“எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் வேணுமடா” அப்படீன்னு பாய்ஸ் பட சித்தார்த் பாடினதப் பார்த்து நாமளும் பாடினதெல்லாம் அந்தக் காலம். எப்போ வாரணம் ஆயிரம் சிக்ஸ் பேக் சூர்யா பார்த்தேனோ, அப்போலேர்ந்து நான் பாடுற பாட்டெல்லாம், “எனக்கொரு சிக்ஸ் பேக் வேணுமடா”அப்படீன்னுதான்!
ஆனா, இனிமே அப்படியெல்லாம் பாடாம, “தொப்பை இல்லாத ஒரு உடம்பு இருந்தாலே போதுமடா….?!”அப்படீன்னுதான் எல்லாரும் பாடனும் போலிருக்கு. ஆங்….தொப்பைன்ன உடனேதான் நியாபகத்துக்கு வருது. இந்த விவேக் காமெடியில ஆ ஊன்னா, போலீஸ்காரங்களப் பிடிச்சி, அவங்க தொப்பையை வச்சி எதாவது ஒரு அட்டு/கேவலமான காமெடியப் பண்ணிடுவாப்ல. ஆமா, தமிழ்நாட்டுல வேற யாருக்குமே தொப்பை இல்லையா? போலீஸ்காரங்களுக்கு மட்டுந்தான் தொப்பையிருக்கா?
எனக்குத் தெரிஞ்சி நான் பார்த்த போலீஸ்காரங்க எல்லாம், வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வச்சில்லைன்னாலும், நல்ல கட்டுமஸ்தான உடல்வாகோட இருந்தாங்கப்பா! சரி அத விடுங்க, தொப்பையினால வர்ற பிரச்சினைகளப் பத்திப் பார்ப்போம். தொப்பையினால எத்தனையோ பிரச்சினைகள் வருதுன்னும், அதுல முக்கியமானது இருதயக் கோளாறுகள்னும் சில பல ஆய்வறிக்கைகள்/செய்திகள் படிச்சதுண்டு. நீங்க கூட படிச்சிருப்பீங்க! அந்த வரிசையில, தொப்பையினால டிமென்ஷியா அப்படீங்கிற நரம்புக் கோளாறு கூட வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு ஒரு குண்டைத் தூக்கி போடுறாங்க விஞ்ஞானிகள்?! அதுக்குக் காரணம் சமீபத்திய ஒரு நரம்பியல் ஆய்வு!
இந்த ஆய்வுச் செய்தியோட சாராம்சம், முடிவுகளுக்கு போறதுக்கு முன்னாடி தொப்பை மற்றும் டிமென்ஷியா பத்தி கொஞ்சம் விரிவா, அறிவியல்பூர்வமா தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன் (நீங்களும் அதேதான் நெனப்பீங்க)…..
உடலின் கொழுப்புச்சத்து!
நம்ம உடல்ல, இருவகையான கொழுப்புச்சத்து உண்டு. அவை
- அத்தியாவசிய கொழுப்புச்சத்து (Essential body fat)
- சேமிப்பு கொழுப்புச் சத்து (Storage body fat)
அத்தியாவசிய கொழுப்புச்சத்து : இது உடலின் சீரிய செயல்பாடுகள் மற்றும் இனப்பெருக்கச் செயல்பாடுகள் போன்றவற்றிற்க்கு அவசியம். இக்கொழுப்பு ஆண்களில் 3முதல் 5%, பெண்களில் 8 முதல் 12% வரை! பெண்களுக்கு குழந்தை பெறுதல் மற்றும் தொடர்புடைய ஹார்மோன் சுரப்பி செயல்பாடுகள் போன்றவற்றிற்க்கு கொழுப்புச் சத்து தேவைப்படுவதாலேயே, ஆண்களைவிட அவர்களுக்கு அதிகம் என்கிறது அறிவியல்!
