வேகமும் விவேகமும் நிறைந்த உலகின் முதல் பந்தயக் கார்

Posted on ஒக்ரோபர் 11, 2009

2


இன்றைய உலகில் எல்லோரும் விரும்புவது “பசுமைப்புரட்சி”.காரணம் என்னவென்றால், இதுவரை சுற்றுச்சூழலை எத்துனை தூரம் மாசுபடுத்த/பாழ்படுத்த முடியுமோ அதையும் தாண்டிச் செய்தாகிவிட்டது. ஆனால், இன்று அத்தகைய செய்கைகளுக்கான பலன்?(பாதிப்புகள்) எல்லாம் அனுபவிக்கும் நிலையில் இருக்கிறோம் என்று உணர்ந்ததும், அனைவரின் இன்றைய நோக்கம் இழந்துவிட்ட பசுமையான உலகினை எப்படி மீட்டெடுப்பது என்பதே!  அதற்காக எந்தெந்த காரணங்களுக்காக உலகின் பசுமை/இயல்புத்தன்மை பாழடிக்கப்பட்டதோ, அந்த காரணங்களை ஆராய்ந்து பின் பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் சவுகரியங்களையும், கேளிக்கைகளையும் அமைத்துக்கொள்ள முயல்கின்றன முன்னேறிய/முன்னேறும் நாடுகள் அனைத்தும்!

சரி உலகின் பசுமையை குலைக்கும் பல காரணங்களுள் ஒன்றுதான் வாகனமும், அதைச்சார்ந்த பல விஷயங்களும்.அதைப்பற்றிய ஒரு செய்திதான் இந்த பதிவு.அதாவது வாகனம் என்றால் அன்றாட போக்குவரத்துக்கு நாம் பயன்படுத்தும் வாகனங்களும், விளையாட்டு சம்பந்தப்பட்ட பந்தய வாகனங்களும் ஆகும்.அன்றாட தேவைக்கான வாகனங்களுக்கும் பந்தய வாகனங்களுக்கும்  சில வித்தியாசங்கள் உண்டு.அதில் மிக முக்கியமானது அதிவேகத்திறன் என்பது.அதாவது பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் கார்களுக்கு அதிவேகத்திறன் என்பது அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.இந்த அதிவேகத்திறனைப் பெற வேண்டி பல எந்திர பாகங்கள் பிரத்தியேகமாக செய்யப்பட்டு பந்தயக் கார்களுள் பயன்படுத்தப்படுகிறது.சரி பதிவுத்தலைப்புக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் இருக்கிறது, அதாவது சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்தவொரு விஷயத்தையும் இன்றைய சமுதாயம் அங்கீகரிப்பதில்லை.ஆனால் வாகனங்களைப் பொறுத்தவரை இன்று இயன்றவரை சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்படும் வாகனங்களையே சமுதாயம் அங்கீகரிக்கிறது.உதாரணமாக, மிக மிகக் குறைந்த அளவு கார்பன் மோனாக்சைடு எனும் நச்சுப்புகையை வெளியேற்றும் எரிவாயு, தாவரங்களில் இருந்து உருவாக்கப்படும் எரிவாயு, மக்கும் தன்மை கொண்ட வாகன பாகங்கள் போன்றவை.இதில் மக்கும் தன்மை கொண்ட பொருள்களால் உருவாக்கப்பட்ட பாகங்களைக் கொண்ட வாகனங்கள் என்பது இன்றைய வாகன உலகின் ஒரு கவர்ச்சி என்றே சொல்லவேண்டும்.

காரணம் அத்தகைய வாகனங்களை பயன்படுத்துவதில் ஒரு பெருமையும், சமுதாயப் பொறுப்புணர்வும் இருக்கிறது என்பதால் உலக வாகன விரும்பிகள் அத்தகைய வாகனங்களை வாங்குவதில் விருப்பம் காட்டுகிறார்கள்.இதன் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அத்தகைய வாகனங்களை தயாரிப்பதில் மிகுந்த பொருள்/ நேரத்தை செலவிடுகிறது! இது பொதுவான போக்குவரத்து வாகனங்களுக்கு சமீபகாலங்களில் ஏற்பட்ட ஒரு வாகனப் பசுமைப்புரட்ச்சி என்று சொல்லலாம்.இந்த மாற்றத்தை பந்தய/விளையாட்டு வாகனங்களிலும் ஏற்படுத்தி வெற்றி பெற முடியுமா என்று ஒரு கேள்வி இருந்து வந்தது.அதாவது பசுமை வாகன விளையாட்டு (Green motor sports) என்று இதை ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

