இளமை ரகசியம்: டீலோமியரும் நம்ம மார்க்கண்டேயரும்!

Posted on திசெம்பர் 11, 2009

11


என்ன பார்க்குறீங்க…..இதுவரைக்கும் இவன் பதிவோட தொடக்கத்துலதான் குழப்பிக்கிட்டு இருந்தான் . இப்பெல்லாம் பதிவ தொடங்குறதுக்கு முன்னாடியே குழப்ப ஆரம்பிச்சிட்டானே அப்படின்னுதானே?  சேச்சே…..அப்படியெல்லாம் இல்லீங்க, ஒன்னும் பயப்படாதீங்க!

முதல்ல நான் பதிவுத்தலைப்புக்கான விளக்கத்த சொல்லிடறேன். உங்களுக்கு கண்டிப்பா நம்ம மார்க்கண்டேயனைத் தெரிஞ்சிருக்கும் (அதாங்க, என்றும் பதினாறு புகழ் மார்க்கண்டேயன்! இன்னும் புரியாதவங்க இங்க பாருங்க). இப்போ உங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் டீலோமியர்னா யாரு அதானே?!

டீலோமியர்னா என்ன?

டீலோமியர் (வெள்ளை புள்ளி)

டீலோமியர் (Telomere) அப்படிங்கிறது அடிப்படையில ஒரு கிரேக்க வார்த்தை. ஒன்னு இல்ல, ரெண்டு  வார்த்தை. அதாவது, “டீலோ” (Telo) அப்படின்னா “முடிவு அல்லது இறுதி”ன்னு பொருள்.  “மியர்” (mere)  அப்படின்னா “பகுதி”ன்னு பொருள். இந்த ரெண்டு வார்த்தையும் சேர்ந்ததுதான் டீலோமியர் அல்லது இறுதி/முடிவுப்பகுதி.

சரிங்க, டீலோமியரோட பெயர்க்காரணத்தைப் படிச்சாச்சி. இப்போ டீலோமியர்னா என்னன்னு கொஞ்சம் பார்ப்போம். டீலோமியர் அப்படிங்கிறது நம்ம உடல்ல இருக்கிற ஒவ்வொறு செல்லுக்குள்ளேயும் இருக்கிற க்ரோமோசோம்களின் ஒரு பகுதி. அதாவது, ஒவ்வொறு க்ரோமோசோமின் நுனியில் (இறுதியில்!) இருக்கிற “டி.என்.ஏ” வைத்தான் ஆங்கிலத்துல டீலோமியர்னு சொல்றாங்க! மேலும் விவரத்துக்கு இங்கு செல்லுங்கள்

டீலோமியரும் மார்க்கண்டேயனும்!

இப்போ நாம செய்திக்கு வருவோம். அதாவது, டீலோமியருக்கும் நம்ம மார்க்கண்டேயனுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க என்னை மாதிரி ஒரு உயிரியல் மாணவனா இருந்தா உங்களுக்கு இப்பவே பதிவுச் செய்தியின் சாரம் ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும். நாம எல்லாரும் படிச்சிருப்போம் மார்க்கண்டேயனுக்கு வயசே ஆகாது, அவரு என்னைக்கும் பதினாறு வயசோடதான் இருப்பாரு அப்படின்னு! ஆனா,  நம்ம யாருக்காவது தெரியுமா அவரை? கண்டிப்பா தெரியாது.  நம்மள்ல யாராவது அவரை பார்த்திருக்கோமா? இல்லவே இல்லை! அப்புறம் எப்படி அவருக்கு எப்போதுமே பதினாறு வயசுன்னு நம்புறதுன்னு நீங்க கேக்கலாம்.

உங்களுக்கு அறிவியல்ல நம்பிக்கை இருக்குன்னா, மார்க்கண்டேயனுக்கு என்றுமே பதினாறு வயதுதான்னு நீங்க கண்டிப்பா நம்பலாம்! ஏன்னா, வயசே ஆகாம இருக்குறதுக்கு “டீலோமியர்” தான் காரணம்னு விஞ்ஞானம் சொல்லுது. எப்படிப்பட்ட டீலோமியர் என்றால், ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் (எத்தனை வருடங்களானாலும்!) அளவில் (நீளத்தில்) குறையாத ஒரு டீலோமியர் ! (வயசுக்கும் டீலோமியரின் அளவுக்குமான தொடர்பை கீழே பார்ப்போம்). அப்படின்னா என்னோட யூகப்படி, அனேகமா மார்க்கண்டேயனுக்கு இருந்த டீலோமியர்களோட அளவு கடைசிவரைக்கும் குறையவே இல்லை!