சேமிப்பு கொழுப்புச் சத்து : இது உடலில் அடிப்போஸ் திசு (Adipose tissue) என்னும் திசுக்களாக சேமித்து வைக்கப்படும் கொழுப்புச்சத்து! இருதயம் போன்ற உடலின் சில உட்பகுதிகளை பாதுகாக்கும் வேலையை செய்கிறது. உதாரணமாக மார்பு, மற்றும் வயிறு சார்ந்த பகுதிகளைச் சொல்லலாம்! தொப்பை என்பதும் சேமிப்புக் கொழுப்புச்சத்துக்குள் அடங்கும்!
கொழுப்பும் தொப்பையும்!
இடுப்பையும், வயிற்றையும் சுற்றியுள்ள சேமிப்புக் கொழுப்புச்சத்தையே தொப்பை என்கிறோம். ஆங்கிலத்தில் Belly fat அல்லது visceral fat என்கிறார்கள்! இதுமட்டுமில்லாமல், தொப்பைக்குள் மற்றொரு வகையான கொழுப்பும் உண்டு. அதுதான் தோலுக்கடியில் இருக்கும் கொழுப்புச்சத்து (Fat underneath skin/Subcutaneous fat). ஆனால், பொதுவாக ஒருவருக்கு தொப்பை இருப்பதைக் கண்டறிய பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோல் இடுப்புச் சுற்றளவு (waist circumference). இந்தச் சுற்றளவினால் visceral fat மற்றும் Subcutaneous fat என இரண்டும் மொத்தமாக கணக்கிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க! ஆக, விஞ்ஞான ரீதியில் இது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடு! ஏன்னு மேலே படிங்க புரியும்?!
உடலின் கொழுப்புசத்தை/உடல் பருமனை கணக்கிட பயன்படுத்தப்படும் ஒரு கருவி/கணக்கு பி.எம்.ஐ எனப்படுகிறது. அதாவது, Body Mass Index (BMI). இது ஒருவரின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
BMI (உடல் எடை கணக்கு):
உடல் எடைக் கணக்கு=எடை (கிலோ கிராம்)/(உயரம்)2 அல்லது BMI = kilograms / meters2
பின்வருவது உலக சுகாதார அமைப்பு (WHO) 1997-ல் வெளியிட்ட BMI அட்டவனை!
BMI அளவு
வகைப்பாடு < 18.5 குறைவான எடை
18.5–24.9 சரியான எடை
25.0–29.9 உடல் பருமன்
30.0–34.9 முதல் நிலை உடல் பருமன்
35.0–39.9 இரண்டாம் நிலை உடல் பருமன் ≥ 40.0 மூன்றாம் நிலை உடல் பருமன்
உடல் பருமன் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள்
டிமென்ஷியா, ஒரு சிறு குறிப்பு!
டிமென்ஷியா என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே. டிமென்ஷியா என்றால் “அறிவுத்திறன் இழப்பு” என்று பொருள் கொள்ளலாம். அறிவுத்திறன் இழப்பு என்பது, அறிவின் அங்கங்களான நியாபக சக்தி, கவனம், மொழி மற்றும் பிரச்சினைகளை சமாளிக்கும்/தீர்க்கும் திறன் ஆகிய திறன்களின் இழப்பு! இது பொதுவாக முதிய வயதில் ஏற்படும் ஆனால், வயதுக்கு இதற்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை! அதாவது, எல்லா வயதினருக்கும் டெமென்ஷியா குறைபாடு ஏற்படலாம்!
பொதுவாக, திடகாத்திரமான ஒருவருக்கு திடீரென்றும், விபத்துகளினாலும், வயது முதிர்ச்சி ஆகிய பல காரணங்களினால் இது ஏற்படுகிறது! மூளையின் மேற்சொன்ன திறன்களுக்குக் காரணமான பகுதிகளை பாதிக்கும் எந்த ஒரு விபத்தும், சில நோய்களும் கூட டிமென்ஷியாவை ஏற்படுத்தலாம்! மேலதிக விவரங்களுக்கு இங்கே
தொப்பைக் கொழுப்பும் டிமென்ஷியாவும்!
