பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?

Posted on ஒக்ரோபர் 22, 2009

3


மனிதர்களின் பரிணாமம் குறித்த என்னுடைய சில பதிவுகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.பொதுவாக, மனிதர்களின் பரிணாமம் குறித்த கேள்விகள் பலவற்றிற்கு இன்னும் பதில் தேடிக் கொண்டுதான் இருக்கிறோமே தவிர, திட்டவட்டமான விடையை இன்னும் நாம் கண்டுபிடிக்கவில்லை.அதை நோக்கிய பயணத்தில்தான் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் உலக பரிணாம ஆய்வாளர்கள். அத்தகைய ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகள் சில யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், பல நேர்மாறாக இருப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்! பிற ஆய்வுகளை விட பரிணாம ஆய்வுக்கு மிகுந்த சிரமமும், சிரத்தையும் எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம்.ஏனெனில், காலத்தில் பின்னோக்கி சென்று முயன்றால் மட்டுமே சாத்தியம் என்ற வகையில் அடங்கும் கேள்விகள் நிறைந்ததுதான் பரிணாம ஆய்வு!

எனவே இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் நீண்ட காலமும், அதிகப்படியான மனிதர்கள்/குரங்குகள் அல்லது ஆய்வு சம்பந்தப்பட்ட இன்ன பிற விலங்குகளைக் கொண்டுமே மேற்கொள்ளப்படுவன. ஆகையால் இத்தகைய ஆய்வு முடிவுகள் பெரும்பாலும் தீர்க்கமானவையாகவும், நம்பும்படியாகவும் இருக்கும்.அத்தகைய ஒரு ஆய்வைக் குறித்த செய்திதான் இந்தப் பதிவு.சரி, பரிணாமம் குறித்த கேள்விகள் யாவை? உதாரணமாக,

1.பரிணாமத்தில் மனிதன்தான் இறுதி உயிரினமா/மனிதனுக்கு பிறகு புதிய உயிரினங்கள் ஏதும் தோன்றுமா?

2.ஒருவேளை, மனிதன்தான் பரிணாமத்தில்(பூமியில்) கடைசி உயிரினம் என்றால், இனி மனிதனில் பரிணாம வளர்ச்சி இருக்குமா? இருந்தால் எப்படி வெளிப்படும்?

3.பூமியின் உயிர்களின் பரிணாமம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதா அல்லது முற்றிலும் தடைபட்டுவிட்டதா? போன்ற வினாக்களை குறிப்பிடலாம்.

மனிதனுக்கு அடுத்து என்ன? (படம்:கூகுள்)

மனிதனுக்கு அடுத்து என்ன? (படம்:கூகுள்)

இன்றுவரையில், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு பலவாறான யூகங்கள் பதில்களாக கூறப்பட்டு வந்தன.அவற்றுள் சில,

1.மனிதனுக்குப் பிறகு புதிய உயிரினம்(உருவத்திலோ/அறிவுத்திறனிலோ) பிறக்காது

2.புதிய உயிரினம் இருக்கும். அந்த உயிரினம் மனிதன்தான் ஆனால்,அத்தகைய மனிதன் அசாதாரணமான அறிவுத்திறன் கொண்ட ஒரு புதிய மனிதனாக இருப்பான்!

3.புதிய மனிதன் தலைப்பகுதி மிகப்பெரியதாக இருக்கப்பெற்று, அசாதாரண அறிவுத்திறன் கொண்ட சகல கலா வல்லவனாய் இருப்பான்! என்றெல்லாம் ஆய்வாளர்கள்/பொதுமக்கள் போன்றோரால் யூகிக்க மட்டுமே முடிந்தது! மேலும் யூகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இந்த திரைப்படத்தைப் (பி.பி.சி யின் குறும்படம்!)  பாருங்கள்! இத்திரைப்படம் முழுமையும் காண இங்கு செல்லுங்கள்

ஆனால் இன்று அத்தகைய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் தன் ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார்கள் அமெரிக்காவின் யேள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் ஸ்டேர்ன்ஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள்! அந்த ஆய்வினைப் பற்றி ஸ்டீஃபன் என்ன கூறுகிறார் என்பதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

