சிலந்தி மாத்திரையும் சில நோய்களும்

Posted on ஒக்ரோபர் 18, 2009

0


எனக்குத் தெரிந்தவரை மாத்திரைகளுள் சில வகை உண்டு.அதாவது, இனிப்பான மாத்திரைகள், கசப்பான மாத்திரைகள் என்பன சுவை சார்ந்தவை.இன்னொரு வகையானது எளிதாக கரையக்கூடிய அல்லது பொடிக்கப்பட்ட மாத்திரைகள்.ஆனால் அது என்னங்க சிலந்தி மாத்திரை? இப்படித்தான் நீங்களும் என்னைக் கேட்பீர்கள் என்று தெரியும்.உங்களைப் போலத்தான் நானும் இச்செய்தியை முதலில் படித்தபோது யோசித்தேன்.சரி வாருங்கள் அது என்னதான் என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இது மாத்திரையே அல்ல.ஆமாங்க, பெயர் மட்டும்தான் சிலந்தி மாத்திரையே தவிர இது சிலந்தி வடிவத்திலான மாத்திரைபோன்ற தோற்றமுடைய ஒரு எந்திரம்.அதாவது ரொபாட் அல்லது எந்திர மனிதன் போல.சிலந்தி மனிதன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.என்னடா இவன், முதலில் மாத்திரை என்றான் பின்பு மாத்திரை போல என்றான் இறுதியில் எந்திரம் என்று சொல்லிவிட்டானே என்றுதானே யோசிக்கிறீர்கள்? குழப்பம் வேண்டாம். நான் கூறிய அனைத்தும் உண்மை, அது எப்படி என்று விளக்கமாகச் சொல்லுகிறேன்.

பொதுவாக புற்றுநோய், சிறு கட்டிகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் போது, அது என்னவென்று கண்டறிய வேண்டி உடல் பாகங்களுள் பல்வேறு வகையான எந்திரங்களை செலுத்தி உண்மையை கண்டறிவது மருத்துவர்களின் வழக்கம்.அத்தகைய எந்திரங்களுள் பொருத்தப்பட்ட காமெராக்கள் வழியாகவே உபாதைகளின் அளவு, இயல்பு போன்றவற்றை கண்டறிவது வழக்கம்.ஆனால், அத்தகைய காமெரா பொருத்திய எந்திரங்களை உட்செலுத்தும்போது ஏற்படும் காயங்கள் அல்லது பின் விளைவுகளே சமயங்களில் நோயின் தீங்கைவிட அதிக விளைவிக்கக் கூடியதாய் ஆவதுண்டு.இந்த அசவுகரியத்தை களைய வேண்டி தொழில்னுட்ப உதவியுடன் எந்திரத்தின் அளவையும், பயன்படுத்தும் முறைகளையும், நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படாதவண்ணம் செப்பனிடுவதென்பது மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய சவால் என்றே சொல்ல வேண்டும்!

அத்தகைய சவால்களை சமாளித்து நோயாளிகளை பெருமூச்சு விடச்செய்யும் அரிய கண்டுபிடிப்புகள் அவ்வப்போது மருத்துவத்துறையில் நிகழ்வது வழக்கம்.உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், வயிற்றுப்புண் பற்றிய விவரத்தை அறிய பயன்படுத்தப்படும் “கொலோனோ ஸ்கோபி” (வீடியோ காமெரா பொருத்தப்பட்ட நீண்ட குழாய் கொண்ட) எந்திரத்தை எடுத்துக்கொள்ளலாம்.இந்த எந்திரமானது தொடக்கத்தில் மிகப்பெரியதாக இருந்தது.ஆனால் இன்றைய காலங்களில், அது மிகவும் மெல்லியதாக, நோயாளிகளுக்கு உட்செல்லுவதே தெரியாத வண்ணம் செப்பனிடப்பட்டு மிகவும் சுலபமான முறையில் கையாளப்படுகிறது.அத்தகையதொரு கண்டுபிடிப்புதான் இந்த “சிலந்தி மாத்திரையும்” என்கிறார்கள் இதனைக் உருவாக்கிய இத்தாலிய நாட்டு விஞ்ஞானிகள்!

சிலந்தி மாத்திரை (படம்:பிபிசி)

சிலந்தி மாத்திரை (படம்:பிபிசி)

நான் மேற்கூறிய உதாரணத்தை ஒத்த இந்த கருவி உருவாக்கப்பட்ட காரணம் குடல் புற்றுநோய்களை கண்டுபிடிக்கவே என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த கருவியை/மாத்திரையை நோயாளி விழுங்கிவிட வேண்டும்.உள்செல்லும் இந்த சிலந்தி மாத்திரையானது குடலில் பயணப்படும் தானாகவே! எப்படி என்கிறீர்களா? அதாவது நோயாளி இந்த மாத்திரை விழுங்கியவுடன், மருத்துவர் இந்த சிலந்தி மாத்திரையை “வயர்லெஸ்” முறையில் கட்டுபடுத்துவார்.பின் காணொளியில் பார்த்துக்கொண்டே நோயாளியின் குடலுக்குள் இந்தக் கருவியை தான் விரும்பிய பகுதிகளுக்குள் செலுத்தி புற்று நோயின் தன்மையை ஆராய்வார்.ஆய்வு/ஸ்கேனிங் முடிந்தவுடன் இந்த மாத்திரையானது இயற்கையான முறையில் வெளியேற்றப்பட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்! இதில் என்னென்ன பலன்கள் என்று பார்த்தால்

1.பெரிய குழாயைப் போன்ற கருவியினால் ஏற்படும் உபாதைகள் ஏதும் இதன்மூலம் ஏற்படாது

2.நோயாளிக்கு மன உளைச்சல், பயம் போன்றவை ஏற்படாத வண்ணம் நோயை மருத்துவரால் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

3.மிகவும் சிறியதானதால் உடலின் சிறு பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் போன்றவற்றை சுலபமாக கண்டறிய முடியும்.

இவ்வாறாக பல சவுகரியங்கள் இந்த சிலந்தி மாத்திரையில் உண்டு என்கிறார்கள் இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளும், மருத்துவர்களும்! சரி வாருங்கள், சிலந்தி மாத்திரையின் செயல்முறை, பயன்கள் பற்றி விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்/கேட்போம்….

என்ன நண்பர்களே, இது ஒரு சந்தோஷமான கண்டுபிடிப்புதானே? இத்தகைய கண்டுபிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை மேலும் சுலபமாக்கி, ஒரு நிம்மதிப் பெருமூச்சை கொண்டுவரும் என்பது உறுதி!

Advertisements