உடல்நலம்: இப்படிக்கு….அன்புடன் பாக்டீரியா!

Posted on நவம்பர் 25, 2009

0


பாக்டீரியாக்கள்

நோய்க்கிருமிகள் பத்தி பேசினாலே நமக்கு ஒரு வித பயம் வர்றது இயற்கைதான். அதுவும் பாக்டீரியா, வைரஸ் மாதிரி கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள்னா சொல்லவே வேணாம்! பெரும்பாலும் உடல் உபாதைகளுக்கு காரணமா இருக்குற பாக்டீரியாக்கள் பத்திதான் நாம அதிகமா கேள்விப்பட்டிருப்போம் இல்லையா?

ஆனா, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத, உறுதுணையா இருக்குற பாக்டீரியாக்களும் நம்ம உடம்புக்குள்ள/வெளியே இருக்குத் தெரியுமா உங்களுக்கு?

உதாரணத்துக்கு சொல்லனும்னா, நம்ம வயித்துக்குள்ள பல லட்சம் பாக்டீரியாக்கள் தினமும் நமக்கு உதவி செஞ்சுட்டுதான் இருக்கு நமக்குத் தெரியாம! அதை “இன்டெஸ்டைனல் மைக்ரோஃப்ளோரா” அப்படின்னு சொல்வாங்க ஆங்கிலத்துல. அது மாதிரி, வாய், கண்கள், ஜனன உறுப்புகள், தோல் பகுதி  இப்படி நம்ம உடம்போட பல பகுதிகள்ல “நல்ல பாக்டீரியாக்கள்”  நெறைய இருக்கு!

சரி, இப்போ நம்ம பதிவுச்செய்திக்கு வருவோம். அதாவது, இதுவரைக்கும் மருத்துவர்கள்/விஞ்ஞானிகள் என்ன நெனச்சிகிட்டு இருந்தாங்கன்னா, தோல் பகுதியில இருக்குற பாக்டீரியா, பொதுவா “நல்ல பாக்டீரியா” தான்னாலும், நம்ம உடல்ல காயங்கள்/சிராய்ப்புகள் ஏற்படும்போது மட்டும் “இன்ஃப்லமேஷன்” அப்படிங்கிற காயத்தை பெரிதாக்குகிற வேலையைச் செஞ்சு திடீர்னு கெட்ட பாக்டீரியாவா ஆயிடுமாம்!

ஆனா, சமீபத்துல நடத்தப்பட்ட ஒரு ஆய்வுல அது உண்மையில்லன்னு தெரியவந்திருக்கு. அதாவது, நம்ம தோலுக்கு கெடுதல்தான் செய்யுமுன்னு நெனச்சிகிட்டிருந்த பாக்டீரியா, உண்மையில காயங்கள் சீக்கிரம் குணமடைவதற்கான உதவிகளைச் செய்யுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்!

“ஸ்டஃபைலோகாக்கஸ்” அப்படிங்கிற ஒரு வகை பாக்டீரியாக்கள்ல செய்த ஆய்வுலதான் இந்த உண்மைய கண்டுடிச்சிருக்காங்க. அதாவது, இந்த வகை பாக்டீரியாக்கள் காயங்கள் ஏற்பட்ட உடனே  உருவாகிற “இன்ஃப்லமேஷன்” அப்படிங்கிற காயங்கள் பரவ/பெரிதாகச் செய்யும் ஒரு செயலை தடுக்கின்றனவாம்!

அது எப்படின்னு கேட்டீங்கன்னா, “staphylococcal lipoteichoic acid (LTA)” அப்படிங்கிற ஒரு வித அமிலத்த காயங்கள் ஏற்படற பகுதிகள்ல செலுத்தி “இன்ஃப்லமேஷன்” ஏற்படாம தடுத்து நிறுத்திவிடுகின்ற வேலையைச் செய்கின்றனவாம் “ஸ்டஃபைலோகாக்கஸ்” பாக்டீரியாக்கள்!

இதுல ஆச்சரியம் என்னன்னா, பொதுவா இந்த “இன்ஃப்லமேஷன்” ஏற்படாம தடுத்து நிறுத்துற வேலையச் செய்யுறது நம்ம நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான “டி செல்களும்”, “பி செல்களும்தான்”! ஆனா, அந்த வேலைய இப்போ “ஸ்டஃபைலோகாக்கஸ்” பாக்டீரியாக்களும் செய்கின்றன!

ஆக, பொதுவா நோய்கள் ஏற்படக் காரணமான பாக்டீரியாக்களுள் சில நம் நோய்கள் குணமடையவும் உதவுகின்றன அப்படின்னு தெரியுது! என்னங்க, இது நமக்கு நல்ல செய்திதானே?!

Advertisements
குறிச்சொற்கள்: , , , ,