ஜப்பானில் அரிசி வியாபாரத்தை காப்பாற்றிய அழகிகள்

Posted on செப்ரெம்பர் 2, 2009

1


எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதன் வியாபாரம் என்று வரும்போது,பொருளின் தரம் மட்டுமே அதன் வியாபார வெற்றியை நிர்னயிப்பதில்லை! ஏனென்றால் வியாபாரம் என்று வந்துவிட்டாலே பொருள் தரமானதாக இருந்தாலும் வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க முடியாவிடில் தோல்வியே கிட்டும்.இது வியாபார உலக நியதி. இங்குதான் வருகிறது வியாபார உத்தியின் இன்றியமையாமை! ஆமாம் அரிசி வியாபாரத்தில் இதுவரை நமக்கு தெரிந்த/பார்த்த/படித்த வியாபார உத்தி என்னவாக இருக்கும்?

எனக்கு தெரிந்த ஒரு சில உத்திகளை நான் இங்கே பட்டியலிடுகிறேன்…..

சுத்தம் செய்த அரிசியை விற்பனை செய்வது

விலையை சற்று குறைப்பது

அரிசியில் உள்ள சில குணாதிசயங்களான வைட்டமின் போன்றவற்றை (ஆராய்ச்சியின் மூலம்) அதிகப்படுத்தி விற்பது…..என சில!

ஆனால் சமீபத்தில் ஜப்பானில் அரிசி வியாபாரத்தை அதிகப்படுத்த என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு?

ஏதேனும் அனுமானமாவது இருக்கிறதா? இருந்தால் கீழே வரும் செய்தியைப் படித்து சரியா/தவறா என்று பார்த்துக்கொள்ளுங்கள்!

ஜப்பானியர்கள் அப்படி ஒன்றும் நூதனமாக எதுவும் செய்துவிடவில்லை.பின்னெப்படி வியாபாரம் சூடு பிடித்தது என்கிறீர்களா? மேலே படித்தால் உங்களுக்கே புரியும். அதாவது, ஜப்பானின் தொஹோகு பகுதியின் மாநிலமான அகிதாதான் இந்த ஆச்சரியம் நிகழ்ந்த இடம்.அகிதாவில் உள்ள “யூகோ” என்னும் சிறு நகரத்தில் முதன்முதலில் இந்த வித்தியாசமான அரிசி வியாபார உத்தி கையாளப்பட்டது.

ஆஓயி நிஷிமாடா என்பவர் ஒரு பிரபல ஓவியக் கலைஞர்.இவர் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இந்த “யூகோ” நகரத்தில் ஒரு ஓவியப் போட்டியில் நீதிபதியாக கலந்துகொள்ள சென்றிருந்தார்.அப்போது அங்கு அவர் கண்ட இயற்கை அழகு காட்சிகள் அவரை பெரிதும் கவர்ந்து விட்டன.அந்த ஓவியப்போட்டியானது அடிப்படையில் அழகான பெண்களை வரைவதற்கான ஒரு போட்டி! இந்த போட்டியின் ஏற்பாட்டாளர் போட்டிக்கு வந்திருந்த புதிய ஓவியக்கலைஞர்களையும் அந்த நகரின் வீடுகள்,கோவில்,மற்றும் திருவிழா போன்ற அழகிய இயற்கை காட்சிகளை வரையக்கேட்டிருந்தார். இந்த போட்டியில் வரையப்பட்ட பெரும்பாலான படங்கள் அந்நகர மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது! இதைக்கண்ட அந்நகரத்தின் மக்களில் ஒருவரான அகிரா சசாக்கிக்கு மட்டும் ஒரு யோசனை தோன்றியது.அது என்னவென்றால், மிகுந்த பிரபலமடையாத அந்நகர பொருள்களான அரிசி, மது, ஸ்டராபெர்ரி போன்றவற்றின் விற்பனையை அதிகரிக்கச் செய்யவும்,பிரபலப்படுத்தவும் ஏன் இந்த ஓவியங்களை பயன்படுத்த கூடாது என்பதுதான் அந்த யோசனை!

பிறகென்ன, அந்த போட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டு, பெருவாரியான மக்களின் வரவேற்ப்பைப் பெற்ற நிஷிமாடாவின் ஒவியமான அழகிய பெண்ணின் ஓவியத்தை அந்த பகுதியின் அரிசியான “அகிதா கோமாச்சி” யின் பைக்களில் அச்சிட்டு விற்பனை செய்ய ஏகமனதான தேர்ந்தெடுத்தார்கள்.என்ன ஆச்சரியம் அவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு மேலான விற்பனையை அந்த உத்தி பெற்றுத்தந்தது.விற்பனை அளவு எவ்வளவு தெரியுமா? மூன்றே மாதத்தில் “40 டன்கள்” அடேங்கப்பா! இப்படித்தான் அவர்களும் ஆச்சரியப்பட்டு போனார்கள்! அந்த அழகிய ஓவியம் தாங்கிய அரிசி பைகள் கீழே…..

nn20090902f2a

ஓவியக் கலைஞர் நிஷிமாடா(பெண்) அகிதா கோமாச்சியுடன்!

அழகிய அகிதா கோமாச்சி அரிசி பை!

அழகிய அகிதா கோமாச்சி அரிசி பை!

reitaisai_rice

நீங்க எல்லோரும் இப்ப என்ன நினைக்கிறீங்க…..இதுக்கெல்லாம் “ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாய்ங்களோனு” தானே? இருந்தாலும் பெருசா ஆச்சரியப்படறதுக்கில்லை! ஹி ஹி!

சரி அரிசி வியாபாரத்தோடு நிறுத்திக்கொண்டார்களா என்றால் இல்லை! அதாவது அரிசி வியாபாரத்தில் இந்த உத்தி பெரும் வெற்றியைக் கண்டதும் உடனே அதே உத்தியை கையாண்டு ஷோச்சு(மது),ஸ்ட்ராபெர்ரி போன்ற பொருள்களின் வியாபாரத்தையும் பெருமளவு உயர்த்தி விட்டார்கள் அந்த நகரத்தின் வியாபாரிகள்! இந்த வெற்றியென்னவோ தொடங்கியது அகிதா மாநிலத்தில் என்றாலும் இன்று அந்த “அகிதா கோமாச்சி” அரிசி ஜப்பானின் மூலை முடுக்கிலெல்லாம் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்கிறது செய்தி! அனேகமாக நான் வசிக்கும் ஹிரோஷிமாவில் கூட கடைகளில் இந்நேரம் வந்திருக்கும் என்  நினைக்கிறேன்.சரிங்க அப்போ நான் கெளம்பறேன்…..எங்கேனு கேக்குறீங்களா? வேறெங்கே…..அகிதா கோமாச்சி அரிசி வாங்கத்தான்! ஆமாம் நீங்க வரல? ஓஹோ இது ஜப்பான்ல மட்டுந்தான்ல.சரி கவலைப்படாதீங்க, சொல்லப்போனா இதே அரிசியை நம்மூருலயும் இன்னும் கொஞ்ச நாள்ல விற்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆமாம் இந்த விஷயத்தில் பலே கெட்டிக்காரர்கள் ஜப்பானியர்கள்!

ம்ம்ம்….. நம்மாளுங்களுக்கு இது புரிஞ்சா அப்புறமென்ன…..நம்ம அரிசி வியாபாரிங்க காட்டுலயும் அடைமழைதான்! சரி மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.வருகைக்கு நன்றி! மீண்டும் வாருங்கள்.

Advertisements