இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:
உடல் ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை ஆறப்போடாதீர்கள். (உதாரணமாக, புகைப்பிடிப்பதை நிறுத்துவது, உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்ச்சி செய்வது போன்றவை). எதையும் நன்றே செய், அதையும் இன்றே செய் என்பதைப்போல, ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை இப்போழுதே செயல்படுத்தத் தொடங்குங்கள்!
தலைப்பைப் படிச்ச உடனே, “ஆஹா…..ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா. திரும்பவுமா…..முடியல” அப்படீன்னு வடிவேலு ரேஞ்சுக்கு முனுமுனுத்திருப்பீங்களே…?! உங்களச் சொல்லி குத்தமில்ல. ஏன்னா, நம்ம ஆளுங்க ஆ….ஊ…ன்னா, ஒன்னுந்தெரியாத சின்ன பசங்கள “அதோ பாரு வெள்ளக் காக்கா”ன்னு சொல்லி ஏமாத்துற கதையா, புரியாத மாதிரியும் (சில சமயம் கொஞ்சம் புரியுறமாதிரியும்?!) எதையாவது ஒரு காரணத்தைச் சொல்லி உலகம் இப்போ அழியப்போகுது….அப்போ அழியப்போகுதுன்னு ஒரே பூச்சாண்டியா காட்டிக்கிட்டு இருந்தாய்ங்க இதுவரைக்கும்!
ஆனா என்ன, தீபாவளிக்கு வாங்கி நமத்துப்போன புஸ்வானம் மாதிரி எதுவுமே நடக்கல! இவிங்க காட்டின பூச்சாண்டிய எல்லாம் நீங்க மறந்துட்டீங்களோ என்னவோ, ஒரு சிலத நான் நல்லாவே நியாபகம் வச்சிருக்கேன். வாங்க முதல்ல அது என்னன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் பதிவுச் செய்திக்குப் போவோம்…..
உலக அழிவு தினப் பட்டியல்களும் காரணங்களும்!
1. ஜனவரி 1, 2000/y2k பிரச்சினை: இந்தப் பிரச்சினைய நான் படிச்சி, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சொல்றேன். கடந்த 1833 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கணினியில, வருடாந்திர தகவல்களை சேமிக்க இரண்டு எண்களை மட்டுமே பயன்படுத்தினார்களாம். அதாவது, 1900 என்பதை “00″என்று குறியிடுவது!
அதனால, 2000 வருடம் வரும்போது அதேமாதிரி 2000-வது ஆண்டையும் “00″ என்று கணினி புரிந்துகொண்டால், 100 வருடங்களாக சேமித்து வைத்த எல்லா தகவல்களும் அழிந்து போய் உலகம் ஸ்தம்பித்து விடும் அப்படீன்னு ஒரு குண்டு போட்டாங்க நிறைய கணினித்துறை விஞ்ஞானிகள்?! அது ஒரு பிரச்சினைதான். ஆனா, உலகம் அழியற அளவுக்கு எல்லாம் பெரிய பிரச்சினை இல்லையாம். கைதேர்ந்த கணினி விஞ்ஞானிகள் ஒன்னா சேர்ந்தா ஓவர் நைட்ல முடிச்சிடக்கூடிய (?) பிரச்சினைதானாம்!
2. ஏப்ரல் 14. 2002/டூம்ஸ் கேட் பிரச்சினை: இந்த கிறிஸ்தவ மத உலகஅழிவுப் புரளிப்படி, 2002 ஆவது வருஷம் ஏப்ரல் 14-ந்தேதி, சரியா 12 மணி ஆக அரை நொடிக்கு முன்னாடி, டூம்ஸ்கேட் அப்படீன்னு ஒரு கதவு திறக்குமாம், அதிலிருந்து ஏசு கிறிஸ்து தோன்றி மறைவாராம். அதுக்கப்புறம் 45 நாள் கழிச்சு, அணு ஆயுதப் போர் உருவாகி உலகம் அழிஞ்சிடுமாம்.
இப்படி இன்னும் நெறைய புரளிகள். 1998-2012-க்குள்ள பல்வேறு காரணங்கள்னால உலகம் அழியப்போகுதுன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு. அதை இங்கே எழுதினா பதிவே மாறிடும். அதனால நீங்க இங்கே போய் படிச்சிக்குங்க!
3. டிசம்பர் 21, 2012/டூம்ஸ்டே-உலக அழிவு: ரொம்பச் சமீபத்துல வந்து, உலகத்தை ரொம்பவே அல்லோலக் கல்லோலப் படவச்ச இந்தப் புரளியைப் பொறுத்தவரைக்கும், மாயன் நாளேடு அப்படீன்னு ஒரு நாளேட்டுல பல வருடங்களுக்கு முன்னாடியே உலகம் அழியப்போறதா குறிப்பு இருக்குறதாகவும், அப்படியே உலகம் அழியப்போறதாகவும் கருத்து நிலவியது. அதுபற்றிய மேலிருப்பானின் பதிவை இங்கே படிங்க
இப்படி இதுவரைக்கும், உலகம் அழியப்போறதா பலப்பல புரளிகள் வந்துகிட்டே இருக்கு. அந்த வரிசையில ஆனா முற்றிலும் யதார்த்தமான, உலக தட்ப வெட்ப, உயிர்களின் வாழ்க்கை-பூமியின் யதார்த்த நிலையைச் சார்ந்த, உலகியல் வாழ்க்கை தரம் சார்ந்த காரணங்களுடன், நாம வாழ்கிற இந்த உலகம், இன்னும் 100 வருடங்களில் மெல்ல மெல்ல அழிந்துபோவதற்க்கான சாத்தியக்கூறுகள் இருக்குன்னு சொல்றாரு உலகின் தலைசிறந்த ஒரு விஞ்ஞானி!