அந்தக் கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது.அந்த சாதனையைச் செய்தவர்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கெர்ரி கிர்வான் அவர்கள்.ஆம், பந்தய வாகனங்களிலும் பசுமைப் புரட்ச்சி செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார் அவர்.இந்த வகை கார்கள் “ஃபார்முலா 3” பந்தயங்களில் பயன்படுத்தக் கூடிய தகுதி கொண்டது என்பதே இதன் விசேஷம்! இத்தகைய பந்தயக்கார்களை முழுக்க முழுக்க சுற்றுச்சூழலை பாதிக்காத, எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருள்களாலேயெ உருவாக்கி இருக்கிறார் கிர்வான்.அதெப்படி சாத்தியம் என்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்.

"உலகின் முதல் சுற்றுச்சூழல் நண்பனான பந்தயக் கார்"

"உலகின் முதல் சுற்றுச்சூழல் நண்பனான பந்தயக் கார்"

இந்த கார், ஃப்லாக்ஸ் எனப்படும் ஒரு தாவரத்தின் பின்னிய நார்கள், சுத்திகரிக்கப்பட்ட கார்பன் ஃபைபர், ரெசின் மற்றும் கேரட்டினால் செய்யப்பட்ட ஸ்டியரிங் சக்கரம் என சுற்றுச்சூழலை பாதிக்காத, எளிதில் மக்கக் கூடிய பொருள்களையே கொண்டு உருவாக்கப்பட்டது.மேலும் இதில் பயன்படுத்தப்படும் வாகன எரிவாயு மிருகங்களின் கொழுப்பு மற்றும் ஒரு வித சாக்லேட்டிலிருந்து உருவாக்கப்பட்டது.அடேங்கப்பா என்று சொல்லத்தோன்றுகிறதல்லவா? இப்போ நீங்க அடுத்து என்ன கேட்க நினைக்கிறீர்கள்….அதெல்லாம் சரி, பந்தயத்துக்கு தேவையான வேகம் என்றுதானே? இந்தக் கார் வெறும் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருள்களாலான, கண்காட்சியில் வைக்க உருவாக்கப்பட்ட கார் அல்ல நண்பர்களே! ஒரு ஃபார்முலா 3 பந்தயத்துக்கு தேவையான,சகல வசதிகளுடன் கூடிய மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, மணிக்கு 135 மைல் வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ஒரு பந்தயக் கார் என்கிறார் கெர்ரி கிர்வான்!

மேலும் இந்தக் கார் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி உலக ஃபார்முலா 3 பந்தயத்தில் சக பந்தயக்கார்களுடன்(சாதாரணமானவை) போட்டியிட்டு பரிசை வெல்லத் தயாராகிவிட்டது! ஆக, இந்தக் கார்  வெறும் சுற்றுச்சூழலின் நண்பன் மட்டுமல்ல.மாறாக, சுற்றுச்சூழலை பாதிக்காத அதே நேரத்தில், ஒரு கவர்ச்சியான தோற்றம் கொண்ட, பல சிறப்பம்சங்களுடன் மணிக்கு 135 மைல் வேகத்தில் பந்தயத்தில் பறக்கக் கூடிய ஒரு அதிவேகக் கார் என்கிறார் கிர்வான்! மேலும் அவர், கார் பந்தயம் என்பது வெறும் கேளிக்கைக்காக மட்டுமே, ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சொல்பவர்களுக்கு , அவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு என்று கண்டிப்பாக நிரூபிக்கும் இந்தக் கார் என்கிறார்.பொறுத்திருந்து பார்ப்போம்!

எது எப்படியோ, சபாஷ் கிர்வான், சரியான (பந்தய) போட்டி (கார்)! வாழ்த்துக்கள்.என்ன நண்பர்களே, இந்தக் காரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் கார் வேகமும், விவேகமும் நிறைந்ததுதானே?

இந்த காரைப்பற்றிய விவரங்களை விஞ்ஞானி கெர்ரியே விளக்குகிறார் கீழே உள்ள காணொளியில்….

Advertisements