சரி, உங்கள நான் ரொம்ப குழப்பிட்டேன்னு நெனைக்கிறேன். இனி நாம நேரா மேட்டருக்குப் போய்டுவோம். அதாவது, டீலோமியருங்கிறது அடிப்படையில ஒரு டீ.என்.ஏ தான். நம்மளோட 46 (23+23) க்ரோமோசோம்கள்லேயும் நுனிப் பகுதியில் இருக்கும் டி.என்.ஏ வுக்குத்தான் டீலோமியர்னு பேரு! (க்ரோமோசோம்கள் முழுவதும் டி.என்.ஏ க்களால் ஆனவை!).

வயதும் டீலோமியரும்!

ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா, நம்ம ஷூவோட லேசுல இருக்கிற (நுனிப்பகுதி) ப்ளாஸ்டிக் மூடிதான் இந்த டீலோமியர்னு வச்சுக்குங்களேன். அப்போ, லேசுதான் க்ரோமோசோம். லேசு நீண்ட நாள் அறுந்து போகாம நல்லா இருக்கனும்னா லேசோட நுனியில் இருக்கிற மூடி உடையாம இருக்கனும்தானே? அதேமாதிரிதான்  நம்ம க்ரோமோசோமும் டீலோமியரும். அதாவது ஒவ்வொரு க்ரோமோசோமும் அறுந்துபோகாம நீண்ட நாள் நல்லா இருக்கனும்னா க்ரோமோசோம்களின் மூடியான டீலோமியர் உடையாம இருக்கனும்!

நம்ம வளர்ச்சிக்கு அடிப்படையான “செல் டிவிஷன்” (அதாங்க, ஒவ்வொரு செல்லும் உடைஞ்சி  பின் ரெண்டா ஆகுறது!) ஒவ்வொரு முறை நடக்கும்போதும்  நம்ம க்ரோமோசோம்கள் எல்லாம் உடைஞ்சி ரெண்டா ஆகும். அப்படி ஆகும்போது டீலோமியரும் உடைஞ்சி அளவில் குறையும். ஆக, ஒவ்வொரு முறை செல் டிவிஷன் நடக்கும்போதும் டீலோமியர் கொஞ்சம் கொஞ்சமா அளவு குறைந்துகொண்டே வரும். ஒரு கட்டத்தில் டீலோமியர் அளவில் மிகச்சிறியதாக ஆகி, செல்கள் இனி வளரவே முடியாது அப்படிங்கிற நிலைக்கு தள்ளப்படும். இதைத்தான் ஆங்கிலத்தில் “செல் செனசென்ஸ்” (Cell senescence) அப்படிங்கிறாங்க!

இது உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் உள்ள எல்லா செல்களுக்குள்ளும் ஏற்படும் ஒரு நிகழ்வு! இந்த நிகழ்வுக்கு பின் செல்களின் செயல் தடைபட்டு, திசுக்களின் செயல் தடைபடும். அதன் பின் திசுக்களாலான  உடல் (உதாரணமாக, சிறுநீரகம், கல்லீரல்…..எனப் பல!)  பாகங்களின் செயல்கள் தடைபடும்! இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, செல் டிவிஷன் நின்னு போனா வளர்ச்சி நின்னு போகும். வளர்ச்சி நின்னு போனா நமக்கு வயசாகிடும்! ஆக, டீலோமியர் அளவில் மிகச்சிறியதாக ஆகிவிட்டால் வளர்ச்சி நின்று வயதாகிவிடும். இதுதான் டீலோமியருக்கும் வயதுக்குமான தொடர்பு! ஆஹா…. நல்லாத்தான்யா போடறாய்ங்கே பிட்டு….!!

“என்றும் பதினாறு” மார்க்கண்டேய ரகசியம்!

இப்போ உங்க எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும், நமக்கு வயசாகாம இருக்கனும்னா, டீலோமியர் அளவு  குறையாம இருக்கனும்னு. இல்லையா? சரி, நாம ஆசைப்பட்டா மட்டும் போதுமா இயற்கையில அது நடக்கனும்தானே? ஆனா, நம்ம ஒன்னு நெனச்சா அதுக்கு நேர்மாறாதான் இயற்கை இருக்கும். அதாவது, ஒவ்வொரு முறை செல்கள் பிரிஞ்சி ரெண்டாகும்போது, டீலோமியரின் அளவும் குறையும் அப்படிங்கிறதுதான் இயற்கயின் நியதி! ஆக, செல் வளரனும்னா டீலோமியர் அளவு குறையத்தான் வேண்டும்.

