (4 Transfers). (ஆனா, இதுவே புல்லட் ட்ரெயின்ல போனீங்கன்னா வெறும் 3 மணி நேரம்தான் ஆகும். ஆனா டிக்கெட்டுக்கு 5 மடங்கு அதிக பணம் கொடுக்கனும்! எப்படி வசதி?!)

பொதுவா பெரிய தடங்களான (major lines) டொக்கைடோ லைன் ( Tokaido Line) மற்றும் சேன்யோ லைன்( Sanyo Line) கள்ல ரயில் சேவை அடிக்கடி இருக்குறதுனால ஒரு திட்டவட்டமான கால அட்டவனை இல்லாம கூட சமாளிச்சிட முடியும். ஆனா மத்த ரயில்வே தடங்கள்ல எல்லாம் அந்த அளவுக்கு அதிகமான சேவை இருக்காதுங்கிறதால ஒரு சரியான கால அட்டவனையை முன்னமே தயார் செஞ்சுக்கிட்டு போறது உத்தமம்!  நீங்க ஜப்பான்ல இருந்தாலோ இல்ல ஜப்பான வர்ற மாதிரி இருந்தாலோ இந்த இணையதள முகவரியிலநீங்க எங்கிருந்து எங்கே போறீங்கன்னு குறிப்பிட்டு, ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கால அட்டவனைகளை  தயார் செஞ்சுக்கிட்டு ஜப்பான்ல சுலபமா சுற்றுலா மேற்கொள்ள முடியும்!

சரி, இப்போ நாம ஜப்பான்ல ஒரு நாள்ல போகக்கூடிய சில உதாரண தடங்கள பார்ப்போம்…..

டோக்கியோவிலிருந்து…..

  1. மேற்கு ஜப்பானுக்கு போக…… நகோயா, க்யோட்டோ, ஒசாகா, ஷிக்கோகு, ஹிரோஷிமா மற்றும் க்யூஷூ (Nagoya, Kyoto, Osaka, Shikoku, Hiroshima, Kyushu)
  2. தொஹோகு தீவுக்கு போக….. சென்டாய், மோரியோகா, அகிடா மற்றும் ஆஓமோரி (Sendai, Morioka, Akita, Aomori)
  3. ஹொக்கைடோ தீவுக்கு போக ….. ஹக்கோடாத்தே மற்றும் சப்போரோ (Hakodate, Sapporo)

என்னங்க…..அதுக்குள்ள எங்கே கெளம்பிட்டீங்க? ஜப்பான் சுற்றுலாவுக்கா….இருங்க இருங்க. நீங்க உங்க சுற்றுலாவுக்கு போறதுக்கு முன்னாடி என் சுற்றுலா அனுபவத்தைக் கேட்டீங்கன்னா, உங்க சுற்றுலாவுக்கு அது உபயோகமாக்கூட இருக்கலாம்?!

ஆனா, என் சுற்றுலா அனுபவத்தையும் இந்த பதிவுலயே எழுதினா விடிஞ்சிடும்! அதனால, அடுத்த பதிவுல என்னோட சுற்றுலா அனுபவத்தை ரத்தினச் சுருக்கமா (முடிஞ்ச வரைக்கும்?!) எழுதி முடிக்க முயற்ச்சி பண்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க…..

Advertisements