உடல் பருமனையும் இருதயக் கோளாறுகளையும் தொடர்புபடுத்திய இதுவரையிலான ஆய்வுகள் பெரும்பாலும், உடலின் மொத்தக் கொழுப்பையும் கணக்கிலெடுத்து, அது ஆரோக்கிய/சாதரண அளவிலிருந்து அதிகமாக இருந்தால், அந்த அதிகப்படியான கொழுப்பு (உடல் பருமன்) கரோனரி ஹார்ட் டிசீஸ் (Coronary Heart Diseases, CHD) போன்ற இருதயக் கோளாறுகளுக்கு வித்திடும் என்று சொல்லிவந்தன! ஆனால், உடலின் எந்தப் பகுதி கொழுப்பு அதிகமானால் இருதயக் கோளாறுகள் வரும் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
பொதுவாக, உடல் எடைக் கணக்கு மற்றும் இடுப்புச் சுற்றளவு (BMI and Waist Circumference) போன்வற்றையே கொழுப்புச்சத்தின் அளவை நிர்ணயிக்கும் அளவுகோளாக பயன்படுத்தும் ஆய்வுலகில், முதல் முறையாக இவ்விரண்டுடன், தொப்பையின் இருவேறு கொழுப்புச்சத்துகளான, தொப்பைக் கொழுப்பு மற்றும் தோலின் கீழுள்ள கொழுப்பு ஆகியவற்றை துல்லியமாகக் கணக்கிட, MRI ஸ்கேன் மற்றும் CT ஸ்கேன் ஆகிய இரண்டு நவீன ஸ்கேனிங் முறைகளைக் கையாண்டு, பல வகையான கொழுப்புச்சத்துகளை மிகச் சரியாக கணக்கிட்டு, குறிப்பிட்ட தொப்பைக் கொழுப்பு (Belly fat) அதிகமாக இருப்பவர்களுக்கு, மூளையின் அளவு குறைந்துள்ளது என்னும் இம்முடிவை கண்டறிந்துள்ளார்கள் முனைவர் திரு.சுதா சேஷாத்திரியும் அவரது ஆய்வாளர்களும் என்பது குறிப்பிடத்தக்கது!
இதுவரையிலான சில ஆய்வுகள் குறிப்பிட்டபடி, டிமென்ஷியா-அதிக கொழுப்புச்சத்து தொடர்பு மீண்டும் இந்த ஆய்வால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது! ஆனால், இம்முறை ஒரு படி மேலே போய், தொப்பைக் கொழுப்பு (Belly fat) அளவிற்க்கும் டிமென்ஷியா குறைபாட்டிற்க்கும் தொடர்பிருப்பாதாகக் கூறுகிறது முனைவர் திரு.சுதா சேஷாத்திரியின் இந்த ஆய்வு!
“இதுவரை, ஒருவர் இருதயக் கோளாறுகள் ஏற்படும் பயத்தினால் தொப்பையை குறைக்க முயற்ச்சிக்காவிட்டிருப்பினும், இனி டிமென்ஷியா கோளாறும் ஏற்படும் என்பதால் கூடுதல் கவனமாக இருந்து, உடல் எடையுடன் குறிப்பாக தொப்பையைக் குறைக்க முயல்வது மிக அவசியம்” என்கிறார் சுதா சேஷாத்திரி!
டிமென்ஷியா ஏற்பட்டால் தினசரி வாழ்க்கை எப்படி கொடுமையானதாக மாறிவிடும் என்பதை உருக்கமான காட்சிகளுடன் விளக்கும் ஒரு அழகான குறும்படக் காணொளி…..
தொப்பைக் கொழுப்பிற்க்கும் டிமென்ஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக இந்த ஆய்வு உறுதியாகச் சொல்கிறதென்றாலும், ஏன் அல்லது எப்படி தொப்பைக் கொழுப்பு டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பினை அதிகரிக்கிறது என்று இதுகுறித்த மேற்கொண்ட சில/பல ஆய்வுகளே வரையறுத்துச் சொல்ல முடியும் என்கிறார் சுதா!
