ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்…..

Posted on நவம்பர் 23, 2009

0


“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”, “புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழுதி சிகரெட்டை விற்பனை செஞ்சாலும், “தம்மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப்படின்னு தம்மடிக்கிறவங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க!

புகைப்பிடிக்கிற ஒவ்வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்தபட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத்தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்படறாங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்கறத யாரும் மறுக்கமுடியாது!

எல்லாமே தெரிஞ்சிருந்தாலும், புகைப்பழக்கத்தை விட முடியாததுக்கு பல காரணங்கள். “வித்ட்ராவல் சிம்ப்டம்ஸ்” அப்படிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா ஏற்படுற பின் விளைவுகள். இந்தக் காரணத்தால விடணும்னு நெனைக்கிறவங்க கூட விட முடியாம தவிக்கிறாங்க!

ஆனா, இந்தப் பதிவு அவங்களுக்கானது இல்ல! பொதுவா புகைப்பிடிக்கிற எல்லாருக்கும், அப்புறம் புகைப்பழக்கத்தைப் பத்தி ஒன்னும் தெரிஞ்சிக்காம, ச்சும்மா ஒரு “கிக்குக்காக/மப்புக்காக” புதுசா தம்மடிக்கிறவங்களும்தான் முக்கியமா இந்தப் பதிவை எழுதுறேன்!

மேல இருக்கிறத படிச்சுட்டு, மவனே…..நீ மட்டும் என் கைல கெடைச்ச உனக்கு….அப்படின்னு என் மேல பயங்கரமா கோவப் படற சீனியர்/ஜூனியர் நண்பர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிற விரும்புறேன். நாம (காலேஜில நான் கூட ராக்கிங்ல தம்மடிச்சேங்க! ஆஹா ரகசியம் போச்சே?!) எல்லாருமே தம்மடிக்க  ஆரம்பிக்கிறப்போ “ம்ம்ம்….ஒரு தம்முதான, என்ன பெருசா ஆயிடப்போவுது” அப்படின்னுதாங்க ஆரம்பிப்போம்!

அந்த ஒரு தம்மு அடிக்கிறதுனால நம்ம உடல் நலத்துக்கு, எவ்வளவு ஆபத்து/அபாயங்கள் ஏற்படுதுன்னு தெளிவா சொல்லத்தான் இந்தப் பதிவே! அது எப்படி சொல்ல முடியும் ஒரு தம்மு அடிக்கிறதுனால வர்ற பாதிப்ப? அப்படின்னு கேட்குறீங்களா…..

கண்டிப்பா சொல்ல முடியும்ங்க…..அப்படின்னு நான் சொல்லல! கனடாவின் மெக்.கில் பல்கலைக்கழக  இருதய மருத்துவர் “ஸ்டெல்லா தாஸ்கலோபோலு” சொல்றாங்க. சரி, வள வள பேசாம நேரா மேட்டருக்கு வருவோம்…..

18 முதல் 30 வயதானவங்கள்ல செயத ஒரு ஆய்வுல, ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட, சுமார் 25% வரையில ரத்த நாளங்கள் விரைக்கிறதாம் (அதாவது, ரத்த நாளங்களுக்கு உள்ளே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம்!). என்ன, “ஐய்யோ சாமி….ஆள விடு இந்த வெளையாட்டுக்கு நான் வரல” அப்படிங்கிறீங்களா?

எனக்குக் கூட பகீர்னு இருந்தது இந்த செய்திய படிச்ச உடனே. நம்பறதா வேண்டாமான்னு கொஞ்ச நேரம் மனசுக்குள்ள ஒரு போராட்டமே நடந்துதுன்னா பாத்துக்குங்களேன்! ஆனா, வேற வழியே இல்ல நம்பித்தான் ஆகனும்…. நீங்களும்தான்!

அது சரி, விரைத்துப் போகும் ரத்த நாளங்கள்னால என்ன பிரச்சினை? ரத்த நாளங்கள் விரைத்துப் போவதால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இருதயம் கடுமையாக வேலை செய்தாலொழிய ரத்த ஓட்டம் சீராகாது என்னும் நிலை ஏற்படுகிறதாம்!  ரத்த நாளங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பும் இருக்கிறதாம்! (அப்படின்னா…..ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு இருக்கா?!)

“அப்லனேஷன் டோனோமெட்ரி” (applanation tonometry) அப்படிங்கிற ஒரு புதுமையான( ஆனால் தேர்ந்த!) தொழில்னுட்பம் மூலமா “ஆர்டீரியல் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (arterial stress test) சோதனை மூலமா ரத்த நாளங்களோட விரைப்புத் தன்மைய கண்டுபிடிச்சிருக்காங்க டாக்டர் ஸ்டெல்லா!

ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, சும்மா கிக்கு/மப்புக்காக ஒரே ஒரு தம்மடிச்சாலும் கூட,  நம்ம ரத்த நாளங்கள் பழுதடையறது மட்டுமில்லாம, சாதாரணமா ஓடி பேருந்தில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி  நடக்கும் செயல்களுக்குக்கூட நாம் மிகுந்த சிரமப்பட்டுதான் செய்யனும் அப்படிங்கிற நெலமைக்கு ஆளாகவேண்டிவரும்னு சொல்றாங்க ஸ்டெல்லா!

சரி இப்போ நாம, இவ்ளோ பிரச்சினை பண்ற சிகரெட் குடிக்கிறத எப்படி விடறதுன்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க….

என்னங்க, இப்போ புரியுதா “ஒரே ஒரு சிகரெட்டுதானே”, அப்படின்னு இனிமே ஏன் சொல்ல முடியாதுன்னு?! ஒரு சிகரெட்டுன்னாக்கூட, அது உடம்புக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துதுன்னு பார்த்தீங்கள்ள?

அதனால “புகைப்பழக்கத்தை துறப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்”!

Advertisements