“தோந்தோ மட்சுரி”யும் தைப்பொங்கலும்….!

Posted on ஜனவரி 13, 2010

4


தலைப்பை படிச்சிட்டு தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருக்குற நண்பர்களே…..கொஞ்சம் நில்லுங்க! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம், அதுக்காக இப்படி ஓடினா எப்படி? இப்போ நீங்க எல்லாரும் என்ன யோசிக்கிறீங்க? தைப்பொங்கள் தெரியும், அதென்ன “தோந்தோ மட்சுரி” அப்படீன்னுதானே?

ஒன்னும் டென்சன் ஆகாதீங்க, நாம நேரா மேட்டருக்கு வந்துடுவோம். “தோந்தோ மட்சுரி” அப்படீங்கிறது ஒரு ஜப்பானிய திருவிழா (மட்சுரி)! கடந்த திங்களன்று ஜப்பானில் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவுக்கும் நம் தைத்திருநாளான பொங்கலுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு. அதனாலதான் இப்படி ஒரு தலைப்பு இந்த பதிவுக்கு!

இப்போ நாம தோந்தோவுக்கும், தைப்பொங்கலுக்குமான தொடர்பை பத்தி கொஞ்சம் விரிவாப் பார்ப்போம்.

தோந்தோ மட்சுரி!

ஒவ்வொரு வருடமும், வருடப்பிறப்பையொட்டிய ஒரு நாளில் (இந்த வருடம் ஜனவரி 11,2010) நடக்கும் இந்த திருவிழாவில், “தோந்தோ” எனும் மூங்கில்-வைக்கோலினாலான (ஒரு வகையான) கைவினைப் பொருளினை தீயில் எரிந்து தெய்வங்களை வழிபட்டால், “புது வருடத்தில் நல்ல ஆரோக்கியமும், வயல்களில் நிறைந்த விளைச்சலையும் பெற முடியும்” என்பது ஜப்பானிய மரபு!

அதுமட்டுமல்லாமல், “சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மக்களை ஆசீர்வதித்து பின் மீண்டும் சொர்க்கம் நோக்கிச் செல்லும் தெய்வங்களை வழியனுப்பும் முறையே” இந்த தோந்தோ திருவிழா என்பதும் ஒரு வகையான நம்பிக்கை (மரபு)! இந்த தோந்தோ திருவிழாவில், மூங்கில் மற்றும் மரக்கட்டைகளினாலான “குரோ” (குடில் போன்ற ஒரு அமைப்பினை ) உருவாக்கி, அதன் உச்சியில் சில மலர்கள், அழகுப்பொருள்கள் போன்றவற்றை கட்டிவிடுகிறார்கள்.

சில பல வழிபாடுகள், சம்பிரதாயங்களுக்கு பிறகு கடைசியாக அந்த குடிலை தீயிட்டு கொளுத்துகிறார்கள். யார் வேண்டுமானாலும் கொளுத்திவிட முடியாது. அதாவது, நம்மூரைப் போல (60 வருடங்கள்) இங்கும் 12 வருடங்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் மாடு,புலி,முயல்,எலி போன்ற மிருகங்களின் பெயர்களில் இருக்கும். ஆக, நடக்கும் வருடத்தில்  (உதாரணமாக மாடு வருடம்) பிறந்த ஒருவர்தான் அந்த “குரோ”வில் தீயிட வேண்டும்!

கீழே இருக்கிற யூ ட்யூப் காணொளியப் பாருங்க,  தோந்தோ மட்சுரிய ஜப்பானியர் எப்படி கொண்டாடுறாங்கன்னு உங்களுக்கே புரியும்….

அதெல்லாம் சரி, தைப்பொங்கலுக்கும் தோந்தோவுக்குமான தொடர்பை இன்னும் சொல்லலியே நீ அப்படீன்னுதானே கேக்குறீங்க? தொ…வந்தூட்டேன்!

தோந்தோவும் தைப்பொங்கலும்!

தோந்தோ திருவிழா பற்றிய விளக்கத்துலயே  தோந்தோவுக்கும் தைப்பொங்களுக்குமான தொடர்பு உங்களுக்கு கொஞ்சம் விளங்கியிருக்கும்னு நெனைக்கிறேன். இருந்தாலும் சுருக்கமான ஒரு விளக்கத்த நாம இப்போ பார்ப்போம். அடிப்படையில தோந்தோவும் நம்ம போகியும் கிட்டத்தட்ட ஒன்னுதான்னு சொல்லனும்!

எப்படின்னு கேட்டீங்கன்னா, நம்ம போகியில நாம “பழையன கழிதலும் புதியன புகுதலும்” அப்படீன்னு பழைய பொருள்களையெல்லாம் தீக்கிறையாக்கி, ஒரு புது வருடத்தை வரவேற்க்கிறோம் இல்லையா. இவங்களும் அப்படித்தான், கெட்ட விஷயங்கள், பேய் பிசாசுகள் எல்லாம் போய், தெய்வம் வீட்டுக்கு வரட்டும்னு இந்த வித்தியாசமான (நமக்கு) திருவிழாவை கொண்டாடுறாங்க!

ஷிமேகசாரி

அதுமட்டுமில்லாம, இந்த தோந்தோ திருவிழாவுல “ஷிமேகசாரி” அப்படீங்கிற வைக்கொல் கயிர்ல ஆரஞ்சு பழம் தொங்குவது போன்ற ஒரு கைவினை பொருளையும் செஞ்சு வீட்டு முற்றத்துல மாட்டிவிட்டுடறாங்க! இதுக்கு என்ன அர்த்தம்னா, இந்த ஷிமேகசாரி வீட்டுல மாட்டி இருந்தா பேய் பிசாசு, தீய சக்திகள் எல்லாம் அண்டாம இருக்கும். அதுமட்டுமில்லாம தெய்வங்களை வீட்டுக்குள்ளே வாங்க அப்படீன்னு வரவேற்குற ஒரு அலங்கரிப்புதான் இந்த ஷிமேகசாரி!

இப்போ நீங்க சொல்லுங்க, நம்ம ஊர் ஷிமேகசாரி எப்படி இருக்கும்னு? சரி, எங்க ஊர் ஷிமேகசாரி (கிட்டத்தட்ட?!) வேப்பிலைக்-மாவிலைக் கொத்துதான்! எப்படின்னு கேக்குறீங்களா? பேய் பிசாசெல்லாம் வராம இருக்க நாம வேப்பிலைக் கொத்தை வீட்டுல பல இடங்கள்ல சொருகி வைப்போம். அதேமாதிரி மங்களகரமா இருக்க மாவிலைக் கொத்துகளையும் சொருகி வைப்போம் (எங்க ஊர்ல போகி அன்னிக்கு வீட்டை கழுவி சுத்தம் செஞ்ச பின்னாடி நாங்க இப்படித்தாம்பா வேப்பிலை-மாவிலைக் கொத்தை சொருகிவைப்போம்!).உங்க ஊர்ல வேற மாதிரி இருந்தா சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன்!

ஆக, தோந்தோவும் தைப்பொங்கலும் விவசாயம் (அறுவடை) மற்றும் தெய்வ வழிபாடு ஆகியவற்றுல பலவகையில தொடர்புடையதா இருக்குன்னு எனக்கு பட்டதினால இந்த பதிவ எழுதினேன். இதுபற்றிய உங்க கருத்துகள் ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்!

வலை வாசக நண்பர்கள் அனைவருக்கும்……

என்இனியபோகி, பெரும்பொங்கள், மாட்டுப்பொங்கள்மற்றும்கரிநாள்நல்வாழ்த்துக்கள்

Advertisements