இருந்தாலும், அதிகமான கொழுப்பானது inflammation என்னும் ஒரு வகையான, நோய் எதிர்ப்பு சக்தியின் செயலான திசுச்காயம் அல்லது திசுச்சேதம் என்னும் செயலை ஊக்குவித்து, உடலை உளைச்சலுக்கு உள்ளாக்கும் தன்மையுள்ளது! இத்தகைய நீண்ட கால உளைச்சலானது இருதய நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன என்கின்றன இதுவரையிலான நரம்பியல் ஆய்வுகள்! ஆக, இதே வகையான திசுக்காயம் கொழுப்புச்சத்தினால் மூளையில் ஏற்படலாம், அதனாலேயே டிமென்ஷியா ஏற்படலாம் என்று யூகிக்கிறார்கள் ஆய்வாளர்கள்?!
எது எப்படியிருந்தா என்னங்க, தொப்பைக்கும் டிமென்ஷியாவுக்கும் தொடர்பிருக்கு, அதனால தொப்பையை குறைத்து அல்லது தொப்பையில்லாமல் வாழ முயற்ச்சிப்பது நல்லது அப்படீன்னு ரெண்டு பேரு பக்கத்து தெருவுல இருக்குற டீக்கடையில ஒரு செய்தித்தாளை வச்சிக்கிட்டு, குத்துமதிப்பா பேசிக்கிட்டாக்கூட, அடப் போங்கய்யான்னு நாம அலட்சியமா இருந்துடலாம். ஆனா, இந்தச் செய்தியை ஆள் மெனக்கிட்டு, லட்சக்கணக்கில பணம் செலவு பண்ணி, நரம்பியல் ஆய்வு செஞ்சு முனைவர் திரு. சுதா சேஷாத்திரி சொல்றாங்க! கேட்டுக்கிட்டு தொப்பையில்லாம வாழ முயற்ச்சிக்கிறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோனுது, உங்களுக்கு?!
தொடர்புடைய சில பதிவுகள்:


















natbas
ஜூன் 10, 2010
தொப்பை மூளையை பாதிக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பயனுள்ள, நமது ஆரோக்கியத்துத் துணை சேர்க்கும் பதிவு. நன்றி…
padmahari
ஜூன் 10, 2010
எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாவே இருந்தது. ஏன்னா, தொப்பை அப்படீங்கிறத ஒரு அழகியல் சார்ந்த விஷயமாதான் நான் இதுவரைக்கும் பார்த்துக்கிட்டு இருந்தேன்?! ஆனா, உடல் பருமனுக்கும், தொப்பைக்கும் இப்படி ஒரு பரிமாணம் கூட இருக்க வாய்ப்பிருக்குன்னு இப்போதான் புரிஞ்சிக்கிட்டேன்!
யூர்கன் க்ருகியர்
ஜூன் 10, 2010
i see !
thivaaji
ஜூன் 10, 2010
நல்ல முயற்சி பத்ம ஹரி. தொடருங்க! விஷயங்களை புரியற மாதிரி எழுதுவதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்.
padmahari
ஜூன் 10, 2010
வாங்க திவாஜி,
வாழ்த்துக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றிங்க! மேலும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் அறிவியலை எழுத இம்மாதிரியான ஊக்கங்கள் என்னை தூண்டுகின்றன.
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி. உங்க ஆதரவு தொடரட்டும்! மீண்டும் சந்திப்போம்.
TRC
ஜூன் 10, 2010
நல்ல ஆழ்ந்த உண்மைகளைத் தந்த பதிவு. பட்டினத்தார் பாடல் நினைவுக்கு வருகிறது. பெருத்த தொந்தி நம்மது என்று நாம் இருக்க. நாய், கழகு, நரி, தம்மது என்று தாம் இருக்க .இந்த ஆளுக்கு தொந்தி பெருத்துப் போச்சு வியாதிலே போனா இங்கேதான் வரணும் வந்தா இவன் தொந்தி நமக்குத்தான் உணவு. –திராச
padmahari
ஜூன் 10, 2010
வாங்க திராச,
இவ்வாய்வை நோக்கிய சரியான அணுகுமுறைக்கும், கருத்துச் செறிவுமிக்க பட்டினத்தார் பாடலை பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி.
இன்றுபோலவே என்றும் உங்கள் ஆதரவு தொடரட்டும்! இத்தளத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உங்களைப்போன்றோரின் ஊக்கம் எனக்கு மிக அவசியம். மீண்டும் சந்திப்போம்!
