ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனமில்லீங்கோ….

Posted on ஒக்ரோபர் 17, 2009

2


“வாழ்க்கை வாழ்வதற்கே….வெற்றி நிச்சயம் எனக்கே….பெற்றேனே சுவாசப் புத்துணர்ச்சி” அப்படின்னு ஒரு கோல்கேட் விளம்பரப் படத்துல வருகிற? ஒரு இளைஞன் பாடுவதை நீங்கள் பார்த்து/கேட்டு இருக்கலாம்.அதே வரிகளை நீங்களோ, நானோ பாடினால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை.ஆனால் அதே பாடலை இவர் பாடினால் உலகம் பேச்சற்று போய்விடுகிறது.அவ்வளவு ஏன், பின்வரும் செய்தி/காணொளியைக் கண்டால் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்! இப்படிச்சொல்வதால் உங்களுக்கு என் மேல் கோபம் கூட வரலாம், தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.ஆனால் கோபப்படாமல் மேலே படித்தீர்களானால் நான் சொல்வதில் உள்ள உண்மை உங்களுக்கே புரியும்!

அப்படிப்பட்ட ஒருவர் யார் என்பதுதானே உங்கள் கேள்வி? அவர்தான் நிக் வூஜிசிக்! அது சரி அப்படியென்ன இருக்கிறது இவரிடம்? இல்லை நண்பர்களே, துரதிஷ்டவசமாக இவரிடம் நமக்கு இருப்பது போன்று சில முக்கியமான உடல் உறுப்புகள் இல்லை என்பதுதான் கொடுமை! அதாவது பிறப்பிலேயே இரண்டு கை, கால்கள் எதுவுமின்றி ஊனமாகப் பிறந்தவர்தான் இந்த நிக் வூஜிசிக்.ஆனால் உடலில்தான் இவருக்கு ஊனமே தவிர உள்ளத்தில் அல்ல! ஆம் நண்பர்களே, எல்லாம் இருந்தும் “ம்ம்ம்….என்னத்த சொல்ல, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு” என்று பெரிதாய் அலுத்துக் கொள்பவர்கள் மத்தியில் கை கால்கள் இல்லையென்றால் என்ன?!( நம்மால் இவ்வாறு கூற இயலுமா?)  “என்னால் முடியும்” என்று உறுதியாக நம்பி வாழ்க்கையில் வெற்றி பெற்று, உலக ஊனமுற்றோருக்கு ஒரு வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் திகழ்பவர்தான் இந்த நிக்!

தன்னம்பிக்கயின் சின்னம் "நிக் வூஜிசிக்"

தன்னம்பிக்கையின் சின்னம் "நிக் வூஜிசிக்"

“ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனமில்லீங்கோ….உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனமில்லீங்கோ” என்னும் பொற்காலம் திரைப்படத்தில் வரும் பாடற்காட்சியின் வரிகளுக்கு நிகழ்கால உதாரணமாய், எல்லோரின் விழிகளையும் ஆச்சரியத்தில்/வியப்பில் ஆழ்த்தி அவர் செய்யும் பல செயல்கள் காண்போரை சமயங்களில் கண்ணீர் விடவும் செய்துவிடுகிறது! சிறு வயதில் எல்லோரையும் போல, தானும் பள்ளி சென்று படிக்க முடியுமா என்று ஏங்கி அழுததுண்டு எனும் நிக் இன்று கணிதம் மற்றும் பொருளாதாரத் துறையில் ஒரு பட்டதாரி இன்று! எப்படியென்கிறீர்களா?  நிக் வூஜிசிக் பற்றிய ஒரு பதிவு முன்னமே வேர்ட்பிரஸ்ஸில் வந்துவிட்டமையால் அதைப் பற்றி எழுதுவது சரியாக இறாது என்பதால்,  நிக் பற்றி மேலும் பல விபரங்களை அறிந்து கொள்ள திரு நிக் வூஜிசிக் அவர்களின் இணையதளமான  http://www.lifewithoutlimbs.org/ -க்கு செல்லுங்கள்

பின்னெதற்க்கு இப்பதிவு என்று கேட்பீர்களானால், நிக் அவர்களின் ஒரு காணொளியைச் சமீபத்தில் யூ ட்யூப் தளத்தில் காண நேர்ந்தது.அதில் கண்ட காட்சிகள் தொடக்கத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பின்னர் வாழ்வில் எதையும் இழந்தும் வெற்றி பெற முடியும் என்னும் கருத்தை திரு. நிக் அவர்கள் எடுத்துரைக்கக் கண்டு/கேட்டு கண்களில் நீர்பணிப்பதை தவிர்க்க முடியவில்லை! அந்த அரியதொரு காட்சியை உங்களை காணக் கேட்டுக்கொள்ளவே இந்த பதிவு! நிக் அவர்களின் சாகசங்களை நீங்கள் கீழே உள்ள காணொளியில் காணலாம்…..

மேலும் திரு.நிக் வூஜிசிக் அவர்களைப் பற்றி/வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்டத் திரைப்படத்தை  நீங்கள் கீழே காணலாம்…..

பகுதி ஒன்று:

பகுதி இரண்டு:

வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பெயர்,பணம்,புகழ் இப்படி எதுவும் தேவையில்லை.ஆனால் ஒன்று மட்டும் மிக மிக அவசியம், அதுதான் தன்னம்பிக்கை.அது மட்டும் நிரம்ப பெற்றுவிட்டால் எதுவுமே, அதாங்க நிக் போல கை, கால்கள் இல்லாமலேகூட உலகை வலம் வர முடியும்.வெறுமையாக அல்ல, மிகவும் பெருமையாக! அதற்கான நிகழ்கால வாழும் உதாரணத்தைத்தான் நீங்கள் மேலே நிக் வூஜிசிக் என்னும் மனிதனில் கண்டது.நண்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள் நான் பதிவின் தொடக்கத்தில் சொன்னது சரிதானே?

நிக்கிடம் பாடம் கற்போம்…..வாழ்க்கையை செவ்வனே வாழ எத்தனிப்போம்!

Advertisements