“ஜூ ஹச்சி கிப்பு”

Posted on ஜனவரி 11, 2010

10


என்ன மக்களே…..தலைப்பை படிச்சவுடனே,”ஆஹா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா”னு நெனக்கிறீங்களா? ஜப்பானைச் சுத்திப் பார்த்துட்டு வந்து, ஜப்பானைப் பத்தி விளக்கமாச் சொல்லுவான்னு பார்த்தா…..ஜப்பானீஸ்ல ஏதோ திட்றானேன்னு  நெனைக்கிறீங்களா?

கண்டிப்பா அப்படி இல்லீங்க. உங்கள எல்லாம் பிரிஞ்சி, அளவளாடாம (அதாங்க….இம்ச பண்ணாம?!)  இருக்க முடியல! அதான் நான் போய்ட்டு வந்த சுற்றுலா பத்தி ஒரு ரெண்டு வார்த்த சொல்லிட்டு போலாமுன்னு வந்தேன்! தலைப்புக்கான விளக்கத்த அப்புறமா சொல்றேன்.

நியாயமா பார்த்தா சுற்றுலாத்தளங்கள் பத்திதான் முதல்ல சொல்லனும். ஆனா நாம, சுற்றுலாத் தளங்களப் பத்திப் பார்க்கறதுக்கு முன்னாடி சுற்றுலாவுக்கு எப்படிப் போனோம்கிறதப் பத்தி பார்ப்போம். அதுல அப்படி என்ன விசேஷம்னு கேக்குறீங்களா?

நான் சொல்லப்போற விஷயத்த இந்தியாவுல இருந்துக்கிட்டு சொன்னா, “ஐய்ய…..இதுல என்ன பெரிய விசேஷம்னு கேப்பீங்க”! ஆனா அதி நவீன ஜப்பான்ல இருந்துக்கிட்டு இப்படி ஒரு விஷயத்தச் சொன்னா, கேக்கறவங்களுக்குக் கொஞ்சம் சுவாரசியமாத்தான்(?!) இருக்கும்னு நெனக்கிறேன்.

ஒன்னுமில்லீங்க. ஜப்பான்ல ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு சுற்றுலா போனா, பெரும்பாலும்

ஷின்கான்சென்-புல்லட் ட்ரெயின்!

“ஷின்கான்சென்” அப்படீங்கிற “புல்லட் ட்ரெயின்”லதான் போவாங்க. அதுல ஏறி, சரியா உக்காந்து சீட்டக் கொஞ்சம் பின்னாடி தள்ளி ஒரு சின்ன குட்டித்தூக்கம் போடலாமுன்னு நெனைக்கும்போதே….”தம்பி உங்க ஊரு வந்திருச்சி கெளம்பு காத்து வரட்டும்”னு சொல்லாமச் சொல்ற மாதிரி ஒரு அறிவிப்பு வந்துரும்! அவ்ளோ வேகமான விரைவு ரயில்தான் இந்த புல்லட் ட்ரெயின்!

உதாரணத்துக்கு நம்ம ஊருல தமிழ்னாட்டுல இருந்து டெல்லி போகனும்னு தமிழ்னாடு எக்ஸ்பிரஸ்ஸுல ஏறி உக்காந்தா, 38 மணி நேரம் கழிச்சுதான் டெல்லி வாசனையே கெடைக்கும். ஆனா இங்க அப்படி இல்ல ,  ஷின்கான்சென்ல  ஏறி உக்காந்தா வெறும் மூனே மணி நேரத்துல ஹிரோஹிமாவிலேர்ந்து டோக்கியோவுக்கு போயிடலாம்!

ஆமா புல்லட் ட்ரெயின் பத்தி இப்படி விலாவாரியாக் கதை சொல்றானே இவன், சுற்றுலாவுக்கு புல்லட் ட்ரெயின்ல போயிருப்பானோன்னு நீங்க நெனச்சீங்கன்னா அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க! ஆமாங்க, நான் என்னோட சுற்றுலாவுக்கு புல்லட் ட்ரெயினப் பயன்படுத்தல!? அதான் முன்னாடியே சொன்னேன் சுற்றுலா போன விதத்துல ஒரு விசேஷம்னு!

ஏன்னுதானே கேக்குறீங்க? அது ஒன்னுமில்லீங்க, ஜப்பானுக்கு வந்த புதுசுல எல்லாரும் இந்த புல்லட் ட்ரெயினப் பத்தி ஆஹா….ஓஹோன்னு சொல்லி கொஞ்சம் ஆர்வத்த கெளப்பி விட்டுட்டாங்க. அதனால, கடந்த ரெண்டு வருஷமா மூணு கான்ஃபெரன்ஸ் போனப்ப எல்லாம் புல்லட் ட்ரெயின்லயே போனதால ஜப்பான சரியாப் பார்க்க முடியல?! அதனால புல்லட் ட்ரெயின் பயணம் கொஞ்சம் போரடிச்சித்தான் போச்சி (இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?) அதனால நான் சுற்றுலா போனது லோகல் ட்ரெயின்லதான்!!

ஜூ ஹச்சி கிப்பு!

"ஜூ ஹச்சி கிப்பு"

உண்மை என்னன்னா, இங்கே “ஜூ ஹச்சி கிப்பு”ன்னு ஒரு லோகல் ட்ரெயின் டிக்கெட் இருக்கு. முதல்ல ஜூ ஹச்சி கிப்புன்னா என்னன்னு பார்ப்போம். ஜூ ன்னா 10, ஹச்சி ன்னா 8கிப்பு ன்னா டிக்கெட்னு அர்த்தம். சுருக்கமா சொன்னா 18 வயசு டிக்கெட்.  அதாவது, 18 வயசுப் பசங்க டிக்கெட்டுன்னு வச்சுக்குங்களேன். விளக்கமா சொல்லனும்னா (18) வயசுப் பசங்க (மட்டும்?) பயன்படுத்தக் கூடிய டிக்கெட் அப்படீன்னு சொல்லலாம்!

இந்த ஜூ ஹச்சி கிப்புவுல என்ன விசேஷம்னா, 11,500 யென் (Yen) ஜப்பானிய பணம் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினா, கிட்டத்தட்ட முழு ஜப்பானையே சுத்திப் பார்த்துடலாம் (உங்களுக்கு தெம்பு இருந்தா!?). அடேங்கப்பா….இப்படியெல்லாம் கூட வசதி இருக்கா ஜப்பான்ல? ஆமா அது எப்படி ஒரே டிக்கெட்ல ஒரு நாட்டையே சுத்திப் பார்க்குறது அப்படின்னுதானே கேக்குறீங்க?

அத இந்தப் பதிவுலயே சொன்னா “ஆஹா….இப்பவே கண்ணக் கட்டுதே”ன்னு நீங்க கெளம்பினாலும் கெளம்பிடுவீங்க. அதனால அடுத்தப் பதிவுல “ஜூஹச்சி கிப்பு” பத்தி விளக்கமா பார்ப்போம்……

Advertisements