ஒழுகினசேரியிலிருந்து ஒரு ஒப்பற்ற கலைஞன்……

Posted on செப்ரெம்பர் 20, 2009

0


நகைச்சுவை என்றாலே சிரிக்க மட்டுமே என்று எண்ணிக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை ஏன் தமிழ் மக்களையே தன்  நாவன்மையாலும், நடிப்புத்திறனாலும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன். நம் எல்லோருக்கும் தெரிந்த பெயர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். ஆனால் நம்மில் பலருக்கு தெரிந்திறாத ஒரு பெயர் விளக்கம் உண்டு, அது என்ன தெரியுமா உங்களுக்கு? அது வேறொன்றுமில்லை, கலைவாணர் அவர்களின் என்.எஸ் என்பதன் முழுமையான விளக்கம் தான்!

என்.எஸ்.கே என்பவர் யார்?

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.)! கலைவாணர் அவர்கள் பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908, நவம்பர்  29-ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.நம்மை எல்லாம் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த என்.எஸ்.கே அவர்களின் இளமை பருவம் பெரும்பாலும் கடின உழைப்புமாய், உழைத்த நேரம் போக பின்பு அவர் விரும்பிய நாடகமுமாய்தான் கழிந்தது.

கலைவாணர் திரு.என்.எஸ்.கே.அவர்களின் ஆரம்ப நாட்கள் மிகவும் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலையில் தொடங்கி பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வது பின், மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பது என உடலுழைப்பில் பொழுது கழிந்தாலும், கலையுணர்வு மிகுந்த கிருஷ்ணன் அவர்களை நாடகம் என்னும் நடிப்புக்கலை அவரை மிகவும் ஈர்த்தது!

கலைவாணரின் முதல் கலைப்பயணம்….

குறிப்பறிந்து செயல்படும் தந்தையின் மகனாகப் பிறந்தவர் கலைவாணர் என்பதால், மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். கலைவாணர் என்னும் சிந்தனைச்சிற்பியான சிறுவனின் நாடக (கலை)வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது. நடிப்புத்திறனையும், சிந்தனைத்திறனையும் ஒருங்கே பெற்றவர் கலைவாணர் என்பது அவரின் நாடகங்களின் வாயிலாக நிரூபனமானது! விளைவு…..

கலைவாணர் அவர்களின் நாடக வாழ்க்கை தொடங்கிய பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து, டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபை,பிறகு அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை,  என ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்தது. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருந்தது.தான் போட்ட ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன்.உலகம் தன் உண்மை சுபாவத்தை காட்டத் தொடங்குகிறது.பலன்…..

இந்த உலகத்தில் ஒரு உயரத்தை அடைய பல துயரத்தை தாண்டித்தான் செல்ல வேண்டும் என்பதை கலவாணர் அவர்கள் மெல்ல உணர ஆரம்பிக்கிறார்.ஆம், ஒப்பந்தத்தை மீறி நாடக சபை மாறியதால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். இதை சற்றும் எதிர்ப்பார்த்திராத கலைவாணர், ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது!

பிறகு என்ன நடந்தது என்று அறிய காத்திருங்கள்…….,

கலைவாணரின் கலைப்பயணம் மீண்டும் தொடரும்……

Advertisements