“ஜூ ஹச்சி கிப்பு-2”

Posted on ஜனவரி 15, 2010

3


போகியும் போச்சு…..பொங்கலும் போச்சு…..அதுக்கப்புறம் (எங்க ஊருல சொன்னா பிரச்சினையில்ல!  ஆனா உங்ககிட்ட சொன்னா வம்பு!) சொல்ல வேணாமுன்னு நான் நெனைக்கிறதால நாம சொல்ல வந்த விஷயத்த பார்ப்போம்.

அதாங்க, இந்த ஜூ ஹச்சி கிப்பு கதையை முடிச்சிட்டு நம்ம பழைய ரூட்டுல வண்டிய ஓட்டிக்கிட்டு போகலாமுன்னு பார்த்தா இடையில ஆய்வு, படிப்பு சம்பந்தப்பட்ட பல வேலைகள் வந்து போச்சு. அதான் உடனே தொடர முடியல! அதுமட்டுமில்லாம சில வாசகர்கள் ஜூ ஹச்சி கிப்பு பத்தி சில சந்தேகங்களும் கேட்டாங்க. அதனால, ஜூ ஹச்சி கிப்புவப் பத்தி முழுசா இந்தப் பதிவுல பார்த்துடுவோம்.

ஆமா நான் எங்கே விட்டேன்? (இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?!) ஆங்….”ஒரே ஒரு டிக்கெட்டை வச்சி ஒரு நாட்டையே சுத்திப் பார்க்குறது எப்படி”, அப்படீங்கிற கேள்வியிலதான் விட்டேன். ஆமாங்க, ஒரே ஒரு ஜூ ஹச்சி கிப்பு இருந்தா முழு ஜப்பானையும் சுத்தி பார்த்துடலாம்! (நீங்க கூட ஜப்பான் வந்தா கண்டிப்பா பயன்படுத்துங்க!)

அப்படி சுத்திப் பார்க்குறதுல ஒரு சின்ன(?) சிக்கல் இருக்குங்க. அந்த சிக்கலுக்கும் இந்த டிக்கெட்டோட பெயருக்கான அர்த்தத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு.  அதாவது, இந்த டிக்கெட்டுக்கு வயசுப் பசங்க டிக்கெட்டுன்னு அர்த்தம் நான் சொன்னேன் இல்லியா, அதுதான் சிக்கலே! அதாவது இந்த டிக்கெட் வாங்கினா லோகல் ட்ரெயின்ல பல இடத்துல இறங்கி வேற ட்ரெயின் மாறி மாறி போகனும். இது வயசானவங்களால முடியுமா? அதனாலதான் இந்த டிக்கெட்டுக்கு அப்படி ஒரு பேரு (அர்த்தம்….எல்லாம்!).

ஆனா, நம்ம இந்தியா மாதிரி ஜப்பான் பெரிய நாடு இல்லங்கிறதுனால மிகுந்த சிரமம் இல்லாம ஜப்பானை சுத்தி பார்த்துடலாம். இந்த டிக்கெட்ட பயன்படுத்துறதுக்கான சில விதிகள் இருக்கு. அது என்னென்னன்னு ஒரு கோர்வையா பார்த்துட்டோமுன்னா உங்களுக்கு புரிஞ்சிக்கிறதுக்கு சுலபமா இருக்கும்.

ஜூ ஹச்சி கிப்பு விதிமுறைகள்!

ஜூ ஹச்சி கிப்பு பத்தின விதிகள் அப்படியொன்னும் சிக்கலானது இல்லை (ஆனா, நாங்க பயன்படுத்துறதுக்கு முன்னாடி சில பல சந்தேகங்களோடதான் எங்க பயனத்த ஆரம்பிச்சோம்!)

விற்பனை: எப்போது கிடைக்கும்?

1. வருஷத்துல மூன்று முறை மட்டுமே இந்த டிக்கெட் விற்பனை செய்யப்படும்

2. ஃபிப்ரவரி 20-மார்ச்31, ஜூலை 1-ஆகஸ்டு 31, டிசம்பர் 1-ஜனவரி 10 வரை வாங்க முடியும்

3. மார்ச் 1-ஏப்ரல் 10, ஜூலை 20-செப்டம்பர் 10, டிசம்பர் 10- ஜனவரி 20 வரை பயன்படுத்த முடியும்

தகுதிகள்: யார் பயன்படுத்தலாம்?

பேருதான் 18 வயசு டிக்கெட்டு ஆனா,  நடக்குற குழந்தையிலேயிருந்து தடி ஊனி நடக்குற தாத்தா-பாட்டி வரைக்கும்  பயனம் செய்யுற தெம்பு இருக்குற யாரு (ஜப்பானியர், வெளிநாட்டவர்) வேணும்னாலும் வாங்கி பயன்படுத்தலாம்! ஆனா, அரை டிக்கேட்டு முக்கால் டிக்கேட்டு எல்லாம் இல்லப்பா!

