பில் கேட்ஸின் மருமகனின் கதை….

Posted on ஒக்ரோபர் 7, 2009

8


வலைப்பதிவின் வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.வேலைப்பளுவின் காரணமாக ஐந்தாரு நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை! சிறிது ஓய்வு கிடைத்தபின், சரி என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில்….அழகான இந்தக் கருத்து கண்ணில்பட்டது. அதை ஒரு உரையாடலாக இங்கே எழுதுகிறேன்.

அப்பா தன் மகனிடம் சொல்கிறார்….

அப்பா: மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்

மகன்: இல்லை அப்பா, நான் மணக்கப்போகும் பெண்ணை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்.

அப்பா: சரி, ஆனால் நான் உனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் பெண் “பில் கேட்ஸின் மகள்”!

மகன்: ஓ…அப்படியா? சரி, நான் அவளையே திருமணம் செய்துகொள்கிறேன் அப்பா.

அடுத்த நாள், அந்த தந்தை பில் கேட்ஸை சந்திக்கச் செல்கிறார். அவர் பில்கேட்ஸிடம் ….

அப்பா: என்னிடம் உங்கள் மகளுக்கு ஏற்ற ஒரு கணவன் இருக்கிறார்

பில் கேட்ஸ்: ஆனால் என் மகளுக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை.

அப்பா: அந்தக் கணவன் யார் தெரியுமா? அவர்தான் உலக வங்கியின் துணை ஜனாதிபதி

பில் கேட்ஸ்: ஓ அப்படியா? சரி, உங்கள் மகனுக்கு என் மகளை மணம் முடிக்க எனக்குச் சம்மதம்

இறுதியாக அந்தத் தந்தை உலக வங்கியின் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்கிறார்….

அப்பா: எனக்குத் தெரிந்த ஒரு வாலிபனை உலக வங்கியின் துணை ஜனாதிபதியாக பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

ஜனாதிபதி: மன்னிக்கனும்.ஏற்கனவே எனக்கு தேவைக்கு அதிகமான துணை ஜனாதிபதிகள் இருக்கிறார்கள்.

அப்பா: ஆனால், நான் கூறிய அந்த வாலிபன் வேறு யாருமல்ல, பில் கேட்ஸின் மருமகன்தான்!

ஜனாதிபதி: ஓ அப்படியா? சரி அவரையே துணை ஜனாதிபதியாக நியமித்து விடுகிறேன்.

இப்படிதாங்க உலக வர்த்தகமே நடக்கிறது! அப்படின்னு நான் சொல்லலீங்க…. நான் படிச்ச இந்த செய்தி சொல்லுது.எது எப்படியான நமக்கென்ன? நமக்குத் தேவை இந்த கதையிலிருந்து வாழ்க்கைக்கு தேவையான கருத்து என்ன? அப்படின்னு நீங்க கேட்கறீங்கன்னு புரியுது.இதோ அந்தக் கருத்து…..

உங்களிடம் ஒன்றுமே இல்லையென்றபோதிலும் உங்களால், இந்த உலகில் நீங்கள் விரும்பும் எதைவேண்டுமானாலும் அடைய முடியும். தன்னம்பிக்கையும், சரியான அணுகுமுறையும் இருந்தால் மட்டும் போதும்!

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!

Advertisements