நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம், இது நாளைய உலகின் கணக்கு-2

Posted on ஒக்ரோபர் 27, 2009

0


இப்பதிவின் முந்தைய பாகத்தில் சில கேள்விகளுடன் நிறுத்தியிருந்தேன். அந்த கேள்விகளுக்கான விடைகளை இப்பகுதியில் காண்போம்.

நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம் எனும் இலக்கினை அடைய என்ன செய்ய வேண்டும்?

முதலில் காற்றாலைகளை நிர்மானிக்க வேண்டும், சூரிய ஒளியை தக்க வைத்துக் கொள்ளும் சோலார் கருவிகள் உருவாக்க வேண்டும், கடல், குளம் போன்றவற்றிலிருக்கும் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கத் தேவையான சாதனங்கள், பின்னர் தயாரித்த மின்சாரத்தை பிரித்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லத் தேவையான சாதனங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். ஆனால் இதற்கான செலவு நம் தற்போதைய சேமிப்பைவிட பன்மடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் டெலுச்சியும் ஜேக்கப்சனும்! அதேசமயம், இத்தகையதொரு மாற்றத்தினை சாத்தியப்படுத்தும் பட்சத்தில் சுமார் 13,000 அனல்மின் நிலையங்களின் தேவையை முற்றிலுமாய் தவிர்க்கலாம் என்கிறார்கள்.

நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம் என்னும் இப்புதிய கணக்கினை உறுதி செய்ய டெலுச்சியும் ஜேக்கப்சனும் பல்வேறு வகையான எரிவாயு தயாரிக்க உதவும் பொருள்களை பரிசோதித்து, இறுதியாக இம்மூன்றையும் தேர்ந்தெடுத்தனர். இந்த மூன்று பொருள்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு எந்த தீங்கும் இல்லை என்பதாலேயே இவற்றை தேர்ந்தெடுத்ததாகவும் கூறுகிறார்கள் இவ்விருவரும்!

மேலும், இம்முன்று காரணிகளுள் நிலம் சார்ந்தவையான சூரிய ஒளி மற்றும் காற்று இவற்றில் காற்று மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரமானது உருவாக்க தற்போதைய உலகின் சக்தி தேவையை பூர்த்தி செய்ய தேவையான பொருட்செலவில் 5-லிருந்து 15% வரை அதிகம் செலவாகும் என்றும், சூரிய ஒளியிலிருந்து மட்டும் மின்சாரம் தயாரிக்க 30 மடங்கு அதிக செலவாகும் என்றும் கணக்கிட்டுள்ளனர். அத்தகைய காற்றிலிருந்து மின்சாரத் தயாரிப்புக்கு தேவையான காற்றாலைகள் மட்டுமே மான்ஹாட்டன் நகரளவுக்கு இருக்கும் என்கின்றனர்!  மொத்தத்தில் காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க பூமியின் 1-1.3% இடம் தேவை என்று கூறுகின்றனர்.

நீர்+சூரியஒளி+காற்று=மின்சாரம் என்பது உண்மையில் சாத்தியமா?

இந்த ஆய்வானது, உலகின் சக்தியின் தேவைகளுக்கு இத்தகையதொரு  நீர்+சூரியஒளி + காற்று கலவையானது நிச்சயம் பொருத்தமானது மட்டுமல்லாது நீண்ட காலத்தேவையின் அடிப்படையில் நோக்கினால், ஒரு மிகச்சிறந்த சக்தி தயாரிக்க முறையாகும் என்கிறார்கள்.  அதற்கு அடையாளமாக/சான்றாக இவர்கள் கூறுவது வருடம் முழுவதும் நமக்கு கிடைக்கும் காற்றும், சூரிய ஒளியுமே! ஆனால், காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க நாம் பயன்படுத்தும் எல்லா எந்திரங்கள்/சாதனங்கள் அனைத்துமே சுழற்ச்சி முறையில் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு நாம் பல்வேறு உலோகங்களை தொடர்ந்து சோதித்துப் பார்த்து அறிய வேண்டுவதும் மிக அவசியம்/முக்கியம் என்றும் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்!

இத்தகையதொரு மாற்றத்திற்கு சில முட்டுக்கட்டைகளும் உள்ளன.அவற்றுள் மிக முக்கியமானது சக்தியினை உருவாக்கும் நிறுவனங்களும், அவை எதிர்பார்க்கும் நிதி ஒதுக்கீடுமே என்கிறார்கள். ஆனால்,இதற்கு ஒரு தீர்வை காணாமல் நாம் தொடர்ந்து தற்போதைய முறையில் சக்தியை/எரிவாயுவை உருவாக்குவோமேயானால், உலகின் சுற்றுச்சூழல் பன்மடங்கு பாழாவதுடன் மக்களின் சுகாதாரத்திற்கு உத்தரவாதமில்லாமல் போய்விடும் என்று எச்சரிக்கின்றனர் டெலுச்சியும் ஜேக்கப்சனும்!

ஆக, ஒரு புதிய மாற்றமென்பது மிகச்சுலபமாய், வேகமாக ஏற்படுவதன்று.மாறாக அதற்க்கு பல தடைகள் கண்டிப்பாக இருக்கும்.அத்தகைய தடைகளை சாமர்த்தியமாக நீக்கி, மன உறுதியுடன், ஒற்றுமையுடன் செயல்படுவோமாயின் வெற்றி நிச்சயமே! வாழ்க்கை என்பது பல தடைக்கற்களை கொண்டது, அத்தகைய தடைக்கற்களை இன்னல்களாக எண்ணாமல் அவற்றையே நம் படிக்கற்களாக பாவித்து தன்னம்பிக்கையுடன் முன்னேறினால் எந்த ஒரு கடினமான இலக்கையும் எட்டிவிட முடியும் என்பது உலக வரலாறு நமக்கு அளிக்கும் ஒரு பாடம்! இக்கருத்துக்கு உதாரணமாய் ஒரு பதிவை நீங்கள் இங்கு காணலாம்

Advertisements