அவரு யாரு, உலகம் அழியப்போறதுக்கான காரணங்களாக அவரு சொல்வது என்னென்ன, அது எந்த அளவுக்கு உண்மை/சாத்தியம் இப்படி பல விஷயங்களை அலசி ஆராயத்தான் இந்தப் பதிவு. வாங்க சும்மா பிரிச்சி மேஞ்சிடுவோம்……
‘சின்னம்மை’யை ஒழித்துக்கட்டிய ‘ஃப்ராங்க் ஃபென்னரும்’ மனிதஇன அழிவும்!
இந்த உலகத்தையும், உலக மக்களையும் 1980 ஆண்டு வரையில் பாடாய்ப்படுத்தி வந்த ஒரு கொடிய நோயான சின்னம்மையை ஒழித்துக்கட்டி, 1980 ஆம் ஆண்டு, உலக சுகாதார மாநாட்டில் “சின்னம்மை இந்த உலகிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்த பெருமை, ஆஸ்திரேலிய நாட்டு விஞ்ஞானி திரு. ஃப்ராங்க் ஃபென்னரையேச் சாரும்!
இத்தகைய ஒரு உலக சாதனையைப் புரிந்த விஞ்ஞானி ஃப்ராங்க் ஃபென்னர் அவர்கள்தான் இன்று இன்னும் 100 வருடங்களில் மனித அழிந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது என்கிறார். அதற்க்கு அவர் கூறும் காரணங்கள்:
- அசுரத்தனமான வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் உலக ஜனத்தொகைப் பெருக்கம்
- மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுவரை சென்றுவிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும்
- மனிதனுக்கு ஒவ்வாத உலக பருவநிலை மாற்றங்கள்
சரி, இன்னும் 100 வருடங்களில் மனித இனம் அழிய என்னென்ன காரணங்கள்னு இப்போ தெரிஞ்சுப்போச்சு. ஆனா, இந்தக் காரணங்கள் எப்படி மனித இனத்தை அழிக்கும்னு தெரியனுமில்லீங்களா? இனிமே அதைத்தான் ஒவ்வொன்னா பார்க்கப்போறோம்….
தற்போது ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் பேராசரியராக இருக்கும் திரு. ஃபென்னர், அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் உலக ஜனத்தொகை, அதற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் உணவு உற்பத்தி, அதன் விளைவாக ஏற்படும் உணவுப்பற்றாக்குறை என எல்லாம் சேர்ந்து, இன்னும் 100 வருடங்களில் மனித இனத்தையும், இன்னி பிற விலங்கு/தாவரங்களையும் அழித்துவிடும் என்கிறார்!
“ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த வருட கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 6.8 பில்லியன் (680 கோடி!) என்றும், அடுத்த வருடம் இது 7 பில்லியனாகிவிடும் (700 கோடியாக) என்றும் தெரியவருகிறது!”
“என்னடா இது, உலகத்தையே பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தொரு கொடிய உயிர்க்கொல்லி நோயான சின்னம்மையை ஒழித்துக்கட்டிய ஒரு தலைசிறந்த விஞ்ஞானியே இப்படிச்சொல்கிறாரே, இது சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற பல இமாலய பிரச்சினைகளை நம்பிக்கையோடு முறியடித்துவிட முயன்றுகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளையும், தன்னார்வலர்களையும் சோர்வடையச் செய்துவிடாதா” அப்படீன்னு யோசிக்கிறீங்களா?
வாஸ்தவம்தான்! ஆனா, திரு. ஃபென்னர் அவர்கள் சொல்றதையும் நாம கவனமா/ஆழமா யோசிச்சுப்பார்த்தோம்னா நமக்கே அவர் சொல்வது நல்லா புரியும். அதாவது, “உலகில் இதுவரை ஏற்பட்டுள்ள ஜனத்தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு இவையெல்லாம் மீண்டும் சரிசெய்ய முடியாத வகையிலான ஒரு பாதிப்பு என்றும், உலகம் தொழில்மயமாக்கல் என்னும் மாற்றத்திற்க்குட்பட்ட Anthropocene என்னும் காலம்முதல் இன்றுவரையிலான சுற்றுச்சூழல் பாதிப்பானது உலகை பெருமளவு பாதித்துவிட்டிருக்கிறது, மேலும் இந்தப் பாதிப்பானது விண்கற்கள் மற்றும் துருவப் பனி உருகுவதால் ஏற்படும் ஆபத்தைவிட அதிகப் பாதிப்புடையது என்றும், The Australian என்னும் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திரு.ஃபென்னர்!
“ஈஸ்டர் தீவு” (Easter Island) எனும் ஒரு எடுத்துக்காட்டு!
அதெல்லாம் சரி, உலகம் இதுவரை சந்தித்துள்ள பாதிப்புகளால் ஏற்படப்போகும் உலக அழிவுக்கு உதாரணமாக ஏதேனும் ஆதாரம் அல்லது கூற்று இருக்கிறதா அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா, “இருக்கிறது” என்பதுதான் பதில் துரதிஷ்டவசமாக! உலக பரும நிலை மாற்றமானது இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. ஆனால், இந்த மாற்றம் நம் மானுட அழிவுக்கும் வித்திடலாம் என்கிறார் ஃபென்னர்! அதற்க்கு உதாரணமாக அவர் குறிப்பிடுவது இப்போது அழிந்துவிட்ட “ஈஸ்டர் தீவு” என்னும் ஒரு பண்டைய தீவும் அதில் வாழ்ந்த மக்களும்!
