ஐயோ பாவம் அமெரிக்கா….?!

Posted on ஒக்ரோபர் 20, 2009

8


சொர்கமே என்றாலும்….அது நம்மூரப் போல வருமா? அட எந்நாடு என்றாலும்…. நம் நாட்டுக் கீடாகுமா? என்னங்க, “ஆஹா…..இது அவன் இல்ல” அப்படின்னு வடிவேலு மாதிரி யோசிக்கிறீங்களா? சத்தியமா இது அவன் இல்ல! ஆமாங்க இதுக்கும் ராமராஜனுக்கும் எந்த தொடர்பும் இல்லீங்க. சரி, அப்புறம் எதற்காக இந்தப் பாட்டு இப்பொழுது என்றுதானே கேட்க வருகிறீர்கள்? பதிவுத் தலைப்பில் அமெரிக்கா, தொடக்கத்தில் இந்தப் பாட்டு….உங்கள்ல பலருக்கு நான் என்ன சொல்ல வர்ரேன்னு கொஞ்சமாவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்! இல்லைன்னாலும் பரவாயில்ல வாங்க மேட்டரு என்னன்னு பார்ப்போம்.

அதாவது….

  • உலகத்துல யாருமே அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது(ஆனா நாங்க மட்டும் வச்சிருப்போம், அதப் பத்தி மட்டும் யாரும் கேட்கக்கூடாது…!?)
  • உலகத்துல இருக்கிற எல்லா தெறமசாலிகளும் எங்க நாட்டுக்கு வாங்க, வாழ்க்கையை வசதியா வாழலாம்(ஆனா வெளிநாட்டுல இருந்து வர்ர உங்களாலதான் எங்க பொழப்பே நடக்குது அதப் பத்தி மட்டும் வெளியில சொல்லிடாதீங்க…!?)
  • உலகத்துல இருக்கிற நாடுகளுக்கெல்லாம் நாங்கதான் வல்லரசு(ஆனா பிஸ்கோத்து ஓசாமா பின் லேடன் மாதிரி தீவிரவாதிங்கள கண்டா மட்டும் எங்களுக்கு தொட நடுங்கும்…!?)
  • உலகத்துலயே நாங்கதான் பெரிய்ய்ய…புத்திசாலி(ஆனா எங்க “நாசா”, “சிலிக்கான் வேல்லி”யில வேலை செய்யிற இந்தியர்கள் மட்டும் இல்லன்னாக்கூட அத ரெண்டையும் இழுத்து மூட வேண்டியதுதான் அப்படீங்கிற உண்மையை மட்டும் எல்லாரும் மறந்துடுங்க…!?)

இப்படியெல்லாம் (இன்னும் நெறையவே…) சொல்லிக்கிட்டு இருந்த/இருக்கிற?! அமெரிக்காவுக்கு யாரோ ஆப்பு அடிச்சிட்டாங்க/அடிக்கப்போறாங்க  அப்படீன்னு யாராவது சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்களா? வருத்தப்படுவீங்களா? அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், ஆப்பு அடிச்சிட்டாங்க/அடிக்கப்போறாங்க  அப்படீன்னு யாரு சொன்னதுன்னுதானே கேக்குறீங்க….? அப்படின்னு நான் சொல்லலீங்க, அமெரிக்காவின் பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆய்வாளராகப் பணிபுரியும்  “விவேக் வாத்வா” எனும் ஒரு இந்தியர் சொல்கிறார்! அவர் ஒன்றும் இதைச் சும்மா பொழுதுபோகாமல் சொல்லவில்லை, அமெரிக்காவில் சமீபத்தில் (2008) ஒரு பெரிய ஓட்டெடுப்பு ஒன்றை நடத்திவிட்டுதான் இதனைச் சொல்கிறார்! அப்படி என்னதான் சொல்றாருன்னு பார்க்கலாம் வாங்க…..

” நான்(விவேக் வாத்வா) கொலம்பஸ் தினம் (அக்டோபர் 12,2009) அன்று சன்னிவேல் நகரில் (கலிஃபோர்னியா) புதிய இந்தியர்கள்(சமீபத்தில் அமெரிக்கா சென்றவர்கள்) குழு ஒன்றைச் சந்தித்தேன்.அவர்கள் சிலிக்கான் வேலியில் வாழும் இந்தியர்கள்! திங்க் இன்டியா அமைப்பு நடத்திய ஒரு  நிகழ்ச்சிக்காக அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (மென்பொருள் வல்லுனர்கள்) சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ந்து பின் தீர்வு காண ஏற்படுத்தப்பட்டிருந்த நிகழ்ச்சி அது!  நிகழ்ச்சியின் ஒரு பகுதியான திறமைவாய்ந்தவர்கள் இடம்பெயர்வு  குறித்த விவாதம் வந்த போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது.அது என்னவென்றால், “இந்தக் குழுவில் உள்ளவர்களில் எத்தனை பேர் தாய் நாடு திரும்பும் எண்ணத்தில் இருக்கிறீர்கள்” என்பதுதான்!

