மனித இனத்தின் “ஈ அடிச்சான் காபி”

Posted on ஒக்ரோபர் 9, 2009

2


“ஈ அடிச்சான் காபி” என்றவுடன் நாம் பயின்றுவந்த இரண்டாம் வகுப்போ, மூன்றாம் வகுப்போ நம்  நியாபகங்களில் வந்து செல்வதை நம்மில் பலரால் தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.அந்த “ஈ அடிச்சான் காபியை”  நாம் செய்திருந்தாலும் சரி நம் நண்பர்கள் செய்திருந்தாலும் சரி! ஆமாம் இப்பொழுது எதற்க்கு இந்தக்  கதை என்றுதானெ யோசிக்கிறீர்கள்? இந்த நமது (அதாங்க மனிதனின்!) பழக்கத்தில் ஒரு பரிணாமம் சார்ந்த, மனிதனின் கல்வி கற்கும் முறையைச் சார்ந்த முக்கியமான விடயம் ஒன்று ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார் விக்டோரியா எனும் ஒரு பரிணாம ஆய்வாளர்.இதில் வேடிக்கை என்னவென்றால், நாம்தான் (மனித இனம்) தற்போதைய உலகின் தலைசிறந்த உயிரினம், நமக்குத்தான் எல்லாம் தெரியும்/முடியும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர இயற்கையில் அது தலைகீழாக இருக்கிறது!

ஆம் நண்பர்களே, தலைகீழாக என்றால் முற்றிலும் தலைகீழாக, அதாவது அமீபாவில் ஆரம்பித்து என்று எண்ணிவிடவேண்டாம்! தலைகீழாக என்றால் நம் தூரத்துச் சொந்தக்காரர்கள் சிம்பான்சியில் தொடங்கி மனிதன்வரை என்ற அர்த்தத்தில் கூறினேன். சரி, நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவோம்.அதாவது நம்முடைய கல்வி கற்கும் முறையில் அல்லது நமது கற்கும் திறனில் உண்மையாகவே நாம் தலைசிறந்த உயிரினமா என்ற கேள்விக்கு விடைகாண வேண்டி உகாண்டா  நாட்டை நோக்கி தன் ஆய்வுக்காண ஆயத்தங்களுடன் புறப்பட்டார் விக்டோரியா!

முதலில் மனிதர்களின் கற்கும் திறனை சோதிக்க வேண்டி ஜேசிக்கா எனும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையை தன் ஆய்வுக்குட்படுத்துகிறார்.சோதனை இதுதான், அதாவது விக்டோரியா மூன்று அறைகள் கொண்ட ஒரு கருப்புப் பெட்டியை குழந்தைக்கு முன் வைப்பார். பின் அதன் முதல் அறையின் மேலுள்ள ஒரு தாழ்ப்பாளை ஒரு ப்ளாஸ்டிக் கோலைக் கொண்டு நீக்கி,அதற்குப்பின் தென்படும் ஒரு துவாரத்தினுள் மேலிருந்து கீழாக அந்த கோலை செலுத்தி, இரண்டாம் அறையில் உள்ள மற்றுமொரு துவாரத்தை திறப்பார்.இறுதியாக, பெட்டியின் இரண்டாம் அறையில் முன்பக்கமாக உள்ள ஒரு துவாரத்தின் வழியாக அதே கோலைக் செலுத்தினால் ஒரு இனிப்பு மிட்டாய் கோலின் நுனியில் ஒட்டிக்கொண்டு வரும்.

இந்த சோதனையை முதலில் ஜெசிக்காவுக்கு செய்து காண்பிக்கும் விக்டோரியா, பின் ஜெசிக்காவை இதே போன்று செய்யச் சொல்வார்.அப்படிச் செய்தால் மிட்டாய் கிடைக்குமென்பதால் ஜெசிக்காவும் விக்டோரியா செய்த அத்தனை செயலையும் இம்மி பிசகாமல் செய்து முடித்து, பரிசாக ஒரு மிட்டாய் பெற்று கொள்வார்.இத்துடன் மனிதனுக்கான சோதனையின் முதல்  பாகம் முடிந்தது. இதே போன்று செய்முறை விளக்கத்தினை ஒரு சிம்பான்சிக்கு செய்து காண்பிப்பார் விக்டோரியா.ஜெசிக்கா செய்தது போன்றே எல்லாவற்றையும் செய்து பரிசாக மிட்டாய் பெற்றுவிடும் சிம்பான்சியும்! சரி இனி சோதனையின் இரண்டாம் கட்டம்.சற்று கடினமானது!

அதாவது கருப்புப் பெட்டி இருந்த இடத்தில் தற்போது ஒரு வெள்ளைப்பெட்டி இருக்கும்.அந்த வெள்ளைப் பெட்டியானது கண்ணாடிப் போன்று உள்ளிருக்கும் எல்லாம் வெளியில் தெரியும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கும். இதில் விசேஷம்/வில்லங்கம் என்னவென்றால், பெட்டியின் முதல் அறைக்கும் இரண்டாம்  அறைக்கும் எந்த தொடர்பும் இருக்காது.அதாவது இணைப்பு இருக்காது.ஆனால் முந்தைய கருப்புப் பெட்டியில் ஒரு துவாரத்துடன் கூடிய இணைப்பு இருக்கும்! இந்த துவாரத்தில்தான் இருக்கிறது வில்லங்கமே! இம்முறை மூன்று செயல்கள் செய்து மிட்டாயைப் பெற வேண்டிய அவசியம் இறாது. ஏனென்றால், நேரடியாக மூன்றாம் செயலான இரண்டாம் பெட்டியின் துவாரத்தின் வழியாக கோலை முன்னிருந்து பின்னாக செலுத்தினால் மிட்டாய் கிடைத்துவிடும்!

இங்கு சோதனையின் குறிக்கோள் என்னவென்றால், முதலில் சொல்லிகொடுத்தபடியே மூன்று செயல்களையும் செய்து மிட்டாய் பெறுகிறார்களா அல்லது புத்திசாலித்தனமாக யோசித்து முதல் இரண்டு செயல்களைத் தவிர்த்து மூன்றாம் செயலை மட்டுமே செய்து மிட்டாய் பெறுகிறார்களா என்பதே! சரி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? புத்திசாலித்தனமாக யோசித்து வெற்றி பெறப்போவது யாராக இருக்கும்? குழந்தை ஜெசிக்காவா இல்லை சிம்பான்சியா? அதை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் கீழேயுள்ள காணொளியில்….

என்ன நண்பர்களே…..சப்பென்று ஆகிவிட்டதா? ஆம் எனக்குக் கூடத்தான்! இதில் கொடுமை என்னவென்றால் ஜெசிக்கா மட்டுமல்லாமல், சோதனைக்குட்படுத்தப்பட்ட எல்லா குழந்தைகளுமே “ஈ அடிச்சான் காப்பி” தான் அடிக்கிறார்கள்.ஆனால் தலைவர் சிம்பான்சி மட்டும் கலக்கலாக யோசித்து பின் சகலகலா வல்லவனாய் மிட்டாயை தட்டிச்செல்கிறார்! என்ன கொடுமை சரவணன் இது? என்ன செய்வது, கொஞ்சம் அவமானமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை! இதுதான் மனிதனின் கல்வி/கற்கும் முறை என்கிறார் பரிணாம ஆய்வாளர் விக்டோரியா அடிக்காத குறையாக!

சரி விடுங்க……அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! வேறு வழியில்லை, இனி இப்படித்தான் கவுண்டமணியின்  நகைச்சுவை எண்ணி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது!

மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு அறிவியல் பதிவில்!

Advertisements