ஆனா, டீலோமியரின் அளவை மீண்டும் பெரிதாக்க இயற்கையிலேயே ஒரு வழி உண்டு! அதுதான் டீலோமேரேஸின் மாயாஜாலம். இது என்னடா புதுக்கதை அப்படின்னு யோசிக்கிறீங்களா?  டீலோமெரேஸ் அப்படிங்கிறது நம் உடலில் சுரக்கும் பல என்ஸைம்களுள் ஒன்று. இந்த என்ஸைமோட வேலை என்னன்னா, ஒவ்வொரு செல் டிவிஷனின்போதும் அளவில் குறைந்துபோகிற டீலோமியர்களை மீண்டும் பழைய அளவு வரை வளரச் செய்வதுதான். கீழே இருக்கிற காணொளியில பாருங்க உங்களுக்கே புரியும்?!

இது இன்னும் சுவாரசியமா இருக்கு. இதையும் பாருங்க…..மார்க்கண்டேய ரகசியம்?!

உங்களுக்குத் தெரியுமா? 2009 ஆம் ஆண்டின், மருத்துவப் பிரிவுக்கான நோபல் பரிசு டீலோமியர் பற்றிய ஆய்வுக்காக திரு.எலிசபெத் ப்ளாக்பேர்னுக்குத்தான் வழங்கப்பட்டது! சமீபத்தில் ஜூவ்ஸ் இன மக்களில் டீலோமியருக்கும் மூப்படைவதற்க்குமான தொடர்பு பற்றி அறிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் கேள்விகள் இரண்டு.

1. நீண்ட நாட்கள் வாழும் மக்களின் டீலோமியர்கள் நீளமாக உள்ளதா? ஆம் என்றால்….

2. அவர்களின் நீளமான டீலோமியர்கள்களுக்கு காரணம் அம்மக்களின் டீலோமெரேஸ் (என்ஸைம்)-க்கு காரணமான மரபனுக்கள் வித்தியாசமாக இருப்பதனாலா?

ஆய்வின் முடிவில் இந்த இரண்டு கேள்விகளுக்குமே விடை “ஆம்” என்பதுதான் என்று கண்டறியப்பட்டுள்ளது! ஆக, ஆய்வாளர்கள் சந்தேகப்பட்டது போலவே நீண்ட நாட்கள் வாழும் மனிதர்கள் அனைவரும் தங்களின் டீலோமியர்கள் நீளமாக இருக்கப்பெற்றிருக்கிறார்கள். அதற்க்கு காரணம் , அவர்களின் டீலோமெரேஸ் என்ஸைமுக்கு அடிப்படையான மரபனுக்களில் உள்ள பிரத்தியேக வேறுபாடுகளே அப்படின்னு கண்டுபிடிச்சிருக்காங்க!

அதுமட்டுமில்லாம, டீலோமியர்கள் நீளமாக உள்ள மக்கள் அனைவருக்கும் வயது தொடர்பான உபாதைகளான இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் இல்லைன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்! பொதுவா இது போன்ற நோய்கள்தான் மக்களின் இறப்பிற்க்கு பெரிதும் காரணமாயிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, டீலோமியர் அப்படிங்கிற ஒரு புதிர்தான் மக்கள் நீண்ட நாட்கள் வாழக் காரணமாயிருக்கு!

உங்களுக்கு நேரமிருந்தா, நோபல் பரிசு வெற்றியாளர் திரு.எலிசபெத் அவர்களின் டீலோமியர்-மூப்படைவு பற்றிய ஒரு உரையை கலிபோர்னியா பல்கலைக்கழக தொலைக்காட்சி வழியா பாருங்க கீழே…..

இனி என்ன, டீலோமியர்களை எப்போதுமே நீளமாக வைத்துக்கொள்ள உதவும் டீலோமெரேஸ் பற்றிய மரபனு ஆய்வை தொடங்கவுள்ளதாக சொல்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்!

ஆமா, உங்க டீலோமியர் அளவு எப்படி? அது தெரிஞ்சா அப்புறமென்ன…..”வாழ்க்கை வாழ்வதற்க்கே…..வெற்றி நிச்சயம் எனக்கேன்னு” கெளம்பிடுவோமுல்ல அப்படிங்கிறீங்களா? உண்மைதாங்க!

Advertisements