பார்வையாளர்களில் முக்கால்வாசிப் பேர் கை உயர்த்தக் கண்டு நான் அதிர்ந்தே போனேன்!  கேள்வி கேட்ட திரு.ரங்கசாமியும்தான்! ஏனென்றால், அவர் பல வருட காலமாக சிலிக்கான் வேலியில் பணிபுரிபவர் என்பதால்.அவர் வாழ்ந்த சிலிக்கான் வேலி சற்று வித்தியாசமானது.அதாவது பல இந்தியர்கள் வந்து, கலிஃபோர்னியாவின் மென்பொருள் நிறுவனங்களில் உயர்ந்த பதிவியை வகித்த காலம் அது! ஆனால் சிலிக்கான் வேலி வந்த மூத்த இந்தியர்களுக்கும் இளையவர்களுக்குமான வித்தியாசம் மிகவும் ஆச்சரியத்துக்குரியது. காரணம் என்னவென்றால், தற்போதைய நிலையில் சிலிக்கான் வேலியின் உயர்ந்த பதவியில் உள்ள இந்தியர்கள் வெளி நாடுகளில் வாய்ப்புகளை தேடி தாய் நாடு திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்!

சிலிக்கான் வேலி,கலிஃபோர்னியா

சிலிக்கான் வேலி,கலிஃபோர்னியா

இது சிலிக்கான் வேலியின் இந்தியர்களின் நிலை மட்டுமல்ல.பெரும்பாலான (பல்லாயிரக்கணக்கான) சீனர்களும் தங்கள் நாடுகளில் வாய்ப்பு தேடி தாய் நாடு திரும்பிவிட்டார்கள். ஷாங்காய், பெய்ஜிங் போன்ற நகரங்களில் இன்று அவர்களால்தான் வேலை நடக்கின்றன! அதெல்லாம் சரி, ஏன் இவர்கள் அனைவரும் உலகின் தொழில்னுட்ப உலகமான சிலிக்கான் வேலியை விட்டுச் செல்கிறார்கள்? இதற்கான காரணத்தைக் கண்டறிய என் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பும் 1203 இந்திய/சீன மென்பொறியாளர்களிடம் ஒரு ஓட்டெடுப்பை  நடத்தினார்கள். இந்த ஆய்வின் முடிவில் நாங்கள் கண்டுபிடித்த உண்மைகள் சிலிக்கான் வேலியின் முன்னேற்றத்தைப் பற்றி சிறிதளவேனும் அக்கரையில்லாதவரைக் கூட கொஞ்சம் அதிர வைக்கக் கூடியதே” என்கிறார் திரு.விவேக் அவர்கள்.அதன் விவரம் வருமாறு…..

1.இந்த தாய் நாடு திரும்புவோர் அனைவரும் தங்களின் 30 வயது(இந்தியர்கள்) அல்லது 33 வயதிலும் (சீனர்கள்) இருப்பவர்கள்

2.அவர்கள் அனைவரும் உயர் பட்டப்படிப்பு படித்தவர்கள்-51% சீனர்கள், 66% இந்தியர்கள் முதுகலைப்பட்டமும், 41% சீனர்கள் மற்றும் 12% விழுக்காடு இந்தியர்கள் முனைவர் பட்டமும் பெற்றவர்கள்!

3.இவர்களின் பட்டப்படிப்பு எல்லாம் மேலான்மை, தொழில்னுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்தவையாகவே இருந்தது.

4. தாய் நாடு திரும்பும் இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு வித்திடும் உயர்ந்த பதவியில், வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு வகித்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

5.இந்த நாடு திரும்புவோர் பட்டியலில் இருந்தவர்கள் ஒன்றும் நேற்று, முந்தானேற்று அமெரிக்கா வந்தவர்கள் அல்ல.இவர்களுள்  27% இந்தியர்களும் மற்றும் 34% சீனர்களும் அமெரிக்க குடியுரிமை(க்ரீன் கார்டு) பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

இதுவரை தாய் நாடு திரும்பியவர்களின் பதவி, தகுதி, எண்ணிக்கை பற்றி பார்த்தோம்.இனி அவர்கள் என்னென்ன காரணங்களுக்காக தம் தாய் நாடு திரும்பினார்கள் என்பதை பார்ப்போம்…..