ஈஸ்டர் தீவு (Easter Island): தற்போது சிலி (Chile) நாட்டு எல்லைக்குள் இருக்கும் ஈஸ்டர் தீவு, ராபா நுயி (Rapa nui) என்று அழைக்கப்படுகிறது! தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் இந்தத் தீவு, மோவாயி (Moai) என்னும் சிலைகளுடன் ஒரு தேசிய பூங்காவாக பாதுகாக்கப்பட்டு வருகிறது!
ஆனால், 1 கி.பி ஆண்டு வாக்கில் இங்கு குடியேறிய மக்கள், மக்கள்தொகை வளர வளர அங்குள்ள காடுகளை அழிக்கவேண்டிவந்தது. அதன் விளைவாக மரவாழ் விலங்குகள் அழிந்துபோயின. பின்பு 1600 கி.பி ஆண்டு வாக்கில், அந்த மக்களின் நாகரிகம் கட்டுடைந்து குலைந்துபோய், 19 நூற்றாண்டு வாக்கில் அந்த தீவு மக்களே அழிந்துபோனார்கள்! விளைவு, தற்போது தேசிய பூங்காவுக்கும், சில நிறுவனங்களின் ஆடு வளர்ப்புக்கும் கூடாரமாகி நிற்க்கிறது ஈஸ்டர் தீவு இன்று!
இந்த ஈஸ்டர் தீவு குறித்த மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியாவின் தகவல்தொகுப்புக்குச் செல்லுங்கள்!
ஆக, இந்த நிகழ்கால உதாரணம் மூலமா ஃபென்னர் என்ன சொல்ல வர்றாருன்னா, ஈஸ்டர் தீவு மக்களுக்கு ஏற்பட்ட கதிதான் உலக மக்களாகிய நமக்கும் என்கிறார்! அதாவது, அதிக மக்கள் என்றால் குறைந்த செல்வங்கள்/வளம் என்று பொருள். குறைந்த வளத்துக்காக (முக்கியமாக உணவு) அதிக மக்கள் போராடும்போது, மக்கள் போர்தான் அதன் விளைவு/முடிவு!
தன்னம்பிக்கயும் முயற்ச்சியும் வெற்றியைத் தரும்!
பரிணாமவியலாளர் திரு. ஜாரிட் டயமண்ட் அவர்களின் கூற்றுப்படி, ஈஸ்டர் தீவு மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளும், தற்போது நம் உலகில் ஏற்படும் விளைவுகளும் ஒன்றுக்கொண்டு பொருத்தமாக இருக்கின்றன என்று தெரியவருகிறது?! திரு.ஃபென்னர் போலவே பல விஞ்ஞானிகள் அவநம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வந்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்பிலிரிந்து இந்த உலகை மீட்டுவிடலாம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்துவரும் பல விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள் நம்மிடையே!
அத்தகைய விஞ்ஞானிகளுள் ஒருவரும், திரு.ஃபென்னர் அவர்களுடன் பணிபுரிந்த சக விஞ்ஞானியுமான ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு.ஸ்டீஃபன் பாய்டன் (Stephen Boyden)! சரியான விழிப்புணர்வும், அதன் விளைவாக ஏற்படும் உலகியல் வாழ்க்கை மாற்றங்களும் சேர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலையை மீண்டும் நிலைநாட்டவல்ல புரட்ச்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று திடமாக தாம் நம்புவதாக கூறுகிறார் திரு.பாய்டன்!
உலகை மீட்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே எனும்போதும், அந்த இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் உழைக்கவேண்டியது மிக மிக அவசியம் என்றும், இம்மாற்றத்தை சாத்த்யமாக்கவல்ல விஞ்ஞான அறிவு இருந்தாலும் அரசியல் நோக்கம் இல்லாததுதான் கவலையளிக்கிறது என்கிறார் விஞ்ஞானி பாய்டன் அவர்கள்.
எங்கே செல்லும் இந்தப் பாதை???
சரி. இப்போ இன்னும் 100 வருடங்கள்ல மனித இனம் அழிவதற்க்கான காரணங்கள், சாத்தியக்கூறுகள், உதாரணங்கள் இப்படி எல்லாத்தையும் விஞ்ஞானிகளின் கூற்றுக்கள் வாயிலாக பார்த்தாச்சு. ஆனா, இந்த மனித இன அழிவை தடுக்க நாம என்ன செய்யனும்னு தெரியனுமில்லீங்களா? ஏன்னா, அப்படித்தெரிஞ்சாத்தானே பொதுமக்களாகிய நாமளும் நம்மைச் சார்ந்தவருக்கு இந்த கருத்துக்களைச் சொல்லி, உலக அழிவை/மனித இன அழிவை தடுக்க நம்மாலாந முயற்ச்சிகளைச் செய்ய முடியும்?!
இன்னும் 100 வருஷத்துல மனித இனம் அழியப்போகுதுன்னு கருத்துத் தெரிவிச்ச விஞ்ஞானி திரு.ஃபென்னர் அதை தடுக்க எதாவது சொல்லுவாருன்னு பார்த்தா அந்தச் செய்தியறிக்கை/நேர்முகத்துல அவரு எதையும் சொன்னதாக தெரியல. அதுக்காக, நாமளும் அப்படியே விட்டுட முடியுமா? கண்டிப்பா முடியாது. ஏன்னா, அப்புறம் இந்தப் பதிவு எழுதினதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிடும்!
