நூறு வருடங்கள் வாழ்வது எப்படி?

Posted on செப்ரெம்பர் 7, 2009

0


நமது உடலின் சீரிய செயல்பாட்டைப் பொருத்தே அமையும் நம் ஆயுட்காலம்! ஆகவே நமது உடலின் ஒவ்வொரு பாகமும் தன் பங்கினை தவறாமல் சரியாகச் செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.என்னதான் நல்லபிள்ளையாக நமது உடல் பாகங்களான இருதயம்,உணவுக்குழல்,நுரையீரல், சிறுநீரகம்(இன்னும் பல) என எல்லாம் தன் செயல்பாட்டினை சரியாகச் செய்தாலும் நமக்கு ஆரோக்கியமான வாழ்வு கிட்டிவிடுவதில்லை.ஏனென்றால், உடலின் பாகங்களின் சரியான செயல்பாட்டிற்கு முட்டுகட்டையாய் குறுக்கே நிற்பது, நாம் வாழும் உலகின் ஏனைய ஜீவராசிகளான நுண்கிருமிகளிலிருந்து பரிணாமத்தில் நமக்கு சற்றே கீழெ இருக்கும் 5 அறிவு படைத்த விலங்குகள் வரை அனைத்து உயிரினங்களுமே, நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகின்றன!

எப்படி என்று சற்று விளக்கமாகப் பார்ப்போம். நாம் இந்த உலகத்தில் என்றுமே தனித்து இயங்குவது என்பது சாத்தியமல்ல என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.ஏனென்றால் நமக்கு தேவையான அன்றாட உணவு, உடை முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் நாம் ஏனைய பிற உயிரினங்களை நம்பித்தான் வாழவேண்டியிருக்கிறது.எனவே நாம் வாழும் இடங்களில் எல்லாம் நம்முடன் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.அத்தகு உயிரினங்களுள், நமக்கு நன்மை செய்யக்கூடியவை, தீமை விளைவிக்கக்கூடியவை என பல வகை உண்டு.இவற்றுள் மிக முக்கியமானவை “மைக்ரோப்ஸ்” எனச் சொல்லக்கூடிய  நுண்ணிய கிருமிகள்தான். இவற்றுள் நமக்கு நன்மை செய்யக்கூடியவையின் அளவை விட தீமை விளைவிக்கக்கூடியவைதான் அதிகம். இவற்றிலிருந்து நம்மை காக்கும் ஒரு பெரிய வேலையைச் செய்வது “நோய் எதிர்ப்பு சக்தி”க்கு காரணமான “இம்மியூன் சிஸ்டம்” தான்.உடலின் இந்த அங்கமானது பல உடல் கூறுகளை உள்ளடக்கியது.அவற்றை கீழே உள்ள படத்தில் நீங்கள் காணலாம்.(ஆங்கில குறியீடுகளுக்கு மன்னிக்க!)

நோய் எதிர்ப்பு சக்தி (இம்மீயூன் சிஸ்டம்)

நோய் எதிர்ப்பு சக்தி (இம்மீயூன் சிஸ்டம்)

இந்த உடல்கூறுகளுள் எல்லாமெ முக்கியமானவைதான் என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையானது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள்தான்.அவை டி செல்,பி செல் இருவகைப் படும்(பார்க்க படம் கீழெ).இவை இரண்டும் மேலும் கிளைத்து பல செல்களாக மாறும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த அணுக்கள்

நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த அணுக்கள்

மேலே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொறு செல்லும்(அணு) வெள்ளை அணுக்களின் வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும் செல்களே! இந்த செல்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முதிர்ச்சி அடைய வேண்டும்.அது எப்படியெனில், பல கிருமிகளை சந்தித்து, அவற்றை கொன்று அழிக்க வேண்டும்.இந்த முதிர்ச்சி அடைய செல்களுக்கு உதவும்/காரணமாயிருக்கும் ஒரு அங்கம்தான் “தைமஸ்” (thymus).

தைமசின் குணாதிசியமும் நமது முதிர்ச்சியும்:

இந்த தைமசானது நாம் முதிர்ச்சி/மூப்படைய மூப்படைய தன் அளவிலிருந்து சிறுக சிறுக குறைந்து கொண்டே வரும் குணம் கொண்டது.ஆகவே இந்த அளவு குறையும் தன்மையானது தைமசின் வேலையை பாதிக்கும்.தைமசின் வேலை பாதிக்கப்படுமாயின் அது நேரடியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.இதன் விளைவாக நாம் நோய்களுக்கு உட்பட்டு நமது உடல் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆயுளை குறைக்கும்.இதனால் விரைவில் நாம் இறக்க நேரிடும்! சரி இதற்க்கும் நூறு வருடம் வாழ்வதற்க்கும் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

தைமசை பாதுகாக்கும் ஆராய்ச்சியும் நீண்ட ஆயுளும்:

தைமசின் அளவு குறைவதை தடுக்க முடியாது என்பதால் அதை எப்படி மேலும் பெரிதாகச் செய்வது என்பதை நோக்கித்தான் இந்த துறையின் ஆராய்ச்சி செல்கிறது.இதற்கான வழிகளுள் ஒன்று “ஸ்டெம் செல்ஸ்” எனச் சொல்லக்கூடிய அழியா வரம் பெற்ற செல்கள்தான்.(இந்த சிறப்பு செல்களைப் பற்றி என் அடுத்த மருத்துவ பதிவில் விளக்குகிறேன்).இந்த செல்கள் நம் உடல் அங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் அடிப்படையானவை.இவைதான் நம் அங்கங்கள் வளர காரணமானவை! எனவே தைமசின் ஸ்டெம் செல்களை நம்மால் வளர்க்க முடியுமானால்(ஆராய்ச்சிக்கூடத்தில்!) அவற்றைக்கொண்டு தைமசை மீண்டும் பழைய அளவிற்க்கு கொண்டு வந்து நம் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.இதற்க்கு நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தாலும் அது சாத்தியமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.இது சாத்தியப்பட்டு விட்டால் பிறகென்ன, நாம் எல்லோரும் கண்டிப்பாக நூறு வருடம் வாழ முடியும்.எனவே இது சாத்தியப்படும் என நாமும் நம்புவோம்!

இந்த துறையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கு செல்லுங்கள்

இந்த துறையப்பற்றிய காணொளிகளைல்க் காண இங்கு செல்லுங்கள்

சரி நண்பர்களே மீண்டும் என் அடுத்த மருத்துவ பதிவில் “ஸ்டெம் செல்களுடன்” உங்களைச் சந்திக்கிறேன்.

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!

Advertisements