1.சுமார் 84% சீனர்களும், 69% இந்தியர்களும் கூறிய காரணம் தத்தம் நாடுகளில் உள்ள நல்ல வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த ஊதியமாயினும் “வாழ்க்கைத் தரமானது” அமெரிக்காவை விட பல மடங்கு திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்! ( ஆனால் அதே சமயம் சிலர் தங்கள் நாடுகளில் உள்ள ஜன நெரிசல், சுற்றுப்புற மாசுகேடு பற்றி கவலை தெரிவித்தனர்)

2.சமுதாயம் பற்றிய  கண்ணோட்டம் குறித்த கருத்தில் 67% சீனர்களும், 80% இந்தியர்களும் தங்கள் தாய் நாட்டில் வாழ்ந்தால் குடும்ப நலன்கள் மேம்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

3.வயதான தாய்-தந்தையரின் நலன் காப்பது(இது அமெரிக்காவின், பெற்றோரை தங்களுடன் வைத்துக் கொள்ள பல சட்ட ரீதியிலான சிக்கல்களைக் குறித்த வருத்தத்தின் எதிரொலியாய் இருந்தது).

4.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, குடும்பத்தைப் பற்றிய ஏக்கமும், நண்பர்களைப் பற்றிய ஈடுபாடும் ஒரு முக்கிய காரணமாய் இருந்தது.

5.தாய் நாடு திரும்பியோரில் 10% இந்தியர்கள், அமெரிக்காவில் மேலாண்மை உயர் பதவிகள் வகித்தவர்கள் இந்தியா வந்ததும் அந்த எண்ணிக்கை 44% உயர்ந்தது என்றும்,சீனர்களில் இது 9%-லிருந்து 36% ஆக உயர்ந்தது என்றும் தெரிய வந்தது.

6.தாய் நாட்டை விட எந்த விதத்தில் அமெரிக்க வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்ற கேள்விக்கு, 54% இந்தியர்களும் 43% சீனர்களும் தங்களின் பொருளாதார நிலையை சுட்டினார்கள்.மேலும் மருத்துவம்/சுகாதாரம் சிறப்பாக இருந்ததாக 51% , தாய் நாடு சிறப்பாக இருந்ததாக 21% சீனர்கள் தெரிவித்தனர்.ஆனால் இந்தியர்கள் பாதிக்கு பாதி அமெரிக்கா/தாய் நாடு என்றனர்.

இதுவரை நாம் பார்த்தது அமெரிக்காவிலிருந்து தாய் நாடு/வீடு திரும்பியவர்களைப் பற்றிய விவரங்களே! ஆனால் தற்பொழுது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்போர் மற்றும் 2008 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டதாரிகளானோரின்  நிலை என்ன என்ற கேள்விக்கு விடைகாண வேண்டி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,224 வெளி நாட்டு மாணவர்களின் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தெரியவந்ததாவது….

1.ஆய்வில் பங்கு பெற்ற பெரும்பாலானோர், தங்களின் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அமெரிக்கா ஒரு சிறந்த இடமாக இருக்காது என்பதால், படிப்பை முடித்தவுடன் தத்தம் தாய் நாடு திரும்பிவிடப்போவதாகவே தெரிவித்தனர்.ஆனால் வெறும் 6% இந்தியர்கள், 10% சீனர்கள் மற்றும் 15% ஐரோப்பியர்கள் மட்டுமே அமெரிக்காவில் குடியிருக்கப் போவதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!

2.சுமார் 58% இந்தியர்கள், 54% சீனர்கள் மற்றும் 40% ஐரோப்பியர்கள், வாய்ப்பு கிடைத்தால் பட்டப்படிப்பு  முடித்து சில வருடங்கள் மட்டும் அமெரிக்காவில் இருந்துவிட்டு பின் தாய் நாடு திரும்பும் எணணத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

3.வெறும் 7% சீனர்கள், 9% ஐரோப்பியர்கள் மற்றும் 25% இந்தியர்கள் மட்டுமே அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடையும் காலம் விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஏனைய 74% சீனர்கள், 86% இந்தியர்கள் தத்தம்  நாடுகளின் பொருளாதாரம் வரும்காலங்களில் மிகவும் ஏற்றமடையும் எனும் நம்பிக்கையில் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது!

