உயிரியல் கடிகாரமும் உடல் பருமனும்…..

Posted on செப்ரெம்பர் 10, 2009

0


நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு மூலையில் “வாரணம் ஆயிரம்” சூரியா மாதிரி கட்டுமஸ்தான தேகமும், பொலிவும் கிடைக்காதா அப்படியென்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு சூரியா என்ன செய்தார்? வேறு ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை,தான் விரும்பி உண்ணும் கோழி இறைச்சி, மற்றும் அன்றாடம் நாம் உண்ணும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு வருடம் தவிர்த்தார்.

முடியுமா நம்மால்? முடியும், ஆனால் மிக மிக கடினம்!

அதைக்கூட விட்டுவிடுங்கள், நம்மில் பலருக்கு மிக மிக குறைந்த பட்ச ஆசையான “தொப்பை இன்றி ஒரு வாழ்க்கை” என்ற இலக்கை கூட சமீப காலங்களில் எட்ட முடியாமல் போவதை பார்க்க முடிகிறது.இதற்க்கு பல்வேறு காரணங்கள், வேலை நேரம், போதிய நேரமின்மை, உணவு விடுதிகளில் உணவு உண்பது, வேலை பளு,தவறான நேரங்களில் உணவு உண்பது, என இன்னும் பல!

இவற்றுள் பல காரணங்கள் நம்மால் தவிர்க்க முடியாமல் போனாலும் சிலவற்றை கண்டிப்பாக தவிர்க்கலாம். மேற்கூறிய காரணங்களுள் எதை சரி செய்தால் உடல் பருமன், தொப்பை போன்ற அசவுகரியங்களை தவிர்க்கலாம்? தெரியுமா உங்களுக்கு? இதைத்தான் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. வாருங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

அதாவது அமெரிக்காவில் இன்று கிட்டத்தட்ட 10 கோடி பேருக்குமேல் உடல் பருமன்  நோய்க்கு(obesity) உட்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் உலகில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் உடல் பருமனால் துன்பப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து அறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.

ஆராய்ச்சியின் தொடக்கமாக எலிகளின் மேல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது தெளிவுபடுத்தும் ஒரு உண்மை என்னவென்றால், தவறான நேரங்களில் உணவு உண்ணும் பழக்கமே என்பதுதான்! அதாவது நம்ம ஊரில் குறிப்பிடுவது போல நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது. இதற்க்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நள்ளிரவு நேரத்தில், அதாவது உடல் உறக்கத்தை எதிர்ப்பார்க்கும்/விரும்பும் நேரத்தில் உணவு உண்பதே ஆகும். ஏனென்றால், நம் உடல் செயல்பாடுகள் ஒரு உயிரியல் கடிகாரத்தைப்(circadian clock/rhythms) பொருத்தே அமைகிறது என்பதால்தான். மேலும், உணவு உண்ணும் நேரத்தையும், உடல் எடையேற்றத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது!

இரவு நேர உணவும் உபாதையும்

ஒரு மனிதன் ஏன் அல்லது எப்படி தன் உடல் எடை ஏறக்காரணமாகிறான் என்பது சற்று சிக்கலான/புரியாத  ஒரு பிரச்சனைதான் என்றாலும் அதற்க்கு கண்டிப்பாக அவன் உண்ணும் உணவு மட்டுமே காரணம்  என்பது அர்த்தமல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அதாவது நாம் உண்ணும் உணவைப் பொருத்து மட்டுமே அமைவதல்ல உடல் பருமன் நோய். மாறாக, நாம் உண்ணும்  உணவின் அளவு ,நேரம், நமது மனநிலை என பல காரணங்கள் இருப்பினும் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று இந்த உணவு உண்ணும் நேரம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

உயிரியல் கடிகாரமும்(circadian clock) உடல் செயல்பாடுகளும்

உயிரியல் கடிகாரம் என்பது இரவு/பகல் சுழற்ச்சியை ஏற்படுத்தும் சூரிய வெளிச்சத்தை மையமாக கொண்டு இயங்கும் ஒரு உடல் கடிகாரமாகும். இந்த கடிகாரமானது நம் உடல் செயல்பாடுகளை சரி வர செய்ய சூரிய வெளிச்சத்தைப் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. உடல் செயல்பாடுகள் என குறிப்பிடுகையில் நாம் உணவு உட்கொள்ளுதல், உழைத்தல், பின் சக்தி குறைந்து களைப்பில் உறங்குதல் போன்றனவே!  மேற்கூறிய இவை அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் காக்கப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளும், நல்ல வாழ்க்கையும் அமைகிறது.இதற்க்கு இன்றியமையாததாகிறது உயிரியல் கடிகாரத்தின் தடைபடாத இயக்கம்!

800px-Biological_clock_human-773742
உயிரியல் கடிகாரம்

எனவே இங்கு முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால் “நேரத்திட்டமிடுதல்” என்பதே ஆகும்.ஆதாவது, சாப்பிட வேண்டிய  நேரத்தில் சாப்பிடுதல், உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்தல் மற்றும் தூங்க வேண்டிய நேரத்தில் தவறாமல் தூங்குதல் எனலாம்! இவை அனைத்தையும் சரியான நேரத்தில் மேற்கொள்ளும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டோமானால் நமக்கு இந்த உடல் பருமன்/தொப்பை போன்ற அசவுகரியங்கள் ஏற்ப்படாது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

biological_clock 2
நேரத்திட்டமிடலும் அன்றாட செயல்களும்

எனவே சரியான நேரத்திட்டமிடுதலுடன்  நமது அன்றாட வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்வோம்.ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்வை வாழ்வோம்!

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!”

Advertisements