அதனால, பருவ நிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை குறைக்க அன்றாட வாழ்க்கையில், நம்மாலான முயற்ச்சிகளைச் செய்ய என்னென்ன செய்யலாம்னு எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சொல்றேன். இது போதலைன்னா உங்களுக்குத் தெரிஞ்ச உத்திகள்/கருத்துகள நீங்க மறுமொழியிலச் சொல்லிட்டுப் போங்க…..
- தேவையே இல்லாமல்/அனாவசியமாக எரிந்துகொண்டிருக்கும் மின்விளக்குகள், மின்சாதனங்கள் எல்லாவற்றையும் (வீடு, அலுவலகம், பொதுவிடங்கள் இப்படி) எங்கே இருந்தாலும் அணைக்க முயற்ச்சி செய்யுங்கள்
- சுற்றுச்சூழலை பாதிக்கும் “ப்ளாஸ்டிக்” பைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள்/குறைக்க முயற்ச்சியுங்கள் (மற்றவர்களையும் நிறுத்தத் தூண்டுங்கள்!)
- தண்ணீரை அனாவசியமாக விரயமாக்காதீர்கள்
- உங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள்
- குழந்தைகளுக்கு உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
- சுற்றுச்சூழலை பாதிக்கும் வாகனங்கள் இல்லாமல் செல்லக்கூடிய இடங்களுக்கு மிதிவண்டியில்/நடந்து சென்று பழகுங்கள்!
- வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மரம் என மரக்கன்றுகள் நட்டு வளர்க்கச் செய்யுங்கள்
- மீதமான உணவை இல்லாத ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுங்கள்
- உலக வெப்பமயமாதலின் பாதிப்புகளை குறைக்கவல்ல ஏதேனும் ஒரு யுக்தியை அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முயற்ச்சியுங்கள்!
- அன்றாட வாழ்க்கையில் மின்சாரப் பயன்பாட்டை இயன்ற அளவு குறைக்க முயலுங்கள்

















தனி காட்டு ராஜா
ஜூலை 27, 2010
விழிபுணர்வு பதிவு ……………அருமை …..
கடைசி பத்து வழி முறை மட்டும் காமடி …….
மரம் வாடி இருந்தால் கிளைக்கு தண்ணீர் தெளிப்பதை விட வேருக்கு ஊற்ற வேண்டும் …………
padmahari
ஜூலை 27, 2010
//மரம் வாடி இருந்தால் கிளைக்கு தண்ணீர் தெளிப்பதை விட வேருக்கு ஊற்ற வேண்டும் …………//
உண்மைதான். ஆனா, இதச்சொன்ன நீங்க “வேருக்கு தண்ணீர் ஊற்றுவது எப்படி”ன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொன்னீங்கன்னா, ஊற்றுவதற்க்கு எனக்கும் நம்ம வாசகர்களுக்கும் சுலபமாக இருக்கும்……
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜா!
யூர்கன் க்ருகியர்
ஜூலை 27, 2010
ஒவ்வொரு பதிவிற்கு பின்னாலும் உங்கள் உழைப்பு மிளிர்கிறது.
padmahari
ஜூலை 27, 2010
மிக்க நன்றி யூர்க்கன்!
Abarajithan
ஜூலை 27, 2010
மேலிருப்பான் சார்,
மனித இனத்துன் அழிவையும், உலகத்தோட அழிவையும் நீங்க போட்டுக் குழப்பிக்கிறீங்கன்னு நினைக்கறேன். நூறு வருசத்துல மனித இனம் அழிஞ்சாலும் உலகம் அழியும்னு எனக்குத் தோணல..
ஏன்னா.. இயற்கைக்கு ஒரு சமநிலை இருக்கு. நாம அதை எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு குலைச்சுகிட்டு வர்றோம்.. அதனால நம்ம அழிவுக்கு அப்புறம் பூமி கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிக்கும். (உதாரணம் ஈஸ்டர் தீவு!)
அதுமட்டுமில்லாம, இருநூறு மில்லியன் வருசத்துக்கு முன்னால, உலகத்தோட கடைசி உயிர்ப் பேரழிவு- டைனோசர்களினதும் மற்ற பெரிய உயிரினங்களின் திடீர் அழிவு நடந்த அப்புறம்கூட பூமி அழியல.. பரிணாமம் விட்ட இடத்துல இருந்து ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கியது. அதனால, மனித இனமும் வேறுசில இனங்களும் காலநிலை மாற்றத்தால் அழிந்தாலும் பூச்சிகள் போன்ற அடிப்படை உயிர்கள் தப்பிவிடும் என்பது என் கருத்து.
அடுத்தது மனித இனத்தோட அழிவைப் பற்றி ஏன் கவலைப்படுறீங்க? நாங்க தப்புப் பண்ணியிருக்கோம், அத திருத்தவும் மாட்டேன்கிறோம்.. அப்புறம் மனித இனம் அழிவதில் அல்லது அழிக்கப்படுவதில் என்ன தப்பு?
தனி காட்டு ராஜா சொன்னது சரின்னுதான் எனக்கு தோணுது. நீங்க சொன்ன பத்து வழிகளும் ஐம்பது வருசத்துக்கு முன்னால செஞ்சிருக்க வேண்டியது. இப்போ மனித இனம் செய்ய வேண்டியது எல்லாம்.. ஐம்பது வருசத்துல மக்கள் தொகையை கால்வாசியா குறைக்கனும். அப்புறம் நிலப்பரப்புல 40 % காடுகள் ஆக்கணும். அவ்வளவுதான்.. அப்புறம் எந்தப் பிரச்சினையும் வராது.
