ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்!

Posted on நவம்பர் 24, 2009

4


ஃபேஸ்புக் மாதிரி வலைப்பின்னல் தளங்கள், என்னதான் நமக்கு சந்தோஷம், உற்சாகம் எல்லாம் கொடுத்தாலும், அப்பப்போ  நம்ம வாழ்க்கையில கொஞ்சம் விபரீதமாக்கூட விளையாடிடும் போலிருக்கு! ஆமாங்க, கனடாவைச் சேர்ந்த நேதாலிக்கு, அப்படித்தாங்க  ஒரு அசம்பாவிதம்  நடந்திருக்கு!

நேதாலி ப்ளான்ச்சர்டு கனடா நாட்டு ஐ.பி.எம் நிறுவனத்துல வேலை செய்றாங்க. மனச்சோர்வு நோயால பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருஷமா பணியிலிருந்து தற்காலிக விடுமுறை எடுத்துருக்காங்க.  ஆனா, மனச்சோர்வு நோய் காரணமா விடுமுறை எடுத்துக்கிட்டதுனால, “மனு லைஃப்” அப்படிங்கிற காப்பீட்டு நிறுவனத்துல இருந்து அவங்க உபாதை விடுமுறை சலுகைகள் (பணம்) வாங்கிக்கிட்டு இருந்துருக்காங்க.

திடீர்னு அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த விடுமுறைச் சலுகை பண உதவி சில மாதங்களா வரல. உடனே அவங்க மனு லைஃப் நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமா அழைச்சு ஏன் பணம் வரலன்னு கேட்டிருக்காங்க. அந்த நிறுவனத்துல இருந்து வந்த பதில் பெரும் அதிர்ச்சியா இருந்துருக்கு!

அப்படி என்ன சொன்னாங்க அந்த  நிறுவனத்துல?  நேதாலிக்கு உடல்நிலையில எந்த கோளாரும் இல்ல, அவங்க நல்ல ஆரோக்கியத்தோடதான் இருக்காங்க. அதனால அவங்க வேலைக்கு போகலாம். இந்தக் காரணத்துனாலதான் பண உதவி நிறுத்தப்பட்டது அப்படின்னு சொல்லிருக்காங்க மனு லைஃப் நிறுவனத்துல!

இதக் கேட்ட நேதாலிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! ஏன்னா, அவங்க இன்னும் மனச்சோர்வு நோயிலிருந்து முழுசா குணமடையல. ஆமா, நேதாலிக்கு உடல் நிலை சரியாயிருக்கா/இல்லையான்னு அவங்க சொல்லாம எப்படி மனு லைஃப் நிறுவனத்துக்கு தெரிஞ்சது? யாரு சொல்லிருப்பாங்க? இதானே உங்க கேள்வி/குழப்பம்?

இங்கதான் நம்ம ஃபேஸ்புக் நேதாலியோட வாழ்க்கையோட விபரீதமா வெளையாடியிருக்கு! எப்படின்னு கேக்குறீங்களா?

அதாவது, மனு லைஃப் நிறுவனம் நேதாலியோட ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல இருக்கிற அவங்களோட சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்திருக்காங்க. அதுல அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிற, பிறந்த நாள் கொண்டாடுற, பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு குதூகலமா இருக்கிற மாதிரியெல்லாம் இருக்கிற புகைப்படங்கள பார்த்துட்டுதான், அவங்களுக்கு உடல் நிலை பூரண குணமாயிடுச்சி அப்படிங்கிற முடிவுக்கு வந்து,  நேதாலியோட உதவித்தொகைய ரத்து பண்ணிட்டாங்க!

அடக்கொடுமையே….அப்படிங்கிறீங்களா? உண்மைதாங்க, கொடுமைதான்! உண்மையில நேதாலிக்கு மனச்சோர்வு நோய் இன்னும் குணமாகலை!  ஆனா தன்னோட மருத்துவரின் ஆலோசனைப்படி அவங்க சந்தோஷமா இருக்க முயற்ச்சி பண்ணியிருக்காங்க. அப்படி அவங்க இருந்தப்போ எடுத்த புகைப்படங்கள தன்னோட ஃபேஸ்புக் கணக்குல அப்லோட் பண்ணியிருக்காங்க!

இப்போ தன்னோட சலுகைப் பண உதவிய திரும்ப வாங்குறதுக்கு சட்டப்பூர்வமா முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. மனு லைஃப் நிறுவனமும்  நேதாலியோட உண்மை நிலவறத்த புரிஞ்சிக்கிட்டு தங்களோட முடிவ மறுபரிசீலனை செய்யறதா சொல்லியிருக்காங்க!

பாருங்க….ஃபேஸ்புக் நம்ம வாழ்க்கையோட எப்படியெல்லாம் வெளையாடுத்துன்னு! அதுக்காக ஃபேஸ்புக் கணக்கு வச்சிருக்கிற எல்லாருக்குமே இப்படி எதாவது நடக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா, எந்த பிரச்சினை எந்த விதத்துல வரும்னு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிதர்சனம்.

அதனால, நம்ம சொந்த விஷயங்கள ஃபேஸ்புக் மாதிரியான வலைப்பின்னல் தளங்கள்ல குறைவா வெளியிடறதுதான் நமக்கு நல்லதுன்னு நான் நெனக்கிறேன்!

ஃபேஸ்புக் தொடர்பான விபரீதம் பற்றிய என்னுடைய இன்னொரு பதிவ நீங்க இங்க படிக்கலாம்

ஆமா, உங்களுக்கு இது மாதிரியான அனுபவங்கள் எதாவது ஏற்பட்டிருக்கா? இந்த மாதிரியான பிரச்சினையைப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

Advertisements