Surendran
ஜூன் 10, 2010
பத்மஹரி.. கலக்குறீங்க. நீங்க உண்மையிலேயே ஒரு இளம்விஞ்ஞானிதான். நாளுக்கொரு அறிவியல் தகவல் என்னைப்போன்ற மரமண்டைகளுக்கும் புரியும்படியாக.. கீப் இட் அப்.
padmahari
ஜூன் 10, 2010
அன்புக்கு மிக்க நன்றி சுரேந்திரன். நலமா? அடிக்கடி வாங்க இந்தப் பக்கம்!
kannnan
ஜூன் 10, 2010
இப்படியெல்லாம் பயம் காட்டினால் எப்படி மறு மொழி எழுத ….இப்போதுள்ள சாப்பாடு முறையும் …வாழ்க்கை சூழ்நிலையும் தான் காரணம் ….உடற் பயிற்சி என்பதே நின்று போய்விட்டது…மனிதர்கள் நடப்பது என்பதே நின்று போய்விட்டது… தொப்பையை குறைப்பது என்பது இனி முடியாத காரியம் தான்….அதுக்காக இப்படி எல்லாம் எழுதி எங்களை பயம் காட்ட வேண்டாம்… நாங்க ஒன்றும் பயப்பட மாட்டோம்…
padmahari
ஜூன் 10, 2010
வாங்க கண்ணன்,
நீங்க பயப்பாடாததைக் கண்டு ரொம்ப சந்தோஷம்! உங்க மனதைரியத்தையும், அதை மறுமொழியாய் வெளிப்படுத்தியமையையும் பாராட்டுறேன். ஆனா, ஆய்வு முடிவுகள் குறித்த உங்க அணுமுறைதான் கொஞ்சம் வருத்தமளிக்குது. இப்பதிவு மூலம் தொப்பை இருப்பவர்களுக்கெல்லாம் டிமென்ஷியா வருகிறதென்றோ, வந்துவிடும் என்றோ, நானோ ஆய்வாளர்களோ ஒருபோதும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது! ஆனால், ஆய்வுகள் நமக்குத் தெரியாத/எட்டாத நம் வாழ்க்கையின் ஜன்னல்போன்றவை. அவை மூலமாக நாம் பார்ப்பவை எல்லாம் முற்றிலும் உண்மையும் அல்ல பொய்யுமல்ல!
மாறாக அவை வழிகாட்டி போன்றவை! காட்டப்படும் வழி சரியா தவறா என்று தீர விசாரித்து, ஆராய்ந்து பார்த்து சரியென்றால் பின்பற்றியும், தவறென்றால் அலட்சியப்படுத்தியும் விட்டு முன்னேறி செல்ல வேண்டும். இது ஆய்வு குறித்த என் புரிதல். ஆக, இது யாரையும் பயமுறுத்த வேண்டி, கற்பனையாக எழுதிய புனைவு அல்ல. மருத்துவ மாத இதழ்களில் வெளியான, உலகம் மொத்தமும் படிக்கும் ஒரு ஆய்வறிக்கை! இதே விடயத்தை உங்கள் மருத்துவர் கூறியிருந்தால் உங்கள் மறுவினை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்!
Guru.Radhakrishnan
ஜூன் 11, 2010
Whenever I send my appreci ation on reading the work i.e publishing articles the reply of the publisher i.e Tamilish are sendinf duplicate commrents which have already been submitted. the purpose of sending comments thereby not fulfilled. I request you to look into the matter personally Mr.Padmahari.
padmahari
ஜூன் 12, 2010
Sir, I understand that you seem to have some inconvenience regarding commenting on articles published by tamilish! But I dont understand the exact problem regarding the same.
Could you tell me whether you have problem at tamilish or meliruppaan? If its tamilish please send me an email detailing your problems at padmaharij@gmail.com or harinarayananj@gmail.com. I will try to help you. Thanks for comment!