ஆனா இந்த வழிமுறைகள் வேலைக்காகாது. மனித மக்கள் தொகைய குறைக்கிறது, வளர்முக நாடுகள் இருக்கறவரைக்கும் நினைச்சுப் பாக்க முடியாதது. காடு வளர்க்கிறது வளர்ந்த நாடுகள் இருக்கறவரைக்கும் நடக்காது.. ஸோ.. முதல்ல அரசாங்கங்கள் அழியவேண்டும்.. குடும்பக்கட்டுப்பாடு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும்.. இதுக்கப்புறம் பாக்கலாம் உலகம் அளியுதா இல்லையான்னு…
padmahari
ஜூலை 28, 2010
அபராஜிதன்,
//மனித இனத்துன் அழிவையும், உலகத்தோட அழிவையும் நீங்க போட்டுக் குழப்பிக்கிறீங்கன்னு நினைக்கறேன்.//
கண்டிப்பா இல்ல! உண்மையில குழப்பிக்கிட்டதும், (உலகத்தை) தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கிறதும் நீங்கதான்னு நான் (மட்டும்) நெனக்கல, நம்ம விக்கிப்பீடியாவும்தான்! ஏன்னா, உலகம் அப்படீங்கிற சொல்லாடலே மனித நாகரீகம், மனித வரலாறு, மனித அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று என்கிறது விக்கிப்பீடியா! இந்தப் பதிவை எழுதும்போதும் (எப்போதும்) உலகம் பற்றிய என் புரிதலும் அதுவே! உலகம் அப்படீங்கிறதுல மனிதன் அப்படீங்கிறத எடுத்துட்டீங்கன்னா மிஞ்சுறது பூமி, வானம், காற்று, வின்வெளி (பிரபஞ்சம்) இதெல்லாம் தான்! இதெல்லாம் மனுசனுக்கு முன்னாடியும் இருந்தது, இப்பவும் இருக்கிறது, எப்பவுமே இருக்கும்! ஆக, மனுஷன் இருந்தாதான் அதுக்குப்பேரு உலகம்!! விரிவான விளக்கத்துக்கு விக்கிப்பீடியா சுட்டி கீழே…..
http://en.wikipedia.org/wiki/World
//அடுத்தது மனித இனத்தோட அழிவைப் பற்றி ஏன் கவலைப்படுறீங்க? நாங்க தப்புப் பண்ணியிருக்கோம், அத திருத்தவும் மாட்டேன்கிறோம்.. அப்புறம் மனித இனம் அழிவதில் அல்லது அழிக்கப்படுவதில் என்ன தப்பு? //
இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கப் போறீங்க? நீங்க எல்லாம் மாறவே மாட்டீங்களா? நீங்களும் (நாமளும்) உங்க முன்னோர்களும் செஞ்ச தப்புக்கு ஒரு (மனுசனுக்கு புள்ளையா பொறக்கிறத தவிர) பாவமும் அறியாத வருங்கால சந்ததியையும் ஏன் அழிக்கத் துடிக்கிறீங்க! நீங்க அனுபவிச்ச அதே கொடுமைகளும் இல்லல்ல அதைவிட பல மடங்கு கொடுமைகளை உங்க சந்ததியும் அனுபவிக்கனும்னு நீங்க நெனக்கிறது எந்த விதத்துல நியாயம்னு சொல்லுங்க? இது பாவம் தயவு செஞ்சு இனிமேலாவது இப்படி நெனக்காதீங்க. நம்ம செயல்கள் எல்லாம் எண்ணங்களின் வடிவமே.
அதனால, “தப்பு பண்ணிட்டோம் இனி என்ன செய்ய…..அனுபவிச்சுட்டு சாக வேண்டியதுதான்”னு நீங்க நெனக்கிறீங்க. நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா, தண்டனையா, தப்பே செய்யாத ஆனா நான் செஞ்ச தப்புக்கு தண்டனைய அனுபவிக்கிற, என்னுடைய சக மனிதர்களுக்கும், வரப்போற அடுத்த தலைமுறைக்கும் இந்த உலகத்த ஓரளவுக்காவது மாத்தலாம்னு நம்பிக்கை தெரிவிக்கிறேன். ஆனா அது உங்களுக்கும், தனி காட்டு ராஜாவுக்கும் நக்கலா, நையாண்டியா, காமடியா தெரியுதுன்னா…..அது என் பிரச்சினையில்ல! இப்படி நான் செய்யறத காமடியா நெனக்கிறவங்க அப்படியே நெனக்கட்டும், மாற முயற்ச்சிப்போம்னு நெனக்கிறவங்க மாறட்டும். நான் தொடர்ந்து செஞ்சிக்கிட்டேதான் இருப்பேன்!
அப்புறம் தனிக்காட்டுராஜா அப்படீன்னு பேர்லேயே இந்த உலகத்தைப் பத்தியும், சக மனிதர்களைப் பத்தியும் பெசுசா அலட்டிக்காத தன்னோட இயல்பை வெளிப்படுத்தறவுங்க மறுமொழிக்கெல்லாம் நான் பெருசா அலட்டிக்கிறதுல்ல! சொல்றது எல்லாருக்கும் சுலபம், ஆனா செயல்ல காமிக்கிறது என்னையும் சேர்த்து எல்லாருக்குமே கடினம்! இந்தப் பதிவு மூலமா நாலு பேரு மாறினாலே அது என்னோட வெற்றிதான்!
