ஒளிசக்தியில் இயங்கும் மின்சாதனங்கள்!

Posted on ஒக்ரோபர் 30, 2009

1


நமக்கும் பொறியியலுக்கும் ரொம்ப தூரம்னாலும், அறிவியல் ஆய்வெல்லாம் பண்றதுனால ஒரு சில தொழில்னுட்ப நுணுக்கங்கள கொஞ்சம் புரிஞ்சிக்க முடியுது. ஆமாம் அப்படியென்ன நுணுக்கம்னு கேக்குறீங்களா? அதாங்க, தொழில்னுட்ப உலகத்தோட சமீபகால கவர்ச்சியான “நேனோ”  அளவிலான சாதனங்கள், எந்திரங்கள் போன்றவை. சரி, அது இருக்கட்டும், இப்போ இருக்கிற மின்சாதன பொருள்கள்/எந்திரங்கள், கணினி போன்றவையெல்லாம் இயங்க ஒரு அடிப்படை விஷயம் என்ன சொல்லுங்க பார்ப்போம்? அதுதாங்க “மதர் போர்டு” எனச் சொல்லக்கூடிய “எலக்ட்ரிக் சர்க்யூட் போர்டு”(இதற்கு தமிழாக்கம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்!). இந்த போர்டில் மின்சாரம் பாய்ச்சினால்தான் எந்தவொரு மின்சாதனமும் இயங்கும் அப்படித்தானே?

[picapp src=”0/f/5/c/World_Environment_Day_7e1c.jpg?adImageId=6910179&imageId=993243″ width=”500″ height=”341″ /]

சரி, அப்படின்னா இதுவரைக்கும் நமக்கு தெரிந்த வகையில் பார்த்தால், இந்த  மதர் போர்டுக்குள்  (மேலே படம்) மின்சாரத்தை செலுத்தினால்தான் எல்லாவகையான மின்சாதனமும் இயங்கும் என்று சொன்னால் எல்லோரும் நம்பித்தான் ஆகவேண்டும் எனபது இயல்பு. ஆனால், இதே போன்று இருக்கும் மதர்போர்டுக்குள் மின்சாரத்திற்குப் பதிலாக, ஒளியினை (சூரிய ஒளி) செலுத்தினால் கூட, நாம் இன்று மின்சாரத்தின் உதவியுடன் இயக்கும் பல சாதனங்களை சூரிய ஒளியைக்கொண்டு மட்டுமே இயக்க முடியும்னு சொன்னா உங்களில் எத்தனை சதவிகிதம் பேர் நம்புவீங்கன்னு எனக்குத் தெரியாது.ஆனாலும் நீங்க நம்பித்தான் ஆகனும் அப்படின்னு நான் சொல்லலீங்க, நாதெர் எங்கெட்டா சொல்றாரு!

அதாரு நாதெர் எங்கெட்டா? அவருதாங்க மேலே சொன்ன புதுயுக தகவல்தொழில்னுட்பத் துறை மாற்றத்த சாத்தியப்படுத்த முடியும்னு உறுதியா சொல்றவரு! எங்கெட்டா அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின், விஞ்ஞானி. அவரு சொல்றபடி பார்த்தால் ஒரு மதர் போர்டில் இருக்கும் பகுதிகளான இன்டக்டர், கெபாசிட்டர், ரெசிஸ்டர், ட்ரான்சிஸ்டர் என எல்லாத்தையும்  நேனோஸ்கேல்(அதாவது ஒரு மீட்டரில் ஒன்றின்கீழ் ஒன்பது பங்கு! 10-9m) அளவிற்கு மாற்றி ஒளி சக்தியில் இயங்கும் ஒரு புதுயுக மதர்போர்டை உருவாக்க முடியும் என்கிறார்! அத்தகைய மதர்போர்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் சாதனங்கள், தகவல் தொழில்னுட்பத்தை அதன் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்கிறார் அவர்.

ஒளி சக்தியில் மட்டுமே எந்திரங்களை இயக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாய் கீழே உள்ள இந்த காணொளியைப் பாருங்கள்….

என்னங்க ஒன்னும் புரியலையா? சரி இன்னும் கொஞ்சம் விளக்கமாப் பார்ப்போம் வாங்க. அதாவது, தற்பொழுதுள்ள(அளவு பெரியதாக) மதர்போர்டை அப்படியே நேனோ அளவிற்கு மாற்றி வடிவமைக்க வேண்டும். அதற்கு, அதிலுள்ள பாகங்கள் அனைத்தையும் வடிவம் மாறாமல் நேனோ அளவிற்கு வடிவமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது எந்த உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதோ அதே உலோகத்தைப் பயன்படுத்தித்தான் நேனோ அளவிற்கு அவற்றை உருவாக்க வேண்டும்! அப்படிச்செய்தால், கெபாசிட்டர், ட்ரான்சிஸ்டர் போன்ற எல்லா பாகங்களும் தத்தம் பணிகளைச் சரியாகச் செய்யும் என்கிறார் எங்கெட்டா!