அதாவது, மருத்துவத் துறையின் முன்னேற்றம், நோய்களை குணப்படுத்தும் சிறந்த சிகிச்சை முறைகள் போன்றவை, மனிதர்களில் மட்டும் “இயற்கையின் தேர்வு (Natural selection)” எனப்படும் பரிணாம உந்து சக்தியாக விளங்கும் ஒரு  இயற்கை  நிகழ்வினை, தடைசெய்து விட்டனவோ?! என்ற ஒரு ஐயம் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இதுவரை நிலவி வந்தது.அத்தகைய ஐயப்பாடுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ஸ்டீஃபன் ஸ்டேர்ன்ஸ் அவர்களின் ஆய்வறிக்கை! அதெப்படி எப்படி என்கிறீர்களா? அதாவது, “மனிதர்கள் இன்னும் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா?” என்ற கேள்விக்கு ஆம் மனிதப் பரிணாமம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்னும்  விடையைக் கண்டுவிட்டார் ஸ்டீஃபன் ஸ்டேர்ன்ஸ்! அதுமட்டுமல்ல, பிற உயிர்கள் எந்த வேகத்தில்(வருடக்கணக்கு?) பரிணாமத்தில் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றனவோ அதே வேகத்தில்தான் மனிதனும் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஸ்டீஃபன் ஸ்டேர்ன்ஸ்.

சரி, அப்படியென்றால் மனிதன் எந்த விதத்தில் பரிணமிப்பான் இனி? இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? இவற்றை அறிய ஆய்வு முறையை முதலில் பார்ப்போம்.இந்த ஆய்வானது, ஒரு இருதய ஆய்வுக்காக 60 வருடங்களாக தொகுக்கப்பட்ட 2000 வட அமெரிக்க பெண்களின் சில குணாதீசியங்களை கணித்து மேற்கொள்ளப்பட்டது! இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில குணாதீசியங்களை, இவ்விரண்டாயிரம் பெண்களின் (வாழ்நாள் முழுவதும் அவர்கள் பெற்றெடுத்த அத்தனை) குழந்தைகளில் எவ்வாறு மாற்றமடைந்தன/தரிந்துபோயின என கூர்ந்து கவனிக்கப்பட்டது.இதனடிப்படையில், இக்குணாதீசியங்கள் எந்தெந்த விதத்தில் மாற்றமடையக்கூடும்(எதிர்காலத்தில்?!) என பரிணாம அறிவியல் கோட்பாடுகளின்படி வரையறுக்கப்பட்டது.

எதிர்கால மனிதனின் இயல்புகள்?!

1.பெண்கள் சற்று குள்ளமாகவும், எடை அதிகமாகவும் இருப்பர்.அவர்களுக்கு ரத்த அழுத்தமும், கொழப்புச்சத்தும் குறைவாக இருக்கும்!

2.பெண்களுக்கு முதல் குழந்தையானது மிக இளம் வயதிலேயே பிறக்கும். மாதவிடாயானது  நின்றுபோகும் வயது இன்னும் அதிகரிக்கும்.

போன்றவை இந்த 2000 பெண்களிலே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.மேலும், இத்தகைய மனிதப் பரிணாமமானது சற்று மெதுவாக, படிப்படியாக  நடந்தாலும், இயற்கையில் நிகழும் பிற உயிர்களின் பரிணாம வளர்ச்சியிலிருந்து மாறுபடவில்லை என்கிறார் ஸ்டீஃபன் ஸ்டேர்ன்ஸ். அதாவது மனிதர்கள் ஒன்றும் தனித்துவமாக பரிணமிக்கவில்லை என்பது பொருள்! இந்த ஆய்வரிக்கையை பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள இங்கு செல்லுங்கள் ஆக மனிதர்கள் இன்னும் பரிணமித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.ஆனால் இதுவரை, குத்துமதிப்பாக மூளை மட்டும் வளரும், உடல் மட்டும் வளரும் போன்ற யூகங்களை கொண்டிருந்தவர்கள் மத்தியில் இப்படித்தான் மனிதப் பரிணாமம் இருக்கப்போகிறது எனச் சொல்லும் முதல் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது!

Advertisements