நம்பிக்கைதான் வாழ்க்கை! அதனாலதான் இந்த உலகத்துல நாம இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கோம். தனிமனித ஒழுக்கம் ஏற்பட்டாதான் ஒரு சமூகம் மாறும், சமூகம் மாறினா நாடு, அப்பறம் உலகம்! அதுக்கு ஒரு அழகான உதாரணம் இந்தியாவின் சொர்க்கம் “மாவ்லின்னாங்” அப்படீங்கிற ஊரும், அந்த மக்களும். தயவு செஞ்சு நீங்களும், தனிக்காட்டுராஜாவும் இந்தப் பதிவோட தொடர்புடைய பதிவுகள்ல முதல்ல இருக்குற மாவ்லின்னாங் கிராமம் பத்தி படிச்சிட்டு வந்து அப்புறமா என்னோட இந்தப் பதிவை நக்கல் நையாண்டி எல்லாம் செஞ்சு, உங்க தரப்பு வாதத்தை முன்வைக்கலாம். விவாதிக்க நான் தயார்! நீங்க தயாரா……???
தணிகாசலம்
ஜூலை 28, 2010
சபாஷ்ங்க ஹரி! ஃபென்னர் இப்போது ஏதும் சொல்லவில்லைன்னாலும் இனிமேல் ஏதாவது சொல்வாரோ என்னவோ தெரியலே. ஆனா நீங்க மனிதநேயத்தோட, அந்த மூன்று பாதிப்புகளிலிருந்து நாம நம்ம மனித இனத்த எப்படி பாதுகாக்கலாம்னு ஒரு பத்துக்கட்டளை, ஆங்! வேணாம்பா. பத்து பரிந்துரைகள்(அப்பிடின்னே சொல்லிப்புடுறேன்) கொடுத்திருக்கிறீங்க. அதுக்காக மீண்டும் சபாஷ். நம்மால முடிஞ்சத நாம செய்வோமே அப்பிடின்னு ஒவ்வொரு தனி மனிதனும் நடவடிக்கையில இறங்கினா மாற்றம் வரும் என்று நம்பிக்கையோட முயற்சி செய்வோமே. ஸ்டீஃபன் நம்பிக்கைபடி ஏதாவது நடக்காமலா போய்டும்.
padmahari
ஜூலை 28, 2010
ஊக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க.
//ஃபென்னர் இப்போது ஏதும் சொல்லவில்லைன்னாலும் இனிமேல் ஏதாவது சொல்வாரோ என்னவோ தெரியலே//
அவரைக் குறை சொல்கிற தகுதி எனக்கு இல்ல. ஆனா, மனித இனம் அழியப்போகுதுன்னு அழுத்தம் திருத்தமா சொன்னவரு, சின்னம்மையை ஒழித்துக்கட்டிய நம்பிக்கையூட்டும் விஞ்ஞானியா மனித இன அழிவைத் தடுக்க என்ன செய்யனும்னு சொல்லலையேங்கிற என்னோட ஆதங்கத்தை தெரியப்படுத்தவே அப்படி எழுதினேன்! மத்தபடி அவரு மலை நான் மடு கூட இல்ல!
உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள். மாவ்லின்னாங் அப்படீங்கிற கிராமத்தைப் பத்தின என்னோட பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்களேன். இந்தப் பதிவோட தொடர்புடைய பதிவுகள்ல இருக்கு அதுக்கான சுட்டி! நன்றி.
kathir
ஜூலை 28, 2010
பிறப்பு சதவிகிதத்தை குறைக்கணும்
இறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கணும்
மனித அழிவு உலக அழிவுகளில் இருந்து காப்பாற்ற இதுவே சரியான முடிவு
padmahari
ஜூலை 30, 2010
பிறப்பு சதவிகிதத்தைக் குறைக்கனும்….முற்றிலும் சரி! ஆனா, இறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கணும்…..இது எப்படி?
முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள். மீண்டும் சந்திப்போம்!
தணிகாசலம்
ஜூலை 28, 2010
)அந்தப் பதிவ பார்த்தேங்க ஹரி. அப்படியே மலைத்துப் போய்விட்டேன்.
தமிழ்நாட்டைப் பார்த்த கண்களால் ( அண்மைய வருகையில்) இப்படி ஒரு கிராமத்தை இந்தியாவில் பார்க்க முடியுமா என்பதை நம்புவதற்கு ஊகும் எனக்கு தைரியம் வரமாட்டேங்கிறது. அந்தப் பதிவிற்கு அங்கேயே மறுமொழி பதிந்துள்ளேன்.
மிக்க நன்றி.
padmahari
ஜூலை 30, 2010
உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றிங்க!
saintthomasfables
ஜூலை 28, 2010
உலகம் நம் வாழ்நாளில் அழியும் என இயேசு சொன்னதாக பைபிள் கதைவிட பல சர்ச்கள் உலக அழிவு என தீர்க்க தரிசனம் சொன்னவை
http://saintthomasfables.wordpress.com/2010/07/28/world-ended/
padmahari
ஜூலை 30, 2010
வாங்க நபி சாலமன்,
அருமையான, நீண்ட ஒரு பதிவுச் சுட்டி! பகிர்வுக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி. உங்க ஆதரவு தொடரட்டும். மீண்டும் சந்திப்போம்!
Abarajithan
ஜூலை 28, 2010
ஹரி சார்,
உலக அழிவுன்னு நீங்க சொன்னது சரிதான். நான்தான் பூமி அழிவுன்னு தப்பா புரிஞ்சுகிட்டேன். மன்னிச்சிடுங்க..