4.அமெரிக்காவில் 5 வருடம் வாழ முடிவு செய்து இருப்போரின்(இந்திய மற்றும் சீன அறிவியல்/பொறியியல் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள்) எண்ணிக்கை: 92% சீனர்கள், 85% இந்தியர்கள் என்ற அளவில் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் ஆய்வு தெரிவிப்பதாகவும், இதிலிருந்து ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஏர்பட்டிருக்கிறது என்பது மட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகிறது என்று விவேக் கூறுகிறார்!

மேலும் அவர், இந்த மாற்றமானது சிலிக்கான் வேலிக்கு ஒரு தவறான திசையிலான மாற்றம் என்றும், இத்தகைய நிலைக்கு அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியும், வேலைவாய்ப்பு இல்லாமை உயர்ந்ததுமே காரணமாகும் என்கிறார். அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை 10% விழுக்காடாக இருக்கும் இத்தருணத்தில் “வருங்கால கணினி மேதைகளை” இழந்தால் என்ன பெரிய நட்டம்? அமெரிக்கர்களுக்கு பல வருடங்களுக்கு/பொருளாதாரம் சீரடையும் வரை  வேலைகிடைக்கப்போவதில்லை  என்பது மட்டும் உறுதி. இத்தருணத்தில், ஆங்கிலத்தில் “சீனோஃபோப்ஸ்”(Xenophobes) என்றழைக்கப்படும் “வெளி நாட்டவரை வெறுக்கும் அமெரிக்கர்களுக்கு” என்னுடைய இந்த கட்டுரை (வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளிவந்தது!) மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கும். ஏனென்றால் அவர்கள்,வெளி நாட்டவர் அமெரிக்கா வருவதால்தான் தங்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடுகிறது என்று   நம்புகிறார்கள் என்றும் திரு.விவேக் வாத்வா தெரிவித்தார்!

இது எல்லாம் ஒரு புறமிருக்க, ஆதாரப்பூர்வமான செய்திகளின்படி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு காரணமே திறன் வாய்ந்த வெளி நாட்டவர்கள்தான் என்றும் அவர்களாலேயே பொருளாதார முன்னேற்றம் மேம்படும் என்றும் அறியப்படுகிறது என்று கூறுகிறார்.மேலும், சிலிக்கான் வேலியின் 52% தொழில் தொடக்கங்கள் அமெரிக்காவின் வெளிநாட்டவராலேயே தொடங்கப்பட்டது.ஆராய்ச்சித் துறையை எடுத்துக்கொண்டால், 25%  “க்ளோபல் பேடன்ட்ஸ்”, புதிய தொழில்னுட்பங்கள் மற்றும் சிலிக்கான் வேலியை உலகின் முதல்தர தொழில்னுட்பக் களமாக்கியது போன்றவை எல்லாமே வெளி நாட்டவராலேயே சாத்தியப்பட்டது என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது!

இறுதியாக அவர், என்முன் அமர்ந்திருந்த, கை உயர்த்திய, சில கைதேர்ந்த இந்தியர்கள் எதிர்காலத்தில் அடுத்த கூகுள்/ஆப்பிள் போன்ற நிறுவனங்களைத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அது முற்றிலும் சாத்தியமே என்றும், அத்தகைய நிறுவனங்களை அவர்கள் தொடங்கி பல்லாயிரக்கணக்காணோருக்கு வேலை தருவார்கள். ஆனால் அந்த வேலைவாய்ப்புகள் எல்லாம் ஹைதராபாத், பூனே போன்ற இந்திய நகரங்களில் இருக்குமேயன்றி சிலிக்கான் வேலியில்  நிச்சயம் இருக்காது என்றும் திரு.விவேக் அவர்கள் தன் ஆய்வறிக்கையின் மூலம் தெரிவித்தார்!

இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஐயோ பாவம் அமெரிக்கா என்றுதானே? இல்லையென்று சொல்வீர்களானால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! ஆனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இத்தகைய செய்திகளைப் படிக்கும் மாணவர்கள் நிச்சயம் அமெரிக்கா பற்றிய தங்கள் எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் குறித்த முடிவுகளை குறைந்த பட்சம் ஒரு முறையேனும் சரியா என்று யோசித்துப்பார்த்து திருத்தம் செய்யவேண்டுமெனில், திருத்திக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்!

வருகைக்கு நன்றி, மீண்டும் மீண்டும் வருகை தாருங்கள்.

Advertisements