கிடைக்குமிடம்:

எல்லா (லோகல்) ரயில்வே நிலையங்களிலும் (பலகலைக்கழக கோ-ஆப் (Co-op)களிலும்) கிடைக்கும்

விலை:

11,500 யென் (சுமார் ரூ.5,750)

ஜூ ஹச்சி கிப்பு: டிக்கெட் எப்படியிருக்கும்?

“ஜூ ஹச்சி கிப்பு”

இந்த டிக்கெட்டுடன் மேலும் நான்கு (டிக்கெட் போன்ற) அட்டைகளும் இருக்கும். அவற்றில் ஒன்று ரசீது, மற்றவை சில விளக்கங்கள் கொண்டவை (எனக்கும் முழுசா தெரியாதுங்கோ…..ஏன்னா எல்லாம் ஜப்பானிஸ்ல இருக்குமுங்க!)

நீங்க இந்த டிக்கெட்டுல பார்க்குற மாதிரி அஞ்சு சீல் குத்துவாங்க மொத்தம். அதுக்கப்புறம் அந்த டிக்கெட்டை பயன்படுத்தக் கூடாது (முடியாது!)

இதுல ஏமாத்துவேலயெல்லாம் வேலைக்காகாதுங்க. காரணம் என்னென்ன தெரிஞ்சிக்க மேற்கொண்டு படிங்க…..

பயன்படுத்தும் முறை: எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

1. இந்த ஒரு டிக்கெட்டை வைத்து JR மற்றும் Rapid JR ரயில்களில் மொத்தம் 5 நாட்கள் ரயில் பயணம் செய்யலாம்

2. ஆட்டோமேட்டிக் கதவுகளை பயன்படுத்த முடியாது, ஆக ஒரு ரயில்வே அலுவலரிடம் டிக்கெட்டை காண்பித்து ஒரு சீல் பெற்றுக்கொண்டே உள்ளே செல்ல வேண்டும்

3. டிக்கெட்டில் ஒரு சீல் இருந்தால் ஒரு நாள் பயணம் முடிந்தது என்று அர்த்தம் (ஆக, டிக்கெட்டில் மொத்தம் 5 சீல் இருந்தால் நீங்கள் பயணம் செய்திருந்தாலும் இல்லையென்றாலும் அந்த டிக்கெட்டிற்கான வேலை முடிந்தது!)

4. இந்த டிக்கெட்டை வைத்து ஒரு குழுவாக கூட பயணம் செய்யலாம் (இங்கு பலர் அப்படித்தான் செய்கிறார்கள்!). குழுவாக பயன்படுத்தினால், ஒரு டிக்கெட்டை வைத்து……

5 பேர் ஒரு நாள் மட்டும்

2 பேர் இரண்டு நாட்கள், ஒருவர் ஒரு நாள் (மொத்தம் 5 நாட்கள்) அல்லது

2 பேர் ஒரு நாள், ஒருவர் 3 நாட்கள்

5. 5 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது இல்லை. விட்டுவிட்டுகூட (காலல் வரையரைக்குள்) பயன்படுத்தலாம்!

எந்த வகை ரயில்களில் பயன்படுத்தலாம்?

JR (Futsudensha/kakuekiteisha), Rapid JR (kaisoku)

எந்த வகை ரயிலகளில் பயன்படுத்த முடியாது?

Express(Kyuko), Limited express (Tokkyu) and Bullet trains (Shinkansen)

ரயில்வே தடங்கள்

இரவு ரயில்களை பயன்படுத்த முடியுமா?

ம்ம்ம்ம்…..இரவுன்னு சொன்ன உடனே உங்கள்ல பல பேருக்கு கண்ணக் கட்ட ஆரம்பிச்சிருச்சின்னு நெனைக்கிறேன். அதனால, நாம ஜூ ஹச்சி கிப்புவைப் பத்தின இன்னும் சில பல சுவாரசியமான தகவல்களோட அடுத்த பதிவுல (கவலைப்படாதீங்க அதுதான் கடைசி பதிவு. உங்க பொருமைய இதுக்கு மேலயும் நான் சோதிக்க விரும்பல?!) சந்திப்போம்!

அதுவரைக்கும் நீங்க மாட்டுப்பொங்கல “நேஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜான்னு”, நம்ம ஜல்லிக்கட்டு காளைகளோட சும்மா கலக்கலா கொண்டாடிட்டு வந்துருங்க! எனக்குதான் இங்க மாடும் இல்ல, அதனால மாட்டுப் பொங்கலும் இல்ல! ம்ம்ம்….என்னத்த சொல்றது, இந்த வருஷம் நாம குடுத்து வச்சது அவ்ளோதான்?!

Advertisements