உங்க கிராமம் கட்டுரையை வாசித்தேன். நல்ல முயற்சி. ஆனால் இந்த முறை பெரிய அளவில் சரிப்படாது. அந்த கிராமத்து தலைவர் சுயநலமற்றவர். கிராமத்தில் அக்கறை உள்ளவர். ஆனால் நமது நாட்டுத் தலைவர்கள் அப்படியா? மன்மோகன் சிங்கும் ராஜபக்ஷவும் கிராமத் தலைவர் மாதிரி செயற்படுவாங்களா? அப்படி செயற்பட்டா அவங்க சுருட்டற எத்தன கோடி நாசமாகும்? அவங்களோட வாழ்க்கை இலட்சியத்துல மண் விழுந்துடாதா? அப்படியே செஞ்சாலும், அவங்களுக்குக் கீழ இருக்கற மந்திரி சபை ஒத்துக்குவாங்களா? இல்ல, அப்படி நெனைக்கற தலைவரைத்தான் நாங்க தேர்ந்தேடுப்போமா? சொல்லுங்க?
//இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கப் போறீங்க? நீங்க எல்லாம் மாறவே மாட்டீங்களா? நீங்களும் (நாமளும்) உங்க முன்னோர்களும் செஞ்ச தப்புக்கு ஒரு (மனுசனுக்கு புள்ளையா பொறக்கிறத தவிர) பாவமும் அறியாத வருங்கால சந்ததியையும் ஏன் அழிக்கத் துடிக்கிறீங்க! நீங்க அனுபவிச்ச அதே கொடுமைகளும் இல்லல்ல அதைவிட பல மடங்கு கொடுமைகளை உங்க சந்ததியும் அனுபவிக்கனும்னு நீங்க நெனக்கிறது எந்த விதத்துல நியாயம்னு சொல்லுங்க? //
உண்மைதான், தொடர்ந்து தப்புப் பண்ணிட்டிருக்கர மனித இனம் அழிவது சரிதான் அப்பிடின்னுதான் நான் அந்த கமெண்ட்ல சொல்லியிருக்கேன். கடைசிப் பத்திய வாசிங்க. உண்மையிலேயே நம்ம சுயநலத்தை தள்ளி வச்சுட்டு, எங்க வருங்கால சந்ததிகளை காப்பாத்தனும்னா அதுல சொல்லியிருக்கறமாதிரி செய்வோம்.. முடியுமா?
அடுத்தது, நாங்க செய்யுற தப்பால வருங்கால சந்ததி கஷ்டப்படுரத நீங்க பாக்க விரும்பல. ஆனா மனுஷனுக்குப் புள்ளையா பிறக்கற தப்பக் கூட செய்யாத அப்பாவி மிருக இனங்கள் அழிவதைப் பற்றி நீங்க இவ்வளவு கோவப்பட்டதா தெரியலையே? ஆறு தசம் எட்டு பில்லியன் மக்கள்தொகை கொண்ட மனித இனத்தில் ஒருத்தன கொன்னா மரணதண்டனை அல்லது இருபது வருஷம் ஜெயில். ஆனா வெறும் நூத்துக்கணக்குல இருக்கற வெள்ளைக் காண்டாமிருகத்தைக் கொன்னவனுக்கு ரெண்டாயிரம் டாலர் அபராதம் அல்லது ரெண்டு வருஷம் ஜெயில். இவ்வளவு சுயநலம் பிடிச்ச மனித இனத்துக்கு நீங்க சப்போர்ட் பண்ணுறீங்க…
அடுத்தது நான் உங்க பத்து வழிமுறைகளை கிண்டல் பண்ணல. சூழல்ங்க்கிற மரம் வாடிடிச்சு.. கிளைக்குத் தண்ணி ஊத்தனும்னா அத நாப்பது வருசத்துக்கு முன்னால செஞ்சிருக்கணும். இனிமேல் செய்யக்கூடியது நானும் கதிரும் சொன்னது மட்டும்தான். இனிமேல் மக்கள்தொகையைக் குறைக்காமல் நீங்க சொன்னத செய்யுறது எந்தப் பலனும் தராது. எனவே மக்கள்தொகையை குறைப்போம், தேசத்தைக் காப்போம்.
padmahari
ஜூலை 30, 2010
//அடுத்தது, நாங்க செய்யுற தப்பால வருங்கால சந்ததி கஷ்டப்படுரத நீங்க பாக்க விரும்பல. ஆனா மனுஷனுக்குப் புள்ளையா பிறக்கற தப்பக் கூட செய்யாத அப்பாவி மிருக இனங்கள் அழிவதைப் பற்றி நீங்க இவ்வளவு கோவப்பட்டதா தெரியலையே? ஆறு தசம் எட்டு பில்லியன் மக்கள்தொகை கொண்ட மனித இனத்தில் ஒருத்தன கொன்னா மரணதண்டனை அல்லது இருபது வருஷம் ஜெயில். ஆனா வெறும் நூத்துக்கணக்குல இருக்கற வெள்ளைக் காண்டாமிருகத்தைக் கொன்னவனுக்கு ரெண்டாயிரம் டாலர் அபராதம் அல்லது ரெண்டு வருஷம் ஜெயில். இவ்வளவு சுயநலம் பிடிச்ச மனித இனத்துக்கு நீங்க சப்போர்ட் பண்ணுறீங்க…//
நீங்க சொல்றதுல இருக்குற கசப்பான உண்மையை நான் மறுக்கவும் இல்ல, அந்த மாதிரியான மனிதர்களுக்கு சப்போர்ட்டும் செய்யல. அவங்க இந்த உலகம் முழுக்க பரவி இருக்காங்களே தவிர அவங்க மட்டுமே மனித இனம்/உலகம் இல்லீங்க!