Naangai kannnan
ஜூன் 11, 2010
ஐயையோ …சார் …சீரியசாக …எடுத்து விட்டிர்களே…என் தொப்பையை..குறைக்க நான் படும் கஷ்டம் எனக்கு தான் தெரியும்…தொப்பை விழுவது வேலையை பொருத்தும் அமைகிறது…. டிமென்ஷியாவை பற்றி கவலை இல்லை…நானே குனிந்து பார்த்தால் …எனக்கே வெட்கமாக உள்ளது….எல்லோரும் தொப்பையை குறைப்பதி நல்லதே என்பதில் மாற்று கருத்து இல்லை தலைவரே….
padmahari
ஜூன் 12, 2010
ஓஹோ…..அப்படிங்ளா! சரி விடுங்க நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போலிருக்கு! உங்க ஒரு சின்ன யோசனை சொல்றேன் முயற்ச்சி பண்ணிப் பாருங்க.
தினமும் ஒரு 3 லிட்டர் தண்ணீர் குடிங்க. காலையில எழுந்த உடனே ஒரு லிட்டர், 11 மணி வாக்கில ஒரு லிட்டர், 3 மணி வாக்கில ஒரு லிட்டர்! சாப்பாட்டுக்கு முன்னாடி 1 மணி நேரத்துக்கு முன்பும், சாப்பாட்டுக்குப்பின் 2 மணி நேரத்துக்குப் பின்பும் தண்ணீர் குடிங்க. இது நான் பின்பற்றுகிற ஒரு வழக்கம்! கண்டிப்பா ஒரு 3 மாசத்துல வித்தியாசம் தெரியும்!
ennaperenakku
ஜூன் 11, 2010
hmmm very shocking! I also have “belly fat” and like kannan I am also struggling to reduce it. Is there any genetic connection for belly fat,i mean if my father will have “belly fat” I also will have it right. That is even if i do exercise and diet control, the chances of getting belly fat for me will be more higher, than my friends who has parents with less belly fat.
Genetics will also decide how hard you need control belly fat compared to your peers!
Thanks for a good post. keept it up!
padmahari
ஜூன் 12, 2010
Hi ennaperenakku,
//Is there any genetic connection for belly fat,i mean if my father will have “belly fat” I also will have it right. That is even if i do exercise and diet control, the chances of getting belly fat for me will be more higher, than my friends who has parents with less belly fat.
Genetics will also decide how hard you need control belly fat compared to your peers!//
As for as my naive understanding and experience of this belly fat goes “I dont think its connected to genetics unlike other illnesses” but wikipedia says otherwise
“Studies that have focused upon inheritance patterns rather than upon specific genes have found that 80% of the offspring of two obese parents were obese, in contrast to less than 10% of the offspring of two parents who were of normal weight”
reference: Kolata,Gina (2007). Rethinking thin: The new science of weight loss – and the myths and realities of dieting. Picador. pp. 122. ISBN 0-312-42785-9.
http://en.wikipedia.org/wiki/Genetics_of_obesity
So its pretty complicated to interpret and conclude with a statement! Thats because Iam still naive
In my opinion, I would say why dont you give a try for water therapy to combat obesity if its feasible for your lifestyle…???
Thanks for your visit and comment. Do visit me often and let me know ur opinion on my other article too!
தணிகாசலம்
ஜூன் 13, 2010
பாவம், இந்த தொப்பை பேர்வழிகளுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்திருக்கும். சரி, இந்த அத்தியாவசிய கொழுப்புச்சத்து, சேமிப்புக்கொழுப்புச்சத்து – இவற்றுக்கும் HDL, LDL க்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? டிமென்சியா முதுமையில் வரும், தொப்பையர்களும் வரக்கூடும் என்று புரிகிறது. தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யலாம். முதுமை விஷயத்தில் அவ்வாறு முடியாதே! எது எப்படி இருந்தாலும் டிமென்ஷியா குணப்படுத்திவிட சாத்தியமானதுதானே?// அதிகமான கொழுப்பானது inflammation என்னும் ஒரு வகையான, நோய் எதிர்ப்பு சக்தியின் செயலான திசுச்காயம் அல்லது திசுச்சேதம் என்னும் செயலை ஊக்குவித்து, // இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன்.