சரி, நேனோ ஸ்கேலில் இவற்றை மாற்றி வடிவமைத்தால் என்ன பெரிய லாபம்? அப்படின்னு கேட்டீங்கன்னா, மூன்று வசதிகள் இருப்பதாக கூறுகிறார் எங்கெட்டா. அவை…

1. தற்பொழுதுள்ள மதர்போர்டை விட அளவில் மிக மிகச் சிறியதாக ஒரு மதர்போர்டை உருவாக்குவதால், தொழில்னுட்ப முன்னேற்றம் இன்னும் வளரும்/பரிணமிக்கும். புதுயுகமான நேனோ உலகத்துள் தொழினுட்பத்தை கொண்டு செல்ல முடியும்.

2. ஆப்டிகல் ஃப்ரீக்வென்சியைப் (ஒளி அலைகள்?!) பயன்படுத்துவதால் இன்னும் அதிகப்படியான பேண்ட் விட்த் கிடைக்கும் என்கிறார்

3. இவையெல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய நேனோ மதர்போர்டுகளை பயன்படுத்துவதால், சக்தியின் (மின்சாரம்) பயன்பாட்டு அளவைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரையில் கணினி அளவிலேயே சோதனையில் இருக்கும் இந்த ஆய்வை மேற்கொண்டு தொடர இருக்கிறார் எங்கெட்டா. தற்பொழுதுள்ள நேனோ டெக்னாலஜி முன்னேற்றங்களைக் கொண்டு இந்த புதுயுக ஒளியில் இயங்கும் நேனோ எந்திரங்களை தன்னால்  நிச்சயம் உருவாக்க முடியும் என நம்பிக்கையோட சொல்றாரு எங்கெட்டா! முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிறார் சுருக்கமாக! அதுமட்டுமில்லாமல் இன்னும் 6 மாதங்களுக்குள் இதன் ஆரம்ப நிலை வடிவத்தை உருவாக்கப்போவதாகவும் சொல்கிறார்.

அதெல்லாம் சரி, இது என்ன அவ்வளவு சுலபமா செஞ்சு முடிக்கிற காரியமான்னா? அதுதான் இல்ல அப்படிங்கறார் எங்கெட்டா! ஏன் இதுல அப்படி என்ன சிக்கல் அப்படின்னா, இந்த நேனோ சர்க்யூட்டை அதன் எல்லா பாகங்களையும் நேனோ அளவில், சரியான வடிவில் உருவாக்குவதுதான் இதிலுள்ள பெரிய சிக்கலாம். அதுமட்டுமில்லாம, நேனோ அளவில் உருவாக்கற ட்ரான்ஸிஸ்டர், கெபாசிட்டர் என எல்லாத்தையும் சரியான இடத்துல ஒரு கோர்வையா பொருத்துறதுங்கறதுதான் எல்லாத்தையும் விட பெரிய சிக்கல் என்கிறார் எங்கெட்டா! அப்படின்னா இது சாத்தியமில்லையா அப்படின்னு கேட்டா, இது சாத்தியம்தான் ஆனா அவ்வளவு சுலபமில்லை அப்படிங்கறார் இந்த நேனோ விஞ்ஞானி!

இந்த நேனோ மதர்போர்டு முயற்ச்சி வெற்றியடையும் பட்சத்துல, எங்கெட்டாவோட அடுத்தகட்ட திட்டம் என்ன தெரியுமா உங்களுக்கு?  “நேனோ கம்ப்யூட்டர்” உருவாக்கறதுதான் அப்படிங்கறார்! அது எப்படின்னு கேட்டீங்கன்னா, முதலில் கணினி விசைப்பலகையில் உள்ள ஸ்விட்ச் போன்றவற்றை  நேனோ அளவில் உருவாக்கி பின்னர் படிப்படியாக நேனோ கணினி வரைக்கும் முன்னேற முடியும்.அதுதான் புதுயுக தொழில்னுட்பம் என்கிறார் எங்கெட்டா!இது பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் படிக்க இங்கு செல்லுங்கள்

“வாழ்க எங்கெட்டா போன்ற நேனோ விஞ்ஞானிகள்! வளர்க நேனோ தொழில்னுட்பம்!”

Advertisements