//சூழல்ங்க்கிற மரம் வாடிடிச்சு.. கிளைக்குத் தண்ணி ஊத்தனும்னா அத நாப்பது வருசத்துக்கு முன்னால செஞ்சிருக்கணும். //
ஏங்க மரத்தோட கணிசமான பகுதி வாடியிருக்கிறது உண்மைதான். அதுக்காக மொத்த மரமும் போனா போகட்டும்னு விடுவது எப்படி சரியாகும்? இது அவநம்பிக்கையான போக்கையும், அலட்சியத்தன்மையையும் தானே காட்டுது?! பட்டுப்போன மரத்துக்கும் வாடி இருக்குற மரத்துக்குமான வித்தியாசம்தன் இங்கே முக்கியம். உங்க கூற்றுப்படி பட்டுப்போன ஒரு மரத்துக்கு என்ன செஞ்சாலும் பயனில்லைன்னு சொல்றதுமாதிரிதான் இருக்கு உங்க உலக அழிவு சம்பந்தப்பட்ட பார்வை! என்னோட நம்பிக்கைப்படி சிறுதுளி பெருவெள்ளமாய் பலப் பல மாவ்லின்னாங் கிராமங்கள் உருவாக வாய்ப்பிருக்கு. ஆனா, அதுக்கான ஆயத்தமும், விழிப்புணர்வும் நம்ம் மக்களுக்கு கொண்டுவர்றது மிக மிக கடினமே!
//எனவே மக்கள்தொகையை குறைப்போம், தேசத்தைக் காப்போம்.//
மக்கள் தொகையைக் குறைக்கனும்ங்கிறது பதிவு முழுக்க வர்ற கருத்துக்கள்ல வெளிப்படையாவே உணர்த்தப்படுற ஒரு விஷயமா இருந்ததுனால, 10 உத்திகள்ல ஒன்னா அதை சேர்க்கல. ஆனா, மக்கள் தொகையைக் குறைக்காம எதுவுமே நடக்காதுங்கிறது உண்மை! ஏன்னா, உலக அழிவுக்கு அடிப்படையே மக்கள்தொகை பெருக்கம்தான்!
நல்லதொரு விவாதத்துக்கு நன்றி. மத்தபடி, மன்னிப்புகேட்கிற அளவுக்கெல்லாம் நீங்க எந்தத் தவறும் செய்யல அபராஜிதன். உங்க ஆதரவு, விவாதங்கள் இனியும் தொடரட்டும் மேலிருப்பானில்! மீண்டும் சந்திப்போம்!
Abarajithan
ஜூலை 30, 2010
//ஏங்க மரத்தோட கணிசமான பகுதி வாடியிருக்கிறது உண்மைதான். அதுக்காக மொத்த மரமும் போனா போகட்டும்னு விடுவது எப்படி சரியாகும்?//
நான் மரத்த அப்படியே விடச் சொல்லலியே சார். மக்கள்தொகையை குறைக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. ஏன் 98% முடியாதுன்னே சொல்லலாம். அப்படிக் குறைக்க முடிஞ்சா மீதி ‘எல்லாம்’ தன்னால மாறிடும். நாங்க கவலைப்பட வேண்டியதில்ல..
//நல்லதொரு விவாதத்துக்கு நன்றி. மத்தபடி, மன்னிப்புகேட்கிற அளவுக்கெல்லாம் நீங்க எந்தத் தவறும் செய்யல அபராஜிதன். உங்க ஆதரவு, விவாதங்கள் இனியும் தொடரட்டும் மேலிருப்பானில்! மீண்டும் சந்திப்போம்!//
என்னுடைய கருத்துக்களுக்கும் மதிப்பளித்து பதிலளித்த உங்களுக்கும் ரொம்ப நன்றி. இணையத்துல என்னோட தொழிலே விவாதம்தான். ‘உண்மையின் பக்கம்’ங்க்கிற வெப்சைட் பாத்திருக்கீங்களா? (என்னோடது இல்லை) நேரம் கெடைச்சா கமென்ட்ஸ் பாருங்க. அதுல விவாதம் பண்ணியே எனக்கு தாவு தீர்ந்து போயிடுது. இன்னொரு பதிவுல சந்திப்போம். (என்னால அடிக்கடி கமென்ட் பண்ண முடியறதில்ல. டைப் பண்ண ஆரம்பிச்சாலே அரைப பக்கம் வந்துடுது. தப்பா நினைச்சுக்காதீங்க..)
padmahari
ஆகஸ்ட் 2, 2010
//மக்கள்தொகையை குறைக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. ஏன் 98% முடியாதுன்னே சொல்லலாம். அப்படிக் குறைக்க முடிஞ்சா மீதி ‘எல்லாம்’ தன்னால மாறிடும். நாங்க கவலைப்பட வேண்டியதில்ல..//
உண்மைதான். மக்கள் தொகையை குறைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. கடுமையான சட்டதிட்டங்களும், மக்களின் விழிப்புணர்வும், ஒழுக்கமுமே இதற்க்கு ஒரு முடிவு கட்டமுடியும்! ஆரோக்கியமான மற்றும் முன்னேற்றத்திற்க்கான விவாதங்களை செய்வதில் எனக்கு மகிழ்ச்சியே. உங்களைப்போன்றோர் அதற்க்கு உதவியாய் இருப்பது ஒரு பெரிய ஊக்கம் எனக்கு. நேரம் கிடைக்கும்போது மறுமொழி எழுதுங்க ஒன்னும் பிரச்சினையில்ல! மீண்டும் சந்திப்போம்!
balaji
ஜூலை 30, 2010
enna bonga sir ulagam azhiyattum seekiram
padmahari
ஜூலை 30, 2010
ஏன் பாலாஜி இப்படி ஒரு நிலைப்பாடு? உங்க நிலைப்பாட்டை மாத்தினீங்கன்னா, நமக்கும் நம்ம சுற்றத்துக்கும் நன்மை! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! உங்க ஆதரவு தொடரட்டும். மேலிருப்பானோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்!