natbas
ஜூன் 13, 2010
முதலில் inflammation பற்றிய சிறு குறிப்பு: அது, ஐயோ, பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு,, என்ற நமது உடலின் எதிர்வினை – காய்ச்சல் இதற்கு நல்ல உதாரணம். சுருக்கமாக சொல்வதானால், நோய்க் கிருமிகளாலோ வேறு காரணத்தாலோ நமது உடலின் ஏதாவது ஒரு இடத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தால், அந்த இடத்தில் ரத்தக் குழாய்கள் விரிகின்றன, அதை நோக்கி ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது-இதனால் சேதமான இடம் வீங்குகிறது, சிவக்கிறது, சுடுகிறது. நமது ரத்த நாளங்களின் சுவர்கள் விரிந்து சுருங்கக் கூடிய சல்லடைகள். Inflammation ஏற்படும்போது அவை விரிகின்றன- ரத்தத்தில் இருக்கிற பிளாஸ்மா மற்றும் உடலின் போர் வீரர்களாகிய வெள்ளை அணுக்கள் நேரடியாக களத்தில் குதிக்கிறார்கள். திசுச்சேதம் இதன் பின்விளைவு.
http://en.wikipedia.org/wiki/Inflammation
இதில் கொலஸ்டரால் எங்கே வருகிறது?
கொலஸ்டரால் ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகரிக்கும்போது ரத்தக் குழாய்கள் இவைகளின் தொல்லையைத் தாங்கமுடியாதபடி கொஞ்சம் விரிந்து கொடுக்கின்றன- கொலஸ்டரால் ரத்தத்தை விட்டுக் கசிந்து வெளியேறுகிறது. அவ்வளவுதான், ஐயோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு என்று அந்த இடம் பரபரப்பாகிறது- இருந்தாலும் முடிவு என்னமோ அங்கு படிந்த கொலஸ்டரால் காரை காரையாக கெட்டிப்பட்டு ரத்த ஓட்டத்தைத் தடை செய்யத் துவங்கி விடுகிறது என்பதுதான்: இதயத்துக்குப் போகிற பாதை பாதிக்கப்பட்டால், இதயம் பாதிக்கப்படுகிறது, மூளையானால் மூளை பாதிக்கப்படுகிறது.
http://edition.cnn.com/2008/HEALTH/conditions/10/16/healthmag.cholesterol.inflammation/index.html
ஆபத்து -> inflammation -> ரத்தக்குழாய்களில் விரிவு -> ரத்தத்திலிருக்கும் போர்ப்படை கிளம்புகிறது -> திசுச்சேதம்.
கொலேஸ்டேரால் -> -> ரத்தக்குழாய்களில் விரிவு -> ஆபத்து -> inflammation -> ரத்தக்குழாய்கள் மேலும் விரிவு -> ரத்தத்திலிருக்கும் போர்ப்படை கிளம்புகிறது -> திசுச்சேதம்.
கொலஸ்டரால் குறையவே குறையாமல் அன்றாடம் இப்படி ஒரு களேபரம் நம் உடலினுள் நிகழ்ந்து கொண்டிருந்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன?
கொலஸ்டரால்-inflammation தொடர்பு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இதிலுள்ள பிழைகளை மேலிருப்பான் திருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
padmahari
ஜூன் 13, 2010
//இந்த அத்தியாவசிய கொழுப்புச்சத்து, சேமிப்புக்கொழுப்புச்சத்து – இவற்றுக்கும் HDL, LDL க்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? //
HDL, LDL மற்றும் Triglycerides என்பவை கொழுப்புச்சத்தின் அடிப்படை அங்கங்கள் (composition of fat). ஆனால், அத்தியாவசிய கொழுப்புச்சத்து, சேமிப்புக்கொழுப்புச்சத்து என்பவை கொழுப்பின் பயன்களை அடிப்டையாகக் கொண்ட ஒரு பாகுபாடு! ஆக, இவ்விரண்டு வகையான கொழுப்புச்சத்திலும் HDL, LDL மற்றும் Triglycerides எல்லாம் இருக்கும். மேலும் சேமிப்புக்கொழுப்புச்சத்து திசுக்களுக்குள் சேமிக்கப்படுபவை!
//எது எப்படி இருந்தாலும் டிமென்ஷியா குணப்படுத்திவிட சாத்தியமானதுதானே?//
டிமென்ஷியாவை குணப்படுத்த மருந்துகள் இல்லை. அதன் பாதிப்புகளைக் குறைக்க சில மருந்துகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் மட்டுமே உள்ளன!
தணிகாசலம்
ஜூன் 13, 2010
ஆடே யப்பா ! என்னமா பூந்து விலாசிட்டிங்க. ஆஹா ! தம்பியுடையான் படைக்கஞ்சான் அப்பிடின்னா ; நட்பாஸ் உடையான் (மேலிருப்பான்) பதில்தர அஞ்சான் அப்பிடின்னு தைரியமா நான் மலேசியாவில சொல்லுவம்பா.
கொலஸ்ட்ராலுக்கும் நம்ம பதிவில் வருகிற கொழுப்புகளுக்குமான வித்தியாசத்தை சும்மா விலாவாரியா பிரிச்சு மேஞ்சிட்டிங்க. நமக்கு நல்லா புரிஞ்சிடிச்சில்ல.உஸ்! அப்பாடா!. நன்றிங்க நட்பாஸ். ஆனா ஹரிய விடமாட்டுமில்ல.
padmahari
ஜூன் 13, 2010
@ நட்பாஸ்: Inflammation பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. நன்றிகள் பல!
@தணிகாசலம்: அவர் சொல்லாத சில விஷயங்களைச் சேர்த்தா நல்லாயிருக்கும்னு நான் நெனக்கிறேன். இன்ஃப்ளமேஷன் என்பது உடலைத்தாக்கும் எந்தவொரு பொருள், கிருமி, காயங்கள் இப்படி எதுவானாலும் ஏற்படுத்தும் சேதத்தை எதிர்கொண்டு, கிருமிகளை அழித்து, பின் அந்தக் காயம் குணமாகும்/ஆறுவதற்க்கான காரணிகளை ஒன்றுதிரட்டி காயத்தை முற்றிலும் ஆற வினையாற்றும் ஒரு உடலியக்கம்!
நட்பாஸ் அவங்க (சுட்டி) சொல்லியிருக்குற கொலஸ்டிரால்-இன்ஃப்ளமேஷனின் செயல்வினையானது கொழுப்பு-இருதயநோய்கள் என்னும் பின்புலத்தைக் கொண்டது. நான் இப்பதிவில் குறிப்பிட்டது கொழுப்பு-டிமென்ஷியா என்னும் பின்புலத்தில் நோக்கப்பட வேண்டும். அதாவது, முந்தையது ரத்தநாளங்களில் படியும் LDL வகை கொழுப்பு அதனால் ஏற்படும் Atherosclerosis என்னும் நோய் மற்றும் இவற்றின் விளைவாக மாரடைப்பு எனச் செல்லும் ஒரு விளக்கம்/தொடர்பு!
ஆனால், டிமென்ஷியாவைப் பொறுத்தவரை, அதிக கொழுப்பினால் ஏற்படும் Inflammation என்பது ஒரு வகை நீண்ட கால உளைச்சலை (Physiological Stress) உருவாக்கி, மூளையின் செல்கள்/அனுக்களை சிறுக சிறுக அழித்து, மூளையின் மொத்த அளவையே குறைத்துவிடுகின்றன. அதனால் டிமென்ஷியா ஏற்படுகிறது என்பது இந்த ஆய்வின் கூற்று! ஆக, Inflammation என்பது பொதுவானது, ஆனால் அதன் பாதிப்புகள் பல்வேறு நோய்களாக வெளிப்படுகின்றன நம் உடலில்!
என்னங்க, இப்போ என்னை விட்டுடலாம் தானே….?
நன்றி, மீண்டும் சந்திப்போம்!
natbas
ஜூன் 13, 2010
சூப்பர். அருமையான விளக்கம்.
padmahari
ஜூன் 15, 2010
நன்றிங்க நட்பாஸ்
தணிகாசலம்
ஜூன் 13, 2010
பிரமாதம்ங்க. முழுவதையும் கப்புன்னு பிடிச்சிக்கிட்டேன்.
மிக்க நன்றி.
padmahari
ஜூன் 15, 2010
